அண்மையில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மணமகளின் தந்தை எனது நெருங்கிய நண்பர் என்பதால் முதல்நாள் மாலை வரவேற்பு நிகழ்ச்சி முதல், மறுநாள் காலை திருமணம் முடிகிற வரை மண்டபத்திலேயே உழலும்படி நேர்ந்து விட்டது எனக்கு. நான் அங்கு கழிக்க நேர்ந்த மாலை, இரவு மற்றும் காலை நேரத்தில் திருமண ஆரவாரங்களையெல்லாம் மீறி என்னை மிகவும் வேதனைப்பட வைத்தது மணமகளின் தந்தையான என் நண்பரின் நிலைதான். கலகலப்பாகவும், இயல்பாகவும் பழகுகிற, எந்தச் சூழலிலும் பதற்றப்படாத அவர் அன்று அவ்வாறு காணப்படவில்லை.

திருமணப் பேச்சு தொடங்கிய நாளிலிருந்தே அவர் படிப்படியாக நிம்மதியிழந்து வந்தார். திருமண நாளன்று கிட்டத்தட்ட நடைப்பிணமாகவே மாறி விட்டிருந்தார். திருமணம் செய்து வைத்து மகளைக் கரையேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் தந்தைக்கு தன் மகளின் திருமணம் நடைபெறுகிற அன்று சிறிது கூடுதலான அலைச்சலும், உளைச்சலும் இருக்கத்தான் செய்யும். ஆயினும் நமது இந்தியச் சூழலில் பெண்ணைப் பெற்றவர்கள் அவற்றை கொஞ்சம் அளவுக்கதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

பொருளாதார அளவில் மணப்பெண்களின் தந்தையரை கோடீஸ்வரத் தந்தையர், நடுத்தரத் தந்தையர், ஏழ்மைத் தந்தையர் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். இம்மூன்று வகையில் முதல்வகைத் தந்தையர்க்குத் தம் மகளின் திருமணத்தன்று அப்படியொன்றும் பெரிய அலைச்சலோ உளைச்சலோ இருப்பதில்லை. பெரும்பாலும், கட்டளையிடுவது மற்றும் தமக்கு நிகரானவர்களை இன்முகத்தோடு இயல்பாக வரவேற்பது போன்றவையே அன்று அவர்களின் வேலையாக இருக்கும். மூன்றாம் வகையில் உள்ள ஏழ்மைத் தந்தையர் தமது மகளின் திருமணத்தன்று பெரிதாக எதற்கும் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களின் பெரும்பகுதியினர் தம் சக்திக்கு உட்பட்டே எளிமையாகத் திருமணங்களை முடித்துக் கொள்வதோடு திருமண நாளன்று மகிழ்ச்சியாகவும் பிறருடன் இயல்பாகப் பேசிக் கொண்டிருப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

முதல் வகையும் மூன்றாவது வகையும் இப்படியிருக்க, அல்லலுற்று, அலைச்சலுக்கும் உளைச்சலுக்கும் ஆளாகிறவர்கள் நடுத்தர வகைத் தந்தையரே என்பது கண்கூடான உண்மையாகும். தமது பொருளாதாரச் சக்திக்கு மீறித் திருமணத்திற்காக கடன் வாங்குவது, வீணாகிப் போவது பற்றிய கவலையின்றி, விதம் விதமான உணவு வகைகளை பட்டியலிட்டுப் பந்தியிடுவது, வரனுக்கேற்ற சவரன் என்று சமாதானம் அடைந்துகொண்டு கிலோ கணக்கில் நகைகளை வாங்கிப் போடுவது போன்ற பல சிக்கல்களை நடுத்தர வர்க்கத் தந்தையர்கள் தமது மகளின் திருமணத்தின்போது சந்தித்தே தீர வேண்டியிருக்கிறது. அரசுத் துறையிலோ, தனியார் துறையிலோ ஓய்வுபெறும் வரை பணியாற்றி அதற்காகக் கிடைக்கும் மொத்தத் தொகையையும் மகளின் திருமணத்திற்காக அப்படியே தாரை வார்த்து விடுகிற தந்தையர்கள் நிறையவே இருக்கிறார்கள். சில தந்தையர்கள் மகளின் திருமணத்திற்காக விருப்ப ஓய்வு பெற்றுப் பணம் பெறுவதும் உண்டு.

திருமணம் என்பது ஒரு பெருஞ் செலவு என்றால் அதற்கு முந்தைய சடங்குகளுக்கும், பிந்தைய சடங்குகள் மற்றும் விருந்துகளுக்கும் செலவு செய்தாக வேண்டிய தொகையைத் தயார் செய்வதற்கு பல தந்தையர்கள் படுகிற பாடு கொஞ்சமல்ல. மகளுக்குத் திருமணம் செய்து வைத்த அனுபவம் எப்படியிருந்தது? என்று ஒரு தந்தையிடம் கேட்டபோது மடைதிறந்த வெள்ளமாகப் பல செய்திகளைக் கொட்டித் தீர்த்தார் அவர். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரை ஒருபடி மிஞ்சியே செயலாற்ற விரும்புகிறார்கள் என்பதும், மாப்பிள்ளை வீட்டாரின் சிரமங்களில் எந்த வகையிலும் பங்கேற்காதவர்கள்தான் மாப்பிள்ளை வீட்டிற்கு ஆதரவாக எங்களிடம் பிரச்சனை செய்தார்கள் என்பதும், மாப்பிள்ளையின் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு ஒரு குழுவாக அலைந்தவர்கள் எங்களைப்படுத்தியபாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதும் அவரது குமுறல்களின் உள்ளடக்கமாக இருந்தது.

அவர் குறிப்பிட்டதைப் போல, நண்பனின் திருமண நிகழ்வு நண்பர்களின் கொண்டாட்டக் களமாக மாற்றப்பட்டு விடுகிற போக்கு சற்றுக் கூடுதலாகவே தலைதூக்குவதை நிறைய திருமணங்களில் காண முடிகிறது. திருமண நிகழ்வுகளில் நண்பர்களின் அத்துமீறலை கண்டிக்கப் போய் அது மாப்பிள்ளை வீட்டாரின் மானப்பிரச்சினையாக மாறி தன் மகள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமோ என்றெல்லாம் தொலைநோக்கோடு கணக்குப் போடுகிற மணப்பெண்களின் தந்தையர் தம் இயல்பான, நியாயமான கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு வெடிக்க முடியாத குண்டுகளாகக் காட்சியளிக்கிறார்கள்.

“என்ன சார் விடிற்காலை மூன்று மணிக்குத்தான் லேசா கண் அசந்தேன். தட தட தடன்னு கதவு தட்டற சத்தம் கேட்டது. என்னன்னு திறந்து பார்த்தா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சுடு தண்ணி கேக்கறாங்கன்னு ஒருத்தன் வந்து சொல்லிட்டுப் போறான். இதுக்கு என்ன சொல்றீங்க?” என்று கேள்வி கேட்டு விரக்தியோடு சிரிக்கிறார் அண்மையில் தன் மகளைக் கரையேற்றி விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிற ஒருவர்.

இன்னொரு திருமணத்தில் பெண்ணின் தந்தையிடம் ஒருவர், “கழிவறை எங்கேயிருக்கிறது?” என்று கேட்க “இந்த மண்டபத்துல அதுக்கு வசதியே இல்லை சார். சிறுநீர் கழிக்கணும்னா அதோ அந்தப் பக்கம் போங்க” என்று சமையலுக்கு விறகுகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு பகுதியை ஒரு ஞானியைப் போலச் சுட்டிக் காட்டினார் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர் குறிப்பிட்ட அந்தத் திருமண மண்டபம் மிகப் பெரியது. அதில் வசதியான கழிவறைகள் நிறையவே இருந்தன.

ஒரு திருமணத்தில் தாலி கட்டி முடிந்த ஐந்து நிமிடத்திற்குப் பிறகு பெண்ணின் தந்தையைக் காணவில்லை. திருமணத்திற்குப் பிறகான சடங்குகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் தேவைகளுக்காக அவரை அனைவருமே தேடினர். அவர் எங்கெங்கு போயிருப்பார் என்றெல்லாம் யூகித்து நகைச்சுவையாக அனைவரும் பேசிக் கொண்டனர். அவர்களது நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அவரது மனைவி, அங்கே இங்கே என்று தன் கணவரைத் தேடி, யார் பார்வைக்கும் எளிதில் தெரியாத ஒதுக்குப்புற மாடிப்படியின் கீழ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தார்.

இன்றைய நம் சமூக அமைப்பில் ஆண்களுக்கு உள்ள பல்வேறு சாதகங்கள் பெண்களுக்கு இல்லை. எனவே திருமண நிகழ்வுகளில் பையனைப் பெற்றவரை விட பெண்ணைப் பெற்றவரே எதையும் தாங்கும் இதயம் கொண்டவராகவோ, அல்லது எதையும் தாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவராகவோ காணப்படுகிறார்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் திருமண நிகழ்வுகளில் மணமகளின் தந்தை அடைகிற உளைச்சல் மனோநிலைக்கும் அதிகமாகவே அப்பெண்ணின் தாயும் உளைச்சல் அடைகிறார். அவரது கவலைகளையும், ஐயங்களையும், மற்ற பிரச்சனைகளையும் கவலையோடு தன் கணவனின் கவனத்திற்குக் கொண்டு செல்வதன் வாயிலாக தன் கணவரது மனோநிலையை மேலும் சிறிது சிக்கலாக்குகிறார். நமது சமூக அமைப்பில் பெண்களின் எல்லை இவ்வளவுதான் என்று வரையறுக்கப்பட்டிருப்பதன் விளைவாகவே இவ்வாறு நிகழ்கிறது.

தாலிகட்டி முடிந்த பின்பு பெண்ணின் தந்தை விடுகிற பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் தொனிக்கின்றன. நகையின் பொருட்டோ, மொட்டைக் கடிதங்களின் பொருட்டோ தமது மகளின் திருமணம் தாலி கட்டும் நேரத்தில் தடைபடவில்லை என்பதில் அவர்களுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.

ஒரு திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்டுவிட்டால் அதை வைத்து ஏராளமான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெண்ணுக்குப் போட வேண்டிய நகை குறித்த ஒப்பந்தம், இத்தனை பேருக்கு இத்தனை விதமான உணவு என்று சமையல்காரருடன் ஒப்பந்தம் என்று ஏராளமான ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன. அவ்வளவும் மிகச் சரியாக நிறைவேற்றப்படுவதும் நடக்கிறது. இத்தகைய ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதிலேயே கவனமாக இருந்து அதில் வெற்றியும் அடைகிறார்கள். பெண்ணை, பிள்ளையைப் பெற்றவர்கள், திருமணம் என்னும் நிகழ்வுக்காகப் போடப்படுகிற ஒப்பந்தங்கள், மணமகன் - மணமகள் ஆகியோரது இருமனம் இணையும் வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு எந்த அளவுக்கு கை கொடுக்கிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகத் தானிருக்கிறது.

ஒரு திருமணத்தை வைத்து எத்தனைவிதமான வேட்டைகளுக்குத் திட்டமிடப்படுகிறது என்பதைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் மிகத் துல்லியமாகப் பட்டியலிடலாம். தன் பொருட்டுத் தன் குடும்பத்தினர் - அதிலும் குறிப்பாகத் தன் தந்தை- சுமக்கிற பல்வேறு வகையான சுமைகளை நினைத்துக் குமுறியபடிதான் பல பெண்கள் கணவனின் வீட்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

நடுத்தர வர்க்கத்தின் திருமண நிகழ்வுகளைப் பொறுத்தவரை இங்கே மாற வேண்டியிருப்பது வேட்டையாடுகிற மனோபாவம் மட்டுமல்ல - தன்னையே வேட்டைக்களமாக மாற்றிக் கொண்டு திண்டாடித் திணறுகிற மனோபாவமும்தான்.

- ஜெயபாஸ்கரன்

Pin It