மூட மதவெறி நச்சுச் செயல்களால் வெம்பி நசுங்குகின்றன குழந்தைகள்! அழிவை அழைக்கும் கொலைக் கூடங்களாகி வருகின்றன கல்விக்கூடங்கள்!

இனி முற்போக்குச் சிந்தனை, பகுத்தறிவு உணர்ச்சி, சமூகமாற்றம் இவற்றிற்கு எதிரான வேலைகள் தேவைப்படாது!

பள்ளிகளே அந்த அழிவுப்பணியைப் பெற்றோரிடம் காசு வாங்கிக்கொண்டு விரைவாகச் செய்து முடித்துவிடும்.

kanya padha pooja

நஞ்சேறிக் கிடக்கும் குழந்தைகளுக்கு நாடு, மொழி, இனம் பற்றிய பேச்சுகள் பகடி(கேலி)க்கு உரிய ஏளனச் செய்திகளாகத் தோன்றுகின்றன.

அதிகார அரசியலில் பணம் குவித்த அரசியல் தலைவர்களில் பெரும்பாலோர் கட்டணக் கல்விக் கொள்ளைக்கூடங்களின் பாதுகாவலர்கள் ஆகிவிட்டார்கள்!

ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளில் புகட்டப்படுவது ஆங்கிலம் மட்டுமா? வடமொழி வழிபாடும் இந்தி ஆதரவும் மதவெறித் திணிப்பும் அந்நியப் பண்பாடும் சேர்த்தே புகட்டப்படுகின்றன.

முற்போக்குக் கருத்துப்பரவலும் போராட்ட முன்னெடுப்பும் - தமிழ்வழி பயிலும் மாணவர்கள் வழியாகவே நடந்து வருவதை ஊன்றிப் பார்த்தால் உணரமுடியும். தமிழ்வழிக் கல்விமுறை தடுக்கப்படுவதன் காரணம் அதுதான்!

தமிழ்வழிக் கல்விக்குக் குரல்கொடுக்காத அரசியல் கட்சிகள் அனைத்தையும் தூக்கி எறிந்தாக வேண்டும். கிளையில் அமர்ந்து கொண்டு மரத்தை வெட்டச் சொல்லித் தரும் கட்சிகள்  எதற்காக?

எழுத்தைக் கற்பிப்பதிலேயே இந்துவெறித் திணிப்பை ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கி விடுகின்றன. A ,B முதலிய எழுத்துகளை அர்ஜுனா, பீமா என்றே அறிமுகப்படுத்துவது நெடுங்காலமாக நடந்து வருகிறது. தமிழ்வழிக் கல்வி செழித்திருந்த அரசுப்பள்ளி பாடநூல்களிலேயே ' ராமா, சீதா' என்றுதான் எடுத்துக்காட்டு தருவார்கள்!

ஆங்கில வழிப் பள்ளிகளி்ல் பாடம், பாடத்திட்டம், கல்வித்துறை எல்லாம் அவரவர் விருப்பத்திற்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டன! கைகட்டி நிற்கின்றன தமிழக அரசும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும்!

மதவெறிக்குப் பாதை போடப் புதுப்புது உத்திகளில் இறங்கிவிட்டார்கள். மதவெறியூட்டி இளையோரைக் கருக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் - கட்டணமுறைப் பள்ளிகளில்!

விநாயகர் சதுர்த்தி வந்தால் குழந்தைகளுக்கு விநாயகர் வேடம்! 'விவேகானந்தர், கிருஷ்ணர், இராமர் ' என எவரது பிறந்தநாள் வந்தாலும் அவரவர் வேடங்களில் குழந்தைகளை அலைய விடுவதில் பள்ளிகளுக்கிடையேபோட்டி!

அசிங்கத்தின் உச்சமாக ஆசிரியர் காலைக் கழுவுவது, பெற்றோர்களின் காலைக் கழுவுவது என வேதகாலம் நோக்கிப் பின்னோக்கி ஓடுகிறது தமிழ்நாட்டுக் கல்வி வண்டி!

மூடத்தனத்திலும் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கிறார்கள்! மடமை விலங்கிற்குக் குழந்தைகள் இரையாக்கப்படுவதைப்  பார்த்தபடி நிற்கிறது  'பெற்றோர்'கூட்டம் !

புதிதாய் இறங்கியுள்ள மதமூடக் கேவலத்தின் பெயர் "கன்யா பாதபூஜை தினம்". பத்து வயதுக்குக் குறைவான சிறுமிகளே இதில் குறிவைக்கப்படுகிறார்கள்! அவர்கள் கால்களைத் தடவ சிறுவர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள் !

பள்ளி செய்யும் கல்விப்பணியா இது? 

உயிரைக் கொடுத்து உருவாக்கிய தமிழ்வழிக்கல்வியும் பொதுப்பள்ளி முறையும் சூறையாடப்படுகின்றன.

தந்தைபெரியார் தலைமையில் முதல் மொழிப்போர் நடந்த 1938ஆம் ஆண்டில் -ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே உயர்நிலைப் பள்ளி எல்லா வகுப்பிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி தமிழகத்தில் அகற்றப்பட்டு விட்டது. பத்தவச்சலம் முதல்வரானபோது, ஆங்கிலவழிக் கல்வியை  200 பள்ளிக்கூடங்களில் அடம் பிடித்துக் கொண்டு வந்தார். பெரியார் தொண்டரான அன்றைய கல்வி இயக்குநர் நெ.து.சுந்தரவடிவேலு அதனை 50 பள்ளியாக மன்றாடிச் சுருக்கினார்.

பத்தவச்சலம் வைத்த கொள்ளி, பற்றி எரிகிறது இப்போது ! 

தமிழுணர்வும் பகுத்தறிவும் பன்முகக் கருத்து அறிமுகமும் சிந்தனைத் தேடலும் - இன்றைய ஆங்கிலவழி வணிக முறைப் பள்ளிகளில்  குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன!

இளையோரை மதவெறிக்கும் அந்நிய மொழிக்கும் பண்பாட்டுக் கேட்டிற்கும் பழக்கிவிட்டால், அறிவார்ந்த தமிழினம் எதிர்காலத்தில் இருக்க வாய்ப்பில்லை.

தமிழை நேசிக்காத எவரும், தமிழரையும் தமிழ் நிலத்தையும் நேசிக்க மாட்டார்கள். இப்போது, தமிழக நிலமும் வளமும் பறிக்கப்படுகின்ற பொருளியல் அழிப்பு ஒருபுறம்! மொழியழிப்பு மறுபுறம் !

தமிழ்வழிக் கல்வி அழிந்தால், எல்லா அழிவும் எளிதாகி விடும்.

- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை, கோவை

Pin It