மக்களுக்குள் எந்த வகையினாலும் வித்தியாசங்கள் என்பன சிறிதும் இல்லை. ஆனால் தற்போது காணப்படும் வித்தியாசங்களை ஏற்படுத்தி ஒரு கூட்டத்தாரை உயர்வாகவும், மற்றொருக் கூட்டத்தாரைத் தாழ்வாகவும், மற்றுஞ்சில கூட்டத்தாரை நடுத்தரமானவர்களாகவும், மற்றும் பலரைத் தாழ்த்தப்பட்டவர்களாகவும், மற்றும் பலரைத் தீண்டாதார்களாகவும் பிரித்து பிரித்து வேறு வேறாக வைத்திருப்பது சுயநலங் கொண்ட மக்களால் செய்யப்பட்ட ஏமாற்றேயன்றி வேறல்ல. உண்மையில் நோக்கும் போது எல்லா மனிதர்களும் சமமான நிலையையும், இன்பத்தையும், வாழ்வையும் பெறுவதற்குத் தகுதியுடையவர்களே யாவார்கள். ஆகையால் மக்களுக்குள் உள்ள உயர்வு தாழ்வு வேற்றுமைகளை ஒழித்த எல்லோரையும் ஒன்று படுத்திச் சுதந்திரமும், சுகமும் உடையவர்களாய் வாழச் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தற்கால அறிஞர்கள் மனத்தில் தோன்றி அதற்கான முயற்சிகள் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுகின்றன.
மக்களுக்குள் அளவிலடங்காத வேற்றுமைகளும் இவ்வேற்றுமை காரணமாக ஒருவர் மேல் ஒருவர் வீண் வெறுப்புக் கொள்ளுதலும், இவ் வெறுப்புக் காரணமாக கொடுமைகளைச் செய்வதுமாகிய காரியங்கள் மற்றய நாடுகளைக் காட்டிலும், நமது நாட்டில் நமது சமூகத்தில் நாள்தோறும் அதிகமாக வளர்ந்து கொண்டே போகின்றன என்பதைப் பகுத்தறிவு உடையவர்கள் எல்லோரும் அறிவார்கள். இவைகளுக்கெல்லாம் காரணமாயிருப்பன பலவாயினும் முக்கியமானது மதம் ஒன்றே என்று நாம் கூறிவருகிறோம். ஆகவே மதம் என்பது அடியோடு அழிந்தால் மக்களிடம் உள்ள வேற்றுமைகளும், வெறுப்புகளும், நீங்கி ஒற்றுமை உண்டாகிவிடும் என்றும் கூறிவருகிறோம்.அதிலும் முக்கியமாக இந்து மதம் அழிந்தால் தான் இந்துக்கள் உருப்பட முடியும் என்பதை முக்கியமாக எடுத்துக் காட்டி வருகிறோம். இவ் விஷயத்தை நாம் சொல்லும் போது தான் நம்மை “இந்து மதத் துரோகி” கள் என்றும் “தேசத்துரோகி” கள் என்றும் “நாஸ்திகர்கள்” என்றும் நம்மைப் பற்றி நம் எதிரிகள் பொது ஜனங்களிடையில் துவேஷப் பிரசாரம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். எதற்காக நாம் இந்து மதம் முதலில் அழிந்து தீர வேண்டும் அல்லது அழிக்கப்பட்டு ஒழிய வேண்டும் என்று சொல்லுகின் றோம் என்பதை அறிந்தார்களானால் நம்மைப் பகுத்தறிவுடையவர்கள் அவசரப்பட்டு ஒதுக்கி விட மாட்டார்கள்; அல்லது நம்மோடு அவசரப்பட்டுச் சண்டைக்கு வரமாட்டார்கள் என்பது நிச்சயமாகும். ஆகையால் அக் காரணத்தைச் சிறிது கூற விரும்புகிறோம்.
சாதி வித்தியாசம் “கடவுள்” என்பவராலேயே ஏற்படுத்தப்பட்டது என்பது இந்து மதக் கொள்கை. “வேதங்கள்” என்பவைகளிலும், “ஸ்மிருதி கள்” என்பவைகளிலும் “கடவுள்” என்பவரின் முகத்தில் இருந்து “பிராமணன்” என்னும் சாதியும், தோளிலிருந்து “க்ஷத்திரியன்” என்னும் சாதியும், துடையிலிருந்து “வைசியன்” என்னும் சாதியும், பாதத்திலிருந்து “சூத்திரன்” என்னும் சாதியும் பிறந்ததாகக் கூறுகின்றன. இந்த சாதி வேற்றுமையை ஆதாரமாகக் கொண்டே உயர்வு தாழ்வுகளும், தொழில்களும் கற்பிக்கப்பட்டன. ஆதியில் ஏற்படுத்தப்பட்ட இந்த நாலு வகையான சாதி வேற்றுமையே இப்பொழுது நாலாயிரக் கணக்கான சாதி வேற்றுமைகள் தோன்றி நிலைத்திருப்பதற்குக் காரணமாக இருந்தன.
அன்றியும் மக்கள் சமூகத்தில் பாதித் தொகையாக இருக்கின்ற பெண்கள் சமூகத்தைக் கொடுமைப் படுத்தி, அடிமைப்படுத்தி அவர்கள் ஒன்றுமறியாத அபலைகளாக வைத்திருப்பதற்குக் காரணமும் இந்து மதமேயாகும்.
இன்னும் எண்ணற்ற பண்டிகைகளையும், திருவிழாக்களையும் ஏற்படுத்தி ஏழைமக்களின் பொருளை வீணாகச் செலவழிப்பதற்குக் காரணமா யிருப்பதும் இந்து மதமோயாகும்.
கல்யாணத்திலும் கருமாதியிலும், இன்னும் பலகாரியங்களிலும் பலவகையான அர்த்தமற்ற சடங்குகளை ஏற்படுத்தி, இவைகள் மூலம் ஏழை மக்களின் பொருளைப் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும்படி செய் வதற்குக் காரணம் இந்து மதமேயாகும்.
காளியென்றும், கருப்பன் என்றும், முனியாண்டி என்றும், சிவன் என்றும், பெருமாள் என்றும் பலவகையான சாமிகளையும், அவைகளுக்கு விக்கிரகங்களையும், அவ்விக்கிரகங்களுக்குக் கோயில்களையும் ஏராள மானப் பொருளைச் செலவு செய்து கட்டி வைத்து அவைகளின் பேரால் நாள் தோறும், வாரந்தோறும், வருஷந்தோறும், ஆயிரக் கணக்காகவும், லட்சக் கணக் காகவும், கோடிக்கணக்காகவும் பணத்தை வீணாகச் செலவு செய்து விட்டு இந்திய நாடு வறுமையடைவதற்குக் காரணமாய் இருப்பதும் இந்து மதமேயாகும்.
இவ்வாறு எந்த வகையில் பார்த்தாலும் இந்து மதமானது அதை பின்பற்றும் மக்களை நாள் தோறும் அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும், மூடர்களாகவும், ஒருவரோடு ஒருவர் ஒன்று சேர முடியாதவர்களாகவும் செய்து கொண்டு வருகிறதே யொழிய மற்றபடி கடுகளவு நன்மையையாவது உண்டாக்கவில்லை என்பதை “மதம்” என்னும் பாசியினால் மறைக்கப் படாத மூளையை உடையவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்து மதத்தினால் விளையும் இத்தகைய கெடுதிகளை நன்றாய் அறிந்தே காலஞ்சென்ற பெரியார்களாகிய இராமாநுஜர், சைதன்னியர், ராசாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் முதலியவர்கள் சாதி வேற்றுமையை ஒழிக்கவும், பெண்களின் அடிமையை அகற்றவும் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்கள் செய்த முயற்சிகள் அனைத்தும் இன்று ஏட்டளவிலும், பேச்சளவிலும் நிற்பதைத் தவிர ஒரு பலனையும் தரவில்லை என்பதை நாம் அறிந்துதான் இருக்கின்றோம். இவ்வாறு அவர்கள் முயற்சி பலன் தராமல் போனதற்குக் காரணம் பெரும்பாலும் இந்து மதமே என்பதில் ஐயமில்லை. சாதிபேதம் பெண்ணடிமை ஆகிய அஸ்திவாரங்களின் மேல் கட்டப்பட்டிருக்கும் இந்து மதத்தை வைத்துக் கொண்டே அந்த சாதிபேதத்தையும், பெண்ணடிமையையும் ஒழிக்க வேண்டுமென்றால் எப்படி முடியும்? ஆகையால் நாம் இந்து மதமாகிய வீட்டையே முழுவதும் இடித்து எறிந்தால்தான் அதன் அஸ்திவாரமாகிய சாதி பேதம், பெண்ணடிமையாகிய இரண்டையும் அடியோடு பெயர்த்தெறிய முடியும் என்று கூறுகின்றோம். ஆகவே நமது நோக்கம் சாதிபேதமும், பெண்டிமையும் ஒழிய வேண்டு மென்பது தான் என நாம் எடுத்துக் காட்டுவது மிகையாகும்.
ஆகையால் யார் யார், சாதி வேற்றுமைகளை ஒழித்து மக்களுக்குள் சமதர்மத்தை நிலை நிறுத்தவும், பெண்களுடைய அடிமைத்தன்மைக் கான காரணங்களை எல்லாம் ஒழித்து அவர்களுக்கும் ஆண்களைப்போல் சம உரிமை அளிக்கவும் பாடுபடுகின்றார்களோ அவர்களையெல்லாம் நாம் பாராட்டுகின்றோம். இத்தகைய கொள்கைகளுடன் உழைத்து வரும் இயக்கங் களுக்கும், மக்களுக்கும், சாஸ்திரங்களுக்கும் மதங்களுக்குங்கூட நாம் எதிரிகளல்ல வென்பதைச் சொல்லிக் கொள்ளுகிறோம்.
நாம் இப்பொழுது இந்துக்களுக்குள்ளேயே வடநாட்டிலும் தென்னாட்டிலும் சாதிவேற்றுமையையும், பெண்ணடிமையையும் ஒழிக்க வேண்டும் என்னும் கிளர்ச்சி தோன்றியிருப்பதைக் கண்டு நமது இயக்கத்தின் நோக்கமும், வேலையும் வீண் போகவில்லையென்று களிப்படைகிறோம். இதற்கு உதாரணமாகச் சென்ற 8-8-32ல் புதிய டில்லியில் “இந்து சீர்திருத்த மகாநாடு” என்னும் பெயருடன் இந்துக்களால் ஒரு மகாநாடு நடத்தப்பட்டதையும், அம்மகாநாட்டின் தலைவர் வரவேற்புத் தலைவர் முதலியவர்களின் பேச்சுக்களையும், அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் கூறலாம்.
அம் மகாநாட்டின் வரவேற்புத் தலைவர் திரு. ராமலால் வர்மா என்பவர் “மூட நம்பிக்கைகளாலும், இழிவான வைதீகங்களாலும், பலவிதமான சாதி பேதங்களும் பிரிவுகளும் ஏற்பட்ட காரணத்தால் இந்து சமூகம் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டது. இந்து சமயம் தீண்டாமை என்னும் கறையினால் தாழ்வையடைந்திருக்கிறது. ஆகையால் இந்த சாதி வேற்றுமைகளையும், தீண்டாமையையும் அடியோடு ஒழிக்க வேண்டியது அவசியமாகும்” என்று பேசியிருக்கிறார்.
அம் மகாநாட்டின் தலைவர் சுவாமி சத்திய தேவ பாரி பிரஜாத் என்பவர்,
“இந்துக்கள் வீண்பெருமையையும் துவேஷத்தையும் விடுவார் களானால் அவர்கள் ஆதிக்கம் மிகுந்தவர்களாவார்கள். இந்துக்களுக்குள் ஒற்றுமை ஏற்படுவதற்கு முன் சுயராஜ்யம் கிடைப்பதென்பது முயற்கொம்பு தான். இந்தியாவின் மக்களாகிய இந்துக்கள் அனைவரும் தமக்குள் உள்ள சமூகத் துவேஷங்களை விட்டொழித்தும் சமூகக் கொடுமைகளை ஒழித்தும், சுயநலத்தை விட்டுக் கொடுத்தும் இந்தியாவுக்குத் தொண்டு புரிய வேண்டு மென்று கேட்டுக்கொள்ளுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.
இன்னும் அம்மகாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களில் மூன்று தீர்மானங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சிறந்த தீர்மானங்களாகும். அவைகள் வருமாறு:-
1. இம்மகாநாடு இந்து சமூகத்தில் பிறப்பினாலேயே சாதி வேற்றுமை பாராட்டும் காரணத்தால் ஆயிரக்கணக்கான சமூக வேற்றுமைகளும், தீண்டாமையும் வளர்வதாகக் கருதுவதால் சாதி வித்தி யாசம் பாராட்டுவதை இந்துக்கள் அதிவிரைவில் விட்டொழிக்க வேண்டுமென்றும், இதன் பொருட்டு இந்துக்களின் பல விரிவான சாதி யினரும் தங்களுக்குள் சமபந்தி போஜனமும், கலப்பு மணமும் செய்ய வேண்டுமென்றும் யோசனை கூறுகிறது.
2. இம்மகாநாடு தீண்டப்படாதவர்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்கும் பொது இடங்கள், பொதுக்கிணறுகள், பொதுப் பாதை கள் முதலிய வற்றை மற்ற இந்துக்களைப்போல் சம உரிமையோடு அனுபவிக்க உரிமை உண்டு என்று கருதுவதுடன், பொதுப்பள்ளிக் கூடங்களில் மேற்கண்ட வகுப்புப் பிள்ளைகளைத் தடையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்துக்கோயில்களிலும், மற்ற பொதுஇடங்களிலும் தடையின்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறது.
3. இம்மகாநாடு இளம்பருவத்தில் பெண்களுக்கு மணம்புரியும் காரணத்தாலேயே விதவைகள் பெருகுவதனால் இந்துக்கள் அனை வரும் இளம்பருவ மணத்தை ஒழித்துச் சாரதா சட்டத்தின்படி மணம் செய்யுமாறும், சமூக ஒற்றுமையுடன் அச்சட்டத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்துகிறது.
மேற்கண்ட மூன்று தீர்மானங்களிற்கண்ட விஷயங்கள் நமது சுயமரியாதை இயக்கத்திற்குப் புறம்பானவையல்ல. அத்தீர்மான விஷயங்கள் இந்துக்களால் அனுஷ்டானத்துக்கு கொண்டு வரப்படுமானால் நமது விருப்பத்தின் படி இந்துக்களின் சமூகம் வளர்ச்சியடைவதுடன் அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் இந்து மதமும் அழிந்துதான் தீரும்.
ஜாதி வித்தியாசமும், தீண்டாமையும் கோயில்களிலும், பள்ளிக்கூடங் களிலும் பொதுக்கிணறு, பொதுப்பாதைகளிலும், தாழ்த்தப்பட்டார்க்கு உரிமை இல்லாதிருப்பதும் இளமை மணமும் இந்து மதத்திற்கு அடிப்படையானவை கள்; ஆகையால் இவைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று கும்பகோணம் பார்ப்பனர்கள் பேசிக் கொண்டு வருவதையும் மகாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றிக் கொண்டிருப்பதையும் அறிந்தவர்கள் டில்லி இந்து சீர்திருத்த மகாநாட்டுத் தீர்மானங்கள் இந்து மதத்திற்கு மாறுபட்டதென்பதையும் இந்து மதத்திற்கு அழிவைத் தேடுவது என்பதையும் ஒப்புக் கொள்ளாதிருக்க முடியுமா? என்றுதான் கேட்கின்றோம். ஆகவே இந்து மதத்திற்குப் புறம்பான தாயிருந்தாலும் இருக்கட்டும், இதனால் இந்து மதம் அழிந்தாலும் அழியட்டும் என்ற தைரியத்துடன் இந்து சமூக வளர்ச்சி ஒன்றையே கருதி மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றிய டில்லி “இந்து சீர்திருத்த மகாநாட்டா”ரை நாம் பாராட்டுகிறோம். இச்சமயத்தில் சுயமரியாதை இயக்கத்தைக் கண்டு முணு முணுக்கும் பண்டிதர்களும், தென்னாட்டுக் கும்பகோணம் மடிசஞ்சிகளும் திரு. எம். கே. ஆச்சாரியார் கூட்டத்தாரும், வடநாட்டில் இந்துக்கள் கூடி இவ்வாறு தீர்மானம் பண்ணியிருக்கிறார்களே இதற்கு என்ன சொல்லுகிறார் கள் என்று கேட்கின்றோம்.
இதனால்தான் நமது இயக்கத்தின் ஆக்க வேலைகளாகக் கலப்பு மணங்களையும், விதவா விவாகங்களையும், சமபந்தி போஜனங்களையும், தீண்டாமை ஒழித்தலையும் செய்து வருகிறோம். இக்காரியங்களின் மூலம் சடங்குகளும் சாதிகளும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. இக்கொள்கை இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுமாயின் இந்துக்களைப் பிடித்த கஷ்டம் விரைவில் அழிந்து ஒழிவது நிச்சயமென்பதில் ஐயமில்லை.
இன்று சாதிகள் ஒழிய வேண்டும், பெண்களுக்குச் சமத்துவம் கொடுக்க வேண்டும், இவைகளின் பொருட்டுக் கலப்பு மணங்கள் செய்யப்பட வேண்டும், மூட நம்பிக்கைக்கான சடங்குகளை ஒழிக்க வேண்டும் என்னும் கொள்கைகளை பழுத்த இந்து மத பக்தர்கள் கூட ஒப்புக்கொண்டு பிரசாரம் பண்ண முன் வந்திருப்பதை நோக்கும் போது இன்னுஞ் சில நாட்களில் இவர்களே, இந்து மதத்தினர் வரவர தரித்திர திசையை அடைவதற்கு காரணம் எனன என்பதை ஆழ்ந்து சிந்திப்பார்களாயின் அதற்குக் காரணம் கோயில்களும், சாமிகளும், சடங்குகளும், பண்டிகைகளும் என்பதையுணர்ந்து இவைகளையும் ஒழிக்க முன்வருவார்களென்றே நம்பலாம்.
ஆகையால் எப்பொழுதாவது இன்றில்லாவிட்டாலும் இன்னுஞ் சில தினங்கள் கழித்தாவது மக்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கின்ற “இந்து மதம்” “வைதீக மதம்” “தெய்வீக மதம்” “புராதன மதம்” என்று சொல்லப்படுகின்ற பாழும் மதம் அழிந்தே தீரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆதலால் இனியாவது சுயமரியாதை இயக்கம் சொல்லுகின்ற விஷயங்களில் உண்மையை உணர்ந்து மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சியைப் புரியுமாறு பொதுஜனங்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 21.08.1932)