ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நலிவுற்ற உழைக்கும் மக்களை மீட்பதற்கான முக்கிய பரிந்துரைகள்:

அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர்கள்: அபினாஸ் போரா (Abhinash Borah), சாபியாசாச்சி தாசு (Sabyasachi Das), அபாராஜிதா தாசு குப்தா (Aparajita Dasgupta), அஸ்வினி தேஸ்பாண்டே (Ashwini Deshpande), கனிகா மகாராஜன் (Kanika Mahajan), பாரத் இராமசாமி (Bharat Ramaswami), அனுராதா சாகா (Anuradha Saha), அனிசா சருமா (Anisha Sharma).

தமிழில்: ப.பிரபாகரன்

மூலம் : https://thewire.in/political-economy/coronavirus-pandemic-how-to-mitigate-the-lockdown-impact-on-vulnerable-populations

இந்தியாவில் தற்பொழுது பரவி வரும் கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் அரசின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து வழிகாட்டுவதற்காக, அரசிற்கு விரிவான பரிந்துரைகளை முன்வைப்பது குறித்து இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் நாங்கள் விளக்குகிறோம். இந்தத் தொற்றுநோய் பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகின்ற தாக்கம் குறித்து, குறிப்பாக மிகவும் பலவீனமான நலிவடைந்த உழைக்கும் மக்களிடத்தில் (vulnerable working class) அது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை விவரிக்கின்றோம்.

apmc mumbaiSARS-COV-2 தொற்றுநோயினால் திடீரென்று எழுந்துள்ள பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படக் கூடிய ஐந்து பலவீனமான பிரிவினர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். குழந்தைகள், பெண்கள், வலசைத் தொழிலாளர்கள் (migrants), தினக் கூலிகள் (daily wage earners) மற்றும் சுய தொழில் முனைவோர்கள் (self-employed individuals) ஆகிய ஐந்து பிரிவினர்கள் தான் மிகவும் பலவீனமான உழைக்கும் மக்கள் குழுக்களாவர்.

ஒவ்வொரு நலிவடைந்த, பலவீனமான குழுவிலும், அவர்கள் சார்ந்த துறை ரீதியான பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காக்க, அந்தத் துறை சார்ந்த எந்தெந்த பகுதிகளில் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் யாவை என்பதையும் அடையாளம் கண்டுள்ளோம். மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களிடையேயும் (salaried workers) இந்த ஊரடங்கு உத்தரவு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் விவரிக்கின்றோம். மாத ஊதியம் பெறுபவர்களாக உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், அரசின் உயர் அதிகாரிகள் போன்றோர் பலவீனமான குழுக்கள் இல்லை என்று அறியப்பட்டாலும், தொடர்ந்து நீடிக்க உள்ள இந்தப் பொருளாதார முடக்க நடவடிக்கையினால் அவர்களும் குறிப்பிடத் தகுந்த பொருளாதாரச் சிக்கல்களை எதிர் கொள்வார்கள் என்றும் இங்கே எடுத்துக் காட்டுகின்றோம்.

1. குழந்தைகள்:

வளரும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் எகிறிக் கொண்டே செல்கின்ற ஒரு முக்கியமான சுகாதாரப் பிரச்சனை. வயதுக்கேற்ற உயரமின்மை, வயதுக்கேற்ற எடையின்மை மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடையின்மை போன்றவை முக்கிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வளர்கின்ற குழந்தைகள் அவர்தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார்கள் என்று உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் செய்யப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளைப் பொருத்தமட்டில், மற்ற சவால்களைக் காட்டிலும் கற்றல் குறைபாடு அல்லது திறன் வளர்ச்சி குறைவு, மிகுந்த நோயுறும் தன்மை, தொற்றா நோய்களின் பாதிப்புகளுக்கு எளிதில் இலக்காகுதல் போன்றவை மிக முக்கியமான சவால்கள் ஆகும்.

உலகம் முழுவதும் காணப்படுகின்ற வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்று பங்கிற்கும் அதிகமானோர் இந்தியாவில் காணப்படுகிறார்கள். அவர்களுள் 0 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் 38 சதவீதம் என்று 2015 – 2016 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நல மற்றும் சுகாதார ஆய்வு அறிக்கை (National Family and Health Survey) கூறுகிறது. இது, ஏற்கனவே அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சனையாக இருந்து வருகின்ற நிலையில் தற்பொழுது புதிதாக எழுந்திருக்கக்கூடிய இந்தத் தொற்றுநோய் பரவல், அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு போன்றவற்றினால் இவர்கள் தொற்றுநோயிற்கு எளிதில் ஆட்படுவார்கள் என்பது மட்டுமின்றி, அவர்களுடைய பெற்றோர்களின் வாழ்வாதாரம் கெடுதல், தேவையான அளவிற்கு உணவு மற்றும் மருந்துகள் இல்லாத சூழல் போன்றவற்றினால் அவர்களது எதிர்காலம் படுபாதாளத்தில் விழுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 குழந்தைகளின் இந்த வளர்ச்சிக் குறைபாட்டில் சாதிய இடைவெளிக் குறியீடுகளும் காணப்படுகின்றன. 2015-2016 ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நல மற்றும் சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடு உயர்சாதி எண்று அறியப்படுகின்ற குழந்தைகளினிடத்தில் 32% ஆகவும், அட்டவணைப் பிரிவு மற்றும் பழங்குடி குழந்தைகளிடத்தில் 45 சதவீதமாகவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களிடத்தில் 39 சதவீதமாகவும் உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி தொடர்பான இந்தத் தரவுகளை பகுப்பாய்வு செய்த முடிவின்படி, ஒரு வயதில் காணப்படுகின்ற வளர்ச்சி குன்றிய நிலை, பதினைந்தாவது வயதிலும் காணப்படுகின்றது. ஒரு வயதில் காணப்படுகின்ற வளர்ச்சி குன்றிய நிலையினால் உண்டாகும் குழந்தையின் கற்றல் குறைபாடு பள்ளிப் பருவம் தோறும் தொடர்ந்து நீடிக்கின்றது. ஒப்பீட்டு அளவில் பார்க்கும்பொழுது ஒரு வயதில் நல்ல வளர்ச்சி நிலை கொண்ட குழந்தைகளிடத்தில் இத்தகைய கற்றல் குறைபாடுகள் காணப்படவில்லை. குறிப்பாக, முதல் வயது குழந்தைகளிடம் காணப்படும் இந்த வளர்ச்சி குன்றிய நிலை என்பது அதிகமாக அட்டவணை மற்றும் பழங்குடியின குழந்தைகள் இடத்தில்தான் காணப்படுகின்றது. இந்த நலக்கேடு தொடர்ந்து நீடிக்கும் பொழுது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை அது கடுமையாகப் பாதிக்கின்றது.

 தொற்றுநோய் போன்ற அதிர்ச்சிகளிலிருந்து வளரிளம் குழந்தைகளைக் காக்கும் பொருட்டு அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளித்திடும் வண்ணம் அவர்தம் கைகளில் நேரடியாகப் பணத்தைச் சேர்த்தல் போன்ற பல்வேறு நீண்ட நலவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளிகள் யாவும் மூடப்பட்டிருக்கின்ற நிலையிலும், அங்கன்வாடிப் பணியாளர்கள் (anganwadi) மற்றும் ஆஷா பணியாளர்கள் (ASHA workers) மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொடுத்து வந்த மதிய உணவினையும் அல்லது அதற்கு ஈடான அரிசி பருப்பு வகைகள், உடனடியாக உண்ணத் தகுந்த கடலை வகைகள் போன்றவற்றை அவர்களது வீட்டிற்குச் சென்று வழங்கி வரும் அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதோடு, அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கிறோம்.

கருவுற்றிருக்கும் கருப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இளம் குழந்தைகளுக்கும் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் முறைமை ஏற்கனவே அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை விரிவுப்படுத்தும் பொருட்டு, முன்பருவ பள்ளிக் குழந்தைகளுக்கும் பள்ளியில் பயில்கின்ற குழந்தைகளுக்கும் தேவையான உணவுப் பொருட்களை அங்கன்வாடிப் பணியாளர்கள் மூலம் அவரவர் வீட்டிற்குக் கொண்டு சேர்க்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கின்றோம்.

இந்தப் பணியினை மேற்கொள்ளும்போது, அப்பணியில் ஈடுபடுகின்ற அங்கன்வாடிப் பணியாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடைமையாகும். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஏற்ப, முழு ஊதியத்தையும் வழங்குவதோடு அவர்களின் சுகாதார நலனை உறுதி செய்யும் வகையில் முறையான முகக்கவசங்கள் (Proper masks) மற்றும் கிருமி நாசினிப் பொருட்கள் (sanitisers) தகுந்த முறையில் வழங்கப்பட வேண்டும். இந்தப் பணியாளர்கள் தொற்று நோயாளிகளிடத்தில் மிக நெருங்கிப் பணி செய்ய வேண்டியிருப்பதால், நோயாளிகளிடம் உள்ள தொற்று, இவர்களிடமும் ஒட்டிக் கொண்டு அது மேலும் தீவிரமாக பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதனை அரசு உணர வேண்டும். எனவே, களத்தில் முன்நின்று வேலை பார்க்கக் கூடிய இந்தப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய கருவிகளை வழங்க வேண்டும். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் களத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் செயல்திறனை மேலும் அதிகரிக்க உதவும் என்பதோடு மட்டுமல்லாது, நோயாளியையும் அவர்களுக்கு சேவை செய்பவர்களையும் தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கும்.

2. பெண்கள்:

இந்த ஊரடங்கு உத்தரவினால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிக முக்கியமான பாதிப்புகளுள், கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதற்கு வேண்டிய மருத்துவக் கருவிகளையும் பொருட்களையும் பெறுவதில் உள்ள சிக்கல் மிக முக்கியமானது. முதற்கட்ட இந்த ஊரடங்கு உத்தரவின் விளைவினால் அவற்றின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது; மேலும் அப்பணியை செய்யக் கூடியவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து விட்டது. ஒவ்வொரு இயற்கை சீரழிவை அடுத்தும் பிறக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்பதோடு மட்டுமன்றி, அடுத்தடுத்து பிறக்கும் குழந்தைகளுக்கு இடையேயான கால இடைவெளியும் குறைகின்றது என்று ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக இவை கல்வியறிவற்ற பெண்களிடம் தான் அதிகம் நிகழ்வதாகவும் அந்த ஆய்வுகள் கூறுகின்றன. இதுவொரு மிக முக்கியமான சமூகப் பிரச்சினையாக மாறக்கூடும்; குழந்தைகளில் குறிப்பாக பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக செய்யப்படும் முதலீட்டின் அளவு இதனால் குறையலாம். இன்று நாம் எதிர்நோக்கி இருக்கக்கூடிய இந்த நெருக்கடியின் விளைவுகளை அளவுக்கு அதிகமாக பெண்களின் மீது சுமத்தி விடக்கூடாது என்பதை உறுதி செய்வதில்தான் ஒட்டுமொத்த சமூகப் பாதுகாப்பும் அடங்கியுள்ளது.

மேலும், மகப்பேறு நலனில் உள்ள இடையூறுகளை அரசு நீக்க வேண்டும்; கருத்தடை செய்து கொள்வதில் பல புதிய வழிமுறைகளைக் காண வேண்டும்; கிருமி நாசினி, மாதவிலக்கு போன்ற காலங்களில் பயன்படக்கூடிய நாப்கின் போன்ற பெண்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்; பேறு காலத்தில் உள்ள பெண்களுக்கு தொடர்ந்து அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்குவதற்கு ஏற்ற வகையில் மருத்துவப் பணியாளர்களைத் தொடர்ந்து களத்தில் இயக்க வேண்டும்.

 அமெரிக்க ஐக்கிய குடியரசு (US), ஐக்கிய முடியரசு (UK), சீனா (CHINA) போன்ற நாடுகளிலும் ஏனைய பிற நாடுகளிலும் இந்த ஊரடங்கு உத்தரவு ஏற்படுத்தி இருக்கக்கூடிய மிக முக்கியமான இன்னொரு ஆபத்து என்பது, பெண்களுக்கு அவர்களது கணவன்மார்களாலும் அல்லது வேறு பல உறவுகளாலும் ஏற்பட்டிருக்கக் கூடிய பாலியல் வன்முறைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தான். இது பெண்களின் வாழ்வியலை மேலும் சிக்கலாக்கி விடுகிறது.

சட்டங்களை நடைமுறைப் படுத்தக்கூடிய ஆட்சியதிகார அமைப்புகள், பெண்களின் மீதான இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணர்ந்து பெண்களின் உணர்வினை மதித்து அவர்களை ஆதரிக்க வேண்டியது அரசின் முதற்கடமை. பெண்களும் அவர்தம் குழந்தைகளும் சமூகத்தால் அச்சவுணர்வு கொள்ளும்போது அவர்களின் பிரச்சனையை காது கொடுத்து கேட்பதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் அரசு தயாராக இருக்கின்றது என்ற உணர்வினை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது ஏற்படுத்த வேண்டிய அவசியம் அரசிற்கு ஏற்பட்டுள்ளது. துன்பம் வரும்போது பெண்களுக்கு துணையிருப்பது அரசின் தவிர்க்கவியலாத கடமைகளுள் ஒன்று. இதுபோன்ற சமயங்களில், துன்பத்திற்கு ஆளாகும் பெண்கள் தங்களைக் காப்பாற்ற காவல் துறையை அழைக்கும்போது, காவல் துறை அதிகாரிகள், உதவிக்கு அழைத்த அப்பெண்களுடைய மதம், சாதி, வகுப்பு போன்ற எந்தக் காரணியையும் கணக்கில் கொள்ளாது எல்லாப் பெண்களையும் ஒரே மாதிரியாக நடத்தி, அவர்களின் கூக்குரலுக்கு செவிசாய்த்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை காவல்துறைக்கு அரசு வலியுறுத்திக் கூற வேண்டும்.

3. வலசை தொழிலாளர்கள் (Migrant workers):

 நாடு முழுவதும் எழுந்திருக்கக்கூடிய இந்த தொற்றுநோய் நெருக்கடியினால் வலசைத் தொழிலாளர்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை வெளிக்கொண்டு வருவதில் ஊடகங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்ற வேண்டும். அவ்வாறு வெளிக்கொண்டு வரும்போது, அவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அவர்களின் புவியியல் சார் சமூகப் பரவல் (geographic concentration,) போன்றவற்றையும் கண்டறிய வேண்டும்; அவ்வாறு செய்வதன் மூலம் அந்த சமூகக் குழுக்களை விரைவில் அடையாளம் கண்டு, அவர்களை தற்போதைய நெருக்கடியிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கான திட்டங்களைத் தீட்டுவதற்கும் அரசு அவர்களின் மீது கவனம் குவிப்பதற்கும் ஏதுவாக அமையும். 

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 8.5 சதவீத மக்கள், அதாவது 4.1 கோடி மக்கள் பணி நிமித்தமாக இடம்விட்டு இடம் பெயரக்கூடிய வலசைத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுள் 3.5% தொழிலாளர்கள், தற்காலிக வலசைத் தொழிலாளர்களாக (temporary migrant workers) அறியப்படுகிறார்கள்.

சொந்த வீட்டிற்கு புறத்தே வாழும் இவர்கள் பெரும்பாலும் அமைப்புசாராத் தொழிலில் (informal sector work) ஈடுபடுகிறார்கள். நாட்டின் இன்றைய நெருக்கடியினால் மிக அதிகமாக பாதிக்கப்படக் கூடியவர்கள் இவர்கள்தான். ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்குள், ஒரு மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு வேலையின் பொருட்டு இடம்பெயர்பவர்களை நாங்கள் "தற்காலிக வலசைத் தொழிலாளர்கள்" ( (temporary migrant workers) என்று வகைப்படுத்துகின்றோம்.

நிரந்தர வலசைத் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களுடைய இருப்பிடங்களில் வசிக்க, தற்காலிக வலசைத் தொழிலாளர்களோ நிரந்தர வீடுகள் ஏதுமின்றி இடம் பெயரக்கூடியவர்கள் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இத்தகைய தற்காலிக வலசைத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள், அரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் மேற்கு மற்றும் தென் மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறார்கள் என்று அடையாளம் கண்டுள்ளோம்.

சமூகத்தின் அடிப்படை வாழ்வாதாரப் பொருட்களை வழங்கக்கூடிய வணிகத் தொடர்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய தேக்கம், ரொக்க கையிருப்பின் போதாமை ஆகிய இரு காரணங்களினாலும் இந்த குழுக்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை வழங்குவது கடினமான பணியாக இருக்கும் என்பதை நாங்கள் அறிகின்றோம். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (PDS) இவர்கள் பயனடைகிறார்கள் என்ற போதிலும்கூட, தாங்கள் இடம்பெயர்ந்து செல்லக்கூடிய பகுதிகளுக்கு அந்தக் குடும்ப அட்டையை அவர்கள் எடுத்துச் செல்வதில்லை. ஆதலால், அத்திட்டத்தின் பயன்களை அவர்களால் பெற இயலவில்லை.

பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்துதல் என்ற திட்டம் அவர்களுக்கு உதவக்கூடும் என்றாலும், அந்தப் பணத்தைக் கொண்டு அவர்களது அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்த கொள்ளவியலாத நிலையே தொடர்ந்து நீடிக்கின்றது.

தற்காலிக வலசைத் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கக்கூடிய இத்தகைய மாவட்டங்களில் அவர்களுக்குப் போதுமான உணவினை வழங்கும் பொருட்டு, பொது சமூகச் சமையல் கூடங்களை (community kitchens) அரசு உருவாக்க வேண்டும். இதில், மேலும் பல புதுமையான வழிமுறைகளையும் அரசு கடைப்பிடிக்கலாம். சான்றாக, கேரள அரசு தொற்றுநோயால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் வீடுகளுக்கே சென்று நேரடியாக உணவுகளை வழங்குகிறது. இதே முறையை வலசைத் தொழிலாளர்கள் விடயத்திலும் பின்பற்றலாம்.

மேலும், பள்ளி, கல்லூரி வளாகங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள் போன்ற அரசின் கட்டிடங்களில் அவர்களைத் தங்க வைக்கலாம். சிறு தொழிற்சாலைகளில் பணி செய்தவர்கள், Ola, Uber போன்ற இணையச் செயலிகளின் மூலம் வாகனச் சேவையில் பணிபுரிந்த ஓட்டுநர்கள், ஊரடங்கு உத்தரவு முடிந்து இயல்ப நிலை திரும்பி, தங்களுடைய பழைய வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்று, எதிர்காலம் குறித்த ஒரு நிச்சயமில்லாத தன்மையோடு வாழ்கின்றனர். இந்நிலையில், அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும் விரும்புகின்றனர். அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதற்குத் தேவையான பாதுகாப்பான வாகன வசதி ஏற்பாடுகளை செய்து தர வேண்டியது மாநில அரசின் முக்கிய கடமையாகும்.

தொற்று நோய் குறித்த பீதி மக்களிடையே பரவுவதற்கு முன்பு அதனைத் தடுக்கும் பொருட்டு மாநில அரசுகள் தற்போதைய இந்தச் சூழலுக்கேற்ப தங்களுடைய அரசின் நிர்வாக அமைப்புகளில் தகுதிறன்களையும் மனதிற்கொண்டு, வரும் காலங்களில் இந்த தொற்றுநோய் அதிகம் பரவாமல் தடுப்பதற்கு, உரிய அறிவிப்புகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். தொற்றுநோய், சமூகத்தில் ஏற்படுத்தும் பதற்றநிலை பல்வேறு விதமான சமூகக் கோளாறுகளுக்கு வழிவகை செய்துவிடும். அவற்றிற்கு இடந்தராமல் தொற்றுநோயைத் தடுப்பதற்கு உரிய நம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களின் கவனத்தை முழுமையாக ஈர்க்கும் வகையிலும் நம்பகத்தன்மை உடையதாகவும் அமைய வேண்டும்.

4. தினக் கூலிகள் (Daily wage earners):

அன்றாடம் வேலைக்குச் சென்று ஊதியம் ஈட்டக்கூடிய தினக்கூலிகள், கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரத்தியேகமான தொழிலாளர் குழுக்களாக அறியப்படுகின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதார நெருக்கடிகளை உடனடியாக சந்திக்கக் கூடியவர்களும் இந்தக் குழுவினரே. 2017-2018 ஆம் ஆண்டின் சீர்கால தொழிலாளர் வலியறி ஆய்வின் (periodic labour force survey - PLFS) புள்ளிவிவரங்களை மையமாகக் கொண்டு, கிராமங்களிலும் நகரங்களிலும் தினக்கூலிகளின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைக் காட்டும் வரைபடத்தைத் தயாரித்துள்ளோம். 

daily wagers mapஉழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் (working population) மொத்த மக்கள் தொகையின் எண்ணிக்கையில் 14.5% தொழிலாளர்கள் நகர்ப்புறம் சார்ந்த தினக்கூலிகளாகவும், 29% தொழிலாளர்கள் கிராமங்களைச் சேர்ந்த தினக்கூலிகளாகவும் உள்ளனர். இவற்றில், குறிப்பாக நகர்ப்புறம் சார்ந்த தினக்கூலிகளில் பெரும்பாலானோர் கட்டிட வேலைகளுக்கும் (construction), குறைந்தபட்ச கைத்திறன் தேவைப்படுகின்ற (semi-skilled) தொழில்களுக்கும் அல்லது கைத்திறன் தேவையற்ற தொழில்களிலும் (unskilled) ஈடுபடுவதனால் அவர்கள் உடனடியாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கிராமங்களிலிருந்து வர வேண்டிய அத்தியாவசியப் பொருட்களின் வரவும், அந்த வணிகத் தொடர்பில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின் காரணமாகவும் அதே வேளையில், பணவீக்கத்தினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருப்பதும், அவர்களின் மீது கடுமையான சுமையை ஏற்றி இருக்கின்றது.

கணக்கீட்டிற்கு எடுத்துக் கொண்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தினக்கூலி தொழிலாளர்களின் பரவல் ஒவ்வொரு மாநிலங்களின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனைக் காட்டும் வரைபடம் ஒன்றைத் தயாரித்துள்ளோம். சத்தீஸ்கர் மாநிலத்திலும் இந்தியாவின் தென் மாநிலங்களிலும் நகர்ப்புற தினக்கூலிகளின் பரவல் மிக அதிகமாக உள்ளதைக் கண்டறிந்துள்ளோம். எனவே குறிப்பிடப்பட்டுள்ள அந்த மாநிலங்கள், தினக்கூலித் தொழிலாளர்களின் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினக்கூலிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவது, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்குவது ஆகியவை அந்த மாநில அரசுகள் எடுக்க வேண்டிய மிக முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள் ஆகும்.

5. சுயதொழில் முனைவோர் (Self-employed individuals)

குடிசை சார் உற்பத்திகள், தெருவோர வணிகம் ஆகியவற்றில் ஈடுபடும் விவசாயிகள், பிற தனிநபர்கள் போன்றோர் "சுயதொழில் முனைவோர்" என்ற பெரும்பட்டியலில் அடங்குவர். உழைக்கும் வர்க்கத்தின் மற்றொரு மிகப் பெரும்பான்மை பிரிவினர்களான இவர்கள், இந்த ஊரடங்கு உத்தரவினால் தங்கள் எதிர்கால வாழ்வாதாரங்களை மீண்டும் பெறுவதில் ஒரு நிச்சயமில்லாத் தன்மையைக் கண்டுள்ளனர்.

self employed map2011-ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 30% தொழிலாளர்கள் சுயதொழில் முனைவோர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தப் புள்ளிவிவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வரைபடமானது, இந்தியாவின் மாவட்டங்கள்தோறும் இவர்களின் பரவல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள், பஞ்சாப், உத்தர்காண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக அதிகமான சுய தொழில் முனைவோர்கள் உள்ளனர்.

தினக்கூலிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மேற்கொள்ள வேண்டிய அதே நடவடிக்கைகளை இந்தப் பிரிவினர்களுக்கும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள பகுதிகளில் இயங்கக்கூடிய கடைகளின் வாடகையைத் தள்ளுபடி செய்வது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும். விவசாயிகளைப் பொருத்தமட்டில், விவசாய உற்பத்திச் செயல்முறைகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்குத் தேவையான இடுபொருள்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு ஏற்ற வழிவகைகள் காணப்பட வேண்டும்.

6. மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் (Salaried workers):

மொத்தமுள்ள உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினரின் எண்ணிக்கையில், 18.5% தொழிலாளர்கள் மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் தொழில்சார்ந்த கைத்திறன் பெற்றவர்கள் என்பதோடு மட்டுமின்றி, சுய தொழில்முனைவோர்களின் ஊதியத்தை விட இரண்டு மடங்கு ஊதியம் பெறுபவர்களாகவும் உள்ளனர். இத்தகைய மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களுள்ளும் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் சேவைத் தொழிலில் (service sector) ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 75% தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.

மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் (Provident Fund) கூடுதல் பங்களிப்பு செலுத்தப் போவதாகவும், அதிலிருந்து தேவையானபோது பணத்தை பெற்றுக் கொள்வதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யப் போவதாகவும் அரசு அண்மையில் அறிவித்திருந்தது. அத்தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தினால், கடந்த மூன்று மாதங்களாக ஓரளவிற்கு பலன் ஏற்பட்டுள்ளது என்றபோதும், நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது இந்தத் திட்டத்தில் போதாமை காணப்படுவதை உணர முடிகின்றது.

உலக அளவில் இயங்கும் கண்டாஸ், இண்டிகோ, கூவ்ஸ், ஓயோ (Qantas, Indigo, Koovs, Oyo) போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம், குறைக்கப்பட்டு வரும் நிலை உள்ளது. ஆட்குறைப்பு செய்ய வேண்டாம் என தனியார் நிறுவனங்களை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அது குறித்த முடிவுகளை எடுப்பது, நிர்வாகத்தின் நிதி மேலாண்மையைச் சார்ந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் கீழ்நிலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதியம் வெட்டப்படுவதற்கு முன்பாக, அந்நிறுவனங்களில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் ஊதியமும், நிர்வாக மேலாண்மை அதிகாரியின் ஊதியமும் குறைக்கப்படலாம் என்று அறியப்படுகிறது.

தென் கொரியாவிலும் சீனாவிலும் தொற்றுநோய்த் தாக்கத்தின்போது, அந்நாட்டில் இயங்கி வந்த பல்வேறு துறைகளில் செய்யப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைளிலிருந்து நாம் கவனம் பெற வேண்டும். தொற்றுநோய் பரவிய காலத்திலும், முக்கிய துறைகளான மருத்துவ சேவைகள், அடிப்படை தளவாடப் பொருட்கள், தொழில்நுட்ப சேவைகள், வங்கிகள், பொதுப்பணித் துறை மற்றும் காவல்துறை, ராணுவம், அத்தியாவசிய உற்பத்திகளான விவசாயம், மின்சாரம், மருத்துவக் கருவிகள் போன்றவை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த காலங்களிலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தன. மாற்றுவழிகளில் செய்யக்கூடிய உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் அதற்கேற்ப வடிவம் கொண்டன. சான்றாக, கல்வி இணைய வடிவம் பெற்றது. இத்தகைய துறைகளில் மேலும் கூடுதலான முதலீடுகளையும் திறன் மேம்பாட்டு வசதிகளையும் ஏற்படுத்தும் பொழுது அவை மேலும் மேன்மையுறும். இவற்றைத் தவிர உள்ள மற்றத் துறைகளான சுரங்கத் துறை, துணைநிலை உற்பத்தி துறைகளான உடை உற்பத்தி, மரச்சாமான்களின் உற்பத்திகள் உள்ளிட்ட துறைகள், கட்டுமானம், தனியார் சேவைகள், வணிகம் போன்றவை குறுகிய காலத்தில் மிகப் பெரிய பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும்.

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கு, நுகர்வும் சந்தையும் குறைக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. மனிதத் தொடர்புகளை குறைப்பதன் வழியேதான் இந்தத் தொற்றை தடுக்க முடியும். அதன்பொருட்டு எடுக்கப்படும் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கையானது, மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள், தொழில்முனைவோர்கள், தினக் கூலிகள் என்று ஒவ்வொரு வகை தொழிலாளர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் பணிசார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் பல்வேறு வகையான இடையூறுகளை சந்திக்க நேரிடக் கூடும்.

சுருக்கமாக சொல்வதென்றால், நலிவடைந்த மிகவும் பலவீனமான உழைக்கும் பாட்டாளி வர்க்கத் தொழிலாளர் பிரிவினர்களின் மீது தான், இந்தத் தொற்றுநோய் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தப் போகின்றது. இந்த இக்கட்டான காலக்கட்டத்தில், நாம் மனிதநேயத்தைக் கைவிட்டு விடாமல், அவர்களது துன்பங்களை துடைக்கக் கூடிய கொள்கைகளையும் திட்டங்களையும் நோக்கி நடைபோட வேண்டும்.

தமிழில்: ப.பிரபாகரன்

Pin It