Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் முழக்கம்

நாளொன்றுக்கு இலட்சக்கணக்கில் தயாரிக்கப்படும் ஏழுமலையான் ‘சமையலறையில்’ நுழைந்து லட்டு தயாரிக்கும் உரிமை அய்யங்கார் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு என்று பார்ப்பனர்கள் உரிமை கோருகிறார்கள். ஏனைய பார்ப்பனரல்லாத ஜாதி - அவர் தேவஸ்தான தலைவராகவோ அமைச்சராகவோ இருந்தால்கூட, ‘மடப்பள்ளி’க்குள் (சமையலறை) நுழைய முடியாது. அண்மையில் ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம்’ என்ற மத்திய அரசு நிறுவனம், சென்னையில் உள்ள உணவு தயாரிப்புக்கான உரிமம் வழங்கும் ஆணையகத்துக்கு ஒரு தாக்கீது அனுப்பியது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமாகிய ‘லட்டு’ ஒரு உணவுப் பொருள் என்பதால் அது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த உணவுப் பொருளை தயாரிக்கும் சமையலறை உணவுப் பாதுகாப்புக்கான விதிகளின் கீழ் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது சட்டப்படியான நடைமுறை. எனவே பொது சமையலறைக்கான உரிமம் பெறப்பட்டுள்ளதா? உணவுப் பாதுகாப்புக்கான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வாளர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும் என்று தாக்கீது அனுப்பியது. ஆனால், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் இந்த சட்டநெறிமுறைகளை ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டது.

“திருப்பதி பிரசாதமான லட்டு, பகவானுக்கு படையல் செய்யப்படும் ‘நைய்வேத்தியம்’ போன்றவற்றை தயாரிக்கும் உரிமை சம்பிரதாயப்படி வைணவத்தில் ஒரு பிரிவினருக்கு (அய்யங்கார் பார்ப்பனர்) மட்டுமே உண்டு. உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த உத்தரவு, மத உணர்வுகளை புண் படுத்துவதோடு, காலங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் மத ஆச்சாரங்களில் குறுக்கிட்டு தடை செய்யும் நோக்கம் கொண்டதாகும். 2006ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புச் சட்டமோ அதன் விதிகளோ திருப்பதி வேதஸ்தானத்துக்குப் பொருந்தாது. எங்களின் பிரசாதத் தயாரிப்புக்கான பாதுகாப்புகளை நாங்களே செய்து கொள்கிறோம். இதில் அரசு தலையிடும் உரிமை இல்லை” என்று திட்டவட்டமாக தேவஸ்தானம் மறுத்து விட்டது.

பெங்களூரைச் சார்ந்த சமூக செயற்பாட்டாளர் டி.நரசிம்மமூர்த்தி என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்துக்கு’ எழுதிக் கேட்டு, இத்தகவல்களைப் பெற்றுள்ளார். ‘இந்து’ (ஏப் 15) ஆங்கில நாளேடு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கோயில் அர்ச்சனை உரிமை மட்டுமின்றி, பிரசாதம் தயாரிப்பிலும் பார்ப்பனர்களே தங்கள் உரிமையை நிலைநாட்டி, ‘தீண்டாமை’யைப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் பக்தர்களுக்கு மொட்டை அடிப்பது,  கோயில் துப்புரவு போன்ற வேலைகளை பார்ப்பனர்கள் செய்வது இல்லை. அவற்றைச் செய்வதற்கு ‘பஞ்சமர்கள்’, ‘சூத்திரர்கள்’தான் வேண்டும். இப்போதும் பார்ப்பனர்கள்தான் ‘எஜமானர்கள்’. அவர்களின் மேலாண்மைக்கு கீழ்ப்படிந்து நிற்பதே ‘இந்து’ கலாச்சாரம். பார்ப்பன ஆதிக்கம் எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள் இதற்கு என்ன பதிலை கூறுவார்கள்?

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh