தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த கல்விக்கான உதவித் தொகையில் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனால் இத்திட்டத்தின் பயன் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும். நிதி முறையாக செலவிடப் படுவதில்லை. குறிப்பாக மத்திய சிறப்புக் கூறு திட்டம் என்ற பெயரில் மாநில அரசுகளுக்கு தாழ்த்தப்பட்டோர் நலன்களுக்காக, கணிசமாக தொகை ஒதுக்கப்பட்டும், மாநில அரசுகள் அதை முறையாக செலவிடுவதில்லை. பல மாநில அரசுகள், அந்தப் பணத்தை திருப்பி அனுப்பி விடுகின்றன.

தமிழ்நாட்டிலேயே இந்த நிலை தான். ஒவ்வொரு துறையிலும் 19 சதவீத நிதியை தலித் மக்களுக்கு செலவிட வேண்டும் என்று விதிகள் இருந்தும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில், தலித் மக்களுக்கு செலவிடப்பட வேண்டிய ரூ.12000 கோடி மறுக்கப்பட்டுள்ளது. ரூ.7143 கோடி வேறு செலவினங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி, கடந்த மே 19, 2007-ல் பெரியார் திராவிடர் கழகம் தஞ்சையில் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அமைச்சராக இருந்த மேனகா காந்தி, தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கான உதவித் தொகையை எடுத்து, தெரு நாய்களுக்கு ஆம்புலன்ஸ் வேன்கள் வாங்குவதற்கு செலவிட்டார். அதை எதிர்த்து - சென்னை வந்த மேனகா காந்திக்கு பெரியார் திராவிடர் கழகம் கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இப்படி தலித் மக்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதி முறையாக செயல்படாததோடு அதை வேறு துறைகளுக்கு திருப்பி விடப்படும் அநீதி தொடரும் நிலையில், இப்போது மத்திய அரசின் ‘சமூக நீதி மற்றும் வேலை வாய்ப்புத் துறை’ மற்றொரு பேரிடியான ஆணையை கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி பிறப்பித்துள்ளது. இதன்படி 11-ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் (2007லிருந்து 2011 வரை) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி பெற, மத்திய அரசு அளித்து வரும் கல்வி உதவித் தொகைக்கு (ஸ்காலர்ஷிப்) கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி பொறியியல், மருத்துவம் போன்ற உயர் கல்வியில் இடம் கிடைக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கட்டணம் செலுத்தத் தேவை இல்லாத இடம் கிடைப்போர் மட்டுமே கல்வி உதவித் தொகையைப் பெற முடியும். அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இது பொருந்தும். கட்டணம் செலுத்தி சேரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது.

அதேபோல் தனியார் தொழில் படிப்பு கல்லூரிகளில் சேரும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு 12 ஆம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று, அரசு ஆணை கூறுகிறது. முதல் தலைமுறையாக கடும் எதிர் நீச்சலில் படிக்க வரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்குத்தான் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த நோக்கத்தையே குழி தோண்டி புதைக்கும் ஆணையை மத்திய ‘சமூக நீதி’ அமைச்சகம் எடுத்துள்ளது, வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும், இந்த அநீதிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து, உயர் கல்வி படிக்க தலித் மாணவர்கள் அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வற்புறுத்த வேண்டும். 

உளவுத் துறைக்கும், ராணுவத்துக்கும் நாட்டின் மொத்த வருவாயில் பெரும் பகுதியை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு, தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் கடிவாளம் போட்டு, மனுதர்மத்தைக் காப்பாற்றத் துடிப்பது வெட்கக் கேடு!

Pin It