vayal farmingஉழவுத் தொழிலானது இன்றும், என்றும் உலகத்தையே தன் அகத்தே கொண்டுள்ளது. உழவுத் தொழிலை முன் நிறுத்தி உழவதிகாரத்திற்கு உரை எழுதி அதன் நெறிகளை மனித வாழ்வோடும், அவன் பண்போடும் இணைத்துச் செயலாற்றுவது தமிழனின் கடமையாகக் கருதுகிறேன்.

உழவுத் தொழில் செய்யும் உழவன் இன்று கவனிக்கப்படாததும் இதற்குக் காரணமாகும். அவனுக்கு விளைபொருளுக்கு ஏற்ற சரியான விலை இல்லை. மரபு கலாச்சாரங்கள் விதைகளில் அகற்றப்பட்டு வீரியமற்ற துரித வளர்ச்சி விதைகள் மரபினம் மாற்றி வியாபார நோக்கோடு விற்பனைக்கு வந்து விட்டது.

நாம் உண்ணும் உணவுப் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு நம்மிடமில்லை, மரபை மீட்டெடுத்து அதை நினைவாக்க முயலும் வேளையில் மரபணு மாறிய விதைகளை வீசி எறிவது முக்கியம். உழவே நம் நாட்டின் முதுகெலும்பு எனப் போலி வார்த்தைகள் கூறும் நம்மிடையே இருக்கும் பெரும் குறைகளாக மண்ணுக்கும் உழவனுக்கும் நாம் செய்யும் தீங்குகளை ஏராளமாக வரிசைப்படுத்தலாம். அந்த வழியில் அதன் முக்கியத்துவத்தை வள்ளுவப் பெருந்தகையின் குறள் வழியே உழவுத்தொழிலை காண்போம். உழவனையும் உழவுத் தொழிலையும் பாதுகாப்போம்.

பால் : பொருட்பால்.
இயல் : குடியியல்.
அதிகாரம்: உழவு.

குறள் 1031:

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

என் உரை:

மனிதன் எந்தத் தொழில் செய்து பிழைத்தாலும் கலப்பை பின்னினால் மட்டுமே இங்கு வாழும் மனிதர்களின் உடலில் செல்கள் பின்ன முடியும். குளிர் அறையில் அமர்ந்து கொண்டு மென்பொருளைப் பதிவிறக்கம் செய்பவனால், ஏர் உழுது மண்ணில் இறங்கி பயிரை விளைய வைக்கும் நிகழ்வினைப் பதிவிறக்கம் செய்ய முடியாது.

உலகம் முழுவதும் எந்தக் கணத்திலும் எந்த இடத்திலும் ஏரோடு தொடர்பு கொண்டும், பின்னிக் கொண்டுமே மனிதர்கள் வாழ்வு உள்ளது. வலைத் தளத்தைவிட உணவுத் தளம் மிக முக்கியம். இதை எந்த மனிதராலும் மறுக்கவும் மறக்கவும் முடியாது. ஆனால் இன்று இணையத்தில் பிணைந்து புது உலகம் படைக்க நினைப்பது சாத்தியமற்றது. வயலில் நம் கால்கள் பட வேண்டும், அப்படி முடியாத மனிதர்கள் உழவு நோக்கிய பார்வைகளை அழுத்தமாக வெளியிட வேண்டும், அப்பொழுதுதான் ஆரோக்கியமான, நமக்குத் தேவையான பாதைகள் அமையும்.

குறள் 1032:

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

என் உரை:

உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் காக்கும் இந்த உழவுத் தொழிலானது உயிர்க்கு அச்சாணியாக விளங்கக் கூடியது மட்டும் அல்லாது பூமியை மனிதன் புரிந்து கொள்ள உதவும் பூமிக்கே அச்சாணியாகும். எனவே அச்சாணி இல்லாவிட்டால் உயிர் எனும் வண்டி ஓடாது.

ஆனால் இன்று அச்சாணிகள் அனைத்தும் அரசு கையில் வைத்துக் கொண்டு உழவனை வெறும் வண்டிகளாக உருளச் செய்கிறது, இது கண்டிக்கக் கூடிய செயலாகும், அண்மையில் டெல்லியில் நடந்து முடிந்த நிர்வாணப் போராட்டங்கள் இதற்கு உதாரணமாகும்.

குறள் 1033:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

என் உரை:

உலகத்தில் பயிர்த் தொழிலை எந்த வித சுக துக்கம் பாராமல் விளைவிக்கும் விவசாயி உரிமையாக வாழ்பவன். அவனைத் தொழுது மற்றவர்கள் எல்லாம் பின் செல்வார். அதைக் கூட அவன் பெருமையாகக் கருதாமல் உழவுத் தொழில் வருமானத்தைச் சன்மானமாகப் பெற்று பிறர் பசியைப் போக்க உழைப்பவனையே இந்த உலகம் தொழு துண்டு செல்லும். ஆனால் விவசாயிகள் தினத்தில் விவசாயிகள் கொண்டாடப்படுவதில்லை.

குறள் 1034:

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

என் உரை:

பல அரசாட்சியின் குடை நிழலைத் தன் கீழ் கொண்டு வருவான் உழவன், பசியைப் போக்கும் உழவன் தன்கீழ் நெல் வளங்களையும், காய்கனிகளையும் கொண்டுள்ளதால் அரசக் குடைகள் இவனுக்குக் குடையாகும். ஆனால் இவனுக்கு இன்று நியமாகத் தனக்குச் சேரவேண்டிய குடைகளைக் குறைத்துள்ளது வேதனை தருகிறது. சரியான விற்பனை முறை இல்லாமை, காப்புரிமை கிடையாது, ஓய்வு ஊதியம் கிடையாது மற்றும் இடுபொருள் விலையேற்றம், விளைந்த பொருளுக்குச் சரியான விலை இல்லாமல் நஷ்டத்தில் மூழ்கிவிடுகிறது உழவனின் குடை.

குறள் 1035:

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.

என் உரை:

தம் கையையே ஏர் செய்து உழைக்கும் உழவன் யாரிடமும் யாசகம் கேட்கமாட்டான் மாறாக யார் வந்து உதவியென்றாலும் கொடுத்து மகிழ்வான், அவனுக்கு எப்பொழுதும் அனைவருக்கும் பசியாற்ற வேண்டிய குணம் இருக்கும். அப்படிப்பட்ட உழவன் இன்று இயற்கையின் அச்சுறுத்தலாலும், அரசின் கவனிப்பு இன்மையாலும் தற்கொலைச் செய்து கொள்ளும் துயரம் நடந்தேறுகிறது.

குறள் 1036:

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

என் உரை:

பற்று அற்றவன் என்று சொல்பவன் கூட உழவன் கையையே எதிர்நோக்கித்தான் வாழ வேண்டும். இதில் அறம் தவறி ஏர் நிலைக்கிறது. அப்படிப் பற்று அற்றவர் என்று சொல்லிக் கொள்ளும் கார்பரேட் சாமியார்கள் கூட உழவுத் தொழிலை பற்றிய அலட்சியத்தைக் காட்டுகிறது, பணத்தைச் சேர்ப்பதில் முனைப்பாக இருப்பது வேதனையானது.

குறள் 1037:

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

என் உரை:

நிலத்தை நன்றாகப் புழுதியாக உழுது அவற்றைக் காற்றில் பறக்கும் மண்ணாக ஆக்கிவிட்டால் அந்த நிலமானது நல்ல வளம் பெறும் கீழ் மண் மேலும் மேல் மண் கீழும் கலந்து வளம் பெறும்.

எரு இல்லாமலே பலத்தோடு செழித்து விளைய முற்படும், அப்படி இயற்கையாக இருந்த மண்ணை இன்று நாம் கொடிய நச்சு மருந்துகளால் சீரழித்து விவசாய நண்பன் மண்புழுவை அழித்துக்கொண்டு வருகிறோம். எவ்வளவு ஆழ உழுதாலும் நிலம் உப்புத்தன்மை நிரம்பி வழிகிறது. உழுத இடைவெளியில் உப்பு பாளங்கள் காட்சியளிப்பது நாம் செய்த வினைகள் தான்.

குறள் 1038:

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

என் உரை:

ஏர் இட்டு அதைவிட எரு விடுதல் நலம் பயக்கும், அதைவிட மண்ணுக்குத் தேவையான வளம் பெருகும், இவ்வாறு செய்து நீரிட்டு அதைப் பாதுகாப்போடு அதாவது பருவம் தவறாது களை எடுத்து வளர்த்து வருதலே நலம். அவ்வாறு விளைந்து தழைத்தோங்கிய நம் நிலத்தில் தண்ணீரை மாசுபடுத்திவிட்டோம்.

எரு விடுதல் என்ற செயலின் முக்கியத்துவத்தை அழிப்பதற்குப் பதிலாக முதலில் தமிழர்களின் பாரம்பரியமான காளைகளையும் நாட்டு மாடுகளையும் அழித்தாயிற்று, இப்பொழுது எரு விடுதல் என்பது இங்கில்லை, ஆனால் ராசாயண உரங்கள் குவியல் குவியலாக மண்ணையும் நம்மையும் சீர்குலைக்கக் காத்துக் கிடப்பது காப்பு அல்ல சூழ்ச்சியாகும்.

குறள் 1039:

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

என் உரை:

உழவன் தன் நிலத்தைத் தினம் கவனிக்க வேண்டும் அப்படிக் கவனிக்கத் தவறினால் அந்த நிலம் விளைச்சலின்றி வாடி விடும். இன்று நிலம் இருக்கிறது, வாடிப்போய் நீர் இல்லாமலும் மரங்கள் இல்லாமலும் வெறும் பாலைவனங்களாகக் காட்சியளிக்கிறது.

இன்று தண்ணீருக்காகவும், விளைப் பொருளுக்காகவும் மற்ற மாநிலத்தைச் சார்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது, தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பு வாடிவிட்டது. இது மக்களுக்குப் பெரும் துயரமாகவும் கொடுமைகளாகவும் உள்ளது, அதனால் அரசும் உழவனைத் தினம் கவனிக்க வேண்டும்.

குறள் 1040:

இலமென்று அசை இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

என் உரை:

நிலமெனும் தானிய லட்சுமி, நம்மிடம் ஏதும் இல்லை எனச் சோம்பலாகத் திரியும் உழவனைக் கண்டால் பாசமாகச் சிரிப்பாள். அப்படித் திரியவைத்து அவனுடைய தானியத்தையும் லட்சுமியையும் அரசு ருசி பார்க்கிறது. அரசிடம் ஏதும் இல்லை என்பது போல் தன்னை வெளிப்படுத்தி உழவனைச் சோம்பலாக்கி உலகத்தில் தலைநிமிர வேண்டியவனை தலை கவிழ்ந்து நடைபோடச் செய்துள்ளது. அரசைச் சார்ந்தவர்களிடம் தானியம் சேர்ந்து கொண்டே செல்கிறது. உழவன் சோம்பலுடன் அரசைக் கவனிக்கிறான், ஏதாவது நல்ல அறிவிப்பு வருமென்று.

நாம் தவற விட்ட உழவர்கள் சார்ந்த நெறிமுறைகள்:

உழவனுக்கு எப்பொழுதும் குரல் கொடுக்க வேண்டும், ஆனால் நாம் எப்பொழுதும் அவனிடமிருந்து விலகியே உள்ளோம். அண்மையில் உழவன் டில்லியில் போராடியபோது அதைக் கண்டு கொள்ளவேயில்லை, ஜல்லிக்கட்டுக்கு கொடுத்த ஆதரவை விட அதிகமான ஆதரவு நாம் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அதிகாரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அச்சத்தில் ஆழ்த்தியது, ஆனால் இடது சாரி சிந்தனையாளர்கள் இவற்றைக் கையில் எடுத்துப் போராடி வருவதால் மட்டுமே, உழவினுக்குக் கடைநிலை மடை போல் ஏதோ கொஞ்சம் சூழல் இலகுவாக இருக்கிறது, இந்த நிலையை நாம் தவறவிட்டது முக்கியமாக ஆராயப்பட வேண்டிய கூறுகளாகும்.

அதுமட்டுமின்றி காவேரி நீரை நம்பிய உழவர்களின் போராட்டத்தின் போது நீதி கிடைக்காததற்கு முக்கிய காரணம் நாம் இணைந்து போராடாமல் போனதும், அதுமட்டுமின்றி தடுப்பணைகள் பற்றாக்குறையும் இதற்கு முக்கிய காரணிகளாக விளங்குவது கவனிக்கத்தக்கது. பாரம்பரிய விதைகளை அழித்துவிட்டு மரபு மாற்றம் செய்த விதைகள், பூச்சிக் கொல்லிகள் எனக் கார்பரேட் நிறுவனங்கள் கையில் விவசாயத்தை ஒப்படைத்துவிட்ட அரசை நாம் முழுமையாக எதிர்க்காதது மற்றொரு காரணமாகும். எது வந்தாலும் அதை எதிர்த்து எந்தப் பதிவிடுதலும் கிடையாது.

கடன் தொல்லையால் நிலத்தில் இறந்து கிடக்கும் உழவன் சார்பாக மறுவாழ்விற்கு அந்த உழவனின் குடும்பம் மனு அளித்தாலும் பதில் கிடையாது.

இப்படி உழவன் நலத்தை மதிக்காமல் நம்முடைய நலத்தையும் சேர்த்து அழித்துச் செல்லும் வாழ்வா பெரிது? என்கிற கேள்வி எழச்செய்கிறது. இத்தகைய செயலைத் தவற விட்ட நாம் உண்ட உணவுக்கும், இனி உண்ணப் போகும் உணவுக்கும் காட்டும் நன்றி இதுதானா, இனியாவது காளைகளைக் காப்பாற்றினோம் என மார்தட்டாமல் மரபின் மாற்றம் செய்யப்பட்ட பசுக்களைத் தவிர்த்து நாட்டு மாடுகள் என்றிழைக்கப்படும் நம் பாரம்பரியமான காளைகளையும், பசுக்களையும் வார்த்தெடுப்போம், வளர்ப்போம்.

உழவன் குறித்த சிந்தனைகளையும் உழவு முறைகளையும் கேட்டறிந்து அவன் வாழ்வியல் சார்ந்த மரபை மீட்டெடுத்து இனிவரும் சமூகம் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நம்மால் முடிந்த சாத்தியங்களை உருவாக்க முயற்சிசெய்வது நம் கடமை.

மண் நஞ்சானால் உணவும் நஞ்சாகும், நஞ்சு உண்பதை விட அதை அகற்ற வழி தேடுவோம்.

உழவனுக்குத் தோள் கொடுக்கும் மனிதனாவோம். பசும் படையில் போராடி உணவுப் போரில் ஈடுபடும் உழவனும் ஒரு இராணுவ வீரர்களைப் போன்று மதிக்கப்பட வேண்டும். இனி வரும் தலைமுறையினர் இந்தக் கருத்துடன் உழவர்களுக்காகப் போராட வேண்டும். வள்ளுவன் கனவுகள் மெய்ப்படும் அளவிற்கு இந்த உழவர்கள் வாழ அழகான நிலங்களை உருவாக்குவோம், இயற்கையான பசுமையை நோக்கிச் செல்வோம்.

உழவின்றி அமையாது உலகு!உழவனின்றி ஏது உணவு!

- ப.தனஞ்ஜெயன்

Pin It