அண்மைக் காலத்தில் சில மாநிலத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திரிபுராவில் கம்யூனிஸ்ட் கட்சி 25 ஆண்டுகளுக்குப் பின் வீழ்ந்ததை காரணம் காட்டி, தமிழகத்திலும் கேரளாவிலும் பார்ப்பன பாசிச சங் பரிவார் கட்சி ஆட்சிக்கு வந்துவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற அபயக் குரல்கள் கேட்கின்றன.
அரசியல் வெற்றி அவ்வளவு எளிதான கணக்கல்ல. அரசியல் linear (எளிய நேர்கோட்டுத்) தன்மை கொண்டதல்ல. அதற்குப் பன்முகங்கள் உண்டு. அரசியல் என்பது inclusive தன்மை கொண்டது. மாறாக பாஜகவின் அரசியல் அடிப்படை exclusive தன்மை கொண்டது. அது உடைய அதிக நாட்கள் தேவைப்படாது. அந்த அரசியல் அடிப்படை உடைவது காலத்தின் கட்டாயம் என்றாலும், அதற்கு முன் தேர்தல்களில் வெற்றி பெற, பாஜக தொடர்ந்து செய்து வரும் சில தந்திரங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். அவர்களின் தந்திரங்கள் மூன்று வகைப்படுகின்றன.
தேர்தலில் வெற்றி பெற பாஜக பயன்படுத்தும் தந்திரங்களுக்கும், லாபத்தைப் பெற முதலாளித்துவ நிறுவனங்கள் பயன்படுத்தும் தந்திரங்களுக்கும் ஒற்றுமை உண்டு.
லாபத்தைப் பெற முதலாளித்துவம் செய்யும் தந்திரங்களைப் பற்றி கார்ல் மார்ஸ், “மூலதனம் (முதலாளித்துவம்) 10% லாபம் வரும் என்றால் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும். 20% லாபம் வரும் என்றால் ரொம்பவும் சுறுசுறுப்பாக முதலீடு செய்ய ஓடுகிறது. 50% சதவீதம் லாபம் வரும் என்றால் எல்லாக் கெடுதலையும் செய்யத் துணிவு கொள்கிறது. 100% லாபம் வரும் என்றால் அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கத் தயார் ஆகிறது. 300% லாபம் வரும் என்றால் இதற்காக எந்தக் குற்றத்தையும் செய்யத் துணியும். தூக்கிலிடப்படுவோம் என்றாலும் துணிந்து எதையும் செய்யும். சமூகக் கொந்தளிப்பும், மோதலும் லாபம் தருமென்றால் அதையும் மூலதனம் ஊக்குவிக்கும்” என்று சரியாகக் கணித்தார்.
பாஜகவின் தேர்தல் அரசியல் தந்திரங்கள்:
பாஜகவின் தேர்தல் அரசியல் தந்திரங்களைப் பற்றி நாம் விளக்கமாக பேசும் முன், முதலாளித்துவ உலகில் பழக்கத்தில் உள்ள BCG Matrix (Boston Consulting Group நிறுவனத்திற்காக Bruce D. Henderson உருவாக்கியது) என்னவென்று இரத்தினச் சுருக்கமாக பார்த்துவிடுவோம். Matrix என்றால் தமிழில் (கணித கலைச்சொல்) அணி என்று பொருள். அணி என்றாலே குழு தான். கிரிக்கெட் அணியில் வீரர்கள் என்றால், கணித அணியில் நிரலும் நிரையும். கிரிக்கெட் அணியில் வீரர்கள் நேர்கோட்டில் வரிசையாக ஒருவர்பின் ஒருவர் நிற்பார்கள். கணித அணியில் கிடைமட்டமாக (Horizontal) ஒரு குழுவினரும், செங்குத்தாக(Vertical) மற்றொரு குழுவினரும் நிற்பார்கள். இதுபோலவே BCG Matrix அணியிலும் நிரலும் நிரையும் இருக்கும். இந்த அணியில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள். அவை முறையே "பால் மாடு, நட்சத்திரம், கேள்விக்குறி, மற்றும் நாய்".
வெற்றிக்கொடி கட்டு படத்தில் துபாயில் இருந்து ஊருக்குத் திரும்பி வந்த வடிவேல் கிளிஜோதிடம் பார்ப்பார். "திரும்பவும் துபாய்க்கே போய்விடலாமா? இல்லை இப்படியே ஊருக்குள்ள ஓரஞ்சாரமா இருந்து ஒரு தொழில் பண்ணலாமா" என கிளியிடம் கேட்பார். அதைப்போல் முதலாளித்துவ நிறுவனங்கள், எந்தத் தொழிலைப் பண்ணலாம், எதைப் பண்ணக்கூடாது என கிளியிடம் (Business consultant) கேட்பார்கள். அந்தக் கிளியும் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு கேரக்டரை பரிந்துரைப்பார்கள். அந்தப் பரிந்துரையின் படி நிறுவனங்கள் முடிவெடுக்கும்.
- பசு மாடு. பசு என்றால் பால் தரும். எனவே பாலை முடிந்த மட்டும் கற. கன்றுக்குட்டிக்கு பாலை மிச்சம் வைக்காமல் கறக்க முடிந்தாலும் கறந்து விடு.
- நாய். நாய்க்கு வெறி பிடித்துவிட்டது; கடித்துவிடும், எனவே விஷம் கொடுத்தாவது கொன்றுவிடு.
- நட்சத்திரம். நட்சத்திரங்களைப் பிடித்துவிட்டால் வானில் உயரப் பறக்கலாம். எனவே உயர உயரப் பற. ஏணியோ, ஏரோப்பிளேனோ தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்.
- கேள்விக்குறி(?). பிரச்சினை உள்ளது, யோசித்து முடிவெடு. பதிலும் கிடைக்கலாம். கிடைக்காமல் போக வாய்ப்பிருக்கிறது.
மேற்சொன்ன இந்த அடிப்படையில் பாஜகவும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கேரக்டரை ஒதுக்குகிறது. அதன் அடிப்படையில் தந்திரங்களை உருவாக்குகிறது.
தந்திரம் 1:
இந்துவத்துவ கட்டமைப்பு வலுவாக உள்ள, பண்பாட்டு (முற்போக்கு) ரீதியாக, பின்தங்கியுள்ள மாநிலங்களில் மேலும் தனது இந்துத்துவ வேரை ஆழப்படுத்தவும், ஆட்சியைப் பிடிக்க அல்லது இருக்கும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் தேவைப்படுகின்ற தந்திரங்களை மேற்கொள்வர். அவற்றுக்குத் தேவையான கூட்டணிகளை வைக்கத் தயங்க மாட்டார்கள் (உதாரணம்: பீகார்). மதக்கலவரம், கொலைமூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்றால் கூட்டணியை பொருட்படுத்த மாட்டார்கள் (உதாரணம்: உத்திரப்பிரதேசம்). மதக்கலவரங்கள் மட்டுமே போதுமெனில் தவிர்த்து விடுவர் (உதாரணம்:குஜராத்). இது மூன்றுக்குமே காலம் கனியவில்லை எனில், பினாமிகளை உலவ விடுவர் (டெல்லி). தூண்டியலைப் பின்னர் போடலாம் என கொக்கு போல் பொறுமையாகக் காத்திருப்பார்கள். தேவைப்படின் கூட்டணி கொஞ்சம், கொலை கொஞ்சம், பொய் நிறைய என கலந்து கட்டியும் ஆட்சியைப் பிடிப்பார்கள். இங்கே இவர்கள் நோக்கம் இந்துத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவது 60 விழுக்காடு, ஆட்சியைப் பிடிப்பது 40 விழுக்காடு. கட்டமைப்பை வலுப்படுத்தினால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது இங்கே இவர்களின் செயல்முறைத் தந்திரம். மதக்கலவரங்களை, சாதியப் பிரிவினைகளை ஏற்படுத்தி, ஏற்கனவே பற்றி எரிகிற இந்துத்துவத் தீயில் பெட்ரோலை ஊற்றுவார்கள். இந்த மாநிலங்களுக்கான கேரக்டர் பசு மாடு. இது முதல்வகை.
தந்திரம் 2:
இந்துத்துவ கட்டமைப்பு இல்லாத மாநிலங்கள் அல்லது இந்துத்துவ கட்டமைப்பை உருவாக்க சமூகச்சூழலே இல்லாத மாநிலங்கள். இங்கேயும் பொறுமை தான் அவர்களது தந்திரம். ஆனால் தனது இந்துத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த மட்டுமே பொறுமை காப்பார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை தள்ளி வைக்க மாட்டார்கள். எதைச் செய்தாவது ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பார்கள். பொருந்தாக் கூட்டணி கூட வைப்பார்கள் (உதாரணம்: காஷ்மீர்). தூக்கத்தில் கூட ராமர் கோயில் கட்டுவதே எங்கள் கொள்கை, அதற்காவே ஆட்சி என உத்தரபிரதேசத்தில் பேசுவார்கள். ஆனால் இந்துத்துவ அரசியலை செய்ய முடியாது என்ற சமூகச்சூழல் இருந்தால், கட்சிப் பெயரைக்கூட சொல்லாமல் ஓட்டு கேட்டு ஆட்சியைப் பிடித்தால் போதும் என்பார்கள் (மேகலாயா). ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், எதைத் தின்றாவது பித்தம் தெளியட்டும் என்பார்கள். திங்க எதுவுமே கிடைக்கவில்லையெனில் விபிசணர்களை உருவாக்குவார்கள் (உதாரணம்: அருணாச்சல பிரதேசம் - பிமா காண்டு). தேசபக்தி எங்கள் கொள்கை என்பார்கள், ஆனால் தேர்தல் வெற்றிக்காக பிரிவினைவாதிகளுடன் கூட்டணி வைக்கவும் தயங்க மாட்டார்கள் (திரிபுரா, நாகாலாந்து, மேற்கு வங்கம்). இப்படி இந்துத்துவ கட்டமைப்பு இல்லாத ஊரில், ஊருக்கொரு தந்திரம் செய்வார்கள். ஆனால் தற்காலிக நோக்கம் எதைச் செய்தாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். இங்கே ஆட்சியைப் பிடிப்பது 80 விழுக்காடு முக்கியம். மீதம் கொஞ்சமாக 20 விழுக்காடு இருந்தால் இருக்கட்டும் என கட்டமைப்பை டீலில் விட்டுவிடுவார்கள். ஆட்சியில் இருந்தால் போதும், பின்னர் இந்துத்துவ கட்டமைப்பை சாதிக்கலாம் என பொறுமை காப்பார்கள். இந்த மாநிலங்களுக்கான கேரக்டர் கேள்விக்குறி(?) Just need to hold the position. இது இரண்டாம் வகை.
தந்திரம் 3:
இந்துத்துவ கட்டமைப்புக்கு எதிர்க்குரல்கள் பெரும்பான்மை வகிக்கும் மாநிலங்கள். இது திராவிட மாநிலங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்றாலும், தமிழகமும், கேரளமும் முன்வரிசையிலும், ஆந்திரம், கர்நாடகா, தெலுங்கானா பின்வரிசையிலும் உள்ளன. முதலிரண்டில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் மைதானத்தை இந்த மூன்றாம் வகை மாநிலங்கள் ஏற்படுத்தினாலும், பார்ப்பன பாஜக இங்கும் பொருத்தமான தந்திரங்களைக் கையாள முயற்சிக்கிறது.
கட்டமைப்பும் வலுவாக இல்லை, உருவாக்க நினைத்தால், ஓரடி ஏறினால் ஈரடி சறுக்கி, டெபாசிட்டே போய்விடுகிறது. தமிழ்நாட்டில் இன்னும் மோசம். நோட்டாவுடன் தான் போட்டி போட முடிகிறது. அதிலும் படுதோல்வி அடைந்துவிடுகிறது.
கட்டமைப்பு வலுவாக இல்லை. சரி, பரவாயில்லை. கோயபல்ஸ் மாதிரி ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு தேர்தலை வென்றுவிடுவோம் என்று பார்த்தால், கோயபல்ஸ்க்கு பின்னணியில் காத்திருக்கும் ஹிட்லரைக் கண்டுகொண்டு, வைகோ கூட ஸ்டாலினை கண் இமைபோல் பாதுகாத்து, முதல்வர் ஆக்குவேன் என்கிறார். சரி, நடிகர்கள் வேண்டாம். கோமாளிகளை (ரஜினி, கமல்) வைத்து சர்க்கஸ் நடத்தலாம் என விக்கிரமாதித்தன் போல் முருங்கை மரத்தில் விடாது ஏற முயற்சித்தால், இந்த சிங்கம் தயிர்சாதம் கூட சாப்பிடுமாம், விரலை வாயில் வச்சா கூட கடிக்காதாம் என சர்க்கஸ் கோமாளிகளை ஒதுங்கி நிற்கச் சொல்லி விடுகிறார்கள் பார்வையாளர்கள். கோமாளிகளுக்கு இதைக் கேட்டு இரண்டு நிமிடம் தலையே சுத்திவிடுகிறது. இதையும் மீறி கோமாளிகள் மய்யம் எனச் சொல்லி நடுசென்டரில் வந்தால், "ஏய் தம்பி, இந்த நடிப்பை தேவர்மகனிலே பார்த்துவிட்டோம், நீ ஒழுங்கா போய் எங்க குழந்தைகளிடம் ஈரோட்டுப் பாடம் படி" என சொல்லி தடிகொண்டு விரட்டி விடுகிறார்கள்.
உள்ளூர் கோமாளிகளுக்குத்தான் மவுசில்லை. லோக குருக்களை களத்தில் இறக்கி விடுவோம் என்றால், "உலகத்துக்கே குருவாக இருந்தாலும், எங்க ஏரியா திராவிட ஏரியா, ஒழுங்கா எழுந்து பெஞ்சுல நில்லு, "மானமிகு திராவிட இயக்கம்" ன்னு ஆயிரம் தடவை இம்போசிசன் எழுதுதுன்னு சொல்லி விடுகிறார்கள் நம்ம மானமிகு ஆசிரியர்கள். 50 வருடமாக இந்த வேலையை நமது மானமிகு சுயமரியாதைமிக்க ஆசிரியர்கள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
தெற்கில் நமக்குத் ஈரோட்டுச் சனிதோஷம் பிடிச்சிருக்கு, மேற்குத் திசைக்கு போவோம், கொஞ்ச மலைகளில், ஆறுகளில், பசுமையான புல்வெளிகளில் படுத்துக்கொண்டு, மாட்டு மோத்திரம் குடித்து இளைப்பாறலாம் என நினைத்தால், "கோமாதா சூப் சாப்பிடுறியா, உடம்புக்கு ரொம்ப நல்லது" என்கிறார் மலையாள நாயர். No, thanks என்று தப்பித்தால், "இரண்டாயிரம் வருசமா மாட்டு மோத்திரம் குடித்த பழக்கத்தால் மூளையே இல்லாமல் மண்டை காலியாக இருக்கு, கோமாதா brain பிரை சாப்பிடு" என்று அன்போடு உபசரிக்கிறார்கள். கோமாதா எங்கள் குலமாதா என விஸ்வரூபம் எடுத்தால், சேட்டன்கள் மாவலி அவதாரம் எடுத்து, "போ மோனே" என்று வேலும் ஈட்டியும் கொண்டு விரட்டுவதோடு நின்றுவிடாமல், எங்கள் மண்ணில் வேள்வி செய்ய அந்தணர்களுக்கு இடமில்லை என்று பறைகிறார்கள்.
ஓக்கே, உங்களை அப்புறம் மீட் பண்ணுறேன்னு சொல்லிட்டு, ரைட் டர்ன் எடுத்து மீண்டும் வடக்கு நோக்கிப் போவோம், ‘தோண்ட பெல்லாரிச் சுரங்கமும், குடிக்க காவிரித் தண்ணிரும்’ இருக்கிறது, நம்மால் முடிந்தளவு குட்டையைக் கிளப்புவோம் என்றால், "நாங்கள் இந்துக்கள் அல்ல, வீர சைவர்கள் என்ற லிங்காயத்து" என்ற போர்க்குரல் கேட்கிறது.
சுரங்கம் வெட்டிய பணத்தை வைத்து சமாளிப்போம் என்று களத்தில் இறங்கினால், இந்துக்கடவுள்கள் போலவே காமக்களியாட்டத்தில் இறங்கி சேம்சைடு கோல் போடுகிறார்கள் மங்குனி எம்எல்ஏக்கள். எதிரிகளை அழித்தொழிப்போம் என ஒருபுறம் கல்பர்கி, கௌரி லங்கேஷ் என வரிசையாகக் கொன்றால், மறுபுறம் ராமையாக்கள் "சோதிடத்தை தடை செய்கிறார்கள், முடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு" நடத்துகிறார்கள்.
All right, எடு இன்னொரு right turn, அது குபேர மூலை என்று தேடி ஓடி, "ஏழு குண்டல வாடா, வெங்கடாச்சல பெருமானே எனக்கு ஆட்சிவரம் தா" ன்னு கேட்டால், "வரிசையில் வா, கொஞ்சம் லட்டுப்பிச்சை போடுறேன், தின்னுட்டு ஒழுங்கா ஒடிறு"ன்னு தனித்தனி வரிசையில் நின்றுகொண்டே நாயுடுக்களும், ராவ்களும் தனித்தனியே கதற விடுகிறார்கள். பிச்சையாகத் தூக்கி மூஞ்சில எறிந்த லட்டை லபக்குன்னு கேட்ச் பண்ணி தின்னுவிட்டு, "ஐய் இனிக்குதே, மைதானத்தில் இறங்கி அடித்துப் பார்ப்போம்" என்று களமிறங்கினால், குண்டூர் (நீட்டு மிளகாய்) மிளகாயை முன்புறமும் பின்புறமும் நீட்டா சொருகி விடுகிறார்கள்.
அய்யோ அம்மா எரியுதே, கொஞ்சம் தண்ணி கொடுங்க என்று கேட்டால் தண்ணியில் மிளகாய்ப்பொடி கலந்து கொடுத்து விடுகிறார்கள். பாஜக கூட்டணியில் இருந்துகொண்டே, "எங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கொடு, அதிக அதிகாரம் கொடு", பதிலுக்கு உனக்கு இரண்டு எம்பி சீட்டு, ஐந்து எம்எல்ஏ சீட்டு, 10 திருப்பதி லட்டு தர்றேன்னு ஏமாத்துறார் நாயுடுகாரு. "நான் ராவ் தான், நான் சோசியம் பார்த்து தான் சோறுதண்ணி துன்னுவேன்" ஆனாலும் எங்களுக்கும் ராமசாமி நாயக்கருக்கும் உறவு இன்னும் இருக்குன்னு அவ்வப்போது சிக்னல் கொடுத்திட்டே இருக்கிறார் நாயுடுவின் சகலைப்பாடியான ராவ். இப்படி எல்லாரும் ஓட ஓட விட்டாலும் பார்ப்பன பாசிசம் தென்பகுதிக்கு வச்ச பேரு, "நட்சத்திரம்". உயரப் பறக்க விரும்புவதால். அங்கே எல்லா வளங்களும் இருப்பதால். அதிக எம்பி சிட்டுக்கள் இருப்பதால். Here Penetration is thumb rule.
ஆகவே அவர்களுடைய அரசியல் உத்திகளை இப்படி தொகுக்கலாம்.
- ரத்தம் வரும்வரைமாட்டிடம் பால் கறத்தல் (Profit realization). Hindi Belt மாநிலங்கள். Cow belt அவர்களுக்கு உண்மையிலேயே Cash Cow தான். நல்ல கறவை மாடுகள் தான். ஆனால் மாடு எப்போதும் பால் தராது. சில் மாதங்களில் பால் நின்றுவிடும். அதன்பின்னர் பால் கறக்க, "சினையாகி, ஈனும் வரை மாட்டுக்கு (கோமாதாவுக்கு) தேவுடு காக்கனும். ஆகவே இங்கே இந்துத்துவ தீயை அணைய விடாதே. ஏற்கனவே 300% லாபம் வருவதால் முதலாளித்துவம் சொன்னதைப் போல கொலை செய்.
- நாயை அடித்து துரத்த வேண்டும். ஆனால் பசி என்று வந்துவிட்டால் பாவமும் இல்லை, பழியும் இல்லை (Profit is the only way to go). கோழி குருடாக இருந்தாலும் குழம்பு ருசிதான் வகையறா இது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள். வடகிழக்கும் உச்சியும் வெறிநாய் தான். எப்போது வேண்டுமானால் கடித்துவிடும். ஆனாலும் பட்டினியால் வாடும்போது சொறிநாய்க்கறியாக இருந்தாலும் பரவாயில்லை, பசிதீரும் என சுயவிருப்பத்தின் பேரில் நாயை கேள்விக்குறியாக கற்பனை செய்கிறார்கள். இங்கே வந்தவரை இலாபம் என்பது இவர்கள் முடிவு.
- உண்மையில் தென்பகுதியில் அவர்களுக்கு கேள்விக்குறிகளே அதிகம். ஆனாலும் நட்சத்திரமாக பொய்க்கணக்குப் போடுகிறார்கள். மூன்றாம் வகை மாநிலங்கள் உண்மையில் பாஜகவிற்கு பிரச்சினைக்குரிய (கேள்விக்குறி) மாநிலங்கள். ஆனால் இங்கே பெல்லாரி சுரங்கமும், கோலார் தங்கவயலும், குபேரனும், நெடுவாசலும், கதிராமங்கலமும் (மீத்தேன் எடுக்க), அரபிக்கடலும், மலையாள அரபு வனப்பும் இருப்பதால் நடசத்திரமாக கருதுகின்றனர். பிடித்துவிட்டால் உயரப் பறந்துவிடலாம் என எண்ணி. இங்கே அவர்கள் செய்யும் தந்திரங்கள் (Market Positioning, Market Penetration, Market capitalization and to some profit maximization). அதாவது சந்தையில் நிலைப்படுத்துதல், சந்தையில் ஊடுறுவுதல், சந்தையை தக்க வைப்பது, லாபத்தை முடிந்த அளவு அறுவடை செய்வது. இந்த தந்திரங்களை தென் மாநிலங்களுக்கு செயல்படுத்துகிறார்கள்.
- இந்த தந்திரங்களைத் தவிர்த்து, அவ்வப்போது முதலாளித்துவ நிறுவனங்களைப் போல CEO க்களை மாற்றி, புதுவேடம் போடுவார்கள். டேய், முகத்துல மரு வச்சிக்கிட்டு வந்தால் அடையாளம் தெரியாதா? என விழிப்போடு கேட்டால், "அது ஒண்ணுமில்லைங்க, அவன் தெரியாமல் பணத்தைக் கையாடல் பண்ணிட்டான், இவன் ரொம்ப யோக்கியன்.. ஹி.ஹி."ன்னு வெட்கமே இல்லாமல் சிரிப்பார்கள். 15 லட்சம்ன்னு சும்மா விளையாட்டுக்கு சொன்னதை நம்பி ஏமாந்தாலும், கொஞ்ச நாள் கழித்து புத்தி வந்து, அதை மறக்காமல் நினைவு வைத்து காசு எங்கடான்னு கேட்டால் வடிவேலு மாதிரி வெற்று டவுசர் பாக்கெட்டைக் காண்பிப்பார்கள்.
அந்த கிழிந்த டவுசரையாவது எனக்கும் கொடுன்னு அதட்டியோ கெஞ்சியோ கேட்டால், "கோட், சூட், பட்டுப்புடவை, இதை வைக்க வெளிநாட்டு பீரோ" ன்னு எங்க செல்லப் பிள்ளைகளுக்கு (நீரவ் மோடி, மல்லையா) சீதனம் கொடுத்தோம், அந்த திருட்டுப்பசங்க (நாங்க பெத்த பிள்ளைங்க தான், மோசம் போகமாட்டாங்க, டாப்பா வருவாங்க) கிழிஞ்ச டவுசரைக்கூட பீரோ துடைக்க உதவியாக இருக்குமேன்னு தூக்கிட்டு போய்ட்டாங்க. அவன் தூக்கிட்டு ஓடுனது நிசம். ஆனால் சீதனம் தருவதாக ஒப்புக்கொண்டது எதிர் வீட்டுக்காரன். ஆனாலும் பீரோ சாவி எங்ககிட்டத்தான் இருக்குன்னு வீரவசனம் பேசுவாங்க. டேய் அவன் கடப்பாரையை வச்சு பீரோவை உடைத்துவிடுவான் என்று நாம் தர்க்கம் பேசினால் நீ ஆண்டி இந்தியனா? என பயமுறுத்துவார்கள்.
எல்லாம் முடிந்து, “ராமாயணக்கதை கேட்டாச்சு, கதை முடிந்துவிட்டது, சட்டிபொட்டியை தூக்கிட்டு வந்தவழி போங்கன்னு” சொன்னால் வேறு அவதாரம் எடுப்பார்கள். இந்துத்துவத்திற்கு அவதாரம் எடுப்பது புது விஷயமா என்ன? மோடியில்லையெனில் யோகி, கேடியில்லையெனில் கிரிமினல். இப்படி ஆள் மாறாட்டம் செய்வாங்க. சந்தேகமிருந்தால் அகலிகையிடம் கேட்டுப்பாருங்கள்.
குறிப்பு: முதலாளித்துவமும் இந்துத்துவமும் ஒரே மாதிரியான வழிமுறைகளையும் கொண்டிருந்தாலும், ஒரு மெல்லிய வேறுபாடு உள்ளது. எவ்வளவு பொய்யுரைத்தாலும் இனி இலாபம் கிடைக்காது என்று தெரிந்துவிட்டால். ஏர்செல் போல் அனில் அம்பானி போல் கடையை மூடிவிட்டு போய்விடுவார்கள். ஒருவேளை வேறு உருவத்தில், அல்லது சில காலம் கழித்து வருவார்கள். பார்ப்பன பாசிசமோ அட்டைப்பூச்சி போல் நம் உடம்பில் ஒட்டிக்கொண்டு நம் ரத்தத்தை காவு கேட்கும்.
இனி நாம் என்ன செய்யவேண்டும்?
தோழர் ஸ்டாலின் சொல்கிறார்
1) 1916 காலத்தில் குழப்ப காலத்தில்.......
.தோழர்களே.. அலைகொழிக்கும் கடலிலே நீங்கள் எப்போதாவது படகிலே பயணம் செய்ததுண்டா? நான் பயணம் செய்திருக்கிறேன். பெரும்புயல் வீசி படகு நிலை குலைகிறது. அப்போது படகில் 3 விதமான கருத்து எழும்.
1) தோழர்களே படகு கவிழப் போகிறது. படகைவிட்டு கடலில் குதிக்கலாம். நீந்திக் கரை சேரமுயற்சிப்போம் என்ற கருத்து.
2) தோழர்களே...படகிலே மண்டியிட்டு கடவுளைப் பிரார்த்திப்போம். அவர் கரைசேர்ப்பார் என நம்புவோம்...என்றொரு குரல்.
3) இந்தக் குரல் கம்பீரமாய் கேட்கிறது. தோழர்களே பாய்மரங்களை சுருட்டிக் கட்டுங்கள். துடுப்புகளை இறுகப்பற்றி முழு பலத்தோடு கரைநோக்கி வேகமாய் செலுத்துங்கள். நாம் உறுதியாய் கரை சேருவோம் எனும் குரல் ஒலிக்கிறது.
இதில் முதலாவது பாதை தற்கொலைப்பாதை, இரண்டாவது சரணாகதிப் பாதை. மூன்றாவது பாதையே சரியான புரட்சிப் பாதை.
யாரிடம் போக? தோழர் மாவோவும், ஸ்டாலினும் மீண்டும் வழிகாட்டுகிறார்கள்.
ஸ்டாலின்: “தோழர்களே.. இயக்கம் முழுமைக்கும் நீங்கள் ஒரு காதை ஒதுக்கி வைத்துக்கொண்டால், கீழிருந்து வரும் தோழர்கள் கூறுவதைக் கேட்பதற்காக மற்றொரு காதை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் கூறும் விசயங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததாய் அல்லது முக்கியமற்றதாய்..ஏன்...குப்பை கூளங்களாகக்கூட இருக்கலாம். ஆனால் குறைந்தது 5 சதமாவது நீ கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும் என்பதை மறந்துவிடாதே”
மாவோ: கீழே இறங்கிப் போய் மக்களிடம் கேளுங்கள்.
மாவோ சொன்னதைப் போல, ஸ்டாலின் சொன்னதைப் போல அண்ணல் அம்பேத்கரும், தந்தைப் பெரியாரும் கரடு முரடான பாதையில் நடந்து மக்களிடம் சென்று அகலமான சாலைகளையும், அமைதி பூங்காக்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதே பாதையில் செல்வோம், போராட்டங்களை முன்னெடுப்போம். மக்களை அரசியல்படுத்துவோம். இந்துத்துவ பொய்மைகளை அம்பலப் படுத்துவோம்.
- சு.விஜயபாஸ்கர்