இலண்டனில் 2008 ஆண்டு பிப்ரவரி மாதம் 16 - 17 தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொருளாதார காரணங்களினால் மாநாட்டில் நேரடியான பங்குபெற முடியாமையினால் இக்கட்டுரை மாநாட்டிற்கும் மற்றும் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பப்படுகின்றது.

சுமூக விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் போராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங்தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் கடைசிவரை சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும் இன்றைய போராட்டமும் அதன் அணுகுமுறையும் சாதிய விடுதலையை பெற்றுத் தரும் என எவ்வாறு எதிர்பார்ப்பது. ஆகவே பல்வேறு வகைகளில் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் தம் மீதான அடக்குமறைகளை களைத்தெறிவதற்கு தமக்கான பொருத்தமான வழிமுறைகளை முன்னெடுப்பது தவிர்க்க முடியாததே. இந்தவகையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.

உலகத்தில் இனம், மதம், மொழி, சாதி, பால் என பல்வேறு வகைகளில் அடக்கப்படும் ஒவ்வொரு மனிதரும் விடுதலை பெற்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க உரிமையுடையவர்களே. இவ்வாறான மாநாடுகள் சாதிக் கொடுமைகள் பற்றியும் அதன் அமைப்பு முறை செயற்பாடுகள் தொடர்பாகவும் மேலும் ஆழமாக அறிவதற்கும் பரப்புரை செய்வதற்கும் விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும். இந்தவகையில் தலித் மாநாடு வரவேற்கத்தக்கதே.

ஆனால் இச்செயற்பாடுகளின் மூலம் மட்டும் சாதி அடிப்படையில் அடக்கப்பட்ட மனிதர்கள் விடுதலை பெறுவார்களா? இதற்கு வழி செய்யுமா? இல்லை எனில் எது வழி?

நூம் நமது சிந்தனைகள் செயற்பாடுகளை கடந்த காலங்களுடன் முறித்துக்கொண்டு புதிய சிந்தனைகள் புதிய பார்வைகளை நோக்கி நமது தேடல்களை விரிவுபடுத்த வேண்டிய தேவை இன்று உள்ளது. ஏனெனில் மீண்டும் மீண்டும் நம் மீதான அடக்குமுறைகளை உடைத்து எறிவதற்கும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கும் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான கருத்துகளை நிலைநாட்டுவதையும் வன்முறை செயற்பாடுகளையுமே இதுவரை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

இந்த முறைமையே காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இது எந்த வகையிலும் முன்னேறிய அல்லது சிறந்த சமூக அமைப்பை உருவாக்க தவறிவிட்டது என்பது உண்மை. புரட்சிகள் பல நடந்த பல நாடுகளும் துமிழ் தேசிய விடுதலைப் போரட்டத்தின் இனறைய நிர்க்கதி நிலைமையும் இதை நிரூபிக்கின்றன.

முனிதர்கள் மீதான பல்வேறு வகை அடக்குமுறைகளான இன, மத, மொழி, சாதி, பால் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுக்கும் மனிதர்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக வன்முறை செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு, முதலில் தான் விடுதலை பெறுவதற்கும் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்கும் தனது பங்கு பொறுப்பு என்ன என்று சிந்திப்பது மிக மிக முக்கியமானது. இதுவே கூட்டுமுயற்சியின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கு வழிவகுக்கும். அல்லது அடக்கப்படும் மனிதர்களின் விடுதலைக்காக ஒரு சிலர் போராடி விடுதலையை சுதந்திரத்தை பெற்றுத்தர முனைவர்.

இது ஒரு இரவல் விடுதலை அல்லது சுதந்திரம். இது முழுமையானதல்ல. ஏனனில் இந்த விடுதலை சட்டப் புத்தகங்களிலும் பெற்றுக் கொடுத்தவர்களின் வாக்கு வங்கிக்கான ஒரு துடுப்பாக அல்லது அவர்களின் புகழைக் கூறும் ஒரு வாசகமாக வரலாற்றில் இடம்பெறும். ஆனால் இவ்வாறான ஒரு விடுதலையின் பின்பும் அடக்கப்பட்டவர்கள் அடிமை மனநிலையில் வாழ்வார்கள். ஆதற்கான சாத்தியக் கூறுகளே அதிகம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

மனிதர்கள் மீதான ஒவ்வொரு அடக்குமுறைக்கும் மிக நீண்ட கால வரலாறுகள் உண்டு என்பது நாம் அறிந்தது. இவ்வாறான நீண்ட நெடிய கடினமான பயணத்தில் நமது இரத்தத்தில் மட்டுமல்ல எலும்பு மஜ்ஜைக்குள்ளும் கலந்துள்ளது நமது அடிமை வாழ்வு. இதிலிருந்து நமது அடக்குமுறையை அகற்றுவதே பெறும் பணி மட்டுமல்ல முக்கியமான பணி கூட. ஆகவே சட்டப் புத்தகத்தில் எழுதப்படும் விடுதலை அல்லது சுதந்திரம் ஒரு பகுதி வெற்றியே. இது தவிர்க்க முடியாததாயினும் முழுமையானதல்ல. ஆகவே முழுமையான விடுதலையை நோக்கி எவ்வாறு பயணிப்பது?

குறிப்பாக சாதிய அடக்குமுறை தொழில் சார்ந்து உருவாக்கப்பட்டது. இன்றும் சாதிய அடக்குமுறை தொடர்வதற்கு காரணங்கள் இரண்டு. ஒன்று பரம்பரை தொழிலிலிருந்து விடுபடாமை அல்லது விடுபடமுடியாமை. இரண்டாவது பரம்பரை தொழிலிலிருந்து விடுபட்டாலும் நமது சாதிய அடையாளத்தை விரும்பியோ விரும்பாமலோ விடமுடியாமை. இந்த இரண்டு காரணங்களையும் சாதியால் அடக்கப்பட்வர்களிலிருந்து களைய முடியுமாயின் முழுமையான விடுதலைக்கான சுதந்திரத்திற்கான சாத்தியம் உண்டு.

புரம்பரை தொழில் தொடர்பாக இரண்டு கருத்துக்களை முன்வைக்கலாம். சமூக இயக்கத்திற்கு மனிதரின் வளமான வாழ்வுக்கு நடைமுறைகளில் உள்ள பல்வேறு தொழில்கள் மிக முக்கியமானவை. ஆகவே தொழில்களுக்கு எதிராக நமது பார்வையை திருப்பத் தேவையில்லை. மாறாக அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்குவது, ஆகக்குறைந்தது 12ம் வகுப்பு (மிகக் குறுகிய எதிர்காலத்தில் ஒரு துறைதொடர்பான பட்டப்படிப்பே ஆகக்குறைந்த தகுதியாக இருக்கும்) வரை கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்துவது. இது ஒரு தொழிலை (பரம்பரை தொழில் உட்பட) ஒரு மனிதர் தன் சுய விருப்பில் தெரிவு செய்வதற்கான தகுதியை வழங்குகின்றது.

இதற்கான உரிமை ஒரு மனிதரின் அடிப்படை மனித உரிமை தொடர்பானது. இரண்டாவது அனைத்து தொழில்களையும் குறிப்பாக தலித்துகள் செய்யும் தொழில்களாயினும் சரி பிற சாதி மனிதர்கள் செய்யும் தொழிலாயினும் சரி, சமூக அந்தஸ்து வழங்கப்படவேண்டும். உயர்வான ஊதியம் இந்த மாற்றத்தை உருவாக்குவது மட்டுமல்ல இம் மனிதர்களின் வாழ்வு நிலையையும் இது மாற்றியமைக்கும். குறிப்பாக துப்பரவுத் தொழிலாளர்கள் வேலை செய்யாது விடுவார்களாயின் அதன் விளைவுகள் இன்றைய சூழலில் கற்பனை கூட செய்யமுடியாதளவு பயங்கரமானது. ஆகவே இது போன்ற தொழில்களின் முக்கதியத்துவம் வழங்கப்படவேண்டும். இது உடல் உழைப்பாயினும் பிற உடல் அல்லது மன அல்லது முளை வேளைகளுடன் சரிசமமானது என்று ஏற்கும் நிலை வரவேண்டும்.

இன்று உலக சமூகம் நோக்கும் பல பிரச்சனைகளுக்கு அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் இருப்பது அடையாளம் சார்ந்த ஒருமைப்பாடும் அதன் விளைவான பிரச்சனைகளுமே. இங்கு ஒரு மனிதரின் அடையாளம் எனக் கூறும்பொழுது இன, மத, மொழி, சாதி, நாடு, தேசம், பால், வர்க்க எனப் பல அடையாளங்களுடன் பிணைந்துள்ளது. உரிய நேர சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் ஒரு மனிதருக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த அடையாளங்கள் அனைத்தும் மனிதராக பிறக்கும் அனைவருக்கும் இயற்கையாக இருந்ததல்ல. செயற்கையான பலவந்தமாக வழங்கப்பட்டவகைகளே இந்த அடையாளங்கள்.

இந்த அடையாளங்களிலும் சிலவற்றை நாமாக வலிந்து ஏற்றுக்கொள்வது நாம் வாழும் சூழலுக்காகவும் வாழ்க்கையை தொடர்ந்தும் வாழ்வதற்காகவும் இசைவாக்கமடைகின்றோம். இதனால் நன்மைகள் அதிகமாக கிடைக்கலாம். பாதிப்புகள் குறைவாக இருக்கலாம். ஆனால் சாதிய அடையாளத்தை தொடர்ந்தும் நாம் கடைபிடிப்பது ஆதிக்க சாதிகளுக்கு நன்மையாகவும் அடக்கப்படும் சாதிகளுக்கு பாதகமாகவும் முடிகின்றது. ஆகவே அடக்கப்படும் சாதிகள் தமது அடையாளத்தை இழப்பது அல்ல தூக்கி ஏறிவது அல்லது அடியோடு அழிப்பதே புதிய மனிதராக பிறப்பதற்கு வழிவகுக்கும்.

இந்த அடிப்படையில் சாதியத்துக்கு எதிராகப் போராடும் நாம் தலித்துக்கள் என்றடிப்படையில் இணைந்து செயற்படுவதை தவிர்த்து மனிதர்கள் என்ற அடிப்படையில் முன்நோக்கி செயற்படுவதே சாதிய அடையாளங்களை களைவதற்கு வழிவகுக்கும். அல்லது மீண்டும் மீண்டும் தலித்துக்கள் என்றும் வேறுபெயர்கள் கொண்டும் ஒன்றிணைவது இருக்கின்ற சாதிய அமைப்பைக் கட்டிக்காப்பதற்கு வழிவகுக்குமே அல்லாது விடுதலைக்கு வழிவகுக்காது. வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நமது சாதிய அடையாளத்தை களைந்து மனிதர் என்ற அடையாளத்தை ஆணித்தரமாக உறுதியாக பயமின்றி துணிவுடன் முன்வைக்கவேண்டும். ஏனெனில் நமது இயற்கை அடையாளமான மனிதர் என்பது மறக்கப்பட்டு மிக நீண்ட காலம் சென்றுவிட்டது. முதலில் நாம் மனிதர் என்பது உணரப்படவேண்டும். மதிக்கப்படவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் மனிதராக அடையாளங்கண்டு மதிப்போமாயின் இன்று நடைபெறும் பல பிரச்சனைகள் தாமாக இல்லாது போய்விடும். மொழி சார்ந்து அடையாளப்படுத்துவதற்கு மாறாக நாம் அறிந்த மொழிகளினூடாக உயர்ந்த இலக்கியங்களைப் படைப்பதே அந்த மொழியை அழியவிடாது வரலாற்றில் உயர்ந்து நிற்க்கச் செய்யும். இதேபோல் மனிதர்களின் உடல் மனம் ஆன்மா என்பவற்றை ஒன்றிணைத்து சுத்தமாக்கி மனிதரை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டு செல்ல மேலும் பரிணாம வளர்ச்சியடைய வழி காட்ட வேண்டிய மதங்கள் மதம் பிடித்து அலைவது மட்டுமல்ல மனிதரை மனிதர் கொன்று குவிப்பதற்கு வழிகாட்டுகின்றன. ஆகவே மத அடையாளங்கள் களையப்பட்டு ஒவ்வொரு மனிதரும் தமக்கான பாதைகளில் மேலும் பரிணாம வளர்ச்சியடைவதற்கான பாதையே ஒவ்வொருவரது ஆன்மீகப் பாதையாகும்.

நமக்கு இன்று தேவை புதிய பார்வையும் புதிய செயற்பாடுகளும் புதிய பாதையுமே.

பழையன கழிதலும் புதியன வருதலும் இயற்கையின் நியதி. புழையதைக் கடைபிடிப்பதா புதியதை கண்டுபிடிப்பதா தெரிவு நமது கைகளில்.

- மீராபாரதி

Pin It