குறைந்த அறிவுத் திறன் முதல் அதிக அறிவுத் திறன் வரை உடையவர்கள் அனைத்து வகுப்பு மக்களிடையேயும் இருப்பது என்பது மாற்ற முடியாத இயற்கை நியதி. அப்படி இருக்கையில், கல்வி, வேலை வாய்ப்பு, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் அனைத்து வகுப்பு மக்களும் அவரவர்களின் மக்கள் தொகை விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அல்லவா? ஆனால் அவ்வாறு நடக்காமல் உயர்நிலைகளில் பார்ப்பனர்கள் நிரம்பி வழியும் அளவை விட மிக மிக ..... மிக அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களே? அது எப்படி முடிகிறது? மற்ற வகுப்பு மக்கள் அவர்களுக்கு உரிமையான அளவில் சிறு பகுதி கூட கிடைக்காமல் கீழ் நிலைகளிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதே? அது ஏன்? இதற்குப் பின்னணியில் நடக்கும் சூழ்ச்சிகள் யாவை? இவை போன்ற வினாக்களுக்கு விடைகளைத் தேட வேண்டும் என்று யாரும் முயல்வதாகத் தெரியவில்லை. முயல்வது என்ன? இத்திசையில் சிந்திப்பதாகவே தெரியவில்லை.
ஆனால் பார்ப்பன ஆதிக்கவாதிகள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலைகளில் பொருட்படுத்தத் தக்க அளவில் இடம் பெற்று விட்டால், அவாளுடய சூழ்ச்சிகள் பட்டவர்த்தனமாகத் தெரிந்து விடும் என்றும், ஆகவே அப்படி நடந்து விடக் கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 18% இட ஒதுக்கீடு இருக்கையில், உயர்நிலைகளில் 5% நிரப்பாமல் அவாள் அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதை எதிர்த்து எவ்வளவு வன்மையுடன் கூறினாலும், அரசு அதைக் கண்டு கொள்வதே இல்லை.
நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளித்து வி.பி.சிங் அரசு பிறப்பித்த ஆணையைப் புறந்தள்ள அவாள் பல வழிகளிலும் முயன்றனர் / முயன்று கொண்டே இருக்கின்றனர்.
அவ்வகையில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை தான் நடுவண் அரசுப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர் பணிக்கு (Teaching staff) நியமிப்பதில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடங்களை அளிக்க வேண்டும் என்ற ஆணையைப் பின்பற்றத் தேவை இல்லை என்ற நடுவண் அரசின் முடிவும்.
இம்முடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாகவும் லாலு பிரசாத் யாதவ் 7.6.2016 அன்று பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு எதிராக விடை அளித்து உள்ள பா.ஜ.க,வினர் இது போன்ற நடவடிக்கைகளை இதற்கு முன்னால் காங்கிரஸ் அரசும் எடுத்து உள்ளது என்றும், ஆகவே தாங்களும் அதே வழியைப் பின்பற்றுவதில் தவறு ஏதும் இல்லை என்றும் கூறி உள்ளனர்.
அதாவது காங்கிரஸ் ஆண்டாலும் சரி! பா.ஜ.க. ஆண்டாலும் சரி! இரண்டுமே ஒன்று தான்; இரண்டுமே பார்ப்பன ஆதிக்க அரசுகள் தான்; வெளியே எதிரெதிரானவர்கள் என்று காட்டிக் கொண்டாலும், பார்ப்பன ஆதிக்கம் என்று வரும் பொழுது இரு கட்சிகளும் ஒரே நோக்கம் கொண்டவை தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.
அவாள் எங்கு இருந்தாலும் அவாள் ஆதிக்கம் நீடித்து இருக்க வேண்டும் என்பதில் ஒற்றுமையாக உள்ளனர். நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நடுவண் அரசுப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களைப் புறந்தள்ளச் செய்யப்பட்ட முயற்சியை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் மட்டுமே குரல் கொடுத்து உள்ளார்.
மற்றவர்கள் என்ன ஆனார்கள்? சமூக நீதியில் முன்னோடிகள் என்றும், வழிகாட்டிகள் என்றும் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் என்றும் பீற்றிக் கொள்ளும் தமிழக அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதாககச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதற்கு எதிராகப் போராடி ஏன் தடுத்து நிறுத்தவில்லை? இப்படி அமைதியாக நடத்தப்படும் அழிவு வேலைகள் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை எதிர்த்துப் போராடவில்லை என்பது மட்டும் அல்ல; இச்செய்தியை இவர்கள் மக்களிடம் கொண்டு செல்லவே இல்லையே? ஏன்?
- இராமியா
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பெரியாரின் தொண்டர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?
- விவரங்கள்
- இராமியா
- பிரிவு: கட்டுரைகள்