மதுரை தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு இன, மத, கலாச்சார, மொழி பேசுவோர் கலந்து வாழும் நகரம். கோவில் மாநகரம் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பு பெயரும் உண்டு. பாண்டியர்கள், நாயக்கர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஆங்கிலோயர்களின் ஆட்சிக் காலங்களில் மதுரை முக்கிய இடம் பெற்றுள்ளது. இன்றைக்கு மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமாக உருவாக்குவது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, எனினும் சமுக வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் அதன் கொடுரங்களும் மதுரையில் ஏராளம் எனலாம். இச்சூழலில் இங்கு வாழும் அருந்ததியர்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பூர்வக்குடிகள்

dalit manual scavengersஅருந்ததியர்கள் தெலுங்கர்கள், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆந்திராவில் கஞ்சம் ஜில்லாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் அருந்ததியர்கள். குறிப்பாக தமிழகத்தின் மீது விஸ்வநாத நாயக்கர் தலைமையில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு நடத்திய படையெடுப்பின் போது, செருப்பு தைப்பவர்களாக தமிழகம் வந்தவர்கள் என்பது திரிக்கப்பட்ட வரலாறு என்று சாடுகிறார் எழுத்தாளர். எழில். இளங்கோவன். 

அதியர் மரபில் வந்த அதியமான் இவன் கடை ஏழு வள்ளல்களுள் ஒருவன், பெண்பாற் புலவர் ஒளவையாரின் நெருங்கிய நண்பரும் ஆவான். இவன் ஆட்சி செய்த மலைநிலம் ‘குன்று’ ‘பறம்பு’ என்ற பிரிவினுள் அடங்கும் எனவே அதியமான் குன்றுவன் என்றும் பறம்பன் என்றும் இடவாகுபெயரால் அழைக்கப்பட்டான். இன்று இந்த குதிரைமலைப் பறம்பு ‘தகடூர்’ என்று பெயர்மாறி தருமபுரியாக இருக்கிறது.

அதை உறுதிபடுத்தும் வகையில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவணர் அருந்ததியர்களை பறம்பர் என்று கூறுகிறார்.

அருந்ததியர் பெயர் காரணம் 

மா + அதியர் ஸ்ரீ மாதியர், அருமை +அதியர் ஸ்ரீ அருந்ததியர். அருமை பொருந்திய அதியர் என்று இதன் வேர்த் தொடராய் அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார். எழில். இளங்கோவன்.

அதியர் என்ற தமிழ்க்குடியின் வேளிர் மரபினர் இடவாகு பெயராக பறம்பன் என்றும் குடிசிறப்புப் பெயராக மாதியர், அருந்ததியர் என்று தமிழ்ப்பெயரை இனப்பெயராக அமைந்துள்ளது என்பதை மேலும் எடுத்துரைக்கிறார். 

அருந்ததியர்களின் முன்தோன்று அதியர் தமிழ்க்குடியினர் கி.மு முதலாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் அரசர்குடிகளாக வாழ்ந்தவர்கள் என்பது உறுதிபடுகிறது. அருந்ததியர்களின் மறுபெயர் பறம்பர், இவர்கள் தமிழ்குலத்தவர் குறிஞ்சி நிலத்திற்குரிய பறம்பர்.

பறம்பர் என்பவர் தமிழ்பேசுபவராகவும், சக்கிலியர் என்பவர் தெலுங்கு பேசுபவர்களாகவும் இரண்டு பிரிவினராக இங்கே அடையாளம் காட்டப்பட்டார்கள். ஆனால் இவ்விரு பிரிவினரும் “அருந்ததியர்” என்ற இனத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்கள்.

இனம் ஒன்று அதன் மொழிகள் இரண்டு. ஒரே இனத்திற்கு இரண்டு மொழிகள் எப்படி தாய்மொழிகளாக இருக்க முடியும்! முடியாது! எனவே பறம்பர், சக்கிலியர் என்ற இரண்டு பிரிவினரில் ஒரு பிரிவினர் ஏதோ ஒரு காலகட்டத்தில் திசை திருப்பி அல்லது திசை திருப்பப்பட்டு மொழி மாற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய, பழந்தமிழ் மன்னர்கள் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்த அரசியல் போர்கள், அதை ஒட்டிய நிகழ்வுகளை சற்று கவனமாகப் பார்ப்பது அவசியம்.

ஆண்ட பரம்பரை

        தகடூர் அதியமான் மரபினர் தென்தமிழ்நாட்டில் பொதிகையை அதாவது நாஞ்சில் நாட்டின் வட எல்லையான திருநெல்வேலியில் ஆட்சி செய்திருக்கிறார்கள். இம்மரபினர் திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை போன்ற மாவட்டங்களில் அருந்ததியர்கள் பரவியிருந்துள்ளார்கள்.

        அதியர்களின் ஆட்சி தருமபுரியில் இருந்தது என்பதால், அதை ஒட்டிய சேலம், ஈரோடு, கோவை போன்ற மேற்கு மாவட்ட கொங்கு மண்டலத்தில் பரந்துபட்ட நிலையில் அடர்த்தியாகவும், நெருக்கமாகவும் அதியர்குடி அருந்ததியர்கள் வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இனி குறிப்பாக மதுரை மண்ணில் அருந்ததியர்களின் வாழ்வியலை பார்ப்போம்.

மதுரைவீரனும் - திருமலை நாயக்கரும்

        மதுரை என்றாலே மதுரைவீரனை தவிர்த்து பேசமுடியாது. அந்த அளவுக்கு சரித்திர புகழ் பெற்றுள்ளான். மதுரை வீரனின் வாய்மொழி கதைகளை நம்மில் பலரும் அறிந்திருப்போம். திரிக்கப்பட்ட மதுரைவீரனின் வரலாற்றை ஒரு சில வரலாற்று ஆய்வாளர்கள் உண்மைகளை கண்டறிந்து பதிவு செய்துள்ளனர் அவற்றைப் பார்ப்போம்!.

  தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தில் பிறந்த  ஒருவர் தன் வீரத்தினால் குளமேன்மையால் சமூகத்தில் உயர்வு பெற்றால் வர்ணசிரம கோட்பாட்டுக்கு இழுக்கு என்பதால் இத்தைகைய வரலாற்றுத் திசை மாற்றும் செயலை பார்ப்பனர்கள் மட்டுமல்ல! ஆதிக்க சாதியினரும் இதே வேலையைச் செய்ய துணை போகின்றனர் என்பதற்கு மதுரைவீரனின் வரலாறே சான்றாகும்!.

        மதுரை திருமலை நாயக்கன் அரசியல் சூழ்ச்சி கொண்டவன் என்றும் “துரோகமும், சூழ்ச்சி” களும் மிகுந்தவன் என்றும் பேராசிரியர் கே.கே.பிள்ளை கூறுகின்றார் என்று பதிவு செய்திருக்கிறார். எழில். இளங்கோவன்.

        மூடநம்பிக்கையுள்ள நாயக்க மன்னர்கள் கோவில்கட்டும் போதும், அணைகள், பாலங்கள் கட்டும் பொழுதும் நரபலி கொடுத்துள்ளனர். அதற்காக இழிந்தவர்களாகக் கருதப்பட்ட சக்கிலியர்களைப் பிடித்துச் சிறையிலடைத்துப் பலமுறை பலி கொடுத்துள்ளனர்.

        கட்டபொம்மன் கதையில் அவனுடைய முன்னோர்கள் திருமலை நாயக்களிடம் நரபலி கொடுப்பதற்காகச் சிறையிலடைக்கப்பட்டிருந்த சக்கிலியர்களை மீட்க வாதாடினார்கள் என்றும் திருமலை நாயக்கனும் அதற்கு இணங்கினான் என்று ஒரு செய்தி கூறுப்பட்டுள்ளதாக எழுத்தாளர். ம.மதிவண்ணன் குறிப்பிடுகிறார்.

        கட்டிடங்கள், அணைகளுக்கு அருந்ததியர்களை நரபலி கொடுப்பது நாயக்கர் மரபு. திருமலை நாயக்கர் மகாலுக்குப் பலி கொடுக்க சிறையில் அடைக்கப்பட்டிருந்த அயிரக்கணக்கான அருந்ததியர்களைக் காப்பாற்ற, மன்னன் திருமலைக்கு எதிராக வாளேந்திய காரணத்தால் தான் இரவோடு இரவாக மதுரைவீரன் மாறுகால், மாறுகை வாங்கி கொலை செய்யப்பட்டார் என்பது ஆக்கப்பூர்வமாக நிருபிக்கப்பட்டது.

        இவற்றைப் பார்க்கும் போது அருந்ததிய மக்களை காப்பாற்றும் போராட்டத்தில் மதுரைவீரன் தனது உயிரை தியாகம் செய்திருக்கிறான் என்பது மதுரை அருந்ததியர்களின் வீரம் செரிந்த வரலாற்றை நமக்கு எடுத்துரைக்கிறது.

குடியிருப்புகள்

        மதுரையில் அருந்ததியர்கள் வாழும் பகுதி பெரும்பாலும் சேரி பகுதிகளாகத்தான் இருக்கிறது அவையாவன. மேலவாசல், சுப்பிரமணியாபுரம், கோமசுபாளையம், மஞ்சள்மேடு, அவணியாபுரம், கரும்பாலை, மதிச்சியம், அண்ணாநகர், சக்கிமங்கலம், பொன்மேனி, முத்துபட்டி, கீழ்மதுரை, அனுப்பானடி, சிம்மக்கல், லயன் தெரு, மஹபுப்பாளையம் அருந்ததியர் தெரு, எஸ்லீஸ் நகர், பைக்கரா, பழங்காநத்தம், ராஜாக்கூர், ஜவகர்புரம், கே.புதூர், முனியாண்டிபுரம் (கோபாலிபுரம்), கண்மாய்கரை தெரு, பூங்கா நகர், வாய்கால் தெரு, அன்னை இந்திரா நகர், ஹிரா நகர், மேலபொன்னகரம், மினிக்காலனி, விராட்டிபத்து, ஹார்விபட்டி போன்ற பகுதிகளில் அருந்ததிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

        இவர்களில் கணிசமான நபர்கள் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் விவசாயம், தோல் சம்பந்தமான தொழில்களை செய்து வந்தனர். அத்தொழிலில் சரியான வேலைவாய்ப்பில்லாத நிலையில் வாழ்க்கையை சமாளிக்க பிழைப்பைத் தேடி மதுரை நகர் நோக்கி வந்திருக்கிறார்கள். இவர்கள் 1940 களுக்கு மேல் அதிகமானோர் மதுரையில் குடியேறி உள்ளனர்.

 பெரும்பாலும் அருந்ததிய மக்கள் வாழும் பகுதி ஆரோக்கியமற்ற சூழலே நிலவுகிறது. மிகவும் நெருக்கடியான இடஅமைப்பில் குடியிருப்புகள், குறுகிய பாதை கொண்டதாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் மாநகராட்சி அடுக்குமாடி வீடுகள் கட்டிகொடுக்கப்பட்டுள்ளன. அங்கே வாழும் மக்களுக்கு போதிய சுகாதர மேம்பாடுகளை செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக மேலவாசல் பகுதியில் சுத்தம் இல்லாமல் சுகாதரச் சீர்கேடுகள் அதிகம் நிறைந்துள்ளது. அருகில் குப்பைகள், கழிவுநீர், சாக்கடை போன்றவை தேங்கி நிற்பதாகவும், இதனால் ஒரு சிலர் யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த திரு.பழநிக்குமார் என்பவர் தெரிவித்தார்.

துப்புரவுப்பணி

        மதுரையில் எழுபது வருடங்களுக்கு முன்பு துப்புரவுப் பணியாளருக்கான வேலையை தாழ்த்தப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த குறவர் எனும் பிரிவினர் மட்டுமே செய்துவந்துள்ளனர். மதுரை மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குறைந்த மக்கள் தொகை கொண்ட குறவர் இன மக்களால் துப்புரவுப் பணியை முழுமையாக செய்திட முடியவில்லை. அச்சமயம் அருந்ததியர் மக்களை பயன்படுத்தினர். தற்போது மதுரை மாநகராட்சியில் நூறு வார்டுகள் உள்ளன. இதில் துப்புரவுப் பணியாளராக பெரும்பான்மையான அருந்ததியர்கள் பணிசெய்கின்றனர்.

       மேலும் ஹோட்டலில் துப்புரவுப்பணி, வீட்டு வேலை, லாட்ஜ்களில் துப்புரவுப்பணி செய்வது, மருத்துவமணைகளில் துப்புரவுப்பணி, செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல், செருப்பு தைத்தல், பிணம் எரித்தல் போன்ற பணிகளையும் செய்கின்றனர்.

        துப்புரவுப் பணியாளர்களில் அதிகமானோர் அருந்ததியர்கள். ஆனால் அருந்ததியர்கள் அனைவரும் துப்புரவுப் பணியாளர்கள் அல்ல! மற்றப் பணிகளையும் அருந்ததியர்கள் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதரம்

        துப்புரவுப் பணியாளராக பணிபுரியும் இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் அன்றாட செலவுகளுக்கே திண்டாடுகின்றனர். பெரும்பாலும் துப்புரவு பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும், ஹோட்டலில் துப்புரவுப் பணிபுரியும் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. அதை வைத்து இவர்கள் குடும்பத்தை நடத்த போதிய பொருளாதரம் இல்லாததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

        இந்த பொருளாதர நெருக்கடியை சமாளிக்க இவர்கள் கந்து வட்டிகாரர்களிம், மாத செலவுக்கே கந்து வட்டி வாங்கி செலவழிக்கும் அவலம் தொடருகிறது.

இதுகுறித்து மேலவாசல் பகுதியைச் சேர்ந்த திருமதி. நல்லம்மாள் அவர்கள் கந்து வட்டி கொடுமையினால் தங்கள் பகுதியினர் பாதிக்கப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். துப்புரவுப் பணிகளில் ஈடுபடும் அவர் உள்பட, அவரது பகுதியைச் சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் கேட்கும் போது கொடுத்துவிட்டு பின்பு “மாத மாதம் உன்னிடம் பணத்தை வசூலிக்க முடியாது. அதனால் உனது ஏ.டி.எம் கார்டையும், பேங்க் பாஸ்புக்கையும் எடுத்துட்டு வா” என்று சொல்லி பறித்துக் கொள்கின்றார்கள் என்றார்.

மாதச் சம்பளம் போட்டவுடன் வட்டி பணம் என்ற பெயரில் அவர்களே பணத்தை எடுத்துக் கொண்டு அவர்களாகப் பார்த்து ஏதாவது மீதம் கைச்செலவுக்கு கொடுப்பார்கள் என்றார். எக்காரணம் கொண்டும் ஏ.டி.எம் கார்டைக் கேட்டாலும் கொடுக்க மறுத்து, “உனக்கு எதுக்கு ஏ,டி.எம் கார்டு? பணம் வேணுமா? ஒரு பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு பணத்தை வாங்கிக்கோ” என்று கூறுவார்களாம். இப்படிப்பட்ட சூழலில் மாதச் செலவுக்கு பணம் இல்லாமல் ஒரு சிலர் வெற்றுத்தாளில் கையைழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு பணம் வாங்குபவர்களும் உண்டு என்றார்.

அப்போது அவர், “நாங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று எங்களுக்கே தெரியாத சூழலில்தான் இன்றும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று தனது கசப்பான வாழ்க்கை அனுபவங்களை கூறுகிறார்.

இதுதான் இன்று மதுரையிலுள்ள பெரும்பாலான துப்புரவு பணியாளர்களின் நிலை என்பது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

உணவு முறைகள்     

        போதிய வருமானம் இல்லாத சூழலில் அன்றாட பிழைப்புக்கே சிக்கலான பொருளாதர சூழலை கொண்டு இவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட உணவுக்காக ஒவ்வொரு வேளையும் ஹோட்டலில் இருந்து வரும் உணவை நம்பி, பல குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மஞ்சள்மேடு பகுதியைச் சேர்ந்தவரும் தமிழ் புலிகள் அமைப்பின் பொறுப்பாளருமான மா.முத்துக்குமார் என்பவர் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

        ஓவ்வொரு வேளையும் ஹோட்டலில் மிதமாக இருக்கும் உணவுகளை அங்கு துப்புரவுப் பணியாளராக பணி செய்யும் நபர்கள் வாங்கி வந்து விற்கின்றனர். ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் மட்டும் சம்பளமாக கொடுக்கின்றனர். சம்பளம் குறைவாக இருப்பதால், ஹோட்டலில் மீதம் உள்ள உணவுப்பொருட்களை இவர்கள் பெற்றுக் கொண்டு, அவரது பகுதிகளுக்குச் சென்று விற்கின்றனர்.

        நான்கு நபர்கள் உள்ள குடும்பம் என்றால் ஐம்பது ரூபாய்க்கு உணவு வாங்கினால் ஒரு வேளைக்கு குடும்பமே சாப்பிட்டு விடலாம் என்கிறார். பெரும்பாலான குடும்பங்கள் ஹோட்டலில் வரும் மீத உணவை நம்மியை வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். 

        இப்படி மீத உணவை நம்பி வாழ்வதால் நேரத்திற்கு உணவருந்துவது கிடையாது. இரவு ஒரு மணிக்கு மேல் பலர் இரவு உணவை எடுத்துக் கொள்கிறார்கள். ஒரு சில நேரங்களில் அதற்கும் வழியில்லாமல் பட்டினியாகவும் இருக்கின்றனர். தினமும் ஹோட்டலில் இருந்து வரும் மீதமான உணவை சாப்பிடுவதால் பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கும் இவர்கள் ஆளாகின்றனர்.

கல்விநிலை

        அன்னை தெரேசா அறக்கட்டளை சார்பாக மதுரையிலுள்ள அருந்ததியர் குழந்தைகளின் கல்விநிலை குறித்து ஆய்வு செய்துள்ளனர். 96 சதவித குழந்தைகள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை ஐந்தாம் வகுப்பில் 60 சதவிதமாகவும், எட்டாம் வகுப்பில் 45 சதவிதமாகவும் குறைகிறது.

        மேலும் 20 சதவிதத்திற்கு மேல் அருந்ததியர் குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்டுவதில்லை. மிகச்சிறிய அளவு சதவிதத்தினரே இந்த சமூகத்தில் மேற்கொண்டு படிக்கின்றனர். பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து கல்லூரிக்குப் போகின்றனர். குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோரின் திடீர் மரணமும் அக்குழந்தைகள் உடனடியாக படிப்பை கைவிட நேருகிறது.

        காலை ஐந்து மணிக்கே எழுந்து இவர்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளின் கல்வி விசயத்தில் இவர்களால் அக்கறை காட்ட முடிவதில்லை. இதனால் துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகள் மீண்டும் துப்புரவுப் பணிக்கே செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மத பின்னணி

        இங்குள்ள அருந்ததியர்கள் பெரும்பாலும் இந்துக்களே ஆவர். மற்ற தலீத்கள் கிருஸ்தவ நிறுவனங்களில் உதவி பெற்று படித்து, அதன் வழியாக தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அருட்தந்தை. பேசில் அவர்கள் இவ்வாறு பதிவு செய்கிறார்.

        தாழ்த்தப்பட்ட சாதியினரின் முன்னேற்றத்திற்காக கிருஸ்துவ மிஷினரிகள் பங்கு முக்கியமானது ஆனால் துரதிஷ்டவசமாக இதர தாழ்த்தப்பட்டோரை மதம் மாற்றுவதில் முனைந்த அவர்கள் அருந்ததியர்களை மட்டும் கண்டு கொள்ளவில்லை. அருந்ததியர் தங்களகவே முன்வந்தபோதும் தவிர்த்துவிடவே செய்தார்கள். 1930 களில் தான் முதன் முதலாக அருந்ததியர்களில் வெகு சிலரை மதமாற்றம் செய்தனர். அப்போது கூட சாதி இந்துக்கள் அருந்ததியர் மதமாற்றத்திற்கு இடையூறுகளைச் செய்தனர். எனவே தான் தமிழக கிருஸ்தவரில் பெரும்பான்மையாக அல்லது சரிபாதியாக தலீத் கிருஸ்தவர் இருப்பினும், அருந்ததிய கிருஸ்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே! இதனால் கிருஸ்வத நிறுவனங்களை அருந்ததியர்கள் பெரும்பாலும் பயன்பெற முடியாத நிலையிலயே உள்ளனர்.

ஒருவேளை மற்ற தலீத்கள் போலவே அருந்ததியர்களும் கிருஸ்துவ மதத்திற்கு மாறியிருந்தால் ஓரளவு கல்வி பெற்று மாற்று தொழிலுக்கு சென்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருக்க முடியும்!.

தீண்டாமை

        மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த திரு. பழநிக்குமார் என்னும் இளைஞர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அவர் அப்பகுதியில் நிலவும் தீண்டாமை அனுபவங்களை ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறார். 

        இவருடன் கல்லூயில் படிக்கும் சக மாணவர்கள் மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்தவுடன் தன்னுடன் பேசுவதை, பழகுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்று வேதனையோடு குறிப்பிட்டார். பேருந்தில் பயணம் செய்யும் போது, தான் இந்தப் பகுதியைச் சார்ந்தவர் என்று தெரிந்து, சிலர் தன்னை விட்டு தள்ளி நிற்பதாகவும், அப்போது எழுகின்ற மனக்குமுறலை தன்னால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும், இப்படி ஒவ்வொரு நாளும் பல்வேறு மனஉளைச்சலுக்கு ஆளாவதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் தன்னைப் போன்று படித்தவர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலைமையை சொல்ல வேண்டுமா? என்று கேள்வி எழுப்புகிறார்.

        இதுபோன்று அருந்தததியர் மக்கள் வாழும் பகுதியில் ஏராளமான தீண்டாமை கொடுமைகள் கடைபிடிக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது.

அரசியல் பின்னணி

        விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கியது, வளர்ந்தது எல்லாமே மதுரையை மையப்படுத்திதான். இந்தக் கட்சியின் வளர்ச்சியில் மதுரையிலுள்ள அருந்ததியர்களின் பங்கு மிக முக்கியமானது. இன்றைக்கும் ஏராளமான பகுதிகளில் பகுதி பொறுப்பாளராக அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்களே அதிகமாக இருக்கின்றனர். ஆனால் இம்மக்களின் பிரச்சனைகளை விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் கண்டுகொள்வது கிடையாது. அருந்ததியர் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் ஓட்டு வங்கியாகவே பயன்படுத்துகிறார்கள்.

        அருந்ததியர் மக்களுக்கென்று இன்றைக்கு புதிதாக ஒரு கட்சி உருவாகியிருக்கிறது. அது பல்வேறு இயக்கங்கள் கூட்டாக சேர்த்து ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் என்கிற பெயரில் செயல்பட்டுக் கொண்டே கடந்த மே – 2015 ல் ஆதித்தமிழர் கட்சி என்கிற பெயரில் புதிதாக கட்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக திரு. கு. சக்கையன் அவர்கள் பொறுப்பேற்றிருக்கிறார். இக்கட்சியின் தலைமை மதுரையை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இனி மதுரையிலுள்ள அருந்ததியர் மக்கள் அரசியல் வரலாற்றில் அழுத்தமான இடத்தை பதிவுசெய்ய அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

சவால்கள்

        அருந்ததிய மக்களுக்கு முறையான குடியிருப்பு, கல்வி கற்பதற்கான முறையான சூழல் கிடையாது. இதனால் சரியான வேலைவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படியே வேலை கிடைத்தாலும் போதிய வருமானம் கிடையாது. இதனால் ஒவ்வொரு நாளும் அவர்களது வாழ்க்கை ஒரு போராட்டமாகவே உள்ளது.

        இதில் பலர் மலத்தொட்டிக்குள் இறங்கி அடைப்புகளை எடுக்கும் போது விஷவாயு தாக்கியும், மலத்தொட்டிக்குள் முழ்கியும் மரணமடைகின்றனர். இதனால் அவர்களின் குடும்பம் மிகவும் பரிதாபமான சூழலுக்கு தள்ளப்படுகிறது. அப்படி இறந்தவர்களுக்கு எவ்வித நிதி உதவியும் இதுவரை வழங்கப்படவில்லை.

        இவர்கள் வசிக்கும் பகுதி சுகாதரமின்மையால் பல்வேறு தொற்று நோய்களுக்கும் ஆளாகின்றார்கள். இதனால் உடல் நலம் கெட்டு தனது வாழ்நாளுக்கு முன்பாகவே மரணத்தைத் தழுவும் சூழலும் பெருகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அருந்ததிய குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களாக உணவு விடுதிகள், மாமிசக் கடைகளில் பணிக்கு சென்று அவர்களது குடும்பத்திற்கு பொருள் ஈட்டுகின்றனர். இதனால் அவர்களின் கல்விநிலை மிகவும் மோசமான சூழலுக்கு தள்ளப்படுகிறது.

இறுதியாக

        தமிழகத்தில் மதுரை மாநகர் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. வளர்ச்சி பெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. ஆனால் இங்கு வசிக்கும் அருந்ததிய மக்களின் அவலங்கள் ஏராளம். மதுரையில் பெரும்பாலான பகுதிகளில் அருந்ததிய மக்கள் கொத்து கொத்தாக வாழ்கின்றனர், அவர்களின் வரலாறு வீரம் செரிந்தவை. ஆனால் இன்று தீண்டாமை கொடுமைகளை அனுபவித்து கொண்டு, மிக மோசமான வாழ்க்கை சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

        இதற்கு சாதிய ஆதிக்க மனப்பான்மையை காரணம். முறையான குடியிருப்பு கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்து, சுகாதரமான முறையில் அவர்களின் வாழ்க்கையை நடத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்து தரவில்லை.

        ஆதிக்க சாதிகளின் ஒடுக்குமுறை ஒரு பக்கம், கந்து வட்டி கொடுமை ஒரு பக்கம் என்று அன்றாட இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இவர்கள் வாழ்வில் மாற்றம் காண அருந்ததிய குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அவர்களுக்கு முறையான கல்வி கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது அவர்கள் படித்து, நல்ல வேலைவாய்ப்புகளை பெற்று அவர்கள் அதன் வழியாக போதிய பொருளாதரத்தை பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துவார்கள். இதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். இம்மக்களுக்கான மேம்பாட்டு பணிக்கான திட்டங்களை வகுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். அப்போது தான் மதுரையிலுள்ள அருந்ததியர்களின் வாழ்வு மலரும்!

மதுரையிலுள்ள அருந்ததியர்கள் இந்நாட்டின் பூர்வக்குடிகளாகவும், வீரம் செரிந்தவர்களாகவும் இருந்தவர்கள். இன்று துப்புரவுப் பணி போன்ற இழிதொழிலை செய்து கொண்டு, தீண்டாமை கொடுமைகளை அனுபவித்து கொண்டும், அன்றாட வாழ்க்கையை நடத்த திண்டாட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது சாதிய சமூகத்தின் கோர முகத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. தூங்கா நகர் அருந்ததியர்களின் துயரை துடைப்பது எப்போது? 

பிற்சேர்க்கை

1.     அருந்ததியர் வரலாறும் பண்பாடும் - எழில். இளங்கோவன். 2002, ஆதித்தமிழர் பேரவை

2.     அடையாள உருவாக்கமும் அடையாள வேறுபாடுகளும் - அருட்தந்தை. பேசில் 

தொகுப்பாசிரியர்கள்: அ. ஜெகநாதன், இல. ஜெயச்சந்திரன்.

குருநானக் ஆய்வு வட்டம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

3.     அறிஞர்களின் புரளியும் அருந்ததியர் வரலாறும் - ம. மதிவண்ணன், வெள்ளைக் குதிரை (இருமாத இதழ்) ஜீலை-ஆகஸ்டு - 2012

4.     அருந்ததியர் இனமும் துப்புரவு பணியும் - கோ. ஜெயராஜ் http://www.muthukamalam.com/essay/community/p4.html

- மு.தமிழ்ச்செல்வன், சாத்தூர்

Pin It