பசுவதையைக் கண்காணிப்பதாகக் கூறிக் கொண்டு, மதவெறி சக்திகள் வன்முறை வெறியாட்டம் போடுவது எல்லை மீறிப் போனதால், பிரதமர் மோடியே இதைக் கண்டிக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதையொட்டி பிரதமர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ‘பசுவதைக் கண்காணிப்பாளர்கள்’ வன்முறையில் ஈடுபட்டால், மாநில அரசுகள் கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதங்கள் புயலை உருவாக்கிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் மோடி இவ்வாறு கூறினாரா அல்லது நாட்டில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் கூறினாரா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மதவெறி சக்திகள் எல்லை மீறி செயல்படுகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
அதே நேரத்தில் பசுவின் சாணி, மூத்திரம் ஆகியவற்றின் மருத்துவ குணம் குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆராய 19 பேர் கொண்ட குழு ஒன்றை யும் மோடி ஆட்சி அமைத்திருக்கிறது. இதில் மூன்று பேர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்கள் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தலைமை யில் நியமிக்கப்பட்ட குழுவில் துறைச் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.
மதச் சார்பற்ற ஆட்சி, மதம் சார்ந்த அறிவியலுக்கு எதிரான நம்பிக்கை களுக்கு அரசு பணத்தை விரயம் செய்து வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. எந்த ஒரு பிராணியும் வெளியேற்றும் கழிவு சுகாதாரக் கேடானது என்பது அடிப்படையான அறிவியல்.
பசு மாடு மட்டுமே தனது உடல் உறுப்புகளின் வழியாக வெளியேற்றும் கழிவுகளில் மருத்துவ குணம் இருக்கிறது என்பதை எந்த மருத்துவமும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கவில்லை.
ஆனால், பார்ப்பனியம் ‘பசுவைத் தெய்வம்’ என்று கூறும் ஒரே காரணத்துக்காக, அரசுப் பணத்தை வீணடித்து நடப்பது ‘பார்ப்பன ராஜ்யம்’ என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.