கல்வி மறுக்கபடும் சமூகம் அறியாமை சமூகம் என்பார்கள். ஆம் இந்திய தீபகற்பமும் தன் பூர்வகுடிகளின் கல்வியினை மறுத்திடவே செய்கிறது.
சாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் கற்பித்து, சகமனிதனையே அடிமைப்படுத்தி அவனுடைய சுயமரியாதை, வாழ்வு என அனைத்தையும் பறிக்கிறது பார்ப்பனியம்.
சுதந்திர இந்தியாவிலாவது இது நீங்கும் என எதிர்பார்த்த மாந்தர்களின் எண்ணங்களில் மண்ணை அள்ளி வீசி அனைத்திலும் ஊடுருவிக் கொண்டது பார்ப்பனியம்.
கல்வித் தந்தை அபுல்கலாம் ஆசாத் அவர்களின் சீரிய முன்னெடுப்பால் துவங்கபட்ட 'ஐ.ஐ.டி' பார்ப்பண குருகுலமாகவே மாறி விட்டது.
ஆர்.எஸ்.எஸ். தன் ABVP பரிவாரங்களை இங்கு துவக்கிய காலமுதலே மிகப்பெரும் நெருக்கடிகளை ஒடுக்கபட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் , இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் எதிர்கொள்கின்றனர். சாதிரீதியான, மத ரீதியான ஒடுக்குமுறைக்கு அங்குள்ள பார்ப்பனப் பேராசிரியர்களினால் ஆளாக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமாக ஒட்டுமொத்த பணியிடங்களை அவர்களே ஆக்கிரமித்துக் கொண்டதே காரணமாக இருக்கின்றது.
ஐஐடி மெட்ராஸில் .....
மொத்தம் 212 பேராசிரியர்களில் 209 நபர்களும்,
மொத்த 91 இணைப் பேராசிரியர்களில் 88 பேர்களும்,
மொத்த 177 துணைப் பேராசிரியர்களில் 165 பேர்களாக உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். (உயர்வகுப்பு என்னும் பதத்தில் ஏனைய சில சாதியினர் வந்தாலும் பார்ப்பனர்கள் என்பவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை அறிக! )
கடந்த 2017 மே மாதம் மாட்டுக்கறி திருவிழாவில் கலந்து கொண்ட ஐஐடி மாணவர் சுனிலை அபினவ் என்கின்ற வலதுசாரிய சிந்தனையுடையவன் கொடூரமாக தாக்கியதையும், கேண்டீனை சைவம், அசைவம் என இரு பிரிவாகப் பிரித்ததையும் நினைவில் கொள்க!
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்
ஐஐடி மெட்ராஸில் செயல்பட்டு வந்த இந்த வாசகர் வட்டம் இந்துத்துவாக் கொள்கைக்கு எதிரான மாணவர்களின் கூடாரம் என்ற ஒரே காரணத்தினால் 2015 மே15 தடை செய்யபட்டதையும், பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளின் கண்டனங்களுக்குப் பிறகு இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி, டீன் கே.ராமமூர்த்தியின் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பேராசிரியர் மிலிண்ந் பிராமே ஆலோசகராக நியமிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது.
தற்கொலைகளின் பூமியாக மாறிவரும் சென்னை ஐஐடி
கடந்த 2010-19 வரையிலான காலகட்டத்தில் 14 மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் தற்கொலைக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதில் பல்வேறு உளவியல் காரணங்கள் எனக் கூறப்பட்டாலும் சாதிய/ மதரீதியான அழுத்தங்களே அதிகளவு காரணமாக இருக்கின்றது.
கடந்த 8 ஆம் தேதி பாத்திமா லத்தீப் என்ற கேரள மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்குக் காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்னநாபன் என்று எழுதி வைத்திருக்கின்றார். மேலும் தான் நன்றாகப் படித்தாலும் தன் பெயர் அவர்களுக்கு வெறுப்பினை உமிழக் காரணம் ஆகியிருப்பதாக தன் பெற்றோரிடம் முறையிட்டிருக்கிறார்.
ஆக கல்வியில் முன்னேறிய சமூகமாக இந்தியர்களை உருவாக்கவே துவங்கப்பட்ட INDIAN INSTITUTE OF TECHNOLOGY, இன்று தன் அசல் காரணிகளைத் துறந்து பழங்கால குருகுலமாக உயர்சாதியினருக்கானதாகவே வம்படியாக உருமாற்றப்பட்டிருக்கின்றது. இந்த நிலையினை மாற்ற சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும். அல்லது நாம் திருத்த வேண்டும்.
- நவாஸ்