பார்ப்பனீயத்தை தேசமாக்கி
சாதிப்படிநிலையை மனிதனாக்கி
இந்துத்துவ அரசியலைக் கையிலேந்தி
அரியணையில் அமர்ந்திருக்கிறது
பாரதீய ஜனதா கட்சி

பகுத்தறிவை பாடையிலேற்றி
சாதிவெறியை மூளையிலேற்றி
அடக்குமுறை அரசியலை கையிலேந்தி
அரியணையில் அமரத் துடிக்கிறது
பாட்டாளி மக்கள் கட்சி

மோடியின் சர்வாதிகாரத்தில் நிறைந்துள்ளது
பாரதீய ஜனதா கட்சி
காவிகளின் கட்சியென
சட்டமன்ற அவைக்குறிப்பில் பதிந்துள்ளது
பாட்டாளி மக்கள் கட்சி
சாதி வன்முறைக் கட்சியென

அடாவடித்தனமும் அடக்குமுறையுமே
அரசியல் ஆயுதமென நம்பிக்கை கொள்கிறது
பாட்டாளி மக்கள் கட்சி
பார்ப்பனீயமும் இந்துத்துவமுமே
அரசியல் ஆயுதமென அடித்துச் சொல்கிறது
பாரதீய ஜனதா கட்சி

அன்று சட்டமன்ற அமைச்சராக
சாதியை அரசியலாக்கி ஆதாயம் தேடிய பா.ம.க
இன்று மக்களவை அமைச்சராக
காவிகளோடு கைகுலுக்கி
கலவரத் தீயை பற்ற வைத்து ஆதாயம் தேடியலைகிறது

ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடும்
அரசியல் கட்சிகள் ஒரு புறமிருக்க
ஜனநாயகத்தை வீழ்த்திடத் துடிக்கும்
மதவாத பாஜகவும் சாதியவாத பாமாகவும்
பிற்போக்குவாத அதிமுகவும் மறுபுறம் கரம்கோர்க்க
தேர்தல்களம் சவாலாய் மாறியது

சில நூறுகளைக் கொடுத்து
வாக்குகளை வளைக்கும் திட்டம் அம்பலமானது
மக்களின் மனமாற்றம்
தேர்தல் திசைகளை செதுக்கியது
அன‌ல் பரக்கும் பிரச்சார உச்சத்தில்
தோல்வி தழுவி விடுவோமென்கிற அச்சத்தில்
வாக்குச்சாவடியை கைப்பற்றுங்கள்
அடுத்தவர்களை அச்சுறுத்துங்களென
பிரச்சார மேடையில் முழங்கியது
ராமதாஸ் கூட்டணிகளின் குரல்

வாக்குப்பதிவு முடியும் முன்னரே
பொன்பரப்பி காலனி சூறையாடப்பட்டது
பானைகளை உடைத்தும்
கொடிக்கம்பத்தை வெட்டியெறிந்தும்
சாதி வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்திக் காட்டியது
பறத்தேவிடியா மகன்களெனச் சொல்லியே
கொலைவெறித் தாக்குதலை ஏவியது

ஓட்டுபோட்டதற்காய் ஒடிக்கப்பட்ட விரலும்
ஓட்டு போட மறுத்ததற்காய் சூறையாடப்பட்ட சேரியும்
காட்சிப்பொருளாய் சுழல்கிறது
தமிழகமெங்கும்
சமீபத்திய செய்தி
இந்திய தேசமெங்கும்
ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதென்றும்
ஜனநாயகம் கூட்டு வன்புணர்வுக்குள்ளானதென்றும்

- வழக்கறிஞர் நீதிமலர், மதுரை

Pin It