இந்தியாவின் முதல் அரசியல் வேலைநிறுத்தம் தமிழகத்தில் தூத்துக்குடி (ஒருங்கிணைந்த திருநெல்வேலி) மாவட்டத்தில் நடைபெற்ற கோரல் மில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் ஆகும். 1908 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது இவ்வேலைநிறுத்தம். தொழிலாளர்களின் பொது அரசியல் வேலைநிறுத்தம் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றதற்கு கோரல் மில் தொழிலாளர்களும் ஏனைய தொழிலாளர்களும் மூல ஆதாராமாக இருந்துள்ளனர் என்பது மிக முக்கிய வரலாற்று உண்மையாகும்.
அச்சம், அறியாமை, வறுமை ஆகியவற்றில் புதைந்து கிடந்த தொழிலாளர்களை போராட்ட குணம் கொண்டவர்களாகவும், அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் வ.உ.சிதம்பரனார் உருப்பெற செய்தார் என்றால் அது மிகையல்ல.
1918 ஆம் ஆண்டில் சென்னை நகரில் பல்வேறு தொழிற்சங்கங்கள் தோன்றி வளர்ந்தன. திரு.வி.கலியாணசுந்தரனார், சக்கரை செட்டியார், சிங்காரவேலர், செல்வபதி செட்டியார், எம்.சி.ராஜா போன்றோருடன் தொழிலாளர் இயக்கத்தில் இணைந்து வ.உ.சிதம்பரனாரும் இணைந்து பணியாற்றினார்.
தென் இந்திய இரயில்வேத் தொழிலாளர் யூனியன் சார்பில் தமிழகத்தின் வடக்கு முதல் தெற்கு வரை சென்று, இரயில்வேத் தொழிலாளார்களுக்கான தொழிற்சங்கங்களை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் வ.உ.சி.
‘ஆங்கிலேய அரசாங்கத்துக்கு தபால், தந்தி, போலீஸ், இரயில்வே என்ற 4 சக்திகள் இருக்கின்றன. ஆங்கிலேய அரசாங்கத்தின் பாதுகாவல் அரணாக விளங்கும் இந்த நான்கு அரண்களில் ஒன்றை அழித்துவிட்டால் ஆங்கிலேய அரசாங்கம் ஆட்டம் கண்டுவிடும். எனவே சகோதரர்களே உங்கள் நிலைமையை மாற்றவும், முன்னேற்றம் காணவும் விரும்பினால் உங்கள் தொழிற்சங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமே தவிர அரசாங்கம் உங்களுக்கு உதவி புரியும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்”.
மேற்கண்ட உரைவீச்சு 1920 ஆம் ஆண்டில் வ.உ.சிதம்பரனாரால் நாகப்பட்டினம் இரயில்வேத் தொழிலாளர்களிடையே நிகழ்த்தப்பட்டது.
1920 –ல் காங்கிரசின் சென்னை மாநில மாநாடு நடைபெற்றது. அக்கூட்டத்தில் வ.உ.சி சில தீர்மானங்களை முன்மொழிந்தார்.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கல், நியாயமான வேலை நேரம், குடியிருப்பு வசதி, தொழிற்சங்க உரிமை ஆகியன வழங்க வேண்டுமென்று கோரினார் வ.உ.சி. மிக முக்கியமாக சென்னை மாநில சட்டமன்றத்தில், தொழிலாளர்களாலும், தொழிற்சங்கங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தக்க எண்ணிக்கையில் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
சென்னையில் வாழ்ந்தபோது வ.உ.சி அரிசி, நெய் வியாபாரம் செய்து வந்தார். லாப நோக்கமின்றி நேர்மையாக வணிகம் செய்தார். அவர் மக்களை நேசித்தார். தேசம் என்றால் இங்கு வாழும் மக்கள் தான். மக்கள் நலனே தேச நலன் என்பதை உணர்ந்திருந்தார். அதன்படி விடுதலை வேள்வியில் தன்னையே அர்ப்பணித்தார்.
வ.உ.சி முழங்கிய தொழிலாளர் நீதியின் இன்றைய நிலை என்ன?
இந்தியாவில் பாராளுமன்றத்திற்கு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 –வது மக்களவையில் 200க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் கோடீஸ்வரர்கள்.
இன்றைய நிலைமை இப்படி இருக்க வ.உ.சியின் கனவு மெய்ப்பட, தொழிலாளர் உரிமை பேணப்பட வழிதான் என்ன?
இந்திய பாராளுமன்றத்தில் எப்போதும் வாக்கெடுப்பில் பெரும்பான்மையோரின் கருத்துப்படியே சட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கும் சிறுபான்மையாக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது பற்றி, தோழர்களே பேச இயலும். ஏனையோருக்கு எதைப்பற்றியும் கவலையின்றி போலியாக தேசபக்தி கதை பேசி ஜாலியாக பாராளுமன்றம் வந்து செல்லும் நிலைதான் சுதந்திர இந்தியாவில் 70 ஆண்டுகளாக நடைமுறையாக உள்ளது.
இன்றளவும், மார்க்சியம் வாழ்க, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற இரு தோழர்களின் முழக்கம் கூட ஏனையோருக்கு அதாவது கார்ப்பரேட்களின் சௌக்கிதார்களான பெரும் கோடீஸ்வர உறுப்பினர்களுக்கு மிகுந்த அச்சத்தையே தருகிறது.
இன்று 2019 ஆம் ஆண்டில் சௌக்கிதார்கள் (காவலாளி) என்று தொடர்ந்து பொய், புரட்டு பேசிவரும் மத்திய ஆளும் வர்க்கத்தினர் இரயில்வேயில் இயக்கப்படும் பாசஞ்சர் இரயில்களை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியை துவங்கி விட்டனர்.
உலகிலேயே மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்ட இந்திய இரயில்வேத் துறையின் எதிர்காலம் ஊசலாடிக் கொண்டிருக்கும் நேரமிது.
தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனை நேரும்போது நீதிமன்றம் தானாக முன்வந்து அவர்தம் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கடமை உடையது என இந்திய அரசியலமைப்பின் பொருளாதாரச் சமூகநீதி என்னும் பகுதி சுட்டிக் காட்டுகிறது.
ஆனால் இன்று நடப்பது என்ன?
தொழிலாளர்கள் மற்றும் ஏனைய உழைக்கும் வர்க்கத்தினரின் நியாயமான போராட்டங்களை அடக்கி ஒடுக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறைக் கருவியாகவே காவல்துறையும், நீதிமன்றமும் செயல்பட்டு வருகின்றன.
உழைக்கும் வர்க்கம் அடக்குமுறைகளை தனது அறநெறிப் போராட்டங்களால் தகர்த்தெறிந்து நாட்டை ஆளும் நாள் வருமா? என்ற கேள்விக்கு பதில் வெகுதூரத்தில் இல்லை.
வ.உ.சிதம்பரனார் கண்ட புரட்சிகர தொழிலாளர் வர்க்கம் எல்லா பிரச்சனைகளையும் கடந்து அரசியல் அரங்கில் வெற்றி பெறும். சமூகத்தையும் அதன் சொத்துக்களையும் திறம்பட நிர்வகிக்கும் திறமை தொழிலாளர் வர்க்கத்துக்கே உண்டு என்பதை வரலாறு பலமுறை உலக அரங்கில் பதிவு செய்திருக்கிறது. உழைக்கும் மக்கள் நாட்டை ஆளும் சூழல் உருவாக அனைத்து உழைக்கும் வர்க்கமும் ஒருங்கிணைந்து உழைப்போம்.
- சுதேசி தோழன்