சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?

பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :

1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது
2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது
3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது
4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது
5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது
6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது
7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது
8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது
9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.

‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?

எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்லை.

நாம் இப்படிப் பார்ப்பானையும், இந்து மதத்தையும் புறக்கணிக்கும்படி பிரச்சாரம் செய்தால், வெற்றிகாண முடியும் என்று நம்புகிறீர்களா?

ஆகா! தாராளமாக எனக்கு அதில் நம்பிக்கையுண்டு. 10 வருட காலத்திற்குள் கட்டுப்பாடான இடைவிடாதப் பிரச்சாரத்தின் மூலம் நாம் அந்த நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை உண்டு; அந்த உணர்ச்சியை மக்களிடையே அடைய வைக்க முடியும்.

சாதியை ஒழிக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை ஒழிக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே, அரசியல் கட்சியாக இருந்தால்தானே இந்த அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்?

நல்ல கேள்வி. முதலாவது அரசியலில் ஒருவன் நுழைகிறான் என்றாலே அவன் எப்படிப்பட்ட யோக்கியனாக இருந்தாலும், உடனே அவனது நாணயம், ஒழுக்கம் கெட்டுப்போய் விடுகின்றன. அவன் புரட்டு, பித்தலாட்டம் செய்ய வேண்டிய அவசியத்திற்கு ஆளாக்கப்படுகிறான். அது நானாக இருந்தாலும், பாபாசாகிப் அம்பேத்கராக இருந்தாலும் சரி, அப்படித்தான் ஆகிவிடுவோம்; அது அப்படி ஆக்கிவிடும்.

இரண்டாவது, இன்றைய அரசியல் சட்டப்படி நடைபெறும் ஒன்று. அரசியல் சட்டத்தில் மாற்ற முடியாத வகையில் சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. யார் போனாலும் சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்படி நடக்க வேண்டியவர்களே தவிர, அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. சிலர் சொல்லுவார்கள், ‘ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட அங்கு போனால் இதை எடுத்துச் சொல்லலாம்' என்று. அதற்கு அங்கு போக வேண்டும் என்பது அவசியமில்லையே! பொதுக்கூட்டம் போட்டு எடுத்துச் சொன்னாலே அது அரசாங்கத்திற்குச் செல்கிறது!

நாம் அரசாங்கத்தைக் கைப்பற்றலாமே! கைப்பற்ற முடியாதா?

அது முதுகில் மூன்றாவது கை முளைத்து அதனால் சொரிந்து கொள்ளலாம் என்பது.

எப்படியும் நாம் இந்த அரசாங்கத்தைக் கைப்பற்றித்தானே ஆக வேண்டும்?

அதற்காகத்தான் நாங்கள் சொல்லுகிறோம்: ‘சாதியை ஒழிக்க விரும்பாத சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் உனது அரசாங்கத்தோடு இருக்கவில்லை; தனியே பிரிந்து செல்கிறோம். எங்கள் நாட்டிற்குச் சுதந்திரம் வந்தால், நாங்கள் சாதியை உடனே ஒழித்துவிட முடியும். உனது ஆட்சி அதற்கு இடம் கொடுக்காததால் விலகிவிடுகிறோம்' என்று. அதற்காகத்தான், ‘சுதந்திரத் தமிழ் நாடு' கிளர்ச்சி இருக்கிறது. அது ஒரு நாட்டைக் கொளுத்தும் பிரச்சினையல்ல; நமக்கு வேண்டாத ஆட்சியை வெறுக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல நீங்களும், உங்களுடைய ஆட்சி வேண்டாம் என்று பிரிந்து சென்று விடலாமே! நீங்களும் இந்தக் கொடுமையான பார்ப்பன சாதி நாயகமான அரசாங்கத்தினின்றும் பிரிந்து விடலாம். அதற்குத்தான் பட எரிப்புப் போராட்டம் நடத்தப் போகிறோம்.

நீங்கள் ஏன் கறுப்பு உடை அணிகிறீர்கள்?

நாம் இப்போது இழிசாதி மக்களாகவும், சூத்திரர்களாகவும் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகக் கறுப்பு உடை அணிகிறோம். எங்கள் கொடியின் நடுவில் ‘வட்டச் சிவப்பு' இருப்பது அந்த இழிவிலிருந்து நாம் நாளாவட்டத்தில் மீண்டு வருகிறோம் என்பதைக் காட்டுகிறது.

(கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே 9.2.1959 அன்று நிகழ்ந்த உரையாடல்.)