babri masjid incidentஉலக வரலாற்றில் போர்க்களங்களுக்கு அடுத்து நீதிமன்ற வளாகங்களில்தான் சில மாபெரும் அநீதிகள் இழைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறினார் மௌலானா அபுல் கலாம் ஆசாத். இது எவ்வளவு உண்மையானது இந்த பாபர் மசூதி வழக்கில்.

இராமர் அயோத்தியில் பிறந்ததற்கான எந்தவொரு தொல்பொருள் அடையாளங்களும் சாட்சிகளும் இல்லை என்பதை நீதிமன்றமே ஒத்துக் கொண்டுவிட்டது. மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் இங்கு கோயில் கட்டுவதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாபர் மசூதி பற்றி என்ன தீர்ப்பு கூறியது உச்ச நீதிமன்றம்? தொழுகைக்கு மசூதிதான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை; எந்த இடத்திலும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. எனவே மசூதியை வேறு இடத்தில் கட்டிவிட்டு இந்துக்கள் கோயில் கட்டிக் கொள்ளலாம்

மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது மனசாட்சி இல்லாதவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியாகத்தானே இருக்கிறது என்று தோன்ற வைத்திருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு மசூதியில் தான் தொழுகை நடத்த வேண்டும் என்பதில்லை. 5 வேளைத் தொழுகையை எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்குரிய நேரம் தவறாமல் தொழ வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் இஸ்லாமியர்கள் போராடியது பாபர் கட்டிய அந்த மசூதிக்காகவா?

இஸ்லாத்தின் கடேசி நபியான முகம்மது நபிக்கே அவர்கள் வாழ்ந்த மதீனாவில் கல்லறையைக் கூட கொஞ்சம் உயர்த்தி விடக்கூடாது என்று அதனை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாமில் இந்த பாபர் கட்டிய மசூதியின் மீது ஏன் இவ்வளவு ஆர்வம்?

இது மசூதிக்கான போராட்டமே அல்ல. அவர்களது உரிமைக்கானது.

"உன் வீடு நீண்ட நாட்களாக பூட்டிக் கிடந்தது. அங்குதான் நீ வாழ வேண்டும் என்று கிடையாது. நீ எங்கு வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் எங்க தாத்தா இங்கு இருந்ததாக எங்கள் குடும்பத்தில் எல்லாரும் நம்புகின்றார்கள். ஆகவே இது எங்களுக்குச் சொந்தமானது" என்று உங்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டு, தன்னுடைய வீட்டைக் கட்டும், கூட்டு மனசாட்சிகளின் கல்லறையாகவே அது இருக்குமே தவிர, ஒருபொழுதும் வீடாகாது.

பாபர் மசூதியின் அந்த நடுப்பகுதியில் அந்த வட்ட வடிவக் கூம்பு இருக்கின்ற பகுதியில்தான் சரியாக இராமர் பிறந்தார் என்பதனை எதனை வைத்து இவர்கள் கூறுகின்றார்கள்? இராமனைப் பெற்ற கோசலைக்கு மட்டுமே தெரியும் இராமன் பிறந்த இடம். ஆனால் பாருங்களேன் கோசலைக்குத் தெரிந்தது பாபருக்கும் தெரிந்திருக்கிறது.

இராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அயோத்தியில் பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ராமருக்கான கோயில் இருக்கிறது. பதினைந்து கோயில்களும் இராமர் அங்குதான் பிறந்ததாக நம்பப்படுகிறது. அப்படியெனில் அந்த 15 கோயில்களும் பொய்யானவைகளா அல்லது இராமன் 15 இடத்திலும் பிறந்தானா? பொய்யானது எனில் அந்த 15 இடத்தையும் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அனுமதிப்பார்களா?

இந்தத் தீர்ப்பைக் கேட்டு ஏன் இஸ்லாமியர்கள் பதறுகின்றார்கள், மன வருத்தப்படுகின்றார்கள் என்றால் சங்கிகளின் அடுத்தடுத்த திட்டங்களினால்தான். அந்த பயத்தை அரசாங்கம் களைய வேண்டுமா, இல்லை பூஜை போட்டு கொண்டாட வேண்டுமா?

இந்துத்துவா பயங்கரவாதிகளின் 'இடிக்கப்பட வேண்டிய பள்ளிவாசல்கள்' பட்டியலில் டெல்லி அருகில் சம்பல் 'ஷாஹி ஜாமியா மஸ்ஜிதும்' ஒன்று. 1978ம் ஆண்டிலேயே இந்தப் பள்ளிக்குள் புகுந்து குரானைக் கிழித்தும் எரித்தும் அக்கிரமச் செயலில் ஈடுபட்டது ஆர்.எஸ்.எஸ். கும்பல். பின்னர் ஒரு பெண்ணை விட்டு அங்கு சிலையை உள்ளே எடுத்துச் செல்ல முயன்றனர். பிடிபட்டவுடன் வழக்கம்போல மனநல பாதிக்கப்பட்டவளாகி விட்டாள் அந்தப் பெண்.

பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் தீவிரவாதி. காவிகளானால் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாகி விடுகிறார்கள். சிலைகளைச் சேதப்படுத்துபவர்கள் - காவிகளை அணிந்திருப்பவர்கள் எல்லாம் ஏன் எப்போதும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்?

அடுத்து மதுராவில் உள்ள ஈத்கா மசூதியில் நடுப்பகுதிக் கூம்பின் கீழ்தான் கிருஷ்ணர் பிறந்த இடம் இருக்கிறது என்று இந்துத்வா பயங்கரவாதிகள் ஆரம்பித்திருக்கின்றார்கள்.

ஆகவே இஸ்லாமியர்கள் போராடுவது பாபருக்காக மட்டும் அல்ல, பாபரை காரணமாக வைத்து அவர்கள் செய்கின்ற அரசியலுக்காக - மதங்களை முன்னிறுத்தி இந்தியாவை துண்டாடத் துடிக்கும் பாசிசத்தின் மத வெறிக்காக - அப்பாவி இந்துக்களுக்கு கல்வி பொருளாதாரத்தில் வளர்ச்சியைக் கொடுக்காமல் - கடவுளைக் காட்டி அவர்களை முட்டாளாக்கும் இந்த அரச பயங்கரவாதத்திற்காக. இந்தியா இந்தியர்களுக்கானது, இந்துத்துவாதிகளுக்கானது அல்ல என்பதற்காகத்தான் இஸ்லாமியர்கள் போராடுகிறார்கள்.

சிலையுள்ள கடவுளோ, சிலையில்லாத கடவுளோ எல்லாம் ஒரு நம்பிக்கை, ஆனால் உயிருள்ள மக்கள் என்பது நிஜம் . அவர்களை எல்லாம் அழித்துவிட்டு யாருக்காக இவர்கள் கடவுள் கட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

இருப்பினும், பாபர் மசூதியை இடித்து இராமர் கோயில் கட்டுவதற்கு வாழ்த்துகள்.

- ரசிகவ் ஞானியார்

Pin It