பழங்காலப் போர்க் களங்களில் சத்தம் இல்லை. மனித ஓலம் தான் இருந்தது. புகை இருக்காது; காயங் களுக்கும் மரணங்களுக்கும் காரணங்கள் கண்ணுக்குப் புலப்படாமல் இல்லை. நெருங்கித்தாக்கும் வரை ஆயுதங்கள் தன்னை ஒன்றும் செய்யாது என்று ஒவ்வொரு மனிதனும் நினைத்திருந்தான் - பொருளாதார அறிஞர் ஆதம் சுமித் - நாடுகளின் செல்வம் நூலில் (In(Inan ancient battle there was no noise but what arosefrom the human voice; there was no smoke, therewas no invisible cause of wounds or death. Everyman, till some mortal weapon actually did approachhim, saw clearly that no such weapon was nearhim”- Adam Smith, The Wealth of Nations)

12 ஏப்ரல் 2018இல் இந்தியா மற்றும் பல நாடுகளின் போர்க்கப்பல்கள், வானூர்திகள், டாங்கிகள் இன்னப்பிற போர்த் தளவாடங்களின் கண்காட்சி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள திருவிடந்தையில் நடை பெற்றது. பிரதமர் மோடி தரையைத் தொடாமல் வானிலே வலம்வந்து இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத ஒன்றிய அரசைத் தமிழகமே திரண்டு எதிர்த்ததன் காரணமாகச் சில நூறு பேர்கள் கூட இல்லாத கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். “மோடியே திரும்பிப் போ” என்கிற முழக்கம் சென்னை மாநகரின் வீதிகளில் நடைபெற்ற கருப்புகொடி ஆர்ப்பாட்டங்களில் விண்ணதிர எழுப்பப் பட்டது. கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

தமிழகத்திற்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய நிதி ரூ.8000 கோடிக்கு மேலே நிலுவையில் உள்ளது. ஆனால் வறட்சி நிவாரணத்திற்குக் குறைந்த அளவான 300 கோடி ரூபாயை  அளித்த ஒன்றிய அரசு இந்த மூன்று நாட்கள் கண்காட்சிக்கு 800 கோடியைச் செலவிட்டது வெட்கித் தலைக் குனிய வேண்டிய செயலாகும். தமிழ் நாட்டைத் தொடர்ந்து அவமானப்படுத்தும் போக்காகும்.

ஒன்றிய அரசின் இராணுவத் தளவாட உற்பத்தியும் ஏற்றுமதியும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று  சிலர் வாதிடுகின்றனர். முதல் உலகப் போரின் போதுதான் புதிய புதிய இராணுவத் தளவாடங் களின் கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்பட்டன. அழிவைத் தரும் ஆயுதங்களுக்குப் பொதுச்செலவைப் பெருக்கும் நிலையும் தொடர்கிறது. அறிவியல் அறிஞர்களின்  கண்டுபிடிப்புகள் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி மனிதப் பேரழிவிற்கு வித்திட்டன.

சான்றாக முதல் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக் கிடையேதான் நடைபெற்றது. இருப்பினும் முதல் உலகப் போர் முடிவுற்றவுடன் 3.74 கோடி இராணுவ வீரர்களும் 1.3 கோடி மக்களும் மடிந்தனர். இதில் இந்தியர்களும் அடங்குவர். பெருந்தலைவர் காந்தியார் போருக்கு ஆதர வான நிலைப்பாட்டினை எடுத்தார். இந்தியர்களை இராணுவத்தில் சேரும்படி வலியுறுத்தினார். இப்போரி னால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு அன்றைய அமெரிக்க நாணய மதிப்பில் 20.8 கோடி ஆகும்.

இந்தப் பொருளாதார இழப்பாலும் மானுட இறப் பாலும் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, ஆகிய நாடு களின் பொருளாதாரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியது. மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டனர். இதன் தொடர்பாக ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன.

அறிஞர் ஜார்ஜ் பெர்னாட்ஷா வீணான போர்க் கூச்சலை “தேசியம்” என்று அழைப்பது பித்தலாட்டம் என்று குறிப்பிட்டார். போர் வெறியர்கள் பெர்னாட்ஷாவிற்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டனர். அவரின் நாட கங்கள் நடைபெறவில்லை. இதன் காரணமாக பெர்னாட்ஷா பல மாதங்கள் வீட்டிலேயே இருந்தார். போர் முடிந்த வுடன் பெர்னாட்ஷா கூறிய கணிப்பு உண்மையானது. பெர்னாட்ஷாவின் நாடகங்கள் அரங்குகளில் பல ஆண்டுகள் மக்களால் விரும்பிப் பார்க்கப்பட்டன.

உலகப் புகழ் பெற்ற மெய்யியல் அறிஞரான பெர்ட்ரண்ட் ரசல்-ஏகாதிபத்திய போர்களால் மக்களும் நாடுகளும் சீரழிகின்றன என்று கூறியதற்காக 6 மாதம் (1918) சிறை வைக்கப்பட்டார். போர்களால் எவ்வித பயனும் முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை என்று பல கட்டுரைகள், நூல்களை எழுதினார். வாழ்நாள் முழுவதும் அணுஆயுதத்திற்கு எதிராகவும் இராணுவத் தளவாடங்கள் உற்பத்திக்கு எதிராகவும் போராடினார்.

முதல் உலகப் போர் கற்பித்த பாடங்களை மறந்து ஏகாதிபத்திய நாடுகள் மீண்டும் போரில் குதித்தன. இப்போர் உலக முழுவதும் பல தீய விளைவுகளை ஏற்படுத்தியது. 1939இல் தொடங்கிய இரண்டாம் உலகப் போரின் மொத்த செலவு அன்றைய அமெரிக்க நாணய மதிப்பில் ஒரு இலட்சம் கோடியாகும். ஏறக்குறைய 2.5 கோடி இராணுவ வீரர்களும் 2 கோடி மக்களும் உயிரிழந்தனர். இதைத் தவிர ஜப்பான் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டுத் தாக்குதல் மிகவும் கொடுமை யானது. அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகள் ஜெர்மானிய ஹிட்லருக்கு எதிராகப் போரிட்டாலும் ஆசிய நாடான  ஜப்பானில் மக்கள் மீது அணுகுண்டை வீசி ஏற்படுத்திய கொடூரங்கள் இன்றும் ஜப்பானில் நினைவு கூரப்படுகின்றன.

இக்கட்டுரையாசிரியர் 2010இல் ஹிரோஷிமா நகருக்குச் சென்று அங்குள்ள போர் நினைவுச் சின்னத்தைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். காரணம் அந்தக் கண்காட்சியில் அணுகுண்டு வீசியதனால் ஏதும் அறியாத மக்கள், மாணவர்கள், சிறுமிகள் எவ்வாறு பாதிப்படைந் தார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளனர். உலக நாடுகளின் பல தலைவர்கள் தங்களுடைய மனிதநேயக் கருத்துகளை வலியுறுத்தும் குறிப்புகளை அங்கு வைத்துள்ள புத்தகத்தில் குறிப்பிட்டாலும் மானுட அழிவை ஏற்படுத்தும் கொடும் ஆயுத உற்பத்தியை இன்றளவும் நிறுத்தவில்லை. அணுகுண்டுகள், இரசாயன குண்டுகள் போரில் பயன்படுத்தக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பல பிரிவுகள் சுட்டிக் காட்டினாலும் இதையெல்லாம் புறந்தள்ளி இன்றைக்கு சிரியாவில் ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா குண்டு மழை பொழிகின்றன. எனவேதான் இராணுவத் தளவாட உற்பத்தியைக் கொலைத் தொழில் என்றே பல அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் இடம் பெற்றிருக்கும், அமெரிக்கா ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்சு, சீனா ஆகிய நாடுகள்தான் உலகில் அதிக அளவில் ஆயுதத் தளவாடங்களை  உற்பத்திச் செய்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இவர்கள் எவ்வாறு உலக அமைதியை  விரும்புவார்கள் என்று பல அறிஞர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.

நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் தனது வாதிடும் இந்தியன் (Argumentative Indian - 2005)5) என்ற நூலில் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு அவையில் இடம் பெற்றுள்ள இந்த 5 நாடுகளை மரண வணிகர்கள்  ((Merchants of Deathவா) என்று குறித்துள்ளார்.எந்த நாடு இராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்கிறதோ அந்த நாடும் மரண வணிகர்கள் பட்டியலில் இணைந்து விடுகிறது. இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்குத் தரும் வேலைவாய்ப்பு இறுதியில் அழிவைத் தரும் வேலைவாய்ப்பாக மாறிவிடுகிறது.

இரஷ்யாவின் பீட்ஸ்பர்க் நகரில் இட்லர் ராணுவம் சோவியத் ஒன்றியத்திற்கு ஏற்படுத்திய அழிவை இன்றும் காணலாம். குறிப்பாக ராணுவத் தளவாட தொழிற் சாலைகள் இரவோடு இரவாக இடம் மாற்றம் செய்யப் பட்டதை ரஷ்யப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஆண்டூரூஸ் 2007இல் இரஷ்யப் பயணத்தின் போது எங்களிடம் விளக்கினார். எனவே இராணுவத் தொழில் கள் எந்த இடத்தில் அமைந்தாலும் பேராபத்தை உரு வாக்கும் என்ற உண்மையை நேரில் காண முடிந்தது.

பொருளாதார நூல்களில் உள்ள கோட்பாடுகளில் நாட்டின் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் வித்திடும் தொழில்களைப் பிரிக்கும் போது வேளாண்துறை, தொழில்துறை, பணித்துறை எனப்  பகுக்கப்படுகின்றன.

மேலும் தொழில் துறையில் உற்பத்தியாகும் பொருட்களை அடையாளப்படுத்துவதற்காக 1.மூலதன பொருட்கள் உற்பத்தித் துறை (Capital goods sector) 2. நுகர்வுப் பொருட்கள் உற்பத்தித் துறை (ConsumerConsumergoods sector) என்று பிரிக்கப்படுகின்றன. இந்த இரண்டு துறைகளில் உற்பத்தியாகும் பொருட்களைத் தேவைக்கு ஏற்ப பெருக்குவதும் குறைப்பதும் பொருளாதாரத்தில் ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்தும். சான்றாக வேளாண் துறைக்குப் பயன்படும் டிராக்டர் இயந்திரம் மூலதனப் பொருள் உற்பத்தி வகையில் சேர்க்கப்படுகிறது. காரணம் இந்த இயந்திரத்தை விளைநிலங்களில் எங்குப் பயன்படுத்தினாலும் உணவு உற்பத்தித் திறன் பெருகும் உற்பத்தியானது பன்மடங்காக வளரும்.

மக்கள் இன்றியமையாத நுகர்விற்குத் தேவைப் படும் பொருட்கள், ஆடம்பரத் தேவைக்காகப் பயன்படும் பொருட்கள் எனப் பகுப்பாய்வு செய்யலாம். மகிழுந்து, இரு சக்கர வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் போன்றவை நுகர்வோர் பொருட்கள் உற்பத்தித் துறையில் சேர்க்கப் படுகின்றன. இத்துறையிலும் சிலரின் தேவைக்காக அதிகளவில் உற்பத்தியைப் பெருக்கினால் பொருளாதாரம் பாதிப்பிற்கு உள்ளாகும். மகிழுந்துகள், இருசக்கர வாகனங்களால் வெளியிடப்படும் புகை புது தில்லியைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பெரு நகரங்களில் இவற்றால் நுரையீரல் நோய் இல்லதாதவர்களே இல்லை என்ற சூழல் பெருகி வருகிறது.

உணவுத் தின்பண்டங்கள்; சமையல் எண்ணெய், மருந்து பொருட்கள் ஆகியன மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்களாகும். ஆனால் வாசனைத் திரவி யங்கள், அழகு சாதனப் பொருட்கள், வைரம் தங்க நகை உற்பத்தி ஆகியன பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்தாது. மாறாக, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களை முடக்கி விடும். எனவே மக்களின் வாழ்வாதாரங்களை மட்டும் உறுதி செய்யும் நுகர்ப் பொருட்களைப் பேணிப்பாது காப்பது, தேவையற்ற பொருட்களைக் கட்டுப்படுத்துவது பொருளாதார வளர்ச்சியை நிலையான தன்மையில் எடுத்துச் செல்ல உதவும்.

மூலதனப் பொருட்களின் உற்பத்தியும் பெரும்பான்மை மக்களுக்குத் தேவையான நுகர்வுப் பொருட்கள் உற்பத்தியும் தேவைக்கு ஏற்ப உரிய முறையில் வளர்ந் தால் நாட்டினுடைய வளம் பன்மடங்காகப் பெருகும். இத்தகைய வளர்ச்சியை முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் காண முடியாது. இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி இறுதியில் பெரும் பாதிப்பை மானுடத்திற்கு ஏற்படுத்துகிறது என்பதை உலகப்போர்களும் இன்று நடக்கும் வட்டாரப் போர்களும் உறுதி செய்கின்றன. இக் கூற்றை முற்றிலும் உணர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் நேரு, முதல் தொழிற் கொள்கையை 6 ஏப்ரல் 1948இல் வடிவமைத்தார். தொழில் உற்பத்தித் துறை நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டன.

முதல்வகை

1.ஆயுதத் தொழிற்சாலைகள்; 2.அணுசக்தி எரி பொருள்; 3. தொடர்வண்டி ஆகியன அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும்.

இரண்டு

அடிப்படைத் தொழில்கள் - நிலக்கரி, இரும்பு, சுரங்கம், கப்பல் கட்டுதல், வானூர்தி உற்பத்தி செய்தல், தகவல் தொடர்புத் துறை, கனிமத் தொழில்.

மூன்று

அரசின் கட்டுப்பாட்டோடு செயல்படும் தொழில்கள்

நான்கு தனியார் தொழில்கள்

நேரு உருவாக்கிய தொழிற்கொள்கைகளால்தான் இந்தியாவின் தொழில் கட்டமைப்புப் பெருகியது. அவர் காலத்தில்தான் பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக் கப்பட்டன.

1991க்குப் பிறகு நேரு பின்பற்றிய தொழிற்கொள்கை முழுவதுமாக மாற்றப்பட்டது. தனியார் துறைக்கு முன் னுரிமை அளிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆயுதத் தொழிற்சாலைகள்கூட தனியார் முதலீட்டோடு இயங்கும் என்று மாற்றப்பட்டது. இதில் பா.ஜ.க., காங்கிரசு தேசியர்களுக்கு வேறுபாடே இல்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமையானது.

1995இல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையிலான குழு ஆயுதத் தொழில்களை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தோடு தொடங்கி விரிவாக்கம் செய்ய பல பரிந்துரைகளை வழங்கியது. ஏறக்குறைய 70 விழுக்காடு ஆயுத உற்பத்தித் தொழில்களில் இந்தியத் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி வளர்த்தெடுக்கலாம் என்று அப்துல்கலாம் குறிப்பிட்டார். ஆனால் இந்தப் பரிந்துரைகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு வெளிநாட்டு தனியார் நேரடி மூலதனத்தை (FDI) 26 விழுக்காட்டி லிருந்து 49 விழுக்காடு அளவிற்கு மோடி அரசு உயர்த் தியது. மேலும் இந்தியாவிற்குப் பயன்படக்கூடிய தொழில் நுட்பமாக இருந்தால் தனியார் நேரடி மூலதனத்தை 74 விழுக்காடு அளவிற்கு உயர்த்தலாம் என்று தற்போது மோடி அரசு முடிவு செய்துள்ளது. இத்துணைப் பரிந்து ரைகளுக்குப் பிறகும் இந்தியாவில் உற்பத்திச் செய்யப் படும் ஆயுதத் தளவாடங்கள் வெளிநாட்டு ஏற்றுமதித் தொகையில் ஒரு விழுக்காட்டிற்கும் கீழேதான் உள்ளன.

மேலும் 2015க்குப் பிறகு தொடர்ந்து ஆயுத ஏற்றுமதி குறைந்து வருகிறது. இசுரேல் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் ஏற்றுமதிச் செய்யும் அளவைவிட இந்தியாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இந்தியாவினுடைய இராணுவத் தளவாடங்களின் இறக்குமதிப் பெருமளவில் அதிகரித்து வருகிறது. 2017 புள்ளிவிவரப்படி இராணுவத் தளவாடங் களை  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

மேலும் இராணுவத்திற்குத் தேவையான விமா னங்கள், இலகு வானூர்திகள் வாங்குவதற்கு அதானி, அனில் அம்பானி போன்றோர் நடத்தும் தனியார் நிறு வனங்களோடு அரசு கூட்டு சேர்கிறது. இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக அண்மையில் காங்கிரசுத் தலைவர் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். ஆயுத இறக்கு மதியிலும் வெளிநாட்டு இராணுவத் தளவாடங்களின் பாகங்களை வாங்கி லார்சன் டியுப்ரோ, டாடா போன்ற தனியார் நிறுவனங்களைக் கொண்டு அவற்றை வடிவமைப்பதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இராணுவ தளவாடத் தொழில் களிலும் தனியார் கொள்ளையடிக்க அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இத்தகையச் சூழலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு நிலையான பாதையில் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்நாட்டில் உற்பத்திச் செய் யப்படும் இராணுவத் தளவாடங்களும் வெளிநாடுகளிலுருந்து இறக்குமதி செய்யப்பட்டு தனியார் துறையின் இலாபத்திற்கு விட்டுக்கொடுக்கப்படும் இராணுவத் தளவாடங்களும் இந்தியாவின் தொழில் துறையை எவ்வகையிலும் வளர்க்கப் போவதில்லை. மேலும் இந்தியாவின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிறது. சில வாரங்களுக்கு முன்பு மும்பாயிலிருந்து வெளிவரும் அரசியல் பொருளாதார ஏடு - EPW-Tank Nationalism -டாங்கிகள் தேசியம் என்று கேலியாகக் குறிப்பிட்டது. இப்போது புரிகிறதா? யார் தேசியவாதி? யார் தேசவிரோதி?

இந்தப் போக்கினை முற்றிலுமாக உணர்ந்த காந்தியார் இந்தியாவில் முக்கியமான மாநகரங்கள், நகரங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் 7 இலட்சம் கிராமங்கள் பொருளாதார, சமூக, ஒழுக்க தார்மீக அடிப்படையில் விடுதலைப் பெற வேண்டும். இந்திய ஜனநாயக இலக்கு களை அடைவதற்கும் இராணுவத்திலிருந்து ஜனநாயக அமைப்பாக மாறுவதற்கும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று  குறிப்பிட்டார். காந்தி பசனை பாடும் காங்கிரசுக்காரர்களும் காந்தியைச் சுட்டவர்களும் இக்கருத்தை உணர்வார்களா?

ஏற்கெனவே தகவல் தொழில்நுட்பக் கட்டமைப் பிலிருந்து பல புள்ளி விவரங்களும் இரகசியங்களும் வெளிநாடுகளுக்குச் சில தொழில்நுட்ப வல்லமை பெற்ற திருடர்களால் கடத்தப்படும் போது, இராணுவ இரக சியங்கள் மட்டும் கடத்தப்படமாட்டாது என்பதற்கு என்ன உறுதி?