கீற்றில் தேட...

1971 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அசாமில் சட்ட விரோதமாக குடியேறிய வங்க தேசத்தவரை குடிமக்களாக ஏற்க முடியாது என்ற அடிப்படையில் அசாமிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 19 இலட்சம் பேர் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்ப வாரிசுகள், கார்கில் போரில் போராடி குடியரசுத் தலைவரிடமிருந்து வீரப் பதக்கம் பெற்ற இஸ்லாமியர் குடும்பத்தினரும் சட்ட விரோத குடியேறிகளாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் இந்துக்களும் ஏராளம் உண்டு. இந்த 19 இலட்சம் பேரில் இந்துக்களை மட்டும் மீண்டும் குடிமக்களாக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அனுமதிக்கிறது. 2014 ஆம் ஆண்டு வரை அசாமில் வாழ்ந்த இஸ்லாமியர் அல்லாதவருக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இது தங்களின் வாழ்வாதாரத்தையும் அசாமியர் என்ற அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அசாமியர்கள் போராடி வருகிறார்கள்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாமைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமைப் பதிவேடு தயாரிக்கப்படும் என்று தொடர்ந்து பேசி வருகிறார். மாநிலங்களில் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் இத்தகைய ‘பதிவேடு’ தயாரிப்பு வழியாக ‘உரிய ஆவணமற்றவர்கள்’ என்று அறிவித்து அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சம் ஒவ்வொரு மாநில மக்களிடமும் உருவாகியுள்ளது. குறிப்பாக இஸ்லாமியர் குடியுரிமைகளைப் பறிப்பதில் குறியாக செயல்படும் பா.ஜ.க. இந்துத்துவ ஆட்சி மாநிலங்களில் வாழும் இஸ்லாமிய மக்களை குறி வைத்து இரண்டாம் தர மக்களாக்கி விடும் ஆபத்து இருக்கிறது. அதன் காரணமாகவே ஒரிசா, கேரளா, பீகார், மேற்கு வங்காளம், சிக்கிம், புதுவை மாநில முதல்வர்கள் இந்தப் பதிவேடு தயாரிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்து விட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட முதுகெலும்பு இல்லாத முதலமைச்சராக கூனிக் குறுகி நிற்கிறார்.

மக்கள் எதிர்ப்பு கடுமையாகி வரும் நிலையில் டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் டிசம். 22 அன்று பேசிய மோடி குடிமக்கள் பதிவேடு பிற மாநிலங்களிலும் தயாரிக்கும் திட்டம் இப்போது அரசிடம் இல்லை என்று அமித்ஷாவின் கருத்தை மறுத்துப் பேசியிருக்கிறார்.

ஏன் இந்த மாற்றம்? எதிர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி விடலாம் என்பதாலா? உள்துறை அமைச்சர் அமித்ஷா மோடியின் கருத்துக்கு என்ன பதில் கூறப் போகிறார்?