இந்த வாழ்வே ஒரு கூட்டு முயற்சி தான். தனித்திருக்கிறேன் என்பதெல்லாம் சொல்லிக் கொள்தல். அவ்வளவே. தனித்திருக்கவெல்லாம் முடியாத உலகம் இது.

"நீ அரிசி கொண்டு வா.. நான் உமி கொண்டு வரேன்.. ஊதி ஊதி சாப்பிடலாம்" அப்டிங்கறதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று திட்டுவதைக் கேட்டிருப்போம். ஆனால் நிஜமாகவே, "நீ கொஞ்சம் அரிசி கொண்டு வா.. நான் கொஞ்சம் பருப்பு கொண்டு வரேன்... அவன் கொஞ்சம் சக்கரை கொண்டு வரட்டும்.. அவன் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும்.. சமைச்சு சாப்பிடலாம்" என்பது வாழ்க்கைக்கு உதவாதது அல்ல. அது அன்பின் கூட்டமைப்பைக் கூறும் வாழ்க்கை முறை. கொடுத்து வாங்கும், பகிர்ந்து வாழும் பாதுகாப்பை நடைமுறைப் படுத்தும் வழி.

koottanchoruஅதற்குப் பேர் கூட்டாஞ்சோறு.

நான், எங்க அண்ணி (அத்தைப் பொண்ணு. என்னை விட மூத்தவர்), பக்கத்துக்கு வீட்டு சாவித்ரிக்கா (பின்னாளில் அக்காவாகவே ஆகி விட்டார்), நண்பன் வெள்ளைப்பாண்டி, நண்பி குட்டியம்மா, மேல் லைன் சுமதி, ஜெகந்நாதன் எல்லாரும் சனிகளில் கொய்யா மரத்தடியில் கூட்டாஞ்சோறு ஆக்குவது வழக்கம். அதில் சக்கரைப் பொங்கல்... பருப்பு சோறு என்று வகை வகையாய் கொண்டாட்டங்கள் கிளற‌ப்படும். உப்புக்கும் சர்க்கரைக்கு வித்தியாசம் தெரியாத நாட்கள் அவை. பசிக்கு சாப்பிட்ட பொழுதுகளை விட சாப்பிடுவதற்கு பசித்த பொழுதுகள், பொங்கும் பரவசங்கள்.

சில சனிகளில் நாங்கள் துணி துவைக்க சோலை ஆற்றுக்குச் செல்வோம். அப்போது எங்க அண்ணியும் சாவித்ரிக்காவும் துணி துவைக்க....நாங்கள் பாறைக்குப் பின்னால் இருக்கும் இடத்தில் அடுப்பு கூட்டி கூட்டாஞ்சோறு ஆக்கத் துவங்கி விடுவோம். ஒரு பக்கம் சோறு ஆகிக் கொண்டிருக்கும். மறுபக்கம் சோலைக்குள் இருந்து ஓடும் ஆற்று நீரில் எங்கள் விளையாட்டும் கும்மாளமும் அந்த சோலையையே அதிரச் செய்து கொண்டிருக்கும். குளிர் போர்த்திய நினைவுகளில் குகைக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் சிறுக சேர்த்த ருசி அவைகள். தெளிந்த ஆற்றில் திகட்ட திகட்டத் தின்ற சோற்றில் தான் இன்னமும் அந்த மலைக்காடுகள் என்னில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

அதன் பிறகு நான் வெயில் காலத்துக்குள் ஊர் கடத்தப் பட்டேன்.

எனது 10 வயது வரை நான் மழைகளால் ஆனவன். மழையும் மலையும் சார்ந்த ஊரில் வாழ்ந்திருந்தேன். அதன் பிறகு 20 வயது வரை நான் வெயில்களால் நிரம்பியவன். வெயிலும் மலையும் சார்ந்த ஊரில் வாழ்ந்திருந்தேன். எனது அன்பும் கோபமும் இப்படி ஏற்பட்ட கலவையில் கூட்டாக கிடைத்தது தான் என்று நம்புகிறேன். வெயில் தேசத்திலும்.. நான் எனது நண்பன் லக்கி, சந்திரன், ரவியண்ணன் எல்லாரும் கூட்டாஞ்சோறு ஆக்குவதை பெரிய வேலையாக ஞாயிறு பின் மதியங்களில்  செய்வதுண்டு. லக்கி நன்றாக சமைப்பான். சலிக்காமல் அடுப்பு ஊதுவான். நான் சூப்பர்வைசராக நின்று கொண்டிருப்பேன். அப்போது அந்த சோற்றை ருசி பார்க்க மாலினி வருவதும் அதைத் தொடர்ந்த சில பல இனிப்பு கார கதைகளும் இந்தக் கட்டுரையில் சேராது.

கூட்டாஞ்சோறு அப்படியே பக்கத்துக்கு வீ ட்டு கோழி பிடித்து சுட்டு சாப்பிடும் அளவுக்கு வளர்ந்தது டீன் ஏஜில் நிகழ்ந்த "குற்றம் நடந்தது" என்ன கதை வகையறாக்கள்.

கூடி உண்ணும் வாழ்வின் கடைசி அத்தியாயமாகவே இந்த கூட்டாஞ்சோறு இருந்திருக்கிறது. அதன் பிறகு கூடி உண்ணும் வழக்கம் இன்றிருக்கும் சிறுபிள்ளைகளிடம் இல்லை என்று தான் நம்புகிறேன். அது விளையாட்டாக இருந்தாலும் அதில் மண் சார்ந்த சார்புகள் இருந்தன. சக மனிதனை நேசிக்கும் பாங்கு அதில் இருந்தது. யாரிடம் எது இல்லையோ அது இருப்பவரிடம் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டது. அதில் தான் மானுட பரிணாமமும் மனித தத்துவமும் இருக்கிறது என்று கூட்டாஞ்சோறு எப்போதோ நமக்கு உணர்த்தி இருக்கிறது. இன்றைய தலைமுறை அதை கை விட்டு விட்டது, சோறு வேக வேக சோற்றுச் சட்டியை உடைத்த கதை தான்.

ஆர்டர் போட்டு வீட்டுக்கு வர வைத்து உண்ணும் சோற்றில் கூட்டாஞ்சோறு இல்லை. கூட்டுக் கொள்ளை இருக்கிறது.

- கவிஜி

Pin It