பலரால் பாடப்பட்ட பாடல்களைக் கொண்ட நாலடியாரில் உழவுத்தொழில் தொடர்பான குறிப்புகள் பல இடம்பெற்றுள்ளன. அதிலும் சிறப்பாக நெல் உற்பத்திமுறை தொடர்பான குறிப்புகள் நிரம்பவே காணக் கிடைக்கின்றன.

உழுது விதைத்தல்

பகடு நடந்த கூழ்’ என்ற 2 ஆம் பாடலின் குறிப்பைக் கொண்டு மாடுகள் பூட்டி உழவர்கள் நிலம் உழுததை அறியமுடிகிறது (பகடு – யானை எருமை பசு இவற்றின் ஆண் என்று கழகத் தமிழகராதி பொருளுரைப்பதைக் காண்க).. ‘கொல்லை இரும்புனத்துக் குற்றி அடைந்தபுல் ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு’ என்னும் 178 ஆம் பாடலும் உழுபடை கொண்டு உழும் நடைமுறை உண்மையென்பதற்கு வலு சேர்க்கிறது. உழுபடை என்பது கலப்பை. உழவு என்பதைக் கொண்டமைந்த உழவர் என்னும் பெயர்ச்சொல்லும் இப்பாடலில் காணக் கிடைக்கிறது.

 ‘செந்நெல்லாலாய செழுமுளை மற்றும் அச் செந்நெல்லே ஆகி விளைதலால் என்னும் 367 ஆம் பாடலில் காணப்படும் குறிப்பு விதைநெல் குறித்த சான்றாக அமைந்திருக்கிறது. ‘எந்நிலத்து வித்திடினும்’ (242) என்னும் குறிப்பின் மூலம் எந்த நிலத்தில் எந்த விதை போட வேண்டும் என்கிற தெளிவு அக்கால மக்களிடம் இருந்துள்ளதை அறியலாம்.. இதனை, நல்ல நிலத்தில்தான் வளமாக நெல் விளையும் எனச் சொல்கிற ‘நிலநலத்தால் நந்திய நெல்லே போல்’ (179) என்னும் தொடரும் உறுதிபடுத்துகிறது.

தேக்கிய நீர் பாய்ச்சும் வாய்க்கால்கள்

செறுத்தோறும் உடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறை செய்வர் நீர் நசைஇ வாழ்நர் என்னும் 222 ஆம் பாடல் வழியாகக் கிடைக்கின்ற, உழவர்கள் உழவுத்தொழிலுக்குத் தேவையான நீரைத் தேக்கி வைத்திருந்ததோடு உடைக்கும் போதெல்லாம் அடைத்தனர் என்ற செய்தியும் செய்விளைக்கும் வாய்க்கால் என்ற 218 ஆம் பாடல் வழியாகக் கிடைக்கின்ற , தேக்கிய நீர் வயல்களுக்கு நீர்பாய்ச்ச வாய்க்கால்கள் வெட்டியிருந்தனர் என்ற செய்தியும் அவர்களின் நீர் மேலாண்மைக்குச் சான்று. இதைக் கொண்டு நோக்கும்போது இன்றிருப்பது போலவே இருந்துள்ள அக்காலத்திய விளைநில அமைப்பு நம் கண்முன் விரிவது தவிர்க்க இயலாததாகிறது.

களைபறித்தல்

அதோடுமட்டுமல்ல நிலத்தின் பண்பறிந்து ஏர்பூட்டி உழுது விதை விதைத்து தேக்கிய நீரை வாய்க்கால் வழி பாய்ச்சி விளைந்துவரும் பயிருக்குக் களை எடுக்கும் செய்தியைச் ‘சாய்பறிப்ப' (பறிக்க என்பதும் பாடம்) நீர் திகழும் தண்வயல்’ என்ற குறிப்பின் வழி சொல்கிறது 389 ஆம் பாடல் . சாய் என்பதற்கு கோரை என்பது பொருள். வயலில் இடையூறாக இருக்கும் கோரையைப் பறித்தெடுத்தலே சாய் பறித்தல் என்று வழங்கப்பட்டுள்ளது. ‘சாய்பறித்தல்’ என்பது போலவே ‘களை பறித்தல் என்பதும் ஒத்து வழங்குவதைக் காணலாம்’. இச்சொல்லாடல் இப்போதும் களை பறித்தல் என்றே தஞ்சை வட்டாரங்களில் தற்போதும் வழங்கப்படுகிறது. மேலும் வயலில் நீரை நிரப்பி களை எடுப்பதே களைகளைப் பிடுங்குவதற்கு எளிதானது. இன்றும் அப்படித்தான் செய்யப்படுகிறது. களை பறித்து முடித்ததும் நெல்லின் தூறுகளுக்கு இடையில் காணப்படும். இடைவெளிகளில் (நீர் திகழும்) தண்ணீர் பளபளக்கும். களை பறித்தல் தொடர்பாக நாலடியார் சொல்லும் இந்தக் காட்சிகளை நெல் பயிரிடும் வயல்களில் இன்றைக்கும் பார்க்க முடியும்

நெல்வயல்

பொன்னிறச் செந்நெற் பொதியொடு என்னும் 269 பாடல் குறிப்பிலிருந்து செந்நெல் வயிற்றுக்கதிராக இருக்கும் நுட்பமான காட்சியை உணர்ந்துகொள்ள முடிகிறது.

செந்நெல்லாலாய செழுமுளை மற்றும் அச் செந்நெல்லே ஆகி விளைதலால் அந்நெல் வயல் நிறையக் காய்க்கும் வளவயல் ஊர என்னும் 367 ஆம் பாடலில் செழுமையான விதைகளிலிருந்து முளைத்து விளைந்த செந்நெல் வயல்நிறைய காய்த்திருக்கும் வளமான வயல் என்கிற செய்தி நம்மையும் வரப்பில் நடைபோடவைக்கிறது.

நெல்லின் பயன்பாடு

இப்படி விளைவித்த நெல் உணவுக்காகவும் பிற பொருள்களை வாங்கவும் பயன்பட்டிருக்கிறது. களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர் (133) என்பதிலிருந்து நெல்லைக் கொடுத்து உப்பினை வாங்கும் அக்காலப் பண்டமாற்றை அறியலாம்.

நெல்லுக்கு உமி (221) என்ற குறிப்பை நோக்குமிடத்து நெல்லிலிருந்து அரிசி குத்தப்பட்டுள்ள செய்தி கிடைக்கிறது. இம்மியரிசி என்று 94 ஆம் பாடல் இதற்கு வலு சேர்க்கிறது (இது ஒருவகை சிறிய அரிசி என்றுரைப்பவர்களும் உள்ளனர்). எப்படியிருந்தாலும் இம்மியரிசியில் உள்ள அரிசி என்னும் சொல், நெல் - உமி - அரிசி – சோறு ஆகியவற்றை இணைத்துப் பார்க்க இடங்கொடுக்கிறது.

 217 ஆம் பாடலில் ‘வெண்சோறு’ குறித்த செய்தி வருகிறது. 333 ஆம் பாடலில் ‘நெய்யில்லாப் பால் சோறு’ என்னும் குறிப்பும் பாடல் 206 இல் வருகிற புலியுகிர் வான் புழுக்கல் அக்காரம் பாலொடு என்னும் குறிப்பும் தமக்குச் செல்வுழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்பு (328) என்னும் (அழுத்தி அழுத்தி வைத்துக் கட்டி , தோளில் கோத்துமாட்டிக்கொள்ளும்கட்டுச்சோற்றுக்குத் தோள்கோப்பு என்று பெயர்.) கட்டுச்சோற்றைக் குறிக்கும் தொடரும் அக்காலத்தில் நெல்லரிசி முதன்மை உணவாகப் பயன்பட்டமைக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன..

பிறதானியங்கள்

‘வறியராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ் எனில்’ (1) மற்றும் பகடு நடந்த கூழ்’ (2) ஆகிய பாடல்களில் கூறப்பட்டுள்ள கூழ் என்ற சொல்லைக் கொண்டு கூழ் காய்ச்சுவதற்கான பிற தானியங்கள் விளைவித்திருப்பதும் 387 இல் காணப்படும் செங்கொள்’ என்ற குறிப்பிலிருந்து கொள் விளைவித்திருப்பதும் தெரிகிறது. ‘செக்கூர்ந்து என்ற (374) குறிப்பிலிருந்து எண்ணெய் ஆட்டுவதற்கான எண்ணெய் வித்துக்கள் விளைந்திருக்கும் என்பதையும் உய்த்துணரலாம்.

உழவனும் நிலமும்

பயந்த விளைநிலம் உள்ளும் உழவன் என்னும் 356 ஆம் பாடலடியில், உழவன் தனக்கு விளைச்சலைத் தந்த நிலத்தை அன்போடு எண்ணிக் கொண்டிருப்பான் என்ற குறிப்பு , உழவருக்கு நிலத்தின் மீதிருந்த அன்பு மீக்கூரும் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

வறட்சி

பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட மின்னொளிர் வானம் கடலுள்ளுங் கான்றுகுக்கும் (269) என்னும் இரண்டே இரண்டு வரி.. உழவனின் வயிற்றெரிச்சலை அடைகாத்து வைத்திருக்கிறது. வயிற்றுக்கதிராக இருக்கும் செந்நெல் வயல், வறட்சியால் நீரின்றி வாடிக் கிடக்கும்போது, அவ்விடத்தில் பெய்யாத மழை, வீணாகக் கடலில் பெய்கிறதே என வருந்தும் உழவர்களின் துயரக்குரல் உணருந்தோறும் உருக்கக்கூடிய ஒன்று.

துணை நூற்பட்டியல்

  1. நாலடியார் உரைவளம் முதல் பாகம் .1990 பதிப்பாசிரியர்கள் S.முத்துரத்ன முதலியார், வித்துவான் M.R. கந்தசாமி பிள்ளை, தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு,
  2. நாலடியார் உரைவளம் இரண்டாம் பாகம்.1990. பதிப்பாசிரியர்கள் S.முத்துரத்ன முதலியார், வித்துவான் M.R. கந்தசாமி பிள்ளை தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு,
  3. நாலடியார், இளவழகனார் உரை, திசம்பர் 2007, கழக வெளியீடு.
  4. கழகத் தமிழகராதி, 2005 , தி.தெ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்

- பொ.முத்துவேல்