பொள்ளாச்சி பகுதியில் உள்ள இளம் பெண்கள் ஒருசில வசதிபடைத்த இளைஞர்களால் ஏமாற்றப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளனர் . அவற்றை வீடியோ படமெடுத்துவைத்து தொடர்ந்து மிரட்டப்பட்டு பணமும் பறித்து வந்துள்ளனர். இதைஅந்த இளைஞர்கள் தனியாக, தானாக செய்த குற்றங்கள் என்று கடந்துபோய்விட முடியாது.

தொடக்கத்தில் காசுபணம், வசதி வாய்ப்பு, இளமை திமிர் கொண்ட இளைஞர்கள் ஓரிரு பெண்களிடம் சில்மிஷம் செய்துள்ளனர். அப்போதே ஈவ் டீசிங் வழக்கில் அவர்கள் சிக்கும்போது அவர்களைக்காப்பாற்ற வந்தவன்தான் பார் நாகராஜ் என்னும் கொடியவன். அவனுக்குக் காவல்நிலையத்தில் பெரும்செல்வாக்கு.. காரணம் அவன்நடத்தும் பார் மூலம் காவல் துறைக்கு அவன் செலுத்தும் பெரும் தொகை.. அவனுக்குப் பின்னணியில் இருப்பவர் பொள்ளாச்சி நகரஆளுங்கட்சியின் உயர்ந்த மனிதர்..

pollachi rape 600இப்போது அவர்களுக்கு வேடிக்கைக்கு வேடிக்கை, கேளிக்கைக்கு கேளிக்கை, விருந்துக்கு விருந்து, சுகத்துக்கு சுகம், பணத்துக்கு பணம். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் பின்னணியும் பாதுகாப்பும் அவர்களைப் பேயாட்டம் போட வைத்துள்ளது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்கிறபடி மான அவமானங்களுக்கு அஞ்சிப் பலரும் ஒதுங்கி இருக்க ஒரு பெண்ணின் தமையன் காவல்துறையில் புகார் கொடுத்ததன் மூலம் பிரச்னை வெளியே தெரியத்தொடங்கியது.திமுக, கம்யூனிஸ்ட், பெண்கள் இயக்கங்கள் பிரச்சனைக்காக போராடத்தொடங்கியதுடன், திமுக தலைவர் தளபதி முக ஸ்டாலினின் அறிக்கைக்குப் பிறகு பிரச்சனை விசுவரூபம் எடுக்கிறது. அத்துடன் நாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் நேரடியாகப் பொள்ளாச்சி வந்து ஆர்ப்பாட்டம் செய்தது பிரச்சனையைக் கொழுந்து விட்டு எரியச் செய்தது இப்பிரச்சனையை மக்கள் மன்றத்துக்கு கொண்டு வந்ததில் "நக்கீரனின்" பங்கு மகத்தானது.

அதுவரை, மாவட்டக் காவல்துறை அதிகாரி, "இதில் ஆளும்கட்சி பிரமுகர்களுக்குத் தொடர்பு இல்லை " என்று எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறி வந்தார். ஆனால் அதன் பின் தான் ஆளும்கட்சி பிரமுகர் பார் நாகராஜன் கட்சியை விட்டு நீக்கப்படும் நிலை வந்தது. இப்போதும் பார் நாகராஜன் மீது பாலியல் வழக்கு எதுவும் பதியவில்லை. மாறாக அடிதடி வழக்குதான் பதிவாகி உள்ளது. கொடியவன் நாகராஜன் செயலைக் கண்டு கொதித்தெழுந்த மக்கள் அந்த பாரை அடித்து நொறுக்கினர். இதன் பின் பாரை அடித்த பொதுமக்கள் மீதுதான் வழக்குகள் பதிவாகி உள்ளன. இப்போது, பார் நாகராஜனுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.. இதில் வழக்கில் சிக்கவிருந்த தன் சாதி நகரப் பெரும்புள்ளியைக் காப்பாற்றியதுடன் தனது உட்கட்சி அரசியல் எதிரியை பழிவாங்கியுள்ளார் மாவட்டப் பெரும்புள்ளி.

இதில் சந்தேகம் எல்லாம், காவல் துறைமீதுதான். காவல்துறையின் அனுமதியோடும், ஆசீர்வாதத்தோடும்தான் இக்கொடுங்குற்றங்கள் நடந்து வந்துள்ளன.இதில் பாதிக்கப்பட்ட ஐந்து, ஆறு இளம் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட போதும் அவற்றை மூடி மறைக்கத் துணை போனது காவல்துறை. அப்பாவிப்பெண்களை வலையில் சிக்க வைத்து , மிரட்டி அவர்களைத் தங்கள் மனம்போல் பயன்படுத்திய கொடியவர்களைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை , என்பது மட்டுமல்ல, அதில் ஆளுங்கட்சிக்குத் தொடர்பில்லை என்று நற்சாட்சி பாத்திரம் வேறு கொடுக்கிறது.

தங்கள் கும்பலில் 20பேர் இருப்பதாக குற்றவாளியே வாக்கு மூலம் கொடுத்துள்ளான். எனினும் நான்கு பேரை மட்டும் கைது செய்துள்ளனர். இந்த நாசகாரக் கும்பல் நூறுக்கும் அதிகமான பெண்களைச் சீரழித்தனர் என்றால், வேறு ஒரு சிவில் என்ஜினீயர் சபரிராஜன் என்பவன் தனியாக அறுபது பெண்களைச் சீரழித்து உள்ளான். பொள்ளாச்சிப் பகுதியில் காவல்துறை என்ற ஒன்று இருந்ததா அல்லது அது அயோக்கியர்களின் ஏவல் துறையாக பணியாற்றுகிறதா? சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரை மிரட்டி ஒன்னரைக்கோடி ரூபாய் பறித்துள்ளனர். மானஅவமானத்துக்கு அஞ்சி அந்த டாக்டர் எழுத்துமூலமாக புகார் கொடுக்காமல் வாய்மொழிப் புகார் கொடுத்ததால், காவல்துறை அதனைப் பயன்படுத்தி அந்தப் பணத்தை பறித்து தாங்கள் வைத்து கொண்டனர், என்றால் இவர்களுக்கும் அந்த கொடியவர்களுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும். அந்த வழக்கில் தப்பித்த பின்னர் தான் அந்தக் காமக்கொடூரன்களின் ஆட்டம் அதிகமாகி உள்ளது.

இப்படிப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இருக்கும்வரை ஒருநாளும் குற்றங்கள் குறையாது.முதலில் சீரமைக்கப்படவேண்டியது காவல்துறைதான். இந்த காமக்கொடூரன்களை கண்டும் காணாமல் விட்டிருக்கும் ஆளும்கட்சித் தலைமையை என்ன சொல்வது. எங்கோ ஒரு பார் நாகராஜனைக் கட்சியை விட்டு நீக்கினால் போதுமா? அவனைப் பயன்படுத்தி பல உயர்ந்த மனிதர்கள் தங்களுக்கு மேல் உள்ள பல மேல்மட்டத்தலைகளுக்கு "சப்ளை அண்ட் சர்விஸ்" செய்து உள்ளனரே! அவர்களைத் தண்டிப்பது எப்படி.? வருகிறது தேர்தல் -. உடனடியாக அவர்களை முற்றிலும் புறக்கணிப்பதன் மூலம் ஜனநாயக ரீதியாக முதல் கட்டத் தண்டனைகளைத் தருவோம். அடுத்து ஆட்சி மாற்றத்தின் பின் முழுமையான சட்டரீதியான தண்டனைகளைத் தருவோம்.

இது எங்கே போய் நிற்கும் என்றால், இரண்டு மாணவிகள் தங்கள் பாதுகாப்புக்குக் கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையும் அரசும் குற்றவாளிகளைப் பாதுகாத்து வருவதால் ஏற்பட்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடு. காவல்துறையை நம்பாமல் கைத்துப்பாக்கியை நம்பத் தலைப்பட்டுள்ளது நல்லதல்ல.

உண்மையாய், உயிராய் காதலித்து மணவாழ்க்கை மேற்கொண்ட, சோமனுர் சிற்றரசு-சுகன்யா இணையர், தருமபுரி திவ்யா-இளவரசன் இணையர் , உடுமலை கௌசல்யா-சங்கர் இணையர் போன்றோரை கொன்றுகுவித்து இரத்தத்தாகம் அடங்காமல் திரியும் சாதி வெறியர்களும்,பசுவுக்காக பரிந்து வந்து பாமரர்களை கொலை செய்யும் மதவாதப் பேர்வழிகளும் இந்த தங்கள் பெண்களின் நிலைகண்டு பொங்கி எழாமல் தூங்கி வழிகின்றனர். பெண்களை விடவும் அவர்களுக்கு தங்கள் சாதியும், மதமும் , அரசியலும்தான் பெரிதாக இருக்கிறது. நமக்கோ மனித மாண்புகள் உயர்வானவை. மனிதநேயம் உன்னதமானது.

Pin It