ஆணாதிக்கத்தின் தன்மைகளும் போக்குகளுமே இன்று மனித குலம் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு காரணம் என்றால் மிகையல்ல. ஆண் தன்மையில் நேர் மற்றும் எதிர் தன்மைகள் உள்டங்கியுள்ளன. ஆனால் துரதிருஷ்டவசமாக ஆணாதிக்கத்தின் முட்டாள்தனத்தினால் அதன் சகல தன்மைகளும் அழிவுக்கும் ஆக்கிரமிப்புக்குமே கடந்த கால வரலாற்றிலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆணாதிக்க செயற்பாடுகளில் மிக மோசமான அதி முட்டாள்தனமான செயற்பாடும் அடக்குமுறையும் மனித இனத்தின் மறு பாதியான பெண்களை கொடுமைப்படுத்தியதும் அடிமைப்படுத்தியதும் எனலாம்.

இதன் விளைவாக உருவான பாதிப்புகளும் மற்றும் பெண்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டதும் நியாயமற்றது என்பதையும் இன்று புரிந்து கொள்கின்றோம். ஆனால் எவ்வளவு பேர்? மேலும் ஆணாதிக்கம் தொடர்ந்தும் நம்மை ஆதிக்கம் செய்ய முடியாது. ஏனனில் மனிதர் அனைத்தையும் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். நமது கேள்விக்கான பதில்கள் நமது முட்டாள்தனங்களிலிருந்து நம்மை விடுவிக்க வழிவகுக்கின்றன. இது பெண்களினது மட்டுமல்ல ஆண்களினது விடுதலைக்கும் வழிவகுக்கின்றது. ஏன்?

மனித அறிவியல் அதாவது மெய்ஞான விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியினால் ஆணாதிக்க போக்குகள் நிலை நாட்டிய பொய்மைகள் உடைபட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமது பொய்மைகளுக்கு முன்னால் உறுதியாக நிலைகொள்ள முடியாது தடுமாறகின்றன. மனித உடலானது ஆணினதும் பெண்னினதும் விந்தும் முட்டையும் இணைவதால் உருவானது. இச் செயற்பாட்டில் இருவரது பங்கும் மிக முக்கியமானது. ஓன்றை விட ஒன்று எந்தவகையிலும் குறைந்தது அல்ல. மேலும் ஒரு உடல் ஆணாகவோ பெண்ணாகவே உருவாவதற்கு காரணம் ஆணினது விந்துக்களில் இருக்கும் கருக்களே. ஆனால் நாம் இதுவரை ஒரு பெண் விந்தையும் முட்டையையும் சுமந்து குழந்தையாக வெளி உலகிற்கு தருவதால் அவளே ஒரு மனித உடல் ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதற்கு காரணம் என நம்பினோம்.

இன்று இந்த மூடநம்பிக்கை உடைபட்டுவிட்டது. மேலும் ஒரு மனித உடல் ஆண் உடல் தன்மையாகவோ பெண் உடல் தன்மையாகவோ உருவாவதற்கு காரணம் விந்துவும் முட்டையும் இணைந்த பின் ஏற்படும் இரசாயன மாற்றங்களின் கலவையே காரணம் என்றும் நமது அறிவியல் இன்று கண்டுபிடித்திருக்கின்றது. அதாவது ஆரம்ப மனித உடல் பெண்ணாகவே இருக்கின்றது. இரசயான மாற்றங்களின் விளைவு ஆண் உடலை உருவாக்கின்றது. மேலும் நடைபெறும் இரசாயன மாற்றங்கள் பல்வேறு வகையான மனித உடல்களையும் மனித தன்மைகளையும் உருவாக்குகின்றது. நமது கண்களுக்கு புலப்படும் அதாவது வெளிப்பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு பால் மற்றும் தன்மைகள் சார்பான முடிவுகளுக்கும் வருவது எத்தகைய முட்டாள்தனமாக சிந்தனைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் கட்டமைவுகளுக்கும் நம்மை தள்ளியுள்ளது என்பதை கடந்த கால கசப்பான வரலாற்றைப் பார்க்கும் பொழுது விளங்கிக் கொள்ளலாம்.

பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய ஆணாதிக்கம் கருத்தியலானது நம் எலும்பு மச்சைவரை உட்புகுந்து இன்றுவரை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றது. நாம் இந்தக் கருத்தியலுடன் ஒன்றித்து வாழ்கின்றோம். எது ஆணாதிக்க கருத்தியல் எது பொதுவான கருத்தியல் என பிரித்தறிய முடியாதளவுக்கு நம்முடன் பின்னிப் பிணைந்துள்ளது. இந்த ஆணாதிக்க கருத்தியலுக்கு காரணம் ஆணினது தாழ்வு மனப்பான்மையும் சிக்கல்களுமே. அதாவது ஒரு பெண் ஒரு உயிரைப் படைக்கும் அளவு மிகப் பெரிய படைப்பாளியாக இருக்கின்றாள். ஆனால் ஒரு ஆணால் அவ்வாறு உருவாக்க முடியாது என்பதும் மற்றும் உடலுறவில் பெண்ணைப்போல் நீண்ட நேரம் நின்று பிடிக்க முடியாமலிருப்பது தனது இயலாமை என்ற முட்டாள்தனமான தாழ்வுச்சிக்கலும் அவனது ஆண் தன்மையான ஆக்கிரமிப்பு வன்முறை மனோபாவமும் ஆணை அதிகாரத்தில் நிலைநாட்டுவதற்கு உந்தித் தள்ளின என ஆய்வியளாலர்கள் கூறுகின்றனர்.

இதன் ஒரு கூறுதான் பெண்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட பெண் உடல் மற்றும் பெண் தன்மை தொடர்பான பழமைவாத கருத்தியல்கள். மறு கூறு ஆணின் ஆக்கிரமிப்பு தன்மையால் உருவான வன்முறை மற்றும் போர் வழிமுறை. இந்தக் கருத்தியல் போக்கும் ஆதிக்கமும் பெண் தொடர்பாக மட்டுமல்ல ஆண் மற்றும் அதன் தன்மை தொடர்பாகவும் இயற்கைக்கு மாறான செயற்கையான கட்டுமானங்களை உருவாக்கியது மட்டுமல்ல அவற்றை மனிதர்களின் ஆழ் மனதில் விதைத்துமுள்ளது.

இவ்வகையான சிந்தனைகள் எண்ணங்கள் நாம் பிறக்கும் போது மட்டுமல்ல நாம் உருவாகக் காரணமான விந்துகளிலும் முட்டைகளிலும் இருந்தும் அதாவது தலைமுறை தலைமுறையாக வருகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது நமது உடல்களின் ஒவ்வொரு கூறுகளும் நமது கடந்த அதாவது ஆதி காலத்தை ஞாபகத்தில் கொண்டுள்ளன. இதனால்தான் நாம் பிறக்கும்பொழுதிலிருந்தே இந்த் சமூகத்தினதும் ஆணாதிக்கத்தினதும் முட்டாள் தனங்களுக்கும் பிற்போக்குச் சிந்தனைகளுக்கும் இலகுவாக இசைந்து விடுகின்றோம். இதிலிருந்து நம்மை பிரித்துப் பார்ப்பது என்பது நம்மையே நாம் அழிப்பதாக உணரும் அளவிற்கு நமக்குள் இவை பதியப்பட்டுள்ளன. ஆந்தளவு ஓன்று கலந்து வாழ்கின்றோம்.

இதிலிருந்து நம்மை விடுவிக்க நமது பிரக்ஞையே நமக்கு வழிகாட்டும். முதலாவது நமது உடல் மற்றும் மனித தன்மை தொடர்பான புரிதல் முக்கியமானது. மனித அதாவது ஆண் பெண் உடல் மற்றும் அதன் தன்மைகளைக் புரிந்து கொள்ளவும் அதன் கற்பிதங்களிலிருந்தும் பொய்யான கட்டுமானங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கவும் வழிவகுக்கும். அனைத்தையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். நமது அனைத்து சிந்தனைகளையும் அல்லது செயற்பாடுகளையும் இயல்பானது என கருதுவதிலிருந்து பிரக்ஞையாக விடுபடுவது அவசியமான ஆரோக்கியமான ஒரு முன்நிபந்தனை. அவை எங்கிருந்து வருகின்றன என புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முதலாவது படி நமது உடல் தொடர்பான நமது கற்பிதங்களை புரிந்துகொண்டு அதை உடைப்பது.

இவ்வாறு நம்மை சுற்றியிருக்கும் கற்பிதங்கள் உடையும் பொழுது நமது இயற்கையானதும் இயல்பானதுமான உடலும் தன்மையும் வெளிவரலாம். ஒரு மனித உடல் ஆணாகவே பெண்ணாகவோ இருப்பது எப்படி ஒரு இயற்கையில் உருவான ஒரு விளைபொருளோ அதேபோன்று ஒரு உடல் பலசாலியாக இருப்பதும் பலமற்று இருப்பதும் மென்மையாக இருப்பதும் மென்மையற்று இருப்பதும் பொதுவான ஒரு உடலின் இரசாயன மற்றும் மனநிலை சார்ந்த விடயம். அதாவது ஒரு பெண் உடலால் பலமானவளாகவும் மென்மையற்றும் இருக்கலாம். இதேபோல் ஒரு ஆண் பலமற்றும் மென்மையானவனாகவும் இருக்கலாம். நமது உடல் இரசாயணத்திலும் மனநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

ஆகவே மனித சமூகம் கட்டமைத்ததுபோல் ஒரு பாலிற்கு மட்டும் பொதுவான இயல்புகளோ மனநிலையோ இல்லை. அவ்வாறு கட்டமைத்தது நமது ஆணாதிக்க கருத்தியலே என்றால் தவறல்ல. உலக வரலாற்றில் சில அரசியல் தலைவர்களை கவனிக்கும் பொழுது ஆணாதிக்கம் நம்மீது கட்டமைத்த கருத்தியலின் முரண்பாட்டை புரிந்துகொள்ளலாம். உதாரணமாக நமது பெண் அரசியல் தலைவர்கள் அதாவது மார்கிரட் தட்சர், சிறிமாவோ பண்டாரநாயக்கா, இந்திராகாந்தி முதல் இன்றைய சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஆளும் பல பெண் அரசியல் தலைவர்கள் குறிப்பாக அமெரிக்காவில் போட்டியிடும் கில்லரி கிளின்டன் இவர்கள் அனைவரும் பெண் உடலைக்கொண்ட ஆணாதிக்க சிந்தனையின் வழி கட்டமைக்கப்பட்டு அதன் தன்மையில் செயற்பட்டவர்கள் அல்லது செயற்படுபவர்கள். ஆல்லது ஆணாதிக்க தன்மையினை வெளிக்காட்டியவர்கள். ஆல்லது வெளிக்காட்டுபவர்கள். மாறாக ஆண் உடல் கொண்ட பெண்மை தன்மையின் போக்குடைய அரசியல் தலைவர்கள் மிகச் சிலரே. உதாரணமாக கனடிய பிரதமர் ருடோ, நெல்சன் மன்டேலா மற்றும் இன்று அமெரிக்க அரசியல் தலைமைக்கு போட்டியிடும் ஓபாமா. இவை ஒரு மேலோட்டமான ஒரு ஒப்பிடே. ஆய்வுக்கு உரிய விடயம். ஆனாலும் கவனிக்கப்படவேண்டியது.

ஆகவே மனித உடல் தொடர்பாகவும் அதன் அதன் தன்மைகள் தொடர்பாகவும் கடந்தகாலத்திலிருந்து வரும் தனித்தனியான இரு எதிர் கருத்தாதிக்க போக்குகளிலிருந்து விடுபட்டு, ஆண் பெண் என்பது ஒரே கோட்டிலிருக்கும் இரு எதிர் முனைகளுக்கு இடைப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட பலவிதமான மனித உடல் மற்றும் தன்மைகள் கொண்ட மனிதர்களையே இயற்கை உருவாக்குகின்றது என்ற நிலைப்பாட்டிற்கு வருவது. இது தொடர்பாக பிரக்ஞையானதும் கட்டற்றதுமான தொடர்ச்சியான மீள்வரைவுகள் செய்யவேண்டியது அவசியமானதாகும். இந்த பிரக்ஞையான மாற்றமே கடந்த காலத்திலிருந்தும் அதன் ஆதிக்க கருத்தியலிலிருந்து நம்மை விடுவிக்க வழிவகுக்கும்.

இரண்டாவது ஆணாதிக்க கருத்தியலின் ஆதிக்க ஆக்கிரமிப்பு போக்கான வன்முறைபாற்றபட்ட சிந்தனையும் போர் செயற்பாடுகளும் அது நம் மீது உருவாக்கி இருக்கும் ஆதிக்கமும் அதன் மீதான நமது ஈடுபாடும் அடிமைத்தனமும் பற்றிய நமது பார்வையின்மை. இன்றைய சமூக சுழலில் இது மிக முக்கியமாகவும் அசவர அவசியமாகவும் கேள்விக்கும் பூரண விமர்சன உரையாடலுக்கும் உட்படுத்தப்படவேண்டிய ஒன்று. இந்த ஆணாதிக்க கருத்தியலே இன்றைய சமூகத்தில் சாதாரண நிகழ்வாக காணப்படுகின்றது. இதற்கு ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடிமைகளாக இருப்பது மட்டுமல்ல ஈடுபாட்டுடன் செயற்படுகின்றனர்.

அதாவது நாம் ஆணாதிக்க கருத்தியலின் கருவிகளாக இயந்திரங்களாக செயற்படுகின்றோம். நாம் இதனால் பயன்படுத்துகின்றோம். ஆய்வுகளின் படி கடந்த 3000 ஆண்டுகளில் 5000 போர்களில் ஈடுபட்டிருக்கின்றோம். இந்தப் போர்கள் அழிவுகளையும் மேலும் மேலும் போர்க் குணாம்சங்களையும் மனிதர்களுக்கு இடையில் பகையுணர்வையுமே உருவாக்கி வருகின்றன. இதற்காக மனிதரது சகல சக்திகளும் ஆளுமைகளும் திறமைகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இவை அழிவு செயற்பாடுகளில் மட்டும் பயன்படுத்தப்படவில்லை அழிவை உருவாக்கப் கூடிய ஆயுத தயாரிப்புகளிலும் ஈடுபடுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றோம்.

அதாவது நமக்கு அழிக்கவும் கொலை செய்யவும் மட்டுமே தெரியும் என்பது போலவும் இதுவே நாளாந்த வாழ்வு போலவும் ஏற்றுக்கொள்ளவும் பழகிவிட்டோம். இவ்வாறான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குபவர்களையே நாம் சிறந்த மனிதர்களாகவும் தலைவர்களாகவும் வீரர்களாகவும் கடந்த காலங்களிலிருந்து இன்றுவரை வர்ணிக்கின்றோம். இவர்கள் எழுதுவதையே வரலாறு எண்கின்றோம். ஆனால் இது முழுக்க முழுக்க ஆணாதிக்க கருத்தியலின் அடிப்படையானது என்பதை பார்க்கத் தவறிவிடுகின்றோம்.

இன்று நடைபெறும் எல்லாவிதமான போர்களும் ஆயுத வழிமுறை செயற்பாடுகளும் வன்முறைகளும் ஆணாதிக்க கருத்தியலின் விளைவுகளே. இதற்கு ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி அணைத்து மனிதர்களும் பலிக்கடாக்கலே. இதற்காகப் பல்வேறு அர்த்தமற்ற காரணங்களைக் கூறி இந்த வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் நாம் நியாயப்படுத்துவோம். ஆனால் நமது நியாயப்படுத்தல்கள் எதன் அடிப்படையிலிருந்து எழுகின்றது என்பதை பார்க்கத் தவறிவிடுவோம். ஆகவே ஆணாதிக்க கருத்தியலிலிருந்து விடுபடுவது என்பது அதன் செயற்பாடுகளிலிருந்தும் அது நம்மை பயன்படுத்துவதிலிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்வது முதலாவது தேவையாகின்றது.

மனிதர்கள் அனைவரும் ஆண் பெண் என்ற ஆண்மை பெண்மை என்ற இரு வேறு வேறு கூறுகள் அல்ல. மாறாக ஒன்றுடன் ஒன்று கலந்து உருவான தனித்துவமான மனிதர்கள். ஓன்றில்லாமல் மற்றதும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களே. மேற்குறிப்பிட்ட கூறுகள் நம்மிடம் பல்வேறு அளவுகளில் கலந்துள்ளன. இதன் அளவைப் பொறுத்தே நமது தோற்றம் மற்றும் நமது தன்மைகள் வெளிப்படுகின்றன. எந்த விதமான தயக்கமோ குற்ற உணர்வோ இன்றி நாம் இவற்றை வெளிப்படுத்தவேண்டும். ஏனெனில் இதுவே நம்மில் இயற்கையாக உருவான இயல்பு.

இவ்வாறு உருவாகிய நம்மிலிருக்கும் எந்த ஆற்றலும் ஒன்றை விட ஒன்று எந்த வகையிலும் குறைந்தது அல்ல. ஆனால் நமது ஆற்றல்களை எதற்குப் பயன்படுத்துகின்றோம் என்பதைப் பொறுத்து அதன் இயல்வு நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது அழிவுக்கும் பயன்படுத்தலாம் ஆக்கபூர்வமாக படைப்புக்கும் பயன்படுத்தலாம். தெரிவு நமது கைகளில். ஆண்மையின் மூளையும் பெண்மையின் இதயமும் இணைந்தே எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். மேலும் இனிவரும் காலத்தை பெண்மையின் இதயமே ஆணாதிக்க கருத்தியல் இல்லாதுபோகும் வரை தலைமை தாங்கவேண்டும். ஆண்மையின் முளை இதற்குப் பயன்படவும் ஆதரவாகவும் இருக்கவேண்டும். இதனடிப்படையில் அனைத்தது வன்முறைகளுக்கும் போருக்கும் எதிராகவும் அவற்றை நிறுத்தவும் ஒன்றுபட்டு செயற்படுவோம். ஏனனில் இவை அடிப்படையில் ஆணாதிக்கத்தின் விளைவுகளே. இதிலிருந்து பெண்களை மட்டுமல்ல குழந்தைகள் உட்பட அனைத்து மனிதர்களையும் விடுவிக்கவேண்டியது நமது பொறுப்பு.

நண்பர்களே!

ஆணாதிக்க கருத்தியலுக்கும் அதன் முளைக்கும் செயற்பாடுகளுக்கும் விடைகொடுப்போம்.

ஆணாதிக்க போர்க்குணாம்ச வன்முறை செயற்பாடுகளிலிருந்து நம்மை நாமே விடுதலை செய்வோம். ஆணாதிக்க போக்குகளுக்கான ஆதரவையும் வழங்காது விடுவோம். பெண்மையின் இயல்புகளையும் அதன் இதயத்தையும் நமது தலைமையாக கொண்டு எதிர்காலத்தை நிர்ணயிப்போம்.

அன்பும் காதல் புரிந்துணர்வு விட்டுக்கொடுத்தல் என்பதன் மூலம் நமது தனி மனித உரிமைகளை உறுதி செய்து கொண்டு நம்மை நமது வாழ்வை நமது சுழலை இயற்கையை எதிர்காலத்தை அழகானதாக உருவாக்குவோம். எதிர்வரும் மார்ச் மாதம் நமது முதாலவது நிகழ்வு மார்க்கம் மக்கோவன் அன் டெனிசன் சந்திக்கருகாமையில் ஆம்டெல் சமூக நிலையத்தில் வரும் 22 ம் தேதி மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

.- மீராபாரதி

Pin It