கீழடி அகழாய்வை ஒட்டி பல்வேறு ஐயங்களும், குரல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல்வாதிகளின் குரல்களும் விரல்களும் எழுகின்ற வேகம் வியப்பூட்டுகின்றன. எல்லோரின் விரல்களும் தில்லியை நோக்கி மட்டுமே எழுகின்றன.
மைசூரைச்சேர்ந்த நடுவணரசின் இந்திய தொல்லியற்குமுகம் (இ.தொ.கு)- (Archaelogical Society of India), கீழடியில் இதுவரை இரண்டு அகழாய்வுகளை நிகழ்த்தியிருக்கிறது. இதில், இரண்டாவது அகழாய்வின் முடிவில், அங்கு எடுக்கப்பட்ட தொல்பொருள்களை மைசூருக்கு எடுத்துப்போகக்கூடாது என்று தமிழ்நாட்டில் வழக்கு போடப்பட்டதால், கடைசியில் மைசூருக்கு போகாமல், இமயமலை அடிவாரத்தில் உள்ள தேராடூனுக்கு கொண்டுபோய்விட்டார்கள்.
மைசூர் நிறுவனம், தான் நிகழ்த்திய ஆய்வில் கிடைத்த பொருள்களை தனது அலுவலகத்துக்கு எடுத்துப்போகக்கூடாது என்று சொன்னால், அது எப்படிச்சரியாகும் என்று ஒரு சாராரும், தமிழ்நாட்டில் எடுத்த அகழ்வுப்பொருள்களை தமிழ்நாட்டிலேயே வைக்கவேண்டும் என்று ஒருசாராரும் வாதிட்டனர். தமிழ்நாட்டில் வைப்பது என்றால் எங்கு வைப்பது என்பதற்கு மட்டும் எங்கும் விடைகிடைக்கவில்லை. நடுவணரசின் மைசூர் நிறுவனம் ஒரு கிளையை தமிழகத்தில் திறந்து தமிழ்நாட்டில் வைத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டுமா? அல்லது நடுவணரசு நிதி போட்டு அகழ்வு செய்து எடுத்த பொருள்களை தமிழக அரசிடம் ஆய்வுக்கு ஒப்படைத்து விடவேண்டுமா? அல்லது தமிழக தொல்லியற்றுறையிடம் கொடுத்துவிட வேண்டுமா? - என்ற கேள்விகளுக்கு எங்கும் பதில் இல்லை. குரல்கொடுத்த அரசியலார், ஆர்வலர், அறிஞர்குழாம் என்ற யாரும் இதுபற்றி பேசவில்லை. சென்னை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முன்வைத்தாலும், எடுத்த பொருள்களை ஆராய்ச்சி செய்யாமல் அருங்காட்சியகத்தில் வைக்கலாமா? கூடாது. ஆய்வு செய்ய அருங்காட்சியகத்தில் வசதியில்லை என்று அவர்களும் சொல்லிவிட்டார்கள்.
இந்நிலையில், மூன்றாவது அகழாய்விற்கு நடுவணரசு நிதி ஒதுக்காமல் கீழடியை இழுத்துமூட சதிசெய்கிறது என்ற பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்படி ஏதும் இல்லை என்று சொன்ன இ.தொ.கு, சொன்னமாதிரியே நிதியையும் ஒதுக்கி மூன்றாவது அகழாய்வை தொடங்கவும் தயாராகிவிட்டது. இந்த நிலையிலும், மூன்றாவது அகழ்வில் கிடைக்கப்போகும் பொருள்கள் தமிழகத்தில் இருக்குமா? மைசூருக்குப்போகுமா? அருங்காட்சி எங்கே? ஆராய்ச்சி எங்கே? என்ற கேள்விகளுக்கு விடையை எங்கும் காணமுடியவில்லை.
இதற்கிடையே, முதலிரு அகழ்வாய்வுகளையும் நடத்திய தொல்லியல் வல்லுநர் அமர்நாத்தை இடமாற்றம் செய்துவிட்டார்கள் என்றும், தமிழுக்காகவே பாடுபட்ட அமர்நாத்தை இடம் மாற்றியது நடுவணரசின் சதி என்றும் பலரும் கூறினார்கள். ஆனால், சென்னை மண்டிலத்திற்கு மாற்றல் கேட்ட அமர்நாத்தை, மூன்றாண்டுகளுக்கொருமுறை இடமாற்றம் செய்யும் பணிவிதிகளின்படியே, தேராடூனுக்கு மாற்றியிருப்பதாகவும் அறியமுடிகிறது. அதொடு, அமர்நாத்தின் இடத்திற்கு, தமிழ்நாட்டைச்சேர்ந்த சீராமன் என்ற தொல்லியல் வல்லுநரை இ.தொ.கு நியமித்து கீழடி வேலைகளும் துவக்கப்பட்டிருக்கின்றன என்றும் அறியமுடிகிறது.
இரண்டு அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் உத்தரகாண்டு மாநிலத்தின் தேராடூனுக்குப்போய்விட, அவற்றை அகழ்ந்தெடுத்த அமர்நாத்தும் அங்கே அனுப்பப்பட்டால், அப்பொருள்களில் மேற்கொண்டு செய்ய வேண்டிய் ஆய்வுப்பணிகளை செய்ய நல்ல வாய்ப்பிருக்கிறதல்லவா? அதைக் கருதாமல், அமர்நாத்தை ஏதோ ஆகப்பெரிய தமிழினப்போராளி மாதிரி கற்பனை செய்து அறிக்கைகள் விடுவது பொருத்தமாக இல்லை என்றே துறை பற்றி அறிந்தோர் கூறுகிறார்கள்.
விவரம் அறிந்தவர்கள் அனைவரும் ஒரே குரலில், இ.தொ.கு, நிறைய நிதி ஒதுக்கீடு செய்து, தொடர்ந்து கீழடியை ஆயவே விரும்புகிறது என்றும், இடமாற்றம், பணிமாற்றம் போன்றவை, துறைக்குள் இயல்பாக நடக்கும் செயற்பாடுகள்தான் என்றுமே சொல்கிறார்கள். மேலும், தமிழ்நாட்டினர்தான், அகழ்வுப்பொருள்களை தமிழ்நாட்டில் வைப்பதற்கு தேவையான அருங்காட்சியக இடத்தை ஏற்பாடு செய்து கொள்ளாமலும், அதில் வைக்கப்படக்கூடிய நூற்றுக்கணக்கான பொருள்களை ஆராய்ச்சி செய்ய தேவையான அறிஞர்கள் துறைவல்லுநர்களை நியமிக்காமலும், அவசரப்பட்டு வழக்குகள் போட்டு அரசியல் செய்துவிட்டார்கள் என்றும், இதுபற்றி நன்கறிந்தவர்கள் சொல்லும்போது, "நம்மிடம் இடமும் இல்லை, போதிய ஆளும் இல்லை, சரியான குறிக்கோளும் உத்தியும் இல்லை" என்ற நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
எது எப்படியோ! மைசூரையும் தில்லியையும் பார்த்து, அவர்கள் அப்படிச்செய்ய வேண்டும், இப்படிச்செய்ய வேண்டும் என்று நாம் தொங்கிக்கொண்டும், நம் எண்ணத்திற்கு ஒவ்வாதபோது அவர்களை கண்டித்துக்கொண்டும் போராடிக்கொண்டும் இருக்கிறோமா இல்லையா? இது தேவையா?
இது தேவையில்லாத ஒன்று என்றுதானே, பல ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் தொல்லியல் துறை தோற்றுவிக்கப்பட்டது? சுமார் 25 ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் உள்ளிட்ட பலர் இருந்த துறை இன்று எந்த நிலையில் இருக்கிறது? வெறுமே விரல் விட்டு எண்ணக்கூட ஆட்கள் இல்லாத நிலைக்கு தமிழக தொல்லியற்றுறை சுருங்கிப்போக காரணமென்ன?
தமிழகத்தில் பயிற்சிபெற்ற தொழிலிய அகழ்வாராய்ச்சி வல்லுநர், கல்வெட்டாய்வாளர், சுவடியாய்வாளர்கள் எண்ணற்றோர் இருந்தும், பல நல்ல ஆய்வுகளை அவர்கள் செய்திருந்தும் இந்தத்துறை பெருகாமல் சுணங்கிப்போனதற்கான காரணமென்ன?
தமிழ்நாட்டை அடிக்கு-அடி அகழ்ந்து ஆயக்கூடிய வல்லமை தமிழ்நாட்டில் இருந்தும், அதற்கான துறை இருந்தும், கீழடியை மட்டும் பிடித்துக்கொண்டு, மைசூரையும் தில்லியையும் நோக்கி விரல்களை ஆட்டிக்கொண்டிருப்பதில் என்ன தமிழ் ஞாயம் இருந்துவிட முடியும்?
நாங்கள் எதையும் உருப்படியாக செய்யமாட்டோம் - ஆனால் நீ செய்தால் ஒழுங்காகச் செய் என்று சொல்வதில் நமக்கு என்ன பெருமை இருந்துவிட முடியும்?
நமக்குத் தேவை, நமது தொன்மங்கள் நம்மால் உலகத்தரம் வாய்ந்த நேரிய முறையில் ஆயப்பட்டு, உலகுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். அதற்கு நாம் ஏற்படுத்திக் கொண்ட வாய்ப்புதான் தமிழக தொல்லியல், கடலாய்வு, சுவடியாய்வு போன்ற துறைகள்.
அழிந்து கொண்டிருக்கும் அத்துறைகளை மீட்டெடுத்து, கீழடி போன்ற நூறு அடிகளை அகழக்கூடிய வல்லமையை தமிழகம் பெறவேண்டும் என்பதே நேர்மையான நோக்காக இருக்க முடியும். தில்லி ஆராய்ச்சியாளரும் சரி, உலக ஆராய்ச்சியாளரும் சரி, சமற்கிருத சார்பெடுத்தோ, வடக்குச் சாய்வுற்றோ எழுதினால், தக்க பதிலை தரக்கூடியவர்களாக தமிழக தொல்லியற்றுறை வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே தவிர, ஓயாமல் நோஞ்சான் கோழியாக குரல் கொடுத்துக்கொண்டிருப்பதில் பொருளில்லை.
கையிலே வெண்ணெயை வைத்துக்கொண்டு, நெய் வேண்டும் நெய் வேண்டும் என்று தில்லியிடம் கையேந்திகளாக நாம் ஏன் இருக்கிறோம்?.
அவர்கள் செய்வதை அவர்கள் செய்யட்டும். நாம் செய்ய வேண்டியதை நாம் செய்தோமா?- என்று நம் நெஞ்சைத்தொட்டு பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி ஒதுக்கும்போது, எல்லாம் போக மீதி இருப்பதை, பிச்சை போடுவதைப்போல போடுகிறார்கள் என்றும், அதே அளவுடைய ஆய்வுகளுக்கு/அகழ்வுகளுக்கு நடுவணரசு முறையாக தேவையான அளவு நிதி ஒதுக்குவதால், அவர்களின் அகழ்வுப்பணி சிறக்கிறது என்றும் இருபுறத்தையும் அறிந்தோர் கூறுகிறார்கள்.
காட்டாக, கீழடியில் அமர்நாத்தின் தலைமையில் நடந்த இரண்டாவது அகழாய்வுக்கென்று உரூவாய் 70 இலக்கத்தை நடுவணரசு ஒதுக்கியிருந்ததை சுட்டிக்காட்டி, அதனாலேயே கீழடி ஆய்வு புகழ்பெறுமாறு அமைந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சீராமன் தலைமையில் நடக்கப்போகும் மூன்றாவது ஆய்வுக்கும் சரியான நிதி ஒதுக்கப்படும் என்றே ஊகிக்கிறார்கள். மேலுங்கூடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
தமிழக ஆய்வுகளுக்கு தாராள நிதி தேவையில்லை - தேவையான நிதியை ஒதுக்கவும் தமிழக அரசு தயங்குவதால் தமிழக ஆய்வுகள் தள்ளாடியதுண்டு என்று சொல்லும்போது நமக்கு வருத்தமே வருகிற்து.
சரி நாமே ஒரு கணக்குப்போட்டு பார்ப்போம். உரூவாய் 70 இலக்கம் என்பது என்ன? நமக்கு, ஆண்டுக்கு 30,000 கோடி வருமானம் தருகிறது தாசுமாக்கு மது. விடுமுறை போக, கணக்குப்போட்டால், வினாடிக்கு 14 இலக்கம் உரூவாய் வருமானத்தை தருகிறது. 5 வினாடிகளில் நமது தாசுமாக்கு ஈட்டும் சிறு வருமானம்தான், கீழடி-2க்கு நடுவணரசு செலவிட்ட தொகை.
இப்போது சொல்லுங்கள் நம்மால் முடியாதா? நம்மிடம் இருக்கும் துறைகளை நெடுங்கால நோக்கில் வளப்படுத்த முடியாதா? நமது அறிவக்களத்திற்கான போராட்டங்கள் தமிழகத்தை வளப்படுத்த வேண்டுமா? அல்லது தில்லியை கையேந்திக்கொண்டே இருக்க வேண்டுமா?
தில்லியை குறை சொல்லிக்கொண்டே கையேந்திக்கொண்டு இருப்பதும், போலியாக விரலை ஆட்டுவதும் அரசியலுக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அதில் உண்மைக்குறையும் இருக்கிறது என்பது அறிய வேண்டிய ஒன்று. இது நெடுங்காலப்பயன் தராது. ஆகவே, ஆர்வலர்களும், அரசியலாரும், அறிஞர்குழாமும் தமிழக தொல்லியல் துறையை வளம்பெறச்செய்யவே குரல் கொடுக்க வேண்டும்.
50 ஆள்வளமுடைய தொல்லியல் துறை தமிழகத்தில் வளர்க்கப்பட்டால், ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற 100 அகழ்வுகளை தமிழகத்தால் செய்ய முடியும் எனும்போது அந்தக்குறிக்கோளில்லாத அரசியல் ஓசைகள் காதுகளுக்கு இதமாக இருக்க முடியாதுதானே?
- நாக.இளங்கோவன்