நக்சல்பாரியில் புரட்சி நடந்து 50 ஆண்டுகள் முடிந்து விட்டன. இந்திய புரட்சிகர இயக்கத்தின் ஒரு மைல் கல்லான அந்தப் போராட்டம் உண்மையில் இந்திய ஆளும் வர்க்கத்தின் அமைதியை சற்றே கலைத்துதான் போட்டது. விவசாயி என்றால் கையில் கலப்பையுடன் காடுகளில் உழைக்க மட்டுமே தெரிந்தவன், காடுகளை செப்பனிட்டு அதைத் திருத்தி கழனியாக்கி விவசாயம் மட்டுமே செய்ய தெரிந்தவன் என்ற வழமையான கண்ணோட்டத்தை மாற்றி அவனுக்கு ஆயுதமும் ஏந்தத் தெரியும், தனக்கு எதிரான வர்க்க எதிரிகளை ஒழித்துக் கட்டவும் தெரியும் என நிரூபித்துக் காட்டியது நக்சல்பாரி புரட்சி. சிலர் அந்தப் புரட்சியைக் காலத்தை முந்திக்கொண்டு நடந்த புரட்சி என்று சொன்னார்கள். ஆனால் அப்படி சொன்னவர்கள் எந்தக் காலத்திலும் எந்தப் புரட்சியையும் செய்யத் துணிவற்ற கோழைகள் என்பதும், சந்தர்ப்பவாதிகள் என்பதும் பின்னாளில் அம்பலமானது. புரட்சி தோல்வியைத் தழுவினாலும் அது இந்தியா முழுவதும் இருந்த விவசாயிகளுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்தது. தங்களாலும் நிலபிரபுக்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை நக்சல்பாரி புரட்சி விதைத்துச் சென்றது.

naxalbari

 எல்லாவற்றிக்கும் மேலாக இந்திய கம்யூனிச இயக்கத்தில் உண்மையான புரட்சிகர சக்திகள் யார்? துரோகிகள் யார்? என்பதை நக்சல்பாரி புரட்சி அம்பலப்படுத்தியது. CPM கட்சியின் ஓட்டாண்டித்தனத்தைப் புரட்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது. தேர்தல் பாதையில் நின்று மேற்குவங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றி இருந்த CPM புரட்சியை அடக்க இழிவாக அரச பயங்கரவாதத்தை மேற்கொண்டதோடு கட்சியில் இருந்த புரட்சிகர சக்திகளை வெளியேற்றியும், காட்டிக் கொடுத்தும் பெரும் துரோகத்தை இழைத்தது. இதன் மூலம் தனது அரசுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பார்த்துக் கொண்டது. புரட்சியை ஒடுக்குவதில் CPM மற்றும் காங்கிரசு கட்சிக்கும் இருந்த கள்ளக்கூட்டு நாடு முழுவதும் இருந்த கம்யூனிஸ்ட் அணிகள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தி, அது பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிரிய வழி ஏற்படுத்தியது. அன்று முதல் இன்று வரை CPM தனது காங்கிரசு மீதான கருணைப் பார்வையை விட்டுக் கொடுக்கவில்லை. அது இந்திய மக்களுக்கு எவ்வளவுதான் பெரும் துரோகங்களை செய்திருந்தாலும் லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளைக் கொன்று போட்டிருந்தாலும், இந்தியாவின் வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்குக் கூட்டிக் கொடுத்திருந்தாலும் அது திரும்பவும் அவர்களுடன் கூட்டணி வைக்கத் தயங்கியது இல்லை. தனித்து நிற்கும் திராணியற்று கழிசடைக் கட்சிகளின் ஊன்றுகோலை பயன்படுத்தியே நின்று வருகின்றது. அதற்காக அது வெட்கப்பட்டதுமில்லை, அதை விமர்சனம் செய்துகொண்டதுமில்லை.

 “புதிய விசயங்கள், அவை வளரும்போது எப்போதும் இடர்பாடுகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தே ஆக வேண்டும். எவ்வித இடர்பாடுகளுக்கும், பின்னடைவுகளுக்கும், கடின முயற்சிகளுக்கும் இடம் தராமல் சோசலிசப் போராட்டம் சுமுகமாக எளிதில் வெற்றி பெறும் என்று எண்ணுவது வெறும் கற்பனையே” என்று மாவோ சொல்வார். அப்படி தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும், தியாக உணர்வுடனும் நடத்தப்பட்ட நக்சல்பாரி புரட்சி ரத்தவெள்ளத்தில் தோற்கடிக்கப்பட்டதற்கு CPM மற்றும் காங்கிரசு கட்சியே காரணமாகும். இந்தியாவில் புரட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கோடிக்கணக்கான மக்களின் அபிலாசைகளை ஏமாற்றுவழியில் மடைமாற்ற ஒரு போலியான சக்தியாகவே இன்றும் CPM இருந்து வருகின்றது. மாவோயிஸ்ட்கள் பற்றியும் நக்சல்பாரிகள் பற்றியும் அவர்களின் நிலைப்பாட்டில் இன்று வரையிலும் பெரிய மாற்றம் அடையவில்லை. அவர்களை எதிரிகளாகப் பார்க்கும் அவர்களின் பிழைப்புவாத பார்வையில் எதிர்ப்புரட்சி சக்திகள்தான் வலிமை பெற்றுக்கொண்டு இருக்கின்றன.

  மேற்குவங்கத்தில் சிபிஐ மற்றும் சிபிஎம்மின் திரிபுவாத செயல்களுக்கு எதிராக புரட்சிகர மாணவர்கள் அப்பொழுது சித்தாந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள். ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. CPM கட்சியில் உள்ள மாணவர் அமைப்புகள் தங்கள் தலைமை எப்படிப்பட்ட தவறான முடிவெடுத்தாலும் அதற்கு எதிராக எந்தவிதப் போராட்டத்தையும் முன்னெடுப்பது கிடையாது. கருணாநிதியின் காலில் விழுந்து கிடந்தாலும், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்தாலும் கடைசியில் யாரும் கிடைக்காமல் விஜயகாந்தின் காலில் விழுந்து கிடந்தாலும் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அவர்களைப் பொருத்தவரை நாளை தாங்களும் பதவிக்காக அதுபோன்ற நிலைப்பாட்டை எடுக்கக் கூடியவர்கள் என்ற நிலையில்தான் உள்ளார்கள். புரட்சி என்பதெல்லாம் ஒரு பழங்கனவாய், நடக்க வாய்ப்பற்ற ஒரு சாகச நிகழ்ச்சியாய் அவர்களின் மனங்களில் பதிவாகிவிட்டன.

 நக்சல்பாரி புரட்சியைத் தொடர்ந்து உருவான நக்சல்பாரி இயக்கம் இன்று எந்த நிலைமையில் இந்தியாவில் உள்ளது எனப் பார்த்தோம் என்றால் அது சொல்லிக் கொள்ளும்படி  நல்ல நிலையில் இல்லை என்பதுதான் வெளிப்படை. அது பல நூறு குழுக்களாக உடைந்து கிடக்கின்றது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளும் சித்தாந்த சமரசங்களும் அவர்களை  இன்று எந்த ஒரு முன்னெடுப்புகளுக்கும் தகுதியற்ற வலிமையற்றவர்களாக மாற்றியிருக்கின்றது. ஆளும் வர்க்கத்திற்கு எச்சரிக்கை  செய்யும் நிலையில் இருந்து ஆளும் வர்க்கத்திடம் எச்சரிக்கையாய் இருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். தங்களையும் அமைப்பையும் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள். ஏதாவது ஒரு கணத்தில் மக்கள் தங்களை ஏற்றுக்கொண்டு புரட்சிக்கு அணியமாவார்கள் என்ற சின்ன நம்பிக்கைதான் அவர்களை இன்னும் உயிர்ப்போடு செலுத்திக் கொண்டு இருக்கின்றது.

 சுதந்திரத்திற்குப் பிற்பட்ட ஆண்டுகளில் மக்களிடம் இருந்த போராட்ட உணர்வும், தன்னலமற்ற குணமும் உலகமயமாக்கல் காலகட்டத்தில் பெரும் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பெரும் பொருளாதார நெருக்கடிகளும், வேலையிழப்புகளும், அவர்களின் விழுமியங்களை வீழ்ச்சியடையச் செய்திருக்கின்றது. மக்களுக்கு அறம் சார்ந்த சிந்தனைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டிய அரசுகள் அவர்களை மட்டமான மலிவான சிந்தனை உடைய மனிதர்களாக மாற்றியிருக்கின்றன. இப்போது உள்ள இந்திய மக்களில் பெரும்பான்மையினருக்கு நன்றாகவே தெரியும் தங்கள் வாழ்வின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்த அரசுகள் தான் காரணம் என்று. ஆனால் அவர்கள் அதற்காக தேர்ந்தெடுக்கும் பாதை புரட்சிப்பாதை அல்ல. அவர்கள் திரும்பவும் மோடி போன்ற பாசிஸ்டுகளையே தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த அளவிற்கு அவர்களின் மனது அரசியலற்ற, அற்பத்தனமான நிலைக்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மேலும் புரட்சிகர சக்திகளை நெருக்கடிக்கும் விலகலுக்கும் இட்டுச்செல்கின்றது.

 இந்திய சமூகத்தில் புரட்சி வரும் வரும் என்ற நம்பிக்கையில் அதற்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்துக் கொண்ட பல பேர் சோர்வடைந்து இன்று பெரும் உளவியல் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றார்கள். தங்களோடு இருந்த பல பேர் தங்களைவிட்டு CPM கட்சியிலோ, இல்லை மற்ற பல தேர்தல் அரசியல் கட்சிகளிலோ சேர்ந்து இன்று கோடீஸ்வரர்களாகவும் குறைந்த பட்சம் சமூகத்தில் பொருளாதார பிரச்சினைகள் அற்று வாழும் ஒரு நல்ல நிலையில் வாழ்வதைப் பார்த்து கையை பிசைந்து கொள்கின்றார்கள். இது சுய பரிசீலினை செய்துகொள்ள வேண்டிய காலம். எங்கே தவறு செய்தோம், ஏன் பெரும்பான்மை மக்களிடம் தங்களுடைய கருத்துக்கள் சென்று சேராமல் போனது என்பதைப் பற்றியெல்லாம் நக்சல்பாரிகள் விமர்சனம் செய்துகொள்ள வேண்டும். உலகத்தில் மிகச்சிறந்த ஒரு சித்தாந்தத்தை கையில் வைத்திருந்தும் ஏன் இந்திய சமூகம் இவ்வளவு மோசமான நெருக்கடி நிலை காலத்தில்கூட அதைப் புறக்கணிக்கின்றது என்பது சாதாரண, கடந்துபோகும் ஒரு கேள்வியல்ல. நின்று ஊன்றி கவனிக்கப்பட வேண்டியது.

 எந்த மண்ணில் வேர்கொள்ள விரும்புகின்றோமோ அந்த மண்ணின் தனித்த கூறுகளையும் சிந்தனை ஓட்டத்தையும் நாம் சுவீகரித்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த மண்ணில் தனித்த கூறு என்பது பார்ப்பன எதிர்ப்பும் அதை முன்னிருத்திய திராவிட இயக்க சித்தாந்தமும் ஆகும். அதை இங்கிருந்த புரட்சிகர சக்திகள் எப்படி கையாண்டார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகின்றது. அவர்கள் தங்களுக்குத் தேவைப்பட்ட போது பெரியாரைப் புகழ்ந்தார்கள், தேவைப்படாதபோது அவரை அவமதித்தார்கள். பார்ப்பன எதிர்ப்பு பேசினார்கள் ஆனால் சாதி ஒழிப்பைப் பற்றியோ, இல்லை மூட நம்பிக்கை ஒழிப்பைப் பற்றியோ கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. அதைக் குறைத்தே மதிப்பிட்டார்கள். அதற்காக  எந்த ஒரு தொடர்பிரச்சாரத்தையும் அவர்கள் எப்போதும் முன்னெடுக்கவில்லை. மாறாக அப்படி முன்னெடுத்த பெரியாரை வறட்டு நாத்திகவாதி என்று அவதூறு செய்தார்கள். இன்று அந்த நிலையில் கொஞ்சம் மாற்றம் வந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் இது போதாது. அவர்கள் முழுமையாக பெரியாரையும், அம்பேத்கரையும் உள்வாங்க வேண்டும். அதற்கு ஏற்றாற்போல தங்களது செயல் தந்திரத்தை மாற்றியமைக்க வேண்டும்..

 இந்திய சமூகம் சாதிகளால் மிக சிக்கலாக கட்டியமைக்கப்பட்ட ஒரு சமூகம். இங்கு ஒருவனின் சிந்தனையை வடிவமைப்பதில் சாதியே முக்கிய பங்கு வகிக்கின்றது. இயல்பாகவே இந்தச் சாதிய சமூகத்தில் மிக புறக்கணிக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தலித்துகளே ஆவார்கள். அவர்கள் தான் இந்திய சமூகத்தில் புரட்சிகர சக்தியாக எளிதில் உருமாற்ற ஏதுவானவர்கள். அப்படிப்பட்ட சக்திகளை வென்றெடுக்க வேண்டும் என்றால் பெரியாரின் கொள்கைகளையும், அம்பேத்கரின் கொள்கைகளையும் விட்டால் புரட்சிகர சக்திகளுக்கு வேறு மாற்று வழியே கிடையாது. அவர்களுக்குப் பிடித்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் இருவரின் சிந்தனைகளையும் பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களை தங்கள் வசப்படுத்த முயலவேண்டும். அப்படி செய்யாமல் திரும்ப திரும்ப அவர்களை முற்றாக புறக்கணிக்கும் போக்கு நிச்சயம் தலித்துகளை எதிர்நிலையில் கொண்டுபோய் எதிர்ப்புரட்சி சக்திகளிடம் நிறுத்திவிடும். நக்சல்பாரி புரட்சி பழங்குடியின மக்களால்தான் முன்னெடுக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே தலித்துகளை வென்றெடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உறுதியாக அவர்கள் செய்ய வேண்டும்.

   மேலும் நக்சல்பாரி இயக்கங்கள் பல துண்டுகளாக உடையக் காரணமாக இருந்த கட்சிக்குள்ளாக இருந்த அதிகாரவர்க்கப் போக்கு, கட்சியின் கடைமட்ட உறுப்பினர்களை ஏளனமாக பார்க்கும் மேட்டிமைத்தனம், சாதிவெறியர்களுடன் வைத்திருக்கும் கள்ள உறவு போன்றவற்றை கைவிட வேண்டும். கட்சியின் கொள்கைகளை எந்தத் தலைவனும் நேரடியாக மக்களிடம் எடுத்துச் செல்வதில்லை அதைக் கட்சியின் கொள்கைகளை ஏற்று அதற்காக தன்னுடைய சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து மக்கள் மத்தியில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துக் கட்சிப் பணியாற்றும் உறுப்பினர்களே கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் செல்கின்றார்கள். அப்படிப்பட்ட கட்சியின் கடைமட்ட உறுப்பினர்களிடம் கட்சியின் தலைமைகள் குறைந்தபட்ச நேர்மையையாவது கடைபிடிக்க வேண்டும். சொந்த வாழ்க்கையில் கம்யூனிச பண்பைக் கடைபிடிக்காமல் இருந்துகொண்டு ஊருக்குள் புரட்சியாளன் வேடம் போடுவதெல்லாம் ரொம்ப நாளைக்குக் களத்தில் நிற்க உதவாது. அது கட்சியை ஒரு கட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகச் செய்துவிடும்.

  எனவே நக்சல்பாரிப் புரட்சியில் இருந்து இந்திய விவசாயிகள் கற்றுக்கொள்ள இன்றும் எவ்வளவோ செய்திகள் உள்ளன. குறிப்பாக விவசாயிகள்- தொழிலாளர்கள் ஒன்றிணைந்து புரட்சியை முன்னெடுத்தது. அதுபோல இன்றும் விவசாயிகள் தங்களுக்கான விடுதலையை வென்றெடுக்க தொழிற்துறை பாட்டாளி வர்க்கத்தோடு ஒரு நிரந்தரமான ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அது இன்னும் பல மடங்கு போராட்டத்தின் வீச்சை பரவச்செய்யும், ஆளும் வர்க்கத்தை அடிபணிய வைக்கும். அதே போல நக்சல்பாரி புரட்சியாளர்களும் தங்களுடைய இன்றை நிலை எப்படி இருக்கின்றது, இனி வரும் காலங்களில் எப்படி இருந்தால் சிறப்பாக புரட்சியை நோக்கிய பயணத்தில் முன்னேற முடியும் என்பதை சுயபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியா ஏங்கிக் கிடக்கின்றது ஒரு பெரும் புரட்சியை ருசிப்பதற்காக. ஆனால் அது எப்போது நடக்கும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

- செ.கார்கி