Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்த பார்ப்பனிய மேலாதிக்கத்துக்குப் பாடை கட்டியிருக்கின்றார். நாய் உள்ளே போனாலோ, இல்லை மற்ற சாதிக்காரன் உள்ளே போனாலோ கடவுள் சிலையில் இருந்து வெளியேறிவிடுவார் என்று சொல்லி இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களை பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் ( சூத்திரர்கள்) என்றும், சண்டாளர்கள், பஞ்சமர்கள் என்றும் சொல்லி இன இழிவை ஏற்படுத்திய பார்ப்பன கொழுப்பெடுத்த கூட்டத்திற்கு செருப்படி கொடுத்திருக்கின்றார். இத்தனை நாட்களாக எந்தக் கடவுளை வைத்துக் கொண்டு, அதனிடம் பேசும் தகுதியும், மொழியும் தன்னிடம் மட்டுமே இருக்கின்றது, அது இல்லாத நீயும், உன் மொழியும் நீச பாஷை என்று சொல்லி, இந்தியாவின் பூர்வகுடி மக்களுக்கு இல்லாத தகுதியும், திறனும் தனக்கு மட்டுமே உள்ளது என்று பிதற்றிக்கொண்டு திரிந்த பிற்போக்குக் கூட்டதின் ஆணவத்தில் நெருப்பு வைத்திருக்கின்றார் பினராயி விஜயன் அவர்கள். அதற்காக எத்தனை முறை தோழர் பினராயி விஜயனுக்கு நன்றிகள் சொன்னாலும் அது போதாது.

pinarayi vijayan 320சமூகநீதி வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்று குறிப்பிட வேண்டும். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை பினராயி விஜயன் அவர்கள் ஏறக்குறைய அவர் இறந்து அரை நூற்றாண்டு கழிந்து எடுத்திருக்கின்றார். நாமெல்லாம் கூட நாம் இறப்பதற்கு உள்ளாகவாவது இந்த மானங்கெட்ட பார்ப்பன அடிமைகள் வாழும் நாட்டில் அது சாத்தியப்படுமா என்று நினைத்து மிகுந்த துயர் அடைந்ததுண்டு. காரணம் நாம் என்ன தான் போராடினாலும், அதை நிறைவேற்றும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் பார்ப்பன கைக்கூலிகளாய் இருப்பதும் இருந்து வருவதும்தான் காரணமாகும். ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிவுடன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி காட்டி இருக்கின்றார் தோழர் பினராயி விஜயன். அவருக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெரியாரிய அமைப்புகளும் நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். பெரியார் பிறந்த இந்த மண்ணில் நம்மால் செய்ய முடியாததை கேரள மண்ணில் அவர் செய்து காட்டியிருக்கின்றார்.

2006 ஆண்டு திமுக அரசால் இயற்றப்பட்ட அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதிசைவ சிவாச்சாரியர்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை என்ற அமைப்பும் தொடுத்த வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத்தின் ரஞ்சன் கோகாய் மற்றும் ரமணா ஆகியோர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை ரத்துசெய்து ஆகம விதிமுறைபடி மட்டுமே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் ஏற்கெனவே அந்த அந்த கோயில்களில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளையும் நிச்சயம் அர்ச்சகர் நியமனத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று ஏற்கெனவே கோயில்களில் எந்தவிதத் தகுதியும் இன்றி வாரிசு அடிப்படையில் மணியாட்டிக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கும் ஆதரவாக ஒரு பக்கம் தீர்ப்பை வழங்கியது. இதன் மூலம் ஒருபக்கம் ஏற்கெனவே கோயில் அர்ச்சகராக பணியாற்றிக் கொண்டு இருந்த பார்ப்பனர்கள் மட்டுமே தப்பித்துக்கொண்டாலும் புதிதாக நியமிக்கப்படும் அர்ச்சகர்கள் ஆகமவிதிப்படி மட்டுமே நியமிக்க முடியும் என்ற நிலை உருவானது.

ஆனால் 2007 ஆண்டு மாநில அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் முறைப்படி ஆகமங்களைக் கற்று முறையாக தீட்சை வாங்கிய 206 மாணவர்களை நியமிக்க எந்தவிதத் தடையும் இல்லாத போது தமிழ்நாட்டில் ஆண்டுகொண்டு இருக்கும் பார்ப்பன அடிவருடி அரசு, அவர்களில் யாரையும் இது வரை பணி நியமனம் செய்யாமல் தாங்களும் ஒரு திராவிட கட்சிதான் என்று வெட்கம் கெட்ட முறையில் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். எங்கே அப்படியான ஒரு சம்பவம் நடந்து பார்ப்பனர்கள் கோபப்பட்டு, ஆட்சியை கலைத்துவிடுவார்களோ என்ற பயமும் பிழைப்புவாதமும்தான் அவர்களை 206 மாணவர்களுக்கும் அர்ச்சகர் பணி கொடுக்காமல் தடுத்து வைத்திருக்கின்றது. பார்ப்பனின் வைப்பாட்டி மகனாக (சூத்திரனாக) வாழ்வது அவர்கள் தங்கள் வாழ்வின் மிக உயர்ந்த குறிக்கோளாகக் கருதுகின்றார்கள்.

அர்ச்சகர் பணியில் முறையாக தீட்சை பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று உள்ளதே தவிர ஒரு குறிப்பிட்ட சாதிக்ச் சேர்ந்தவர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஆகம விதிப்படிதான் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமிக்க முடியும் என்றால் நிச்சயம் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர் ஆக முடியும். காரணம் எந்த ஆகமமும் இந்தச் சாதியைச் சேர்ந்தவன்தான் கோவிலில் பூசை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதில்லை. ஆகமங்கள் வேத பிராமணர்களை கோவில்களிலிருந்து தவிர்ப்பது மட்டுமின்றி அவர்களை ஆகம சமயத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதுகின்றது. ஒரு கோவிலில் ஒருவர் அர்ச்சகராக அல்லது பூசாரியாக வருவதற்குள்ள ஒரே சோதனை தீட்சை மட்டுமேயன்றி சாதியோ, வகுப்போ அல்ல. தீட்சை பெறாத ஒரு பிராமணன் கோவிலில் சமையற்காரன் போன்ற கீழ்நிலைப் பணியாளனாகக்கூட இருக்க முடியாது. ஓர் இந்துக் கோவில் கருவறைக்குள் அவன் நுழைய முடியாது. அங்குள்ள கடவுள் சிலைகளை அவன் தொடவும் கூடாது. பிராமணர்கள் போன்றும், இதர வகுப்பினரைப்போன்றும் ஒரு சண்டாளன் கூட தீட்ச பெற்றுக் கொள்ள முடியும். ஆகமங்களின் கொள்கைப்படி, ஆலயத்துனுள் நுழையவும், வழிபாடு செய்யவும் சாதி முக்கியமல்ல. ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு மட்டும் சலுகை காட்டவோ, வேறு வகுப்பினரை வெறுத்தொதுக்கவோ இடமில்லை.( ஆலயபிரவேச உரிமை:ப.எண்: 75)

இந்த அடிப்படை உண்மையை நன்றாக புரிந்துகொண்டுதான் பினராயி விஜயன் அவர்கள் தற்போது பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகராக நியமித்து உத்திரவிட்டுள்ளார். இதன்மூலம் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1248 கோயில்களில் தற்போது காலியாக உள்ள 62 இடங்களில் 36 இடங்களில் பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகராக இனி இருக்க முடியும். இந்த 36 பேரில் 6 பேர் தலித்துகள் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த மக்களை பஞ்சமன், தீண்டத்தகாதவன் என்று இழிவு செய்து கோயிலுக்கு வெளியே நிற்க வைத்து ஆண்டு ஆண்டு காலமாக அசிங்கப்படுத்தினார்களோ, கோயில் வாசப்படியை மிதிப்பதற்கே வாழ்நாள் பூராவும் போராட நிர்பந்திக்கப்பட்டார்களோ இன்று அதே தலித் மக்களை கோயிலின் கருவறையில் கொண்டுபோய் நிறுத்தி அழகு பார்த்திருக்கின்றார் பினராயி விஜயன். இனி எந்தக் கடவுள் தீட்டுப்பட்டுச் செத்துப்போகும் என்று நாம் பார்ப்போம்.

நந்தன்களை எரித்துக் கொன்று ஆட்டம் போட்ட பார்ப்பனியத்தின் சவப்பெட்டியின் இறுதி ஆணியை இறக்கிய தோழர் பினராயி விஜயனை நிச்சயமாக தமிழ்நாட்டில் உள்ள பெரியாரிய அமைப்புகள் அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தி அவரை கெளரவப்படுத்த வேண்டும். இந்திய வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத துணிவான காரியத்தை செய்திருக்கின்றார். வெறும் 3 சதவீதமே உள்ள பார்ப்பனக் கூட்டம் இந்தியாவில் உள்ள 97 சதவீத மக்களை அடக்கி ஆண்டு அவமானப்படுத்தி வைத்திருந்ததற்கு அடிப்படையாக இருந்த கருவறைப் புனிதத்தின் மீது காறி உமிழ்ந்த தோழருக்கு ஒட்டுமொத்த முற்போக்குவாதிகளும் வாழ்த்துச் சொல்லுவோம்.

அத்தோடு தமிழ்நாட்டிலும் அதே வழிவகைகளை பின்பற்றி அர்ச்சகர் பயிற்சி முடித்துவிட்டு இன்று வேலை இன்றி நிற்கும் 206 மாணவர்களுக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் போராட வேண்டும். தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் சூத்திர எடப்பாடி அரசு இதைச் செய்யும் வரை தொடர் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். முற்போக்குவாதிகளான நமக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம், ஆனால் புனிதத்தின் பேரால் எந்த மனிதன் இன இழிவு படுத்தப்பட்டாலும் அதற்கு எதிரான முதல் குரல் நம்முடையதாகவே இருக்க வேண்டும். அதன் மூலம் தான் நம்மால் சமூக நீதியை வென்றெடுக்க முடியும்.

- செ.கார்கி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Vamanan 2017-10-09 19:20
பெரியார் இயக்கம் மட்டுமல்ல இன்றைய கேரள மண்ணில் சமூக அவலங்களுக்கு எதிராக போராடிய முத்துகுட்டி சாமி, அய்யங்காளி, நாராயணகுரு போன்றவர்களின் போராட்டங்களும் இங்கே குறிபிட்டாக வேண்டும்..
அதில் முத்துகுட்டி சாமியின் கடவுள் வளிபாட்டு முறை என்பது ஒரு போராட்ட வடிவமே....
Report to administrator

Add comment


Security code
Refresh