தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கிறிஸ்தவ பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷம் குடித்து இறந்ததை வைத்து தமிழக பிஜேபி தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ கல்வி நிலையங்களுக்கு எதிராகவும், கிறிஸ்தவ மத நிறுவனங்களுக்கு எதிராகவும் கீழ்த்தரமான விஷமப் பரப்புரையை நடத்தி வருகின்றது.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழக பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தற்போது இந்தப் பிரச்சினையை பிஜேபி மட்டுமில்லாமல், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஆர்.எஸ்.எஸ் இன் கிளை அமைப்புகளும் அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்ற நப்பாசையில் கையில் எடுத்துள்ளன.
தமிழகத்தில் மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும், மதமாற்றத்திற்கு எதிராக பாஜக ஆதரவுடன் இந்து அமைப்புகளுடன் இணைத்து மக்கள் திரள் அமைப்பை ஏற்படுத்துவோம் என எச்.ராஜா பேசியிருக்கின்றார்.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்பதெல்லாம் பிஜேபி போன்ற பாசிஸ்ட்கள் செய்கின்றார்கள் என்றால் பிரச்சினையின் மூல வேரே அவர்களிடம்தான் இருக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏற்கெனவே முந்திய காலங்களில் கள்ளக்காதல், ரியல் எஸ்டேட், கந்துவட்டி, காலித்தனம் போன்றவற்றின் காரணமாக கொல்லப்பட்ட காவி பயங்கரவாதிகளை எல்லாம் கூட இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் குறி வைத்துக் கொன்றதாக திட்டமிட்டு, பொய்த் தகவல்களை பிஜேபி ஆர்.எஸ்.எஸ் காலிகள் பரப்பி கலவரம் செய்ய முயன்று இருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெரியும்.
தற்போது இந்த வழக்கிலும் மாணவி பேசிய வீடியோவை முதலில் சமூக ஊடகங்களில் திரித்துப் பரப்பியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் அரியலூர் மாவட்ட உறுப்பினர் முத்துவேல் என்பவரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
மாணவி பேசிய முழுவீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் எந்த இடத்திலும் தான் மதமாற்றம் செய்ய வற்புறுத்தப் பட்டதால்தான் தற்கொலைக்கு முயன்றதாக சொல்லவில்லை. மேலும் மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக, கடந்த 16-ம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்து இருந்தார். அந்த வாக்குமூலத்திலும் அவர் மதமாற்ற செயல்பாடுகளைப் பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை.
இதில் இருந்தே விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த நபர் எடுத்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது அம்பலமாகி இருக்கின்றது.
மாணவியின் மரணத்தை வைத்து தமிழ்நாட்டில் மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே நோக்கம். மற்றபடி மாணவியின் மீது இந்த பாசிஸ்ட்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை. அப்படி இருந்திருந்தால் மாணவி உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் போது அவரைக் கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்து, அந்த மாணவி மரணிக்கும்வரை காத்திருந்து, எடுக்கப்பட்ட வீடியோவை முழுவதும் வெளியிடாமல் வெட்டி ஒட்டி வெளியிட்டு இருக்க மாட்டார்கள்.
மாணவி ஏன் விஷம் அருத்தியதை மறைத்தார்? அவரை யாராவது அப்படி செய்யச் சொல்லித் தூண்டினார்களா? விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்தவருக்கு மாணவியின் மரணத்தில் உள்ள பங்கு என்ன? இதில் தமிழக பிஜேபிக்கு நேரடியான தொடர்பு உள்ளதா? மாணவியை வீட்டில் சேர்க்காமல் கொடுமை செய்த அவரது சித்தி இன்று பிஜேபியுடன் சேர்ந்து அவர்களது குரலாய் ஒலிப்பதற்குப் பின் ஏதாவது பணப்பரிமாற்றம் அல்லது ஆசை காட்டல் நடந்துள்ளதா? என்பதை எல்லாம் காவல்துறை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
தற்போது மாணவியின் மரணத்தை வைத்து சங்கி கும்பல் தமிழ்நாட்டில் மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என தீவிரமாகப் பரப்புரை செய்ய ஆரம்பித்து இருக்கின்றது.
ஏற்கெனவே இந்தியாவில் ம.பி, ஹிமாச்சல் பிரதேசம் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2002ஆம் ஆண்டு கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடின.
ஆனால் ஜெயலலிதா அதைத் திரும்பப் பெறவில்லை. விளைவாக 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளையும் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, இடதுசாரிகள் இணைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது. அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் படுதோல்வி அடைந்தது.
இதனையடுத்து 18-5-2004-ல் அவசரச் சட்டத்தின் வாயிலாக கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை ஜெயலலிதா ரத்து செய்தார்.
இவை எல்லாம் வரலாறுகள். ஏற்கெனவே தமிழக மக்களால் காறி உமிழப்பட்ட இந்த கேடுகெட்ட சட்டத்தைத்தான் இப்போது மீண்டும் கொண்டுவர வேண்டும் என சங்கி கும்பல் கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கின்றது.
சும்மா கேட்டால் யாரும் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள் என்பதால் மாணவியின் மரணத்தை வைத்து கேவலமான அரசியல் நடத்திக் கொண்டு இருக்கின்றது.
உண்மையில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலேயே மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வருவதற்கான தேவை இருக்கின்றதா என்பதை நாம் தெரிந்து கொள்ளும் போதுதான் சங்கிகளின் பிரிவினைவாத பாசிச அரசியலை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையான 120 கோடி பேரில், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் 94 சதவீதம் பேர் உள்ளனர். மீதமுள்ள 6 சதவீத மக்கள் தொகையில்தான் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், சமணர்கள் என அனைவரும் உள்ளனர்.
சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள 121.09 கோடி மக்கள் தொகையில், 96.63 கோடி மக்கள் இந்துக்கள், 17.22 கோடி மக்கள் இஸ்லாமியர்கள். 2.78 கோடி மக்கள் கிறிஸ்தவர்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் அதன் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 ஆகும். இதில் இந்துக்கள் 6 கோடியே 31 லட்சத்து 88,168 பேர், இஸ்லாமியர்கள் 42 லட்சத்து 29,479 பேர், கிறிஸ்தவர்கள் 44 லட்சத்து 18,331 உள்ளனர்.
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்திற்காக தயாரிக்கப்பட்ட 2008 ஆண்டுக்கான அறிக்கையின்படி, நாட்டில் வாழும் தலித் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வெறும் 3.2 மில்லியன் மட்டுமே. தற்போது இந்த எண்ணிக்கையில் சற்று மாறுபாடு இருக்கலாம். ஆனால் பெரிய மாற்றம் எதுவும் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை.
இந்தியா முழுவதற்கும் சேர்த்தே வெறும் 32 லட்சம் தலித் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மட்டுமே இருக்கும் போது எங்கே மதமாற்றம் நடந்துள்ளது? எங்கே இந்து மதம் அழிவுக்கு உள்ளாகி இருக்கின்றது? 96.63 கோடி எங்கே? 32 லட்சம் எங்கே?
பிரச்சினை உண்மையில் மதமாற்றத்தில் இல்லை. மதப் பிரிவினைவாதத்தையும் வெறுப்பையும் வளர்த்து ஓட்டு பொறுக்கி, அதன் மூலம் கார்ப்ரேட்களுக்கு நாட்டை கூட்டிக் கொடுக்கத் துடிக்கும் பிஜேபி ஆர்எஸ்எஸ் கும்பலின் பாசிச அரசியலிலேயே உள்ளது.
உண்மையில் மதம் மாறியவர்கள் கூட ஏதோ ஏசுவின் ராஜ்ஜியத்தில் கோடிஸ்வரர்களாக வாழலாம் என்று மாறவில்லை. அவர்கள் பெரும்பாலும் இந்து மதத்தின் தீண்டாமைக் கொடுமையில் இருந்து விடுபடவே மதம் மாறினார்கள்.
மத மாற்றம் பற்றி PRC அமைப்பு நடத்திய ஆய்வில் தற்போது கிறிஸ்தவர்களாக இருப்பவர்களில் 48 சதவீதம் பேர் பட்டியல் சாதிக்ச் சேர்ந்தவர்கள் என்றும், 14 சதவீதம் பேர் பட்டியல் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 26 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கின்றது. இதில் 47 சதவீதம் பேர் சாதிப் பாகுபாடு, தீண்டாமை காரணமாகவே தாங்கள் மதம் மாறியதாகக் கூறியிருக்கின்றார்கள்.
எனவே சங்கி கும்பல் கூறுவதுபோல் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆசை காட்டியோ, அச்சுறுத்தியோ யாரையும் மதம் மாறச் செய்யவில்லை. பார்ப்பனியத்தின் கொடூரமான சாதிய சமூக அடக்குமுறையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களிடம் தோன்றிய விடுதலை வேட்கையே அதற்கு முதன்மையான காரணம்.
இந்தியாவில் உள்ள மொத்த கிறிஸ்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறிஸ்தவ மக்களின் விகிதம் இருக்கிறது.
10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேரளம். அங்கிருந்த நம்பூதிரி, நாயர் போன்ற ஆதிக்க சாதிகளால் ஈழவர் மற்றும் புலையர் மக்கள் மீது கொடூரமான தீண்டாமையும் அடக்குமுறையும் திணிக்கப்பட்டது. தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத்தின் மூலம் நடைமுறை படுத்தப்பட்டது.
கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு எதிராக ஈழவ மக்களுக்குத் தன்மானம் அளித்த நாராயண குரு தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.
தமிழ்நாட்டிலும் ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பன அடக்குமுறை சட்டமாகவே இருந்தது. இதற்கு எதிராக ஐயா வைகுண்ட சாமி போன்றவர்கள் போராடினார்கள். இதனால்தான் குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிகை அதிகமாக உள்ளது.
நாகலாந்து, மணிப்பூர் போன்ற பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் அதிகம் இருப்பதற்கும் பார்ப்பனியம்தான் காரணம். பார்ப்பனியத்தால் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைத்தனத்தில் உழன்று கொண்டிருந்த இம்மக்களுக்கு பொருளாதார, கல்வி உதவிகளைச் செய்த மிஷனரிகள் வெகு விரைவிலேயே அவர்களுடைய நம்பிக்கை பெற்றார்கள். அதன் மூலமே ஓரளவிற்கேனும் தமது சுயமரியாதையையும், வாழ்க்கையையும் அவர்களால் மீட்க முடிந்தது.
பெரும்பான்மை மக்களுக்கு பார்ப்பனியம் மறுத்த கல்வியை கிறிஸ்தவம் கொண்டு செல்ல முயன்றது. அசாமி, வங்க மொழி, தமிழ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தேசிய மொழிகளில் முதன் முறையாகப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவப்பட்டன.
18அம் நூற்றாண்டிலேயே பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்காக கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. அச்சகங்களும், வட்டார மொழி நூல்களும் – பைபிளும் வெளியிடப்பட்டன. நவீன வங்க இலக்கியம் தோன்றுவதற்கு மிஷனரிகளே காரணமாயின. வீரமாமுனிவரும், பெர்க்லி பாதிரியாரும் தமிழுக்குச் செய்த தொண்டு மிகப் பெரியது.
ஆங்கில – வட்டார மொழி அகராதிகள் வெளியிடப்பட்டன. இன்றும் இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறிஸ்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15% மருத்துவச் சேவையும் கிறிஸ்தவ மருத்துவமனைகளால்தான் இப்போதும் அளிக்கப்படுகின்றது.
ஆனால் பார்ப்பனியம் இன்னும் தன் சக மனிதனை சாதியின் பெயரால் ஒடுக்குவதையும் தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்குவதையும் மட்டுமே செய்து வருகின்றது. இன்னும் தலித்துகளின் பிணங்களை ஆதிக்க சாதிகளின் தெருவழியாக கொண்டு செல்ல முடியவில்லை. இன்னமும் அவர்கள் கோயில் நுழைவுக்காக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
இன்னமும் கோடிக்கணக்கான தலித்துகள் தினம் தினம் ஏதோ ஒரு வடிவில் சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களுக்காக எல்லாம் ஒரு நாளும் இந்த சங்கி கும்பல் குரல் கொடுத்ததே இல்லை.
இவர்கள் செய்தது எல்லாம் தலித்துகள் மத்தியில் மதவெறியை ஊட்டி அவர்களை அடியாள் படையாக மாற்றி மதக் கலவரம் செய்வதற்கும் மசூதிகளை, தேவாலயங்களை தாக்குவதற்கும் பயன்படுத்திக் கொண்டதும்தான்.
எனவே பிஜேபி கும்பலின் கீழ்த்தரமான அரசியலைப் புரிந்துகொண்டு அதற்கு எதிராக நாம் களமாட வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டை இன்னொரு குஜராத்தாகவோ, உத்திரப் பிரதேசமாகவோ மாற்றுவதற்கான எல்லா வேலைகளையும் இந்த நச்சுக்கிருமிகள் செய்து விடுவார்கள்.
- செ.கார்கி