மோகன் பகத், அத்வானி ,சுஷ்மா சுவராஜ் என பெயர்கள் கசிந்துகொண்டிருக்க, யாரும் எதிர்பார்க்காத வகையில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி வேட்பாளராக பிஜேபி அறிவித்திருக்கிறது..

எதனால் மோகன்பகத், அத்வானி ,சுஷ்மா சுவராஜ் ஆகியோரைத் தவிர்த்துவிட்டு கோவிந்தைத் தேர்ந்தெடுத்தது பிஜேபி?

Ramnath and modi

அத்வானி, சுஷ்மாவின் பெயர்கள் ஏற்கனவே பிரதம வேட்பாளர்களாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் மோடி அவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த இடத்திற்கு வந்தார். இப்போது இவர்களை ஜனாதிபதியாக நியமிந்தால் மோடியால் அவர்களைப் பிற்காலத்தில் கட்டுப்படுத்த முடியாது. எனவே அவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் அதிகாரம் இல்லாமல் வைத்திருக்கவே மோடி விரும்புகிறார். மற்றொருவர் மோகன்பகத் , இவரை அறிவித்தால் 2019 தேர்தலுக்கான கூட்டணிக் கணக்குகள் சிதையும், கூடவே வெற்றிவாய்ப்பும் குறையும். எனவே அதை அவர்கள் விரும்பவில்லை..

தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் உள்ள ஒருவரும் அதே சமயத்தில் RSS சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட ஒருவரை மோடியும் RSSயும் விரும்பியது. இவற்றை எல்லாம் கோவிந்த் நிவர்த்தி செய்வார் என்று நம்பியதால் அவரை இன்று வேட்பாளராக அறிவித்திருக்கிறது. அப்படியென்றால் அந்த மூவரும் RSS கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லையா என்றால், அவர்களும் RSS சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தான். ஆனால் அவர்கள் வருணாசிரமப் படிநிலையில் முதலில் இருப்பவர்கள். எனவே அவர்கள் மோடிக்குத் தொண்டூழியம் செய்யமாட்டார்கள். படிநிலையில் கடைசியிலுள்ள தலித்தைத் தேர்ந்தெடுத்தால் வர்ணாசிரமக் கோட்பாட்டின்படி அவர் தொண்டூழியம் மட்டுமே செய்வார். மற்றவர்களுக்குத் தொண்டூழியம் செய்வதே பெரும்பணி என்கிறது வருணாசிரமம்.

ஏன் பிஜேபி உத்திரப்பிரதேசத்தில் பிறந்த தலித்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபி மீண்டும் வெற்றிபெற விரும்புகிறது. நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட மாநிலத்தில் இருந்து தலித் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதின் மூலம் தனக்கான தலித் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறது. ஏற்கனவே தனது கூட்டணியில் ராம்விலாஸ் பஸ்வான் இருப்பதால் இப்போது மாயாவதி, கிருஷ்ணசாமி போன்றோரையும் அந்த வலையத்திற்குள் இணைக்க முயற்சிக்கிறது. கடந்த தேர்தலில் பிஜேபியின் வெற்றியைத் தீர்மானித்ததில் தலித்துகளின் வாக்குகளுக்குப் பெரும்பங்குள்ளது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

இப்போது பீகார் கவர்னரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்ததின் மூலம் முலாயம்சிங்கை 2019 தேர்தலில் பிஜேபி அணிக்கு கொண்டுவர முயற்சி செய்யும். 2014ல் பிரதம வேட்பாளராக முலாயம் சிங்கை அறிவிக்க வேண்டுமென கருத்துக்கள் எழுந்ததைப்போல புதிய அணி உருவாகாமல் தடுக்கலாம் என பிஜேபி நினைத்திருக்கலாம்.

அம்பேத்கரிய சிந்தனையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும்தான் உண்மையான தலித்துகளா? மற்ற சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டவர்கள் தலித்துகள் இல்லையா என்ற கேள்விகளும் எழுகின்றன..

RSS போன்ற இயக்கங்களில் தலித்துகள் இருந்தாலும் அவர்கள் வருணாசிரமத்தையும், தீண்டாமையையும் எதிர்த்து ஒருபோதும் குரல் கொடுப்பதில்லை. மாறாக அதை ஏற்றுக்கொண்டு ஆதரிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்பேத்கரியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் தீண்டாமையை ஒழிக்கவும் அதிலிருந்து வெளிவரவும் விரும்புகிறார்கள். அதைத்தான் அம்பேத்கர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் செய்தார். அதனால் தான் தலித் தலைவர்கள் கூட கோவிந்தை வரவேற்க மறுக்கிறார்கள்.

கே.ஆர்.நாராயணனும் கோவிந்தும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஏன் கோவிந்தை மட்டும் புறக்கணிக்கிறீர்கள்?

நிச்சயமாக இருவரையும் ஒரே அளவில் வைத்துப் பார்க்க முடியாது. இருவரும் வெவ்வேறு சித்தாந்தங்களில் வளர்ந்தவர்கள். ஜனநாயகத்தின் தூண்களுக்கு கட்டுப்பட்டு ஆட்சி செய்பவன் என்றார் நாராயணன். 1998 பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் அன்றைய பீகார் அரசைக் கலைக்க பிஜேபி பரிந்துரைத்தது. நாராயணன் முடியாதென அதைத் திருப்பி அனுப்பினார். 2000ம் ஆண்டு இந்தியக் குடியசாகி 50 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடந்த விழாவில் நாடாளுமன்றத்தில் "ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தி அவர் பேசிய அன்றைய பேச்சுக்கள் என்றும் மறக்கமுடியாதவை. ஆனால் கோவிந்த்?

RSSன் முக்கிய நோக்கங்களில் ஓன்று இடஒதுக்கீட்டை ரத்து செய்வது. இதுவரை இடஒதுக்கீட்டால் தலித்துகளுக்கு எந்தப் பயனும் இல்லை, அதற்கு நானே சாட்சி என்று இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய இவரே சட்டவடிவை முன்மொழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

- மணிகண்டன் ராஜேந்திரன்

Pin It