ve aanaimuthu

தந்தை பெரியாரின் எழுத்தையும் பேச்சையும் பொருள்வாரியாகக் காலமுறைப்படுத்தி (25 தொகுதிகளாக இப்போது கிடைக்கும்) 'பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்' தொகுப்பிற்குக் காரணமானவர். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவர் ஒப்புதலைப் பெற்று , 1974இல் வெளிவந்த அரிய கருவூலம். அதனைத் தொகுத்து வகைப்படுத்தி வெளியிட்ட பேருழைப்பாளர் தோழர் ஆனைமுத்து.

மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்காரியத் தெளிவூட்டும் கொள்கை ஏடாகச் 'சிந்தனையாளன்' இதழை நாற்பத்து மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருபவர்.

பெரியாரியலை முழுமையாக அறிவதற்கும் வளர்ப்பதற்குமான, ஓராண்டுகாலத் தொடர்வகுப்பைப் பெரும்சுமையோடு அம்பத்தூரில் நடத்திக் கொண்டிருப்பவர்.

மண்டல்குழுப் பரிந்துரை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட மூளையாகவும் முதுகெலும்பாகவும் திகழ்ந்தவர் !

நடுவணரசில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு பெற முதன்முதல் கோரிக்கை வைத்தவர்; தொடர்ந்து தில்லியிலேயே தங்கிப் போராடியவர் ; வெற்றி பெற்றவர்.

வடமாநிலங்கள் பலவும் , வகுப்புவாரி உரிமையைப் பெறுவதற்கு முதன்முதலாகப் போராடச்செய்து வழிகாட்டியவர்!

தமிழக அரசு (மக்கள் திலகம் ஆட்சிக்காலத்தில்) பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்த முழுமுதற் காரணமானவர் !

* * *

விளம்பர வெளிச்சம் பெறாத சாதனையாளர் இவர்! செயலூக்கம் மிக்க பெரியாரியல் சிந்தனைப் பேரறிஞர் இவர்!

வெற்று அரட்டைகளில் போதையேறிக் கிடப்போர், பெரியாரை எதிரியாகக் காட்டி உண்மையான எதிரிகளைப் பாதுகாக்கும் வேலையைச் செய்து கொண்டிருப்பது இப்போதும் நடக்கிறது!

அருட்பாவை மருட்பாவாகக் காட்டி, வள்ளலாரை வழக்குமன்றம் வரை இழுத்தடித்த நாடு இது! அறிவுத்தள மாற்றம் எளிதாய் நடந்துவிடாது.

தமிழ்ச்சமூகத்தை மாற்றியமைக்க விரும்பும் ஒவ்வொருவரும், ஆனைமுத்து நூல்களை ஆழ்ந்து பயிலவேண்டும்.

'ஆனைமுத்து கருத்துக்கருவூலம்' என அவர் எழுத்துகள் 20 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ( சில கொத்துகள் கிடைக்கலாம் : எண்>> 98413 35522 )

பெரியார் வரலாற்றை அரிய ஆய்வு நோக்குடன் நூலாக்கும் பணியில் எவர் துணையும் இன்றி - உடல் நலிவிற்கிடையே இப்போது ஈடுபட்டுள்ளார். ஐந்து பாகங்களாக அந்த வரலாற்றுப் பெருநூல் வெளிவர வேண்டும் என்பது அவர் திட்டம்.

தோழர் வே ஆனைமுத்து அவர்களுக்கு 21.6.2017ஆம் நாள் 93ஆம் அகவை தொடங்குகிறது! அவர் முழுநலத்துடன் பல்லாண்டு வாழவேண்டும். வாழும் காலத்திலேயே அவரின் அறிவுச் சேகரிப்பு அனைத்தும் தமிழினத்தின் கைகளுக்கு வந்துசேர வேண்டும் ; அறிவுலகம் கைகொடுக்க வேண்டும்.

அறிவாளர்களைப் போற்றும் சமூகத்தில் மட்டுமே, அறிவாளர்கள் தொடர்ந்து உருவாக முடியும்.

- செந்தலை ந.கவுதமன், சூலூர் பாவேந்தர் பேரவை.

Pin It