நம் சாமானிய மக்களில் அநேகம் பேருக்கு யோகா என்றால் ஏதோ உடற்பயிற்சி, அதைச் செய்தால் மனம் அமைதியாகும், உடல் வலிமையாகும், உள்ளொளி கிடைக்கும், அதை வைத்து பெரிய பெரிய காரியம் எல்லாம் செய்யலாம் என்ற அளவில் தான் தெரிந்து வைத்து இருக்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் கையில் மிகையாக காசு வைத்திருக்கும் மேட்டுக்குடி தரும பிரபுக்கள் என்றால், இதனுடன் இன்னும் நாலு பிட்டை சேர்த்துப் போடுவார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். அதைத் தாண்டி ஆன்மீக ஆராய்ச்சியில் இருந்து அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு எல்லாம் தங்களது மூளையைப் பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் இதுபோன்ற கார்ப்ரேட் சாமியர்கள் நடத்தும் யோகா வகுப்புகளுக்குப் போனவர்கள் எல்லாம் நேரடியான உள்ளத் தூண்டுதலால் போனவர்கள் கிடையாது. அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று எவனாவது சொன்னதைக் கேட்டுப் போனவர்களே அதிகம். அதனால் நாம் யோகா என்றால் என்ன, அதன் வரலாற்று வேர்கள் எங்கிருந்து தொடங்குகின்றது என்ற அடிப்படை புரிதலை ஏற்படுத்திக் கொண்டால், கடவுள் வேடம் போடும் கழிசடைகளிடம் இருந்து கொஞ்சம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
யோக மரபு எப்போது தோன்றியது என்ற தெளிவான வரலாற்று தகவல் நமக்குக் கிடைக்கவில்லை. ஹிரண்ய கார்பன் என்பவர் முதல் ஆசிரியராக இருந்து யோக தத்துவத்தை அறிமுகம் செய்து பயிற்றுவித்தார் என்று யக்ஞவல்கிய சுமிருதி கூறுகின்றது. (ஆதி யோகிதான் யோகாவை கற்பித்ததாக ஜக்கி புருடா விடுகின்றான். அப்படி எந்தப் பதிவும் எங்கும் இல்லை. அவனது அடிமைகள் அவனிடமே இதற்கான ஆதாரத்தைக் கேட்கலாம்.) சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படும் சில கல்வெட்டுகளில் காணப்படும் முத்திரைகள் இப்பழக்கம் இருந்ததை நிரூபிக்கின்றன. இந்த யோகம் என்ற சொல்லின் பொருள் யஜூர் (ஒன்றாதல்) என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றாக இணைவதை இச்சொல் குறிக்கின்றது. யோகா செய்வதன் மூலம் ஜீவாத்மா, பரமாத்மாவுடன் இணைய முடியும் என்று யோக மரபு சொல்கின்றது. ஆங்கில சொல்லாகிய “யோக்கு” இதனோடு தொடர்புள்ளதாகும். “உள்ளக் கட்டுப்பாடு” என இச்சொல்லை மொழிபெயர்க்கலாம். யோகம் செய்பவன் பொதுவாக யோகி என்ற சொல்லால் அழைக்கப்படுகின்றான். இன்று நமக்கு யோகம் பற்றிக் கிடைக்கும் மிகப் பழமையான நூல் யோக சூத்திரம் ஆகும். இதன் ஆசிரியர் பதஞ்சலி ஆவர். இவரது காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு எனவும், கி.பி 450 எனவும் வேறுபட்ட தகவல்கள் உள்ளன. இதை சில வரலாற்று ஆசிரியர்கள் தத்துவ நூல் என்றும், இன்னும் சிலர் இது வெறும் உடல் மற்றும் மனப் பயிற்சி சார்ந்த நூல் என்றும் வகைப்படுத்துகின்றார்கள்.
இந்த யோக சூத்திரம் என்பது சாங்கிய தத்துவமும் கலந்த ஒன்றாகும். இதன் ஆசிரியரான பதஞ்சலி என்பவர் இந்த யோக சூத்திரத்தை தம்முடைய சொந்த கண்டுபிடிப்பு அல்ல என்று அவரே சொல்கின்றார். அந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் சாங்கியம் சொன்ன அதன் அடிப்படையில் கூறிய யோகப் பயிற்சிகளை விளக்குவது என்று ஒப்புக்கொள்ளும் சொற்களுடன் முடிகின்றது. “யோக சாஸ்த்ரே, சாங்க்ய பிரவசனே” என்று அதில் உள்ளன.
முக்கியமாக இந்த யோகம் என்பது ஒரு தத்துவம் கிடையாது. உடலளவிலும், உள்ளத்திலும், சாதாரணமில்லாத மிக அதிகமான ஆற்றலை விளைவிக்கும் சில மனப் பயிற்சிகளும் உடற்பயிற்சிகளுமே யோகம் என்பது. இந்தப் பயிற்சிகள் மிகப் பழைய காலத்தவை. பண்டைய இண்டஸ் நாகரிகத்தைச் சார்ந்த திடமான பெளதீக அடையாளங்கள். கி.மு. மூன்றாம் ஆயிரத்துக் காலத்திலேயே அவை இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால் காலம் செல்லச் செல்ல யோகப் பயிற்சிகள் எல்லாவிதமான மத நம்பிக்கைகளுக்கும் சொந்தம் போல மாறிவிட்டன. நாத்திக தத்துவங்கள் என்று அழைக்கப்படும் சில தத்துவங்கள் கூட யோகத்தைக் கொண்டாடுகின்றன. ஜைன நூல்களிலும், பெளத்த நூல்களிலும் யோகாசனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஞானோதயம் ஏற்படும் முன் புத்தர் கூட ஆறாண்டு காலம் தொடர்ந்து யோகப் பயிற்சிகள் செய்தார் என்று தெரிய வருகின்றது.
இந்த நூலை எழுதிய பதஞ்சலி என்பவர் அவர் வாழ்ந்த காலத்திலேயே பார்ப்பன சூழ்ச்சிக்குப் பெயர் போனவராக இருந்திருக்கின்றார். அப்பட்டமான நாத்திக தத்துவமான சாங்கியத்தில் இந்த யோகாவைப் புகுத்தியதோடு நிற்காமல், அதில் கடவுள் என்ற கருத்தை இடைச் செருகலாக உள்ளே நுழைத்தவர். இதனால் யோக சாத்திரத்தை கடவுளுடன் இணைந்த சாங்கியம் அதாவது ஸேசுவர சாங்கியம் என்ற விநோதமான பெயரால் அழைக்கப்பட்டது. யோகாவிற்கு எந்த வகையிலும் கடவுள் என்ற கொள்கை தேவையற்றது.
யோக மரபின் முக்கியமான கருத்து என்னவென்றால் தனிமை பெற்ற ஆன்மா, வேதனையிலிருந்து விடுபடவேண்டும் என்பதே. மூன்று வகையான வேதனைகள் இருப்பதாக யோக மரபு கூறுகின்றது.
1) மன உறுதியற்று, கீழான ஆசைகளுக்கு அடிமையாகி, தீநெறிப்படுதலினாலும், கட்டுப்பாடற்ற வாழ்க்கையினாலும் ஏற்படும் வேதனை.
2) பிற உயிர்களோடு உள்ள நெருங்கிய உறவினால் ஏற்படும் வேதனை.
3) புலனாகாத இயற்கைப் பொருட்களினால் ஏற்படும் வேதனை.
யோகப் பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் இந்த வேதனைகளை தீர்க்கமுடியும் என அது சொல்கின்றது.
இந்த யோக சூத்திரம் எட்டு அங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது பெளத்த மதத்தில் உள்ள எட்டு வகையான நெறிகளை நினைவுபடுத்துபவை போலவே இருக்கின்றன.
1) தன்னடக்கம் (இமயம்): அறவிதிகளான இன்னா செய்யாமை, வாய்மை, கள்ளாமை, கற்பு, அவாவறுத்தல் ஐந்தையும் பயிலுதல்.
2) ஒழுக்கம் (நியமம்) மேற்கூறிய ஐந்து விதிகளையும் முற்றாய் ஒழுங்காய்க் கடைப்பிடித்து ஒழுகுதல்.
3) அமர்வு (ஆசனம்): சிற்சில தோரணையில் அமர்தல்
4) மூச்சடக்கல் (பிராணயாமம்):
5) புலனடக்கம் (பிரத்தியாகாரம்): இதன் படி ஐம்புலன்களும் பொறிவழிச் செல்லவிடாது தடுக்கப்படும்.
6) சிந்தையடக்கம் (தாரணை): மூக்கு நுனி, நாபி, உருவச்சிலை, திருச்சின்னம் போன்றவற்றுள் ஒன்றில் உள்ளத்தைப் பதித்தல்.
7) நீள்நினைவு (தியானம்): சிந்தனைக்குரிய பொருளை மனதில் இருத்திக் கொள்வது.
8) நினைவொழிதல் (சமாதி): இந்நிலையில் தன்னியல்பே ஒடுங்கிவிடும்.
இதில் உள்ள செய்திகள் அனைத்தும் ஏதோ பதஞ்சலியின் கண்டுபிடிப்பு அல்ல. இவை எல்லாம் ஏற்கனவே பழங்குடி மக்களிடம் வழக்கத்தில் இருந்த ஒன்றுதான். உள்ளார்ந்து நோக்கும்போது யோக மரபு கூறும் யோகப் பயிற்சிகளுக்கும், நாகரீகமற்ற கட்டத்தைச் சேர்ந்த மக்களின் சடங்குகளின் போது பரவசத்துடன் சாமி ஆடுவதற்கும் எந்த வேறுபடும் இல்லை என்பது தெரியவரும். இவை எல்லாம் மனநிலை திரிந்த மனிதனின் மூளைக் குடைச்சலுக்கான வடிகால் என்பதற்கு மேல் இவற்றில் எதுவுமில்லை. வேதப் பாடல்களிலும் இப்பரவச ஆட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆரியர்கள் இவற்றை இந்திய தொல்குடியினரிடம் இருந்து கற்றிருக்க வேண்டும் என்று ஏ.இ.கெள என்பவர் ‘உபநிடத தத்துவங்கள்” என்ற நூலில் கூறுகின்றார். வேதகால ஆரியர்கள் இந்தியத் தொல்குடியினரோடு கலந்துறவாடிய நாட்களில் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதே இந்த பரவச ஆட்டமாகும். அதையே சிறிது மேம்படுத்தி உடற்பயிற்சிகள் செய்து, சிலைபோல் ஆடாமல் அசையாமல் நிற்பதும், வலிப்பு நோய் கண்டவன் போல் உடலுறுப்புகளை விறைக்கச் செய்வதும், போதையில் மயக்க நிலை அடைவதும் என்று கூத்தாடினார்கள். இவற்றையே மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று யோக மரபு கூறுகின்றது. இந்தப் பரவச ஆட்டம் தெளிவான மனநிலையிலிருந்து, நிலை திரிந்த குழப்ப நிலைக்கு இட்டுச்செல்கின்றது. உளவியல் திரிபு, நரம்புகள் முறுக்கேறுதல், மூளையில் களிவெறியுண்டாகுதல் அனைத்தும் இப்பரவச ஆட்டங்களால் ஏற்படுகிறது. ஆடுபவனுக்குத் தனது உடல்வதை பற்றிய உணர்வு இல்லாது போவதோடு, சாதாரணப் புலனுணர்வுகளும் செயலிழக்கின்றன. வேடிக்கை பார்க்கும் போதை மனிதர்களுக்கு இது இயற்கை மீறிய சக்தியாகத் தென்படுகிறது. எனவே யோகத்திற்கான மூல ஆதரங்களைத் தொல்பழங்குடியின மக்களின் மந்திரம் சார்ந்த வேளாண் சடங்குகளில் தான் நாம் தேடவேண்டும்.
வேத கால பார்ப்பனர்கள் யாகங்கள் செய்வித்ததோடு இயற்கை மீறிய சக்திகளை பெறுவதற்காக தபசு போன்றவற்றையும் செய்தார்கள். அந்தத் தபசுதான் பிற்காலத்தில் தொல்பழங்குடியின நம்பிக்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு யோகம் என்று வளர்ச்சி அடைந்தது. தொல் பழங்குடியின மக்கள் வேளாண் சடங்குகளில் பயன்படுத்திய பொருளில் அல்லாமல் உண்ணாதிருத்தல், மூச்சடக்குதல், உடல் உறுப்புகளுக்கு முறுக்கேற்றுதல் போன்ற பயிற்சிகளைச் செய்வதன் மூலம் இயற்கை மீறிய சக்திகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் இப்போது அது பயன்படுத்தப் பட்டது. அது மட்டும் அல்லாமல் யோகம் கூறும் 64 சிறு சித்திகளையும், 8 அஷ்ட சித்திகளையும் செய்வதால் இயற்கையை மீறிய சக்திகளை அடைய முடியும் என புரட்டுகளையும் புனைந்தனர்.
1) அணிமா: தான் விரும்புகிறபடி சிற்றுரு எடுக்கும் திறன்.
2) மகிமா: தான் விரும்புகிறபடி பேருருக் கொள்ளும் திறன்.
3) லகிமா: தான் விரும்பும் எந்த அளவுக்கும் எடைக்குறைவாக ஆகும் திறன்.
4) கரிமா: தான் விரும்பும் அளவு எடை மிகுந்தவராக ஆகும் திறன்.
5) ப்ராப்தி: எவ்வளவு தொலைவில் இருக்கும் பொருளையும் இருக்குமிடத்தில் இருந்து எட்டிப் பிடித்துவிடும் திறன்.
6) பிராகாமியம்: ஒரு பொருளைத் தான் விரும்பும் காலம் வரை தன்னிடமே வைத்திருக்கும் திறன்.
7) இசித்துவம்: பொருள்களை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய திறன்.
8) வசித்துவம்: எல்லாரையும், எல்லாவற்றையும், மரணத்தையும் கூட வென்று கீழ்ப்படுத்தும் திறன்.
இப்படி யோகா செய்வதால் அதீ தமான சக்திகள் கிடைக்கும் என்ற ஆசை காட்டி, பேராசை பிடித்த முட்டாள்களை எல்லாம் தனது வலையில் வீழ்த்தினார் பதஞ்சலி. அன்று இந்திய தத்துவ மரபில் பதஞ்சலியின் இந்த யோகா புரட்டுக்கு எதிராக கடுமையான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்தவர் மீமாம்ச ஆசிரியரான குமாரிலப்பட்டர் மட்டுமே. அவர் யோகத்துக்கு எதிராக முன்வைக்கும் கேள்விகள் இந்தக் காலத்திலும் நம்மை சிந்திக்க வைப்பதாகும். பொதுவாக இந்திய தத்துவ மரபு பிரத்தியட்ச உண்மைகளை மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியது. நீங்கள் உங்களது தத்துவத்தை மெய்பிக்க விரும்பினால், அதற்கு நேரடியான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். இல்லை என்றால் சபையில் உங்களை அசிங்கப்படுத்தி அனுப்பி விடுவார்கள். அது தத்துவம் என்ற தகுதியையும் இழந்துவிடும். எனவே இதன் அடிப்படையில் இருந்தே குமாரிலர் யோகத்தை அணுகுகின்றார்.
யோகத்தை இன்னதென மதிப்பிட்டு உண்மையைக் காட்டப் பொதுவாக எல்லாருக்கும் தெரியக்கூடிய திட்டமான அளவு ஏதுமில்லை என்கின்றார். அதாவது ஒருவனுக்கு ஏற்படும் யோக அநுபவத்தை பொதுவெளியில் நிரூபிப்பதற்கு வழியே இல்லை என்கின்றார். அப்படி ஒருவன், ‘இல்லை யோகா செய்வதால் எனக்கு இன்னின்ன மாற்றங்கள் எனக்குள்ளாகவே ஏற்பட்டது’ என்று சொன்னால் ஒவ்வொரு தத்துவத்தைச் சார்ந்த நபரும் யோகிகளை உருவாக்கி அவரவர்கள் சார்ந்த தத்துவத்தை உண்மை என்று சொல்லிவிடுவார்கள் என்கின்றார். அதாவது ஒருவன் கம்யூனிஸ்ட் என்றால், அவன் யோகா செய்து ‘ஆம் கம்யூனிஸம் என்பது உண்மைதான். அதை நான் என்னுடைய உள்ளொளியால் அறிந்துகொண்டேன்’ என்று இயல்பாய் சொல்லிவிடமுடியும். இதே போல பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் என அனைவரும் தங்களது சித்தாந்தங்களை தனக்கு மட்டுமே தோன்றும், ஆனால் அது பிறருக்கு நிரூபிக்க முடியாத உணர்வு என்று சொல்லி அதை உண்மை என்று சாதிக்க முடியும் என்கின்றார்.
சரி லட்சக்கணக்கான தமிழ் மக்கள் இன்று யோகா குருக்களின் பின்னால் ஓடுகின்றார்களே அப்படி என்றால் பழங்கால தமிழ் மக்கள் யோகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அவர்கள் யோகத்தை ஒரு தத்துவமாகக் கூட கருதவில்லை அதைப் பேசுவதற்கே தகுதியற்ற ஒரு தத்துவம் என்று கருதி ஒதுக்கிவிட்டார்கள். அவர்களுக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று நாம் நினைக்கத் தேவையில்லை. ஏனென்றால் இந்தியாவில் தோன்றிய அத்தனை முக்கியமான தத்துவங்களைப் பற்றியும் நீலகேசியும், மணிமேகலையும் பேசுகின்றன. நாம் உண்மையில் தத்துவங்களைப் பயில வேண்டும் என்றால் வடமொழி நூல்களை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மணிமேகலையும், நீலகேசியும் அதைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் சில மடையர்கள் இதை தேவை இல்லாமல் காப்பிய வகையில் கொண்டுபோய் வைத்திருக்கின்றார்கள்.
நீலகேசியில் விவாதிக்கப்படும் தத்துவத்திற்கு ஒவ்வொன்றும் ஒரு அத்தியாத்தை(சருக்கத்தை) நீலகேசியார் ஒதுக்குகின்றார். அதில் குண்டலகேசி வாதச் சருக்கம், அருக்கச் சந்திரவாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம், சாங்கியவாதச் சருக்கம், வைசேடிக வாதச் சருக்கம், பூதவாதச் சருக்கம் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே அவர் கூறுகின்றார். யோகத்தை நீலகேசியார் ஒரு தத்துவமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது. நீலகேசி மட்டுமில்லை, மணிமேகலையும் கூட யோகத்தை ஒரு தத்துவமாகக் குறிப்பிடவில்லை. உலகாயதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வையேடிகம், மீமாம்சம் போன்ற தத்துவங்களை மட்டுமே மதுரை கூலவாணிகன் சாத்தனார் பதிவு செய்துள்ளார். இந்த யோகம் என்பது எப்போதுமே தமிழரின் வாழ்வியல் தத்துமாக இருந்தது கிடையாது. திருவள்ளுவர் தவத்தைப் பற்றி தனது 27 வது அதிகாரத்தில் பேசுகின்றார். முக்கியத்துவம் வாய்ந்தாக இன்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அதற்கு அவர் ஒதுக்கியது ஒரே ஒரு அதிகாரத்தைதான். அதுவும் தவம் செய்வதற்குத் தான், யோகத்திற்கு அல்ல. வடமொழி சமண மற்றும் பெளத்த நூல்கள் இதை முதன்மைப்படுத்தினாலும் தமிழில் இதை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக யாரும் அங்கீகரிக்கவில்லை. மீமாம்சம் தவிர ஏனைய தத்துவங்கள் அனைத்துமே இந்த யோகத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தத் தவம், துறவு என்பதெல்லாம் பெரும்பான்மை தமிழர்களின் நெறியாக என்றுமே இருந்தது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலான தமிழர்களுக்கு அப்படி என்றால் என்னவென்றே தெரியாது என்பதுதான் உண்மை.
இன்று யோகா என்பதை ஆன்மீக சாயம் பூசி, அதை கடை பரப்பி விற்று ஆயிரக்கணக்கான கோடிகளைக் கொள்ளையடிக்கின்றார்கள். ஆன்மீகவாதிகள் எப்போதுமே இப்படித்தான் தனக்குத் தெரிந்ததை மிகைப்படுத்திச் சொல்லி பணம் பறிக்கும் கும்பலாக இருந்தார்கள் என்பதற்கு வரலாற்றில் நிறைய சான்றுகள் உள்ளன. அப்படி ஒரு திருட்டு சாமியார் தான் யாக்ஞவல்க்யர். அவர் தன்னிடம் மரணத்தை வென்றுவிடும் ஞானம் இருப்பதாக ஊர் முழுவதும் தனது புகழைப் பரப்புகின்றார். அதை நம்பி விதேஹ நாட்டரசன் ஜனகன் அவரை அழைத்து, தனக்கு அந்த ஞானத்தை சொல்லித் தரும்படி கேட்கின்றான். யாக்ஞவல்க்யரோ வேதத்தையும், உபநிடதங்களையும் நம்பும் ஒரு சன்யாசி, அவரைப் பொருத்தவரை இந்த உலகத்தில் எதுவுமே நிஜமில்லை. ஆனால் ஜனகனனுக்கு அந்த ஞானத்தை உபதேசம் செய்த யாக்ஞவல்க்யர் தட்சணையாக யானை போன்ற ஆயிரம் பசுக்களையும், ஒரு பசுவுக்கு பத்து பொன்காசுகளையும் தட்சணையாக வாங்கிக் கொள்கின்றார். அந்தக் கால சூழ்நிலையில் இது மிகப்பெரிய செல்வமாகும். அது மட்டும் அல்லாமல் ஜனகன் அவன் ஆண்டுகொண்டிருந்த விதேக நாட்டையும் அவருக்கு தந்து அவருக்குத் தொண்டு செய்ய விரும்புகின்றார். அவர் எப்படி ஜனகனுக்கு மரணத்தை வெல்லும் ஞானத்தைக் கொடுத்தார் என்றால் உபநிஷ தத்துவங்களின் படிதான். இந்த பெளதீக உலகம் முழுவதுமே உண்மை என்ற இடத்தில் இருந்து அதை அறவே நீக்கிவிடவேண்டும். பிறகு எது உண்மை என்றால் ஆன்மா மட்டுமே உண்மை. அது மட்டுமே பெளதீகமான எதனாலும் மாசுபடாமல் சுத்தமாய் இருப்பது. அது அழியும் பொருட்களான கண்ணுக்குத் தெரியும். உடல் தொடர்பான பிறப்பும் இறப்பும் எனும் இரண்டில் இருந்தும் விடுபட்டு தனியாய் இருப்பது. எனவே பிறப்பு போலவே இறப்பதும் நிஜமில்லை. இதை ஜனகனுக்கு உரைத்தபின் அவன் மரண பயத்தில் இருந்து கருத்தியல் ரீதியாக கற்பனையாக வெளியேறுகின்றான்.
எவ்வளவு பெரிய மோசடி! இந்த உலகமே பொய் என்று ஒரு மன்னனுக்கு ஞானத்தைக் கொடுத்து, அதற்குத் தட்சணையாக ஆயிரம் பசுக்களையும், ஒரு பசுவுக்குப் பத்துப் பொன் காசுகளையும் வாங்குகின்றார் என்றால் அவர் எவ்வளவு பெரிய மோசடிப் பேர்வழியாக இருப்பார்? அதுமட்டும் அல்லாமல் இப்படி சேர்த்த செல்வத்தை தனது இரண்டு மனைவிகளுக்கும் பிரித்துக் கொடுக்கின்றார். முற்றும் துறந்த முனிவன், இந்த உலகமே பொய் என்ற வேத உபநிடத தத்துவத்தைப் போதிக்கும் தத்துவ ஞானி இரண்டு பொண்டாட்டிகளையும், ஆயிரக்கணக்கில் பசுக்களையும், பொன்காசுகளையும் சேர்த்து வைக்கின்றார். ஊருக்குத் தான் உபதேசம். சொந்த வாழ்க்கையில் உழைக்காமல் சோறு தின்பதற்குத் தத்துவத்தை ஒரு கேடயமாக பயன்படுத்தும் சல்லித்தனம். இதுதான் கருத்துமுதல்வாதிகளின் யோக்கியதை. அன்று யாக்ஞவல்க்யர் என்றால், இன்று ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, பாபா ராம் தேவ், ரவிசங்கர், அமிர்தானந்தமாயி, ஆஸ்ரம் பாபு, கல்கி சாமியர் போன்றவர்கள். எப்போதுமே கருத்துமுதல்வாதத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவனும் ஏமாற்றுப் பேர்வழியாகவே இருந்துள்ளார்கள். முகங்கள் மட்டும் தான் மாறிவந்திருக்கின்றன.
அதுமட்டும் அல்லாமல் இதுபோன்று மக்களை முட்டாள் தனத்திலேயே வைத்திருக்கும் நம்பிக்கைகளுக்கு தர்ம சாஸ்திரங்களை எழுதிய பார்ப்பன மேலாதிக்கவாதிகள் எப்பொழுதுமே தனது ஆதரவை தந்தே வந்திருக்கின்றார்கள். பகவத்கீதை, ராமாயணம் போன்ற சனாதன தர்மத்தை நிலைநாட்டும் நூல்கள் மனு முதலானவர்களால் கொண்டாடப்பட்டதற்கு இதுவே காரணம். மோடி முதல் அத்வானி வரை தங்களுக்கு யோகத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றதோ இல்லையோ, அவர்கள் நிச்சயமாக அதை ஆதரிக்கத்தான் செய்வார்கள். அது அவர்களுக்குப் பிரச்சினை இல்லாதது என்பதை விட அவர்களுக்கு ஆதரவானது. யோகம் சாதி எதிர்ப்பைப் பற்றி பேசவில்லை, அது பார்ப்பன மேலாண்மையைக் கேள்விக்குள்ளாக்கவில்லை, புராண இதிகாசக் குப்பைகளை எள்ளி நகையாடவில்லை. இதை எல்லாம் அது கொண்டாடுகின்றது. எனவே யோகாவை ஆதரிப்பது என்பது அவர்கள் தங்களையும், தங்களது மேலாதிக்கத்தையும் காத்துக் கொள்வதற்காகவே.
சிலர் அதை வெறும் உடற்பயிற்சி என்று எளிமைப்படுத்தி புரிந்துகொள்வதுதான் ஆபத்தானதாகும். இது போன்ற யோகா பயிற்சியாளர்களிடம் செல்லும் போது அவர்கள் முழுவதுமாக தங்களின் பழைய நிலைபாடுகளை மாற்றிக்கொண்டு அந்த யோகா பயிற்சியளிப்பவரின் கோட்பாடுகளுடன் சித்தாந்த ரீதியாக ஒத்துப் போய் தங்களை மறுவார்ப்பு செய்துகொள்கின்றார்கள். முதலில் அவர்கள் நமக்குக் கற்றுத் தருவதே சமூகத்தில் இருந்து முழுவதுமாக நம்மை விடுவித்துக் கொள்வதற்குத்தான். எல்லாவித அரசியல் செயல்பாடுகளும் நமக்குள் இருந்து முடக்கப்பட்டு, முழுவதுமாக நம்மை தன்னுடைய தேவைக்கு ஏற்ப மட்டுமே ஆட்டுவிக்கும் பொம்மைகளைப் போல மாற்றிவிடுகின்றனர். இவர்களின் நோக்கம் மிகத் தெளிவானது அது என்னவென்றால், பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக்கொண்ட அடிமைகளை உருவாக்குவதுதான். அதனால் திட்டமிட்டு யோகாவை மட்டும் அல்லாமல், பழைய வைத்திய முறைகள், இயற்கை விவசாயம் போன்றவற்றைக்கூட பல பேர் ஆன்மிகத்தின் பெயரால் இந்துமதத்தின் பெயரால் பரப்புகின்றார்கள்.
எனவே நாம் நமது பிரச்சினைக்கான காரணத்தை சமூகத்தில் தேடவேண்டுமே ஒழிய யோகா குருக்களிடம் இருந்து அல்ல. பத்து நாட்கள் தண்ணீர் வரவில்லை என்றால், சாலையில் உட்கார்ந்து போராடும் மக்கள், அரசை நிர்பந்தித்து தண்ணீரை பெற்றுக் கொள்கின்றார்களே ஒழிய, கோயிலில் போய் உட்கார்ந்து பஜனைபாடி, அதனை கடவுள் மூலம் பூர்த்தி செய்து கொள்வதில்லை. இல்லை ஒன்றாக உட்கார்ந்து தியானம் செய்து குழாயில் தண்ணீரை வர வைப்பதில்லை. இதுதான் பிரத்தியட்ச அறிவு. எதைச் செய்தால் எது கிடைக்கும் என்று அறிந்து அதைச் செய்வது. மனநிம்மதி இல்லை என்றால், அதற்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து, அதை நிரந்தமாகத் தீர்க்க மனநல மருத்துவரை அணுகவேண்டும். அனைத்திற்கும் நவீன அறிவியல் தனக்குள் தீர்வை வைத்திருக்கின்றது. தீர்வு இல்லாததைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றது. அது யாரையும் ஏமாற்றுவதில்லை. அத்தனை நவீன அறிவியல் சாதனங்களையும் பயன்படுத்தி, அறிவியலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் கார்ப்ரேட் சாமியர்கள் எவனும் தன்னுடைய வாழ்வை எளிமையாக உயிர்வாழ்வதற்குச் சோறுகிடைத்தால் போதும் என்ற அளவில் நிறுத்திக் கொள்வதில்லை. கோடிக்கணக்கான மக்கள் பட்டினியால் சாகும் ஒரு நாட்டில் பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக அவர்கள் வலம் வருகின்றார்கள்.
எனவே நம்முடைய சுயமரியாதையை இழந்து, தன்மானத்தை இழந்து, பொருளாதாரத்தை இழந்து ஏன் மனைவி, மகள்களைக்கூட இழந்து, பார்ப்பனியத்தின் மீட்சிக்காக யோகாவை ஒரு ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தப் பார்ப்பன அடிவருடிகளை நம்பி நாம் ஏமாறப் போகின்றோமா? இல்லை பகுத்தறிவின் வழி நின்று இந்த ஏமாற்றுப் பேர்வழிகளை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தமிழ்நாட்டில் இருந்துதே விரட்டி அடிக்கப் போகின்றோமோ? என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
துணை நின்ற நூல்கள்:
1) உலகாயதம்- தேவிபிரசாத் சட்டோபத்யாயா
2) இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்- தேவிபிரசாத் சட்டோபத்யாயா.
3) இந்தியத் தத்துவ இயல் ஒர் எளிய அறிமுகம்- தேவிபிரசாத் சட்டோபத்யாயா.
4) இந்திய நாத்திகம்- தேவிபிரசாத் சட்டோபத்யாயா.
5) இந்திய வரலாற்றில் பகவத் கீதை- பிரேம்நாத் பசாஸ்.
6) வியத்தகு இந்தியா-ஏ.எல். பசாம்.
7) அறிவியலா? அருஞ்செயலா?- ப. பிரேமானந்து.
8) தமிழர் பண்பாடும் தத்துவமும்- நா. வானமாமலை.
9) பண்டைய இந்தியாவில் முற்போக்கும் பிற்போக்கும்-எஸ்.ஜி. சர்தேசாய்.
10) இந்திய வரலாறு ஒர் அறிமுகம்- டி.டி. கோசாம்பி.
11) இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு- வெண்டி டோனிகர்.
- செ.கார்கி