ஜெ. அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மின்தடை அறவே நீக்கப்படும்.
- தினமலர் - 25.03.2011
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கும், மின் உற்பத்தியும்தான் முக்கியம். ஆனால் தமிழகத்தில் இவ்விரண்டையும் குலைத்து விட்டது தி.மு.க. அரசு. அதனால் தொழில்களும், விவசாயமும் சீரழிந்து, விலைவாசி விம் போல் உயர்ந்துள்ளது. இவற்றை எல்லாம் சீர் செய்ய என்னால்தான் முடியும்.
- தினமணி - 08.04.2011
கருணாநிதியால் மின் வெட்டைப் போக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஆனால் என்னால் மின்வெட்டைப் போக்க முடியும்.
- நமது எம்.ஜி.ஆர் - 09.04.2011
எங்ளை ஆட்சியில் அமர்த்தினால், தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக ஆக்குவேன் என்றார், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதா. ஆனால் இன்றோ ஏறத்தாழ மின்சாரம் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை ஆக்கிவிட்டார்.
கடந்த மே மாதம், சில ஏடுகள், "இதோ புதிய ஆட்சி வந்துவிட்டது. போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கிப் புதிய முதலமைச்சர், மின்தட்டுப்பாட்டை மின்னல் வேகத்தில் போக்கி விடுவார்' என்று எழுதி, ஏமாந்த மக்களை இன்னும் ஒருமுறை ஏமாற்றினர். "இப்போதுதானே ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துள்ளார். எல்லாவற்றையும் படிப்படியாகச் சரிசெய்து விடுவார்' என்று ஆறுதல் கூறினர் சில துக்ளக்குகள்.
படிப்படியாக அவர் 'சரி செய்து கொண்டிருக்கும்' விதத்தை இப்போது நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இரண்டு மணி நேர மின்வெட்டை, நான்கு மணி நேரமாக்கி, நான்கு மணி நேரத்தை இப்போது எட்டு மணி நேரமாக அறிவித்துள்ளார். அறிவிப்புதான் எட்டு மணி நேரமே தவிர, உண்மையில் 10,11 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. சென்னையில் உள்ள பன்னாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்கும் ஒப்பந்தம் உள்ளதால், சென்னை மட்டும் ஓரளவு தப்பிப் பிழைத்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்கு மட்டுமே, சென்னையும் விதிவிலக்காக இருக்க முடியும் என்று கூறுகின்றனர்.
தி.மு.கழக ஆட்சியில், இரண்டு மணி நேர மின்வெட்டு நடைமுறைக்கு வந்தபோது, எகிறிக் குதித்த நாளேடுகளெல்லாம், இப்போது, அரசுக்கும், மக்களுக்கும் இடையிலான சமாதானத் தூதுவர்களாகச் செயல்படுகின்றன. அன்று மின்துறை அமைச்சராக இருந்த, ஆற்காடு வீராசாமி, எவ்வளவு கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் உள்ளானார் என்பதை நாமறிவோம். இன்று அதே ஏடுகள், "நாட்டில் மின்சாரம் இல்லாதபோது, அரசும், அமைச்சரும் என்ன செய்ய முடியும்?' என்று "நியாயம் பிளக்கின்றன'.
இப்போது இவ்வளவு இருட்டும் வெளிச்சத்திற்கு வந்துவிட்ட பிறகும்கூட - "சபாஷ்' என்று கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு ஜெயலலிதாவைப் பாராட்டுகிறது ஒரு "தினமலம்'. பல புதிய திட்டங்களை முதலமைச்சர் தீட்டிக் கொண்டிருக் கிறாராம். அதற்குத்தான் அந்த சபாஷாம். விரைவில் இருள் நீங்கிவிடுமாம்!
கலைஞர் ஆட்சியில், அவரையும், கழக ஆட்சியையும் வசைபாடுவதற்காகவே, தன் நடுப்பக்கக் கட்டுரைகளை அர்ப்பணித்தது ஒரு "மணி'யான நாளேடு. அதற்காகவே சில மதுரை வீரர்களுக்கும், "பழ'ங்கருப்பர்களுக்கும் நடுப்பக் கங்களை வாரி வழங்கியது. ஆனால் இன்றோ, "இருள் விலகட்டும்' என்று தலைப்பிட்டு, "இன்றைய நிலையில், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் வகுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியே கிடையாது'' என்று தலையங்கம் எழுதுகிறது.
எம்.ஜி.ஆர். நாமம் வாழ்க என்பதோடு, எம்.ஜி.ஆர். பாடலும் வாழ்க என்று அங்கே போய்ச் சரணடைகிறது, அவாள் கூட்டம். எம்.ஜி.ஆர். பாடலை எடுத்துவிட்டால்தானே, இன்னமும் அவரை நினைத்துக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்கள் ஆறுதல் அடைவார்கள்.
சரி போகட்டும், இவர்களை விட்டுவிட்டு, நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஏன் இந்த மின்வெட்டு? எதனால் இப்படிப் படிப்படியாக இருள் கூடுகின்றது? எப்படி இதனை எதிர்கொள்வது? இவையே இப்போது நம்முன் நிற்கும் வினாக்கள்.
மின் பற்றாக்குறைக்கான சில அடிப்படைக் காரணங்கள்:
1. நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருக்கும் மின் தேவைக்கு ஏற்ப, மின் உற்பத்தி பெருக்கப் படவில்லை.
2. 2001 - 06 ஆட்சிக்காலத்தின்போது, அன்றைய அ.தி.மு.க. அரசு, தொலைநோக்குப் பார்வை யுடன், மின் உற்பத்தியைப் பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
3. இப்போது ஆட்சிக்கு வந்து, ஒன்பது மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும், மின் உற்பத்திக்கான திட்டங்கள் ஏதும் வகுக்கப் படாமல், அமைச்சர்களை மாற்றுவது, அதிகாரிகளை மாற்றுவது, எதிர்க்கட்சியினரைக் கைது செய்வது ஆகிய நடவடிக்கைகளிலேயே ஜெயலலிதா அரசின் கவனம் உள்ளது.
4. கடந்த பிப்ரவரி 1 முதல் அரசிடம் பணம் பெற்று, மின்சாரம் தயாரித்து வழங்கிக் கொண்டிருந்த ஏழு தனியார் நிறுவனங்களில், நான்கு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. அந் நிறுவனங்களுக்குரிய நிலுவைத் தொகையை அரசு வழங்காததால்தான், உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
5. மத்திய அரசுத் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவும் குறைக்கப்பட்டு விட்ட தாகக் கூறுகின்றனர்.
இவைகளுக்கெல்லாம் என்ன தீர்வு?
சென்ற தி.மு.கழக ஆட்சியில், வடசென்னை, எண்ணூர், மேட்டூர், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் மேட்டூர் மின் நிலையத்தி லிருந்து, இன்னும் ஓரிரு மாதங்களில் மின் உற்பத்தி தொடங்க உள்ளது. மற்ற இடங்களிலும், நிலக்கரித் தட்டுப்பாட்டைச் சமாளித்து, மின் உற்பத்தியை அரசு வழங்கினால் ஓரளவு தப்பிக்கலாம்.
தமிழ்நாட்டிற்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவையென்றும், இப்போது 7000 முதல் 8000 மெகாவாட் வரைதான் மின்சாரம் உள்ளது என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கலைஞர் தொடங்கிய அனல்மின் நிலையங்களில் உற்பத்தியைத் தொடங்கு வதன் மூலமும், உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ள தனியார் நிறுவனங்களோடு, கெளரவம் பார்க்காமல், அரசு பேச்சு வார்த்தை நடத்திச் சரி செய்வதன் மூலமும் 2000 முதல் 3000 மெகாவாட் வரையிலான மின்சாரத்தைப் பெறமுடியும்.
கூடங்குளம் அணு உலை மூலம் பெறக்கூடிய மின்சாரம், அணு உலை எதிர்ப்பாளர்களால் முடங்கிப் போய் விட்டது என்று ஒரு கருத்துக் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலை மூலம் 950 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்கின்றனர். ஆனால் அந்த மின்சாரம் அனைத்தும் அப்படியே தமிழ்நாட்டிற்குக் கிடைத்துவிடாது. 200 முதல் 400 மெகாவாட் வரையில்தான் தமிழகத்திற்கு வழங்கப்படும். எஞ்சிய மின்சாரம், மத்திய தொகுப்புக் குச் சென்றுவிடும். மத்திய அரசு அதனை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு வழங் கும். "கேபிள்' மூலமாக சிறீலங்காவிற்கு அனுப்பவும்கூட வாய்ப்புள்ளது. எனவே அணு உலை மூலம் ஆதாயத்தை விட, ஆபத்தே கூடுதலாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.
முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குப் பெற்றுத்தர முன்வராத, மத்திய அரசு, மின்சாரப் பங்கீட்டில் மட்டும், "மிக நடுநிலையாக' நடந்து கொள்ளும் ! இளித்தவாய்த் தமிழர்களாகிய நாமும் அதனைப் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்வோம் !
மின்வெட்டு என்பது இன்றையச் சிக்கல் மட்டுமன்று. எதிர்காலத்தில் இன்னும் கடுமையாய் நாம் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல். எனவே அரசு, இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
புனல்(தண்ணீர்) மின் நிலையங்களுக்கான வாய்ப்பு, தமிழகத்தில் மிகக் குறைவாக இருக்கும் இத்தருணத்தில், அனல்நிலையம், இயற்கை யிலிருந்து மின் உற்பத்தி ஆகியனவற்றைப் பெருக்குவதில் திட்டமிட வேண்டும்.
கதிரவன் ஒளியிலிருந்தும், காற்றாலைகளின் மூலமாகவும், கழிவுகளிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து விஞ்ஞானிகளோடும், அதிகாரிகளோடும் கலந்துரையாட வேண்டும்.
குமிழ் விளக்குகளுக்கு ("குண்டு பல்ப்') மாற்றாகப் புதிதாக வந்துள்ள சுருள் விளக்கு களைப் (CFL) பயன்படுத்தினால், மின் நுகர்வு வெகுவாகக் குறையும் என்று கூறுகின்றனர். அஃதுண்மை யாயின், குண்டு விளக்குகளைத் தடை செய்யவும் அரசு முன்வர வேண்டும்.
இவற்றையெல்லாம் முதலமைச்சர் சரியாகச் செய்ய வேண்டுமானால்...
தன் அருகில் இருக்கும் துக்ளக் சோ போன்றவர்களைத் தள்ளிவைத்துவிட்டு, அறிவாளிகளை அவர் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
கலைஞருக்கு எதிராகவே எல்லாநேரமும் திட்டமிட்டுக் கொண்டிருக்காமல், நாட்டை எப்படி முன்னேற்றலாம் என்று அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சங்கரன்கோயிலில் முகாமிட்டிருக்கும் 36 அமைச்சர்களையும், உடனே தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து, அவரவர் துறைப் பணிகளைச் செய்யுமாறு ஆணையிட வேண்டும்!