பிசாசின் கண்கள் கொண்டு காத்திருக்கிறேன்... உன் சாம்பல் நி்ற கனவுகளை அள்ளி அள்ளி பூசும் உன் தெருவோரத்து மாலை நேரத்தை அகந்தையில் மொண்டு குடிக்கும் தீராத நீ கொண்டவன் நான்...!
நீ வருவாய் என தலையற்ற முண்டத்தின் பிடி சோறு கழுத்திறங்க சப்பித் தின்னும் நா கொண்டு சுவைத்து கதைத்து மெல்ல சிரிக்கும் என் அகமெல்லாம் உன் புறாக்கள். நீ விட்டு சென்ற மலை உச்சியில்.. துக்கித்த நினைவுகளை சிலுவையில் அறைந்து கொண்டே இருக்கிறேன். தந்திர அருவிகள் கொட்டுவதில் பட்டும் படாமல் உன் சாயல்கள்.
ஆதி நீயே என்றாய்..... ஆதவன் நீயே என்றாய். ஆகச்சிறந்தவன் நீயே என்றாய். ஆம்... அசுரனும் நீயே என்றாய்... அடிப்பொருள் கருகி....அணுக்கள் பிளக்கும் அதிரூப கண்களை பிடுங்கிக் கொண்ட நாளில் நான் என்ன தவம் செய்வேன்... எங்கு தான் என்ன செய்வேன்.. உப்பரிகை தாண்டிய மாடப் புறாக்களின் கவளத்தில் கொக்கரித்து உள் உரியும் உன் உள்ளாடை முகரும் ராத்திரி யாகத்தை அப்படியும் அறிவேன்.. பிறகெப்படியும் திரிவேன்.
மாயம் செய்து மந்திரம் ஆகிறேன். மல்லிகை தோட்டத்தில் பாம்பின் வளைவுகள் என் குடியிருப்பாகிறது. தத்தம் கனவுக்குள் தத்தகிட சொல்லுதல் உன் வாசனை. மூளையின் மடிப்புக்குள் கால் பதிந்து போகும் உன் கொலுசொலி ஊர்வலத்தை பிண ராத்திரி என்பதா...வன யாத்திரை தின்பதா..?
சொல் அல்லது மெல். திற அல்லது பற.
புகும் நினைவுக்குள் குறிப்பு எழுத நீண்டு நிரவி... தடித்த யந்திர தளத்தில் உன் யாகம் மேகமாகி ஊர் விட்டு கூடு பாயுதல் சித்திர பிழைகள். சுரண்ட சுரண்ட ச்சீ.......புளிக்கும் சுவர்களை பின்னால் இருந்து வரைகிறாய். முன்னால் தோண்டும்.....முகத்திரைகளையும் சாத்திர மூக்குத்திக்குள் கொஞ்சத்தையும் களை. அமிலத்தின் சூதுதன்னை அசலாக்கும் எட்டிப் பார்த்தல் உன் ஜன்னலின் கோரத் தாண்டவம். எனக்கான உயரம் நீ என்று எண்ணற்ற பொருளை என்னிடமும் வைத்தாய். வைத்த கண்களை கோவிலுக்குள் பிடுங்கி வீசி விட்டு குருட்டுக் காவியம் படித்து சாகிறது சாமி. வா.. ஒப்பாரிக்கு... வந்து ஒத்துழை. என்னை வெட்டி கூறு போடும் உனக்கு வரம் சொல்ல வாய்த்திருக்கும் உன் வாசலில் ரத்தக் கோலங்கள் சிதறும் என் ஆன்மாவின் சூத்திர தனங்கள் கடவுளின் சல்லித்தனங்களாகட்டும். கூட உன் காதல் யுக்தியாகட்டும்.
பட்டாம் பூச்சிகளின் பரிதவிப்பை நீ கவிதையாக்கு. உன் கனவாக்கு. உன் கணவனாக கூட ஆக்கு. நீ ஆக்கிய அத்தனை என் பிணங்களையும் அள்ளி அள்ளி தின்னும் ஆயுள் என்னிடம் மட்டுமே இருக்கிறது. அது விடாது பாவம். உன்னை அலைந்து உன்னை கலந்து உன்னிலேயே இருந்து நீயாகவே திரியும் பறவையின் சிதிலக் காட்டுக்குள் இரையாக்கும் உன்னை. பின் இறையாக்கும் என்னை. கடவுளாகி கண்கள் கலங்க உன்னையே மீட்டெடுத்து உன் சாபம் போக்கி பீனிக்ஸ் பறவையாக்கி உன்னை மீண்டும் என் தேக தீயில் கருக விடுவேன். இது மர்ம தேசத்தின் ஆன்ம பூட்டுக்களை உடைக்கும் யாக தந்திரம். சாவியின் துளியெங்கும் உன் என் காதல் ஒழுகும் தாபத்தை யாரும் அறிவார்.
நாமும் அறிவோம். அத்தனை உண்மைகளையும் பொய்யாக்கும் உன் பிறழ்வுக்குள் நான் நீயாகவே ஆனதில் திருப்பம் கதைக்கும் உன் சிதைக்கும். ஆனது ஆகட்டும். எழுந்திரு..... எழுந்த பின் இரு. இருந்த பின் இரு.. இருந்த பின் இற. இறந்த பின் என்னை திற. தீராத நதி தேசத்தில் நீர் அள்ளி முகம் பார்க்கும் அந்த பெண் நீயே என மீண்டுமா சொல்ல வேண்டும். சொல்லுதலின் குதர்க்கத்தை யுக்தியின் முக்தியை சொல்லாமலும் நா அறுபட..... காதறுபட... மொழி அறுபட... மூழ்கலாம். முகவரிக்கு பின் உன் மறுதலித்தலை கடவுளாக்கி கவிதை அடிக்கலாம். மேடைகளின் கொப்புளத்தில் உன் தனிமை தீவுகள் இனி உருவாகிக் கொண்டே இருக்கும்.
பைத்தியம் பிடித்த உன் எண்ண பூச்சிக்கு என் காடுகளை பலியிடுகிறேன். தீயிட்டு சாகும் உன் மூங்கில்களில் என் இசை மூச்சடைத்து சாகட்டும். வெண்ணிற இரவை நாசமாகும் சித்திரக் கனவுகளை வரவேற்கிறேன். நிறம் மாறும் பூக்களை வளர்க்கும் உன் தோட்டத்தில் நான் உயிர் மாறும் வாசம். உன் திசை எங்கும் என் வேர்கள் உனையே பிறப்பித்து திரியும். இது சாபத்தின் மோட்சம். சாட்சியற்ற ராட்சசம். கடந்து போகவே முடியாத பிசாசின் பிடியில் உன் மெழுகுவர்த்தி உருகி உருகி சேர்ந்து கொண்டே இருக்கும். உன் கடல் முழுக்க குடித்து வயிறு வெடித்து உன் நினைவுப் புழுக்களாய் நெளியும் வரம் பெற்ற ஒற்றை துகள் நான். உன் வழியெங்கும் பொட்டிட்டுக் கொண்டே நகரும் நிறமற்ற உறவுக்குள் என் சித்திரம் நீ உடைக்க காத்திருக்கும் வெற்று சுவற்றின் பின்பக்கம்.
வா வந்து உடை. கழுத்தில் கால் வைத்து அழுத்து. கழுத்தெலும்பு உடை பட உடை பட கை கோர்த்து நீ சொன்ன கவிதை ஈனக்குரலில் சொல்ல வேண்டும். சாத்திரம் உடைத்த மொட்டைமாடி காற்றை காற்று வெளியிடை கண்ணம்மா நின் காதலை எண்ணி களித்திருந்தேன் என தம் கட்டி உயிர் மூச்சு பொங்க உன் மூச்சு திங்க பாட வேண்டும்.
வெற்றுத்தாளின் நுனியெங்கும் என் கண்கள் கீறிய கருப்பு சொட்டல்களை கொண்டே தீட்டப்படும் உன் நிற கவிதைகள். தாண்டி செல்லும் கல்லறைகளில் அவைகள் உன் பிணங்களாகி நாறுவதை ரசித்து காவல் காக்கிறேன்.... போ.
வாசத்தின் சபலத்தில் கபாலம் தாண்டி ஓட்டை விழும் புல்லாங்குழலில் என்றோ நாம் பேசிய ரகசிய காதல்.
இனி யார் கேட்கக் கூடும்.! யார் கேட்க..... அது கூடும்....?
- கவிஜி