இந்தியத் திருநாட்டில் பார்ப்பனீய பயங்கரவாதத்திற்குப் பகடை உருட்டும் பல மாநிலங்களில் முதன்மை மாநிலமாம் குஜராத் மாநிலத்தில் பார்ப்பனீயத்தின் கொடூரத் தாக்குதலில் கேட்பாரின்றி சிக்கித் தவித்த ஓர் சமூகத்தின் அவலத்தைக் குரல் கொடுக்கத் துணிந்த புரட்சி இளைஞனைப் பற்றித்தான் இக்கட்டுரை விரிவாக விளக்கவிருக்கிறது. ஆம் நீங்கள் அறிந்த பார்ப்பனீய நச்சு மண்ணில் முளைத்த நெருப்புச் செடி, இந்துத்வா இழிவுகளை இடித்துரைத்து இயங்க வழியின்றி இருந்த சமூகத்தின் இன்னலின் ஈரத்தில் வளர்ந்த ஜிக்னேஷ் நட்வர்லால் மேவானி என்ற புரட்சி இளைஞனை பற்றித்தான் இக்கட்டுரை விவரிக்கிறது.
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற ஊரறிந்த, இந்துத்துவத்தில் ஊறிய, மேலும் அதை பத்திரமாக பாதுகாத்துக் கட்டமைத்த தலைவர்களால் அடையாளம் காணப்பட்ட குஜராத் வரலாற்றில் முதல் முறையாக விளிம்பு நிலைச் சமூகத்தில் தோன்றிய இளம் தலை வனால் அடையாளப்படுத்தப்படு கிறது என்றால் மிகையல்ல. திசம்பர் திங்கள் 11 -ம் நாள் 1982 -ம் வருடம் அகமதாபாத்தில் பிறந்த ஜிக்னேஷ் பள்ளிப் பள்ளிப்படிப்பை முடித்ததும் ஹரிவல்லபதாஸ்-காளிதாஸ் கலைக் கல்லூரியில் 2003 -ம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பிறகு 2004-ம் ஆண்டு பத்திரிக்கைத் துறைக்கான பட்டப்படிப்பையும் முடித்து குஜராத்திய மொழியில் பிரச்சுரமான அபியான் என்ற இதழின் பத்திக்கையாளராக சில நாள் பணிபுரிந்ததோடு 2013 -ம் ஆண்டு சட்டப் படிப்பினை முடித்து வழக்கறிஞரானார்.
இளம் வயதில் எந்த ஒரு சாதிய இழிவுகளையும் , மத வன்முறைகளையும் காணவியலாத ஒரு மாநிலத்திலா வாழ்ந்தார்? மொத்தப் பார்ப்பனீயத்தின் கோரக் கொடுமைகளை மெத்த படித்தவரும் வாழ்வியலாகக் கொண்ட மாநிலத்திலல்லவா வாழ்ந்தார், வளர்ந்தார். எனவே பார்ப்பனீயத்தின் கொடுமைகளையும் இதனால் விளையும் வன்மங்களையும் பார்த்து வளர்ந்ததினால் இயல்பிலேயே இந்துத்துவா எதிர்ப்பும் , வன்கொடுமை களை எதிர்த்து குரல் கொடுக்கும் மனோப வமும் கொண்டிருந்தார் என்பது வியப்பல்ல. பதவி, அதிகார போதைக்கு மயங்கி இந்துத்துவ கும்பலின் ஏவல் வேலை களுக்கு சில தலைவர்கள் அடமானம் வைக்கப்பட்ட இன்றைய சூழலில் களத்தில் இறங்கியது என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிக்க வாராது வந்த மாமணி போலத்தான் என்றால் மிகையல்ல.
ஒரு தலைவன் என்பவனோ அல்லது ஒரு இயக்கமோ அன்றைய அடிப்படைத் தேவையின் சூழலைப் பொறுத்து காலத்தின் கட்டாயத்தால் உருவாக்கப்படுபவர்கள்தானே தவிர தன்னியல்பாக உருவாகிறவர்களல்ல. அப்படி தன்னியல்பாக நானே தலைவன் என்று வந்தவனைகளம் அனுமதித்ததும் கிடையாது அப்படியே ஒருவேளை களத்தில் இறங்கிவிட்டாலும் நெடுநாள் தாக்குப்பிடித்து நின்றதும் கிடையாது. மேற்குறிப்பிட்டபடி அபியான் என்ற இதழில் பணியாற்றியதை கைவிட்டு பின் சட்டப் படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த இந்த இளைஞனை உணர்வுடன் தூண்டியது உனா(una ) என்ற கிராமத்தில் நடந்த வன்கொடுமை சம்பவம்.
அதாவது இறந்த பசு மாட்டின் தோலை உரித்ததாக சொல்லி நான்கு தலித் இளைஞர்களை பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் உள்ள இந்துத்துவ சங்க பரிவார குண்டர்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.இந்த சம்பவம் நாடு முழுவதும் காணொளியாக வலைத்தளங்களிலும், செய்தியாக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் பிரச்சுரமானது மேலும் மக்களிடையே பல அதிர்வுகளையும் உருவாக்கியது.இந்த சம்பவத்தை பல முற்போக்காளர்கள் , கருத்தியலாளர்கள் விவாதித்தார்கள், கண்டித்தார்கள். ஆனால் ஜிக்னேஷ் மேவானியோ இக்கொடுமையைக் கண்டித்து குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்திலிருந்து பெருந்திரளாக இளைஞர்களுடன் உனாவை நோக்கி யாத்திரையாகச் சென்றார்.
ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மனவலிகள் நிறைந்த வாழ்க்கையினை பாடமாக படித்தாலும் வராத சோகம், அவர்களை நேரில் சந்திக்கும் பொழுது அவர்களின் கண்களில் வழியும் ஒரு துளி கண்ணீர் ஓராயிரம் சோக கதைகள் படித்த வலியினை தரும். ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டும்தான் இத்தகைய வறுமையிலும், ஏழ்மையிலும் வாழ்கிறார்களா என்றால் - இல்லை; மற்ற சமூகங்களிலும் வறுமையும் ஏழ்மையும் உண்டு, ஆனால் வன்கொடுமைகள் (ஆணவக்கொலைகள், சாதியச்சீண்டல், பொதுத்தளத்தில் பங்கெடுப்பதில் சிக்கல்) என்பது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு எதிராகத்தான் நிறைய நடக்கிறது.உனாவை அடைந்ததும் அங்கு பெருந்திரளாக கூடியிருந்த மக்கள் முன்னால் உரையாற்றினார்.
அந்த கூட்டத்தில் பெரும் முழக்கங்களாக எழுப்பப்பட்டது யாதெனில் தலித்துகள் இறந்த மாடுகளை அகற்றுதல் போன்ற இழித்தொழில்களை விட்டொழிக்க வேண்டும். அதேபோல ஊராட்சிகளில் உள்ள கடைநிலை தொழிலான தோட்டி(mineal) போன்ற தொழில்களை விட வேண்டும். அம்பானிகளுக்கும் , அதானிகளுக்கும் இலவசமாக நிலங்களை கொடுக்கும் இந்த அரசு பஞ்சமி நிலங்களை மீட்டு தலித்துகளுக்கு தலா 5 ஏக்கர் கொடுக்க வேண்டும்.இந்த முழக்கங்கள் மாநிலம் முழுவதும் பரவியதோடு குறைந்தபட்சம் இளைஞர்களிடம் கொஞ்சம் சுரணையை தூண்டியது.
இதன் விளைவாக இறந்த மாடுகளை அகற்றுவதை கைவிட்டார்கள், ஆனால் வழக்கம் போல அரசிற்கு எந்த சுரனையும் வரவில்லை. குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களின் வீதிகள் இறந்த மாட்டினை அப்புறப்படுத்தாதன் காரணமாக நாற்றமாய் நாறத் தொடங்கியது விளைவு நாடே திரும்பி பார்த்தது. இந்திய திருநாட்டின் பிரதமர் திருவாளர் மோடி தனது திருவாய் திறந்தார் “தலித்துகளை தாக்குவதாக இருந்தால் முதலில் என்னை தாக்குங்கள்” என்று போலி மற்றும் நீலி கண்ணீர் வடித்தார்.
மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி கொண்டுவரப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து உத்திர பிரதேசத்திலிருந்து தெற்கே குமரி வரை ரத யாத்திரை என்ற பெயரில் இரத்த யாத்திரைகள் நடந்த இந்நாட்டில் வன்கொடுமைகளை கண்டித்து ஜிக்னேஷ் மேவானியின் தலைமையில் நடத்தப்பட்ட அம்ருதா யாத்திரை மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல.இந்த யாத்திரையின் எழுச்சியில் விளைந்த பொறி கருத்தியலா ளர்களையும் தட்டி உணர்வூட்டியது. இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் அம்ருத் லால் என்ற எழுத்தாளர் குஜராத் மாநில அரசின் சார்பாக வழங்கப்பட்ட விருதை திருப்பி கொடுத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
உனாவை நோக்கி நடந்த யாத்திரையில் கருவாகி, பெருங்கூட்டத்தின் எழுச்சியில் உருமாறி இறுதியில் ராஷ்டிரிய தலித் அதிகார அமைப்பு மற்றும் உனா தலித் அட்யாச்சார் லதாத் சமிதி என்ற இயக்கம் உருவானது, ஜிக்னேஷ் அதன் ஒருங்கிணைப் பாளரானார். ஒருங்கிணைப்பாளரானதும் தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பஞ்சமி நிலம் வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்தார். இதைக் கண்ட அரசு உடனடியாக அவரை அழைத்து இது இந்திய , பாகிஸ்தான் எல்லையில் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்கும் எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், அவரின் கோரிக்கை நிறைவேற்றபடும் என்றும் உறுதியளித்தது. மேலும் பல்லாண்டு காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கான வேலையை நிரந்தரமாக்கியது போன்றவை இவரின் போராட்டத்திற்கு கிடைத்த பெரும் வெற்றிகள்.
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்த அவர் தலித் மக்களுக்கு போதிய முக்கியத்துவம் தரவில்லை என்று சொல்லி அதிலிருந்து விலகினார். இன்று தனது அமைப்பிற்காக அல்லும் பகலும் அயராது உழைக்கிறார். பத்திரிக்கையாளர் ஒருவர் உங்கள் அமைப்பை குஜராத்தைத் தாண்டி விரிவுபடுத்துவீர்களா என்று கேட்ட கேள்விக்கு, ஆம் உத்திர பிரதேசம் , ராஜஸ்தான் , கேரளம் , கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலங்களிலும் விரிவுபடுத்தப்படும் மற்றும் குஜராத் மாதிரி எனப்படும் பொய்ப்பிம்பம் பிரச்சாரமாக்கப்படும் என்றார்.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அருகிலே உள்ள கேரளா , கர்நாடகத்தை குறிப்பிட்டுப் பேசியவர் மறந்தும் கூட தமிழ்நாட்டைக் குறிப்பிடவில்லை ஏனெனில் இது பெரியார் பண்படுத்திய மண் என்பதை நன்கு புரிந்திருப்பதுதான் அவரின் அரசியல் அறிவு.குஜராத் மாநிலத்தின் வட்கம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டார், தேர்தல் பிரச்சாரத்தில் மேடைதோறும் மிகவும் தீர்க்கமாகப் பெரியார், அம்பேத்கர் பெயரை உச்சரித்தார் இறுதியில் பெரும் வெற்றியைப் பெற்றார்.
பல ஆண்டுகாலமாக பாஜக -வின் கட்டுபாட்டிலிருந்த தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சக்கரவர்த்தியை இருபதாயிரம் வாக்குகள் வித்தியாசத்திற்கும் மேல் வீழ்த்தி தனது சாம்ராஜ்யத்தை நிறுவினார். இன்றைக்கு குஜராத் மாநிலத்தின் சட்ட மன்றத்தில் சுயேச்சையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் சட்டமன்ற உறுப்பினராக வலம் வருகிறார். மென்மேலும் அவர் சமூகப் பணி தொடர வாழ்த்துவோம், மேலும் அவருடன் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாக்குர் என்ற இளைஞரையும் வாழ்த்துவோம்.வாழ்க இவர்கள் போராட்டம்... வளர்க இவர்கள் அரசியல் பணி...வெல்க இவர்கள் இலட்சியம்...