கீற்றில் தேட...

நாட்டில் கஞ்சா விற்பவன், கள்ளச்சாராயம் விற்பவன், மாமா வேலை பார்ப்பவன் எல்லாம் தங்களைப் பற்றிய வரலாற்றுச் சுவடுகளைப் பிற்கால சந்ததிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த உலகத்தில் விட்டு விட்டுப் போக விரும்புகின்றார்கள். ஏனெனில் அது அவர்களுக்குகே தெரியும், தாம் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டு பணம் சம்பாதித்தாலும், மக்கள் தங்களை ஒரு நாளும் கீழ்த்தரமானவர்களாகப் பார்ப்பதில்லை என்று. ஊழல்வாதிகளையும், ஊரை அடித்து உலையில் போட்டவர்களையும் மக்கள் தங்கள் வணங்கும் கடவுளுக்கு நிகரான ஒருவராகவே பார்க்க பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றார்கள். அதனால் தான் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு ஜெயலலிதா, சசிகலா போன்றவர்கள் சிறை சென்றாலும் சூடு சுரணையே இல்லாமல் பொதுவெளியில் வந்து ஓட்டுகேட்கவும், தன்னை உத்தமிகள் போன்று காட்டிக் கொள்ளவும் முடிகின்றது. பொறுக்கித் தின்னும் பேர்வழிகளை எல்லாம் வரலாற்றில் சுயமரியாதை உணர்வு அற்ற மக்கள் பெரும்பாலும் கொண்டாடியே வந்திருக்கின்றார்கள். ஜெயலலிதாவின் சமாதியைப் பார்க்க அங்குவந்து பயபக்தியுடன் கும்பிட்டுப் போகும் மக்களை யாராவது சுயமரியாதை, தன்மான உணர்ச்சி உடைய மக்கள் என்று சொல்வார்களா? மக்களின் இந்தக் குணம்தான் பாசிஸ்ட்டுகள் தங்களைப் புனிதர்கள் போன்ற பிம்பத்தை தைரியமாக கட்டமைக்கத் தூண்டுகின்றது.

modi 375

தன்னைப் புனிதர்களாக கட்டமைத்துக்கொள்ளும் எண்ணம் கஞ்சா விற்பவனுக்கும் கள்ளச்சாராயம் விற்பவனுக்கும், மாமா வேலை பார்ப்பவனுக்கும் மட்டும் சமூகத்தில் இருப்பதில்லை. இன்னும் தன்னைப் பற்றிய மிகை மதிப்பீட்டை இந்தச் சமூகத்தில் ஏற்படுத்தி அதன் மூலம் இந்த மக்களை சுரண்டி ஓட்டாண்டிகள் ஆக்கி அவர்களை நடுத்தெருவில் விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு எச்சிலை வேலை பார்ப்பவர்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றது. அப்படி ஒரு கேடுகெட்ட, தன் சொந்த நாட்டை பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுக்கத் தயங்காத நபர் தான் இந்த மோடி. ஆட்சிக்கு வந்த நாள்முதல் ஐந்து பைசாவுக்குப் பிரயோசனம் இல்லாமல் வெத்து வேட்டு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு சும்மா உட்கார்ந்து பெஞ்சை தேய்த்துக்கொண்டு இருக்கும் மோடி அதைப் பார்த்து ஊரே காறித்துப்புவதை மறைக்க தன்னுடைய அல்லக்கை முண்டங்களை சர்ச்சைக்குரிய வகையில் பேசவைத்து தன் ஆட்சியின் மானங்கெட்ட தனத்தை மறைக்க முயற்சி செய்தார்.

அப்படியும் மக்கள் எங்கே வேலைவாய்ப்பு, எங்கே பொருளாதார வளர்ச்சி, எங்கே வங்கியில் போடுவதாகச் சொன்ன பதினைந்து லட்சம் என சட்டையைப் பிடிக்க, முழி பிதுங்கிய மோடி எவனோ ஒரு கூமுட்டை பொருளாதார நிபுணரின் பேச்சைக் கேட்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். பல கோடிக்கணக்கான மக்களை ஏடிஎம் வாசலில் கால்கடுக்க நிற்கவைத்து பல நூறு மக்களை கருப்புப்பண ஒழிப்புப் போரில் சாகடித்தார். எவ்வளவு கருப்புப்பணம் கைப்பற்றப்பட்டது என எதிர்க்கட்சிகள் தகவல் கேட்டால், பிம்பிளிக்கா பியாப்பீ என்கின்றார். மோடி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார், தனக்கு ஓட்டுபோட்ட நடுத்தர வர்க்க பிற்போக்கு இந்துமதவெறிக் கோமாளிகளை அவ்வப்போது குஷிப்படுத்த எதையாவது செய்துகொண்டே இருப்பது போல காட்ட வேண்டும் என்று. அதற்காக கருப்புப்பண ஒழிப்பு, பொதுசிவில் சட்டம், பசுவதை தடை சட்டம், டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என அவ்வப்போது எதையாவது படம் காட்டி அவர்களைத் தம் பக்கமே எப்போதும் இருத்திவைக்க முயற்சி செய்கின்றார்.

ஆனால் இவ்வளவு வேலைகள் செய்தும் இன்று மோடிக்கு உள்நாட்டில் இருக்கும் மதிப்பு என்பது வீடு புகுந்து திருடும் ஒரு திருடனுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கின்றதோ அவ்வளவு மதிப்புதான். இந்திய மக்கள் மோடியை ஒரு திருடனாகவே பார்க்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். அதுவும் ஒரே நாடு ஒரு வரி என்ற பெயரில் மோடி அரசு திணித்திருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியால்(GST) இன்று நாடே கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றது. பல தொழிற்நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் சூழ்நிலையை இது உருவாக்கியுள்ளது. மாநில அரசிடம் இருந்த வரி உரிமைகள் பறிக்கப்பட்டு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு மாற்றப்பட்டிருக்கின்றது. மாநில சுயாட்சியைப் பறித்தல் என்பது இந்துத்துவ செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகும். அடுத்து நாடு முழுவதற்கும் ஒரே மொழி, அனைவருக்கும் ஒரே பொதுசிவில் சட்டம், அனைவருக்கும் ஒரே மதம் என வரிசையாக தனது பயங்கரவாதத் திட்டங்களை மோடி அரசு அறிவிக்கப் போகின்றது.

இப்படி இந்திய மக்கள் இதுவரை பார்த்திராத ஒரு முட்டாள்தனமான பாசிச பிரதமர் என்று பேர்வாங்கிய மோடி, இன்னும் ஆட்சி முடிவதற்கு இரண்டு ஆண்டுகளே உள்ள நிலையில் தான் டீ விற்றதாக சொன்ன வாட்நகர் ரயில் நிலையத்தை சுற்றுலாத் தலமாக மாற்ற 100 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார். நல்ல வேளை மோடி அத்தோடு நிறுத்திக்கொண்டார். வல்லபாய் பட்டேலுக்கும், சிவாஜிக்கும் சிலை வைக்க பல ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை ஒதுக்கியது போல மோடி தனக்குத்தானே உலகில் மிகப்பெரிய சிலையை வைத்துக் கொள்ள சில லட்சம் கோடிகளை ஒதுக்காமல் விட்டுவிட்டார். நாளை வாட்நகர் ரயில்நிலையத்தை உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்யப் போகின்றார்களாம். அப்படி அது உலக சுற்றுலாத் தலமாக மாறும்போது அங்குவரும் சுற்றுலா பயணிகள் மோடியின் டீக்கடையைச் சுற்றிப் பார்க்கும் போது என்ன பேசிக் கொள்வார்கள்?

“இவர்தான் மோடி, இந்திய நாட்டின் பிரதமராக இருந்தவர். முதலில் டீ விற்றுக் கொண்டிருந்த இவர் பிறகு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்ந்து நாட்டை எப்படி விற்பது என கற்றுக்கொண்டார். குஜராத்தின் முதலமைச்சராகி பல ஆயிரம் முஸ்லிம்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டி கொன்றுபோட்டவர். அதற்காக இவரை பல நாடுகள் தங்கள் நாட்டுக்குள்ளேயே வரத் தடை விதித்து இருந்தன. பிறகு பிரதமரான போது வேறு வழியில்லாமல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டன. இவர் ஒரு லட்சியப் புருஷராக வாழ்ந்தவர். தன்னுடைய ஆட்சி முடிவதற்குள் இந்தியாவை கூறு போட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதையும், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளின் குடிகெடுப்பதையுமே தன்னுடைய லட்சியம் என சபதம் மேற்கொண்டு அதற்காக கடுமையாக 24 மணி நேரமும் உழைத்தவர். அந்த முயற்சியில் பெரிய அளவில் வெற்றியும் பெற்றவர். இவருக்குக் காரியம் ஆகவேண்டும் என்றால் தாலி கட்டியதையும் மறைப்பார், யார் தாலியை வேண்டும் என்றாலும் அறுப்பார். ஹிட்லருக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய சர்வாதிகாரி இவர்தான். அப்படிப்பட்ட ஒரு பாசிஸ்ட் டீ விற்ற கடைதான் இதுதான்” என்று பேசிக்கொள்வார்கள்.

பாசிஸ்ட்டுகள் வரலாற்றை மாற்றுவதை மட்டும் செய்வதில்லை, அவர்களே வரலாறாக மாற ஆசைப்படுகின்றார்கள். அவர்களுக்கு எந்தக் கூச்சமும் இல்லை, குற்ற உணர்வும் இல்லை. அதனால் மோடி டீ விற்ற இடம் மட்டும் அல்லாமல் அவர் மலம் கழித்த இடம், சிறுநீர் கழித்த இடம் என அனைத்தையும் உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்யலாம். மக்கள் எப்போதுமே பாசிஸ்ட்களையும், சர்வாதிகாரிகளையும் தங்களைப் போன்ற ஒருவராகப் பார்ப்பதில்லை. அவர்களை இயற்கைக்கு அப்பாற்பட்ட மர்மமான சக்திகள் நிறைந்தவர்களாகவே பார்க்கின்றார்கள். அவர்களுக்குச் சாதாரண மக்களைப் போன்று இரண்டு கைகள் , கால்கள், கண்கள் மட்டும் அல்லாமல் இன்னும் தங்களுடைய மிரளவைக்கும் செயல்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகப்படியான உறுப்புகளை கடவுள் அவர்களுக்கு வழங்கியுள்ளதாக நினைத்துக் கொண்டிருகின்றார்கள். அதனால் மோடி டீ விற்றதாக சொல்லப்படும் இடத்தைக் காண மக்கள் பெரிய அளவில் வரலாற்றில் அங்கு குவிவார்கள். மிக ஆச்சரியத்துடன் கண்கள் விரிய அதைப் பார்ப்பார்கள். எனவே மோடியின் டீ க்கடையில் வெறும் டீ போட பயன்படுத்திய பொருட்களுடன் அவர் அணிந்திருந்த கோட்டுகள், அவரின் அண்டர்வேயர்கள் , அவர் பல்துலக்கிய பிரஸ்கள், அவர் தலைவாரிய சீப்புகள் என அனைத்தையும் காட்சிக்கு வைக்கலாம். ஏனென்றால் பாசிஸ்ட்கள் எப்பொழுதுமே சாதாரண மனிதர்கள் இல்லை.