தன்மானமும், சுயமரியாதையும் உள்ள மனிதர்கள் ஒருபோதும் பிச்சை எடுத்து உயிர் பிழைக்க விரும்புவதில்லை. வள்ளுவர் கூட “பிச்சை எடுத்துத்தான் ஒரு மனிதன் உயிர் வாழ வேண்டும் என்றால் குடிமக்களுக்கான பொருளைத் திரட்டித் தரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் நாடாளுபவன், அப்படிக் கடமையைச் செய்யாமையின் காரணமாக இரப்பவரைப் போலவே தானும் எங்கும் அலைந்து திரிந்து கெடுவானாக” என்கின்றார். ஆனால் இன்றோ அடுத்த வேளை உணவிற்கு யாராவது வழி செய்ய மாட்டார்களா என மக்கள் கதவுகளைத் திறந்து வைத்து காத்துக் கிடக்கின்றார்கள். ஊரடங்கு அறிவிக்கப்படும்வரை தன்னுடைய சொந்த உழைப்பில் சுயமரியாதையோடு வாழ்ந்தவர்கள் இன்று தங்கள்முன் உணவுப் பொருளோடு நீளும் தர்ம பிரபுக்களின் கரங்களுக்காக காத்துக் கிடக்கின்றார்கள்.

corona people queue for foodகுடிமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய முழுப் பொறுப்பும் அரசு என்ற கட்டமைப்பை மட்டுமே சார்ந்ததாகும். அது ஏதோ சில தனிமனிதர்களின் தர்மகர்த்தாதனத்தைச் சார்ந்ததல்ல. ஒரு குடிமகன் உணவு இல்லை என்று பிச்சை எடுத்தாலோ, இருக்க இடமில்லாமலும், உடுத்த நல்ல ஆடை இல்லாமலும் திரிந்தாலோ அந்த நாட்டை ஆளும் அரசு சாமானிய மக்களின் நலன் காக்கும் அரசாக இல்லாமல் முதலாளிகளின் கைக்கூலியாக மட்டுமே செயல்படுவதாக அர்த்தம்.

ஓர் உத்திரவாதமான வேலையில் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு இருந்தவர்களே, இன்று கொரோனா நோய் தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் செய்துவது தெரியாமல் திகைத்து நிற்கின்றார்கள். 50 சதவீத வேலையாட்களுடன் பல தொழிற்நிறுவனங்களை இயக்கிக் கொள்ள அரசு கொடுத்த அனுமதியை ஏற்கெனவே எப்படியாவது தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து லாபத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பல தொழிற்நிறுவனங்கள் அதை முழு வீச்சில் செயல்படுத்த பயன்படுத்திக் கொண்டன. 50 சதவீத தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு தொழிற்சாலைகள் இயங்கினாலும் உற்பத்தி சிறிதுகூட குறையாமல் 100 சதவீத தொழிலாளர்களை வைத்து அவை இயங்கிய பொழுது எடுத்த அதே முழு உற்பத்தியை தற்போது எடுத்து வருகின்றன.

அரசாங்கம் ஊரடங்கு காலத்தில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள பிடித்தமும் செய்யாமல் கூலி கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியும் அதை எந்த முதலாளியும் கிஞ்சித்தும் மதிக்கவில்லை. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தாங்கள் ஏற்கெனவே வேலை செய்த தொழிற்சாலைகளில் இருந்து எந்தவித சம்பளமும் கிடைக்காமல் வாழ்வா சாவா போராட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அரசாங்கம் தொழிலாளர்களின் கிளர்ச்சியைத் தடுக்க வெறுமனே அறிவுறுத்தல் கொடுத்ததோடு சரி, அதை தொழிற்நிறுவனங்கள் முறையாக கடைபிடிக்கின்றதா என்று எந்தவித கண்காணிப்புக்கும் உட்படுத்தவில்லை. சம்பளம் கொடுக்கவில்லை என்றால் யாரிடம் புகார் கொடுப்பது என்றுகூட இந்த அரசு அறிவிக்கவில்லை.

ஊரடங்கு 24 ஆம் தேதி அமுல்படுத்தப்பட்டதால் பல தொழிற்நிறுவனங்கள் அந்த மாத சம்பளத்தைக் கூட கொடுக்காமல் தங்களிடம் வேலை பார்த்த உள்ளூர் தொழிலாளர்களை மட்டுமில்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களையும் விரட்டி அடித்துள்ளன. சில தொழிற்நிறுவனங்கள் குறைந்தபட்ச தொகையை கையில் கொடுத்து விரட்டி இருகின்றன. ஏற்கெனவே தொழிலாளர்களின் நலன்களை காற்றில் பறக்க விட்டுவிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்நிறுவனங்கள் இந்த நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி மேலும் தொழிலாளர்களை ஒட்ட சுரண்டி கொழுக்க முற்படும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. 50 சதவீதத் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு முழு உற்பத்தியை எடுத்துக் கொண்டிருக்கும் தொழிற்நிறுவனங்கள் ஊரடங்கு முடிந்த பின்னால் கூட அதையே தொடராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

கொரோனாவுக்குப் பிந்தைய காலம் தொழிலாளர்களுக்கு மிகக் கொடிய காலமாக இருக்கப் போகின்றது. ஏற்கெனவே வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்ட சூழ்நிலையில் எந்தவித புதிய வேலைவாய்ப்புகளும் இன்றி மிக மோசமான நெருக்கடிக்கு உழைக்கும் வர்க்கம் தள்ளப்படப் போகின்றது. இது ஒரு பக்கம் என்றால், தங்களுடைய சொந்த உழைப்பின் மூலம் வாழ்ந்து வந்த பல்வேறு நடைபாதை வியாபாரிகள், சேவைத் தொழில் புரிவோர், சிறு குறு தொழிற்நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், தறிப்பட்டறை, லாரிபட்டறை போன்றவற்றில் பணிபுரிபவர்கள் என லட்சக்கணக்கான மக்கள் கடந்த ஒரு மாத காலமாக எந்தவித வருமானமும் இன்றி செய்வதறியாது முடங்கிக் கிடக்கின்றார்கள்.

இலட்சங்களில் சம்பளம் வாங்கி கோடிகளில் கொள்ளை அடிக்கும் ஆட்சியாளர்கள் சாமானிய மக்களை அற்பப் பதர்களாக நினைத்தே நிவாரண நிதி ஒதுக்குகின்றார்கள். மாநில அரசு முறையாக ரேசன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுத்த 1000 ரூபாய் என்பது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்குக் கூட தாக்குப் பிடிக்க உதவாது. மத்திய அரசு முற்றிலுமாகவே கைவிட்ட சூழ்நிலையில் எந்த வகையான அடையாளமும் அற்ற புலம்பெயர் தொழிலாளர்களும், வீடற்றவர்களும், மரணத்தை எதிர்நோக்கி காத்துக் கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

சில அம்மா உணவகங்களில் மட்டுமே உணவு இலவசமாக வழங்கப்படுகின்றது. அரசு நினைத்தால் அனைத்து அம்மா உணவகங்கள் மட்டுமில்லாமல் இன்று தமிழ்நாடு முழுவதும் அரசுக்குச் சொந்தமான பள்ளிகள் மூலம் மூன்று வேளையும் இலவசமாக மக்களுக்கு உணவு வழங்க முடியும். அதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே உள்ளன. ஆனால் அரசுக்கு மனமில்லை என்பதுதான் உண்மை.

ஊரடங்குக்குப் பின்னான ஒவ்வொரு நாளையும் மக்கள் நெருப்பாற்றைக் கடப்பதுபோல கடந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ அடுத்தவர்களின் கருணையை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கின்றார்கள். அரசே பணமில்லாமல் பணக்காரர்களின் கைகளை எதிர்பார்த்து அவர்கள் தரும் நன்கொடைக்காக காத்துக் கிடக்கின்றது. எல்லா வளமும் இங்கே இருக்கின்றது. ஆனால் எதுவுமே இந்த உழைக்கும் மக்களுக்குச் சொந்தமிலை. ஒரு பக்கம் பெரு முதலாளிகளும், இன்னொரு பக்கம் அவர்களை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகளும் சுரண்டியது போக காலி சட்டியாக காட்சி அளிக்கின்றது இந்தியாவின் பொருளாதார நிலை.

சில தன்னார்வலர்களும், அரசியல் கட்சிகளும் தாமாக முன்வந்து மக்களுக்கு உதவிகள் செய்தாலும் அவை எல்லாம் கருணையின் பாற்பட்டவையே தவிர கடமையின் பாற்பட்டவை அல்ல. மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் அரசோ ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் பெருமுதலாளிகளுக்கு லட்சக்கணக்கான கோடி மக்கள் வரிப் பணத்தை மானியமாகக் கொடுத்து விட்டு இன்று சாமானிய உழைக்கும் மக்களுக்குக் கொடுக்க பணமில்லை என்று கை விரிக்கின்றது. இந்தியாவில் ஏறக்குறைய 17 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கம் உள்ளது. இதில் 60 சதவீதம் அதாவது 10 லட்சம் கோடிகளுக்கு மேலான பணம் 1 சதவீதப் பணக்காரர்களிடம் குவிந்து கிடக்கின்றது.

இருப்பதிலேயே பெரும் துயரம் ஒரு வேளை உணவிற்காக கையேந்துவதுதான். அப்படியான இழிவான நிலைக்கு இன்று மக்களை இந்த அரசுகள் தள்ளியிருக்கின்றன. ஆனால் அரசியல் புரிதலற்ற சிலர் அந்த நடிகன் எவ்வளவு கொடுத்தான், இந்த நடிகன் எவ்வளவு கொடுத்தான், அந்த முதலாளி எவ்வளவு கொடுத்தான், இந்த முதலாளி எவ்வளவு கொடுத்தான் என கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். மக்களுக்குக் கொடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும் அரசை மட்டுமே சார்ந்தது. அப்படி கொடுக்கத் தவறும் போது நாம் அரசை நோக்கித்தான் கேள்வி எழுப்ப வேண்டுமே ஒழிய சில தனிநபர்களைப் பார்த்தல்ல.

அரசாங்கத்திடம் கொடுக்கப் பணம் இல்லை என்றால் “நீ ஆட்சி செய்தது போதும்” என்று விரட்ட வேண்டியதுதான் நம்முடைய வேலை. ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு உணவளிக்கத் துப்பில்லாத ஆட்சியாளர்களை, பணக்காரப் பன்றிகள் கொழுக்க மட்டுமே தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் ஆட்சியாளர்களை மக்கள் ஆட்சியில் இருந்து துரத்த வேண்டும்.

ஆனால் மக்களைத் தொடர்ச்சியாக பிச்சைக்காரர்கள் போல கையேந்த வைக்க வேண்டும், தங்களுக்கு உதவி செய்யும் பணக்காரர்கள் மேல் எளிய மக்கள் வர்க்கப் பகைமையை மறந்து அவர்களை அண்டிப் பிழைக்கும் கூலி அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் திட்டமாக உள்ளது.

பசி சிந்தனையை மழுங்கடிக்கின்றது, பசி மனித மாண்புகளை உடைத்து எறிகின்றது, பசி தன்மானத்தையும், சுயமரியாதையையும் காவு வாங்குகின்றது, பசி ஒரு மனிதனின் சுயத்தை அவனிடம் இருந்து காணாமல் போகச் செய்கின்றது. பசி ஒருவனை அடிமை கொள்கின்றது. ஆனால் வரலாற்றில் சில சமயம் அதிசயமாக பசி புரட்சியைக் கூட கொண்டு வந்து விடுகின்றது.

இப்போது ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் பசியானது அந்த ஆட்சியாளர்களை விரட்டுவதோடு, இந்த அமைப்பு முறையையே மாற்றி அமைக்கும் ஒரு பெரும் தீயாய் மாற வேண்டும் என்பதுதான் சமூக மாற்றத்தில் தீராத காதல் கொண்டவர்களின் விருப்பமாக உள்ளது. பசி அதை நிச்சயம் செய்யும் என்று நாம் எதிர்பார்ப்போம்.

- செ.கார்கி

Pin It