“ தேசியம் என்பது மக்களின் நலன்களுக்காக சிலவற்றைச் செய்வது. அது காஷ்மீர் மக்களையும் உள்ளடக்கியது “
புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான இர்ஃபான் ஹபீப், ‘பாரதிய ஜனதா தலைமையிலான தற்போதைய அரசு நியாயங்களையும் பகுத்தறிவையும் கைவிட்டுவிட்டது. இது ஒருங்கிணைந்த ஒரு முன்னணி உருவாக வேண்டிய மாபெரும் பளுவை எதிர்க்கட்சியினர் மீது சுமத்தியுள்ளது’ என்கிறார்.
’தி ஹிண்டு’ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து:
- நீங்கள் தற்போது மத்தியிலுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ) அரசை முந்தைய அரசுகளோடு எவ்வாறு ஒப்பிடுகிறீர்கள்?
முதல் தேஜகூ அரசைவிட இந்த அரசு மதங்கள், சாதிகள், மதவெறி சிந்தனைகள் மூலம் மிகுந்த பிளவுவாதத்தை தனது அணுகுமுறையாகக் கொண்டுள்ளது. ஆனால் இந்த அரசு, குறிப்பாக ஆளும்கட்சி தனது பெரும்பான்மை மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு காரணமாக தேசம் முழுவதிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாதி மற்றும் மதப்பிரச்சனைகளில் ஈடுபடுகிறது. நீங்கள் ‘பசு பாதுகாப்பு’ என தலித்துகளைத் தாக்குகிறீர்கள். நீங்கள் அதுபோலவே . . . . . . முஸ்லீம்களுக்கு எதிராகவும் பிரச்சனைகளை எழுப்புகிறீர்கள்.
இரண்டாவது வேறுபாடு, இதற்கு முந்தைய எந்த அரசும் பகுத்தறிவையும் நியாயங்களையும் இந்த அரசைப்போல கைவிட்டதில்லை. (அடல்பிகாரி) வாஜ்பேயிகூட ‘உறுப்பு மாற்று மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை நாம் அறிந்திருந்தோம் என விநாயகர் காட்டுகிறார்’, என்றோ, ‘பறக்கும் தட்டு பிரச்சனை பற்றி அறிவியல் மாநாட்டில் அறிமுகப்படுத்துவார்’ என்றோ என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. பகுத்தறிவு மற்றும் நியாயங்களின் மீதான தாக்குதல் பாசிசம் செய்வதாகும். பாசிசத்தின் வரலாறு முழுவதிலும் தேசத்தை புகழ்வது என்ற பெயரால் பிளவுபடுத்துதல் மற்றும் நியாயங்கள் மீது தாக்குதல் என்ற இரண்டு பெரிய செயல்கள் நடந்து வந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்தியாவை ஒரு பெரும் வர்த்தக நாடாக ஆக்குவது என்பதில் அவர்களுக்கு பற்றுறுதியும் இருக்கிறது. சாதாரண குடிமகன் வளர்ச்சி என்பதை சாலை வசதிகள், தொடர்புகள், வேலை வாய்ப்புக்கள் எனப் பார்க்கிறார். இது அவர்களது நோக்கமல்ல. மற்ற அரசுகளும்கூட முதலாளித்துவ சார்பு கொண்டவைகளாக இருந்த போதும்கூட, அவைகள் மக்களிடம் நற்பெயர் பெற சிலவற்றைச் செய்தன. ஆனால் இந்த அரசோ இந்தக் கொள்கைகளைக் கைவிட்டுவிட்டது.
- ஏதேனும் பலம்?
இவைகள் பலவீனங்கள் அல்ல. அவர்களது பார்வையில் இவையெல்லாம் பலமானவைகளே.
- இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
வெளிப்படையான ஒரு சாதகம் என்னவென்றால் எதிர்க்கட்சிகள் பல மாநிலங்களில் அரசுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இது அவர்களுக்கு வரையறைக்குட்பட்ட அளவுக்கு இரட்டை அதிகாரத்தை அளிக்கிறது. அவை மத்திய அரசின் செயல்பாடுகள்மீது கட்டுப்பாட்டை விதிக்கின்றன. தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளுக்கு இடையிலும் பல்வேறு மாநிலங்களில் அதிகாரத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். -ன் பிளவுபடுத்துகிற மற்றும் மதவெறி நடவடிக்கைகளைக் கட்டாயம் நிறுத்த முயற்சிக்க வேண்டும். இங்கு மதவெறி நடவடிக்கைகளில் மக்களை ஈடுபடுத்தும் பா.ஜ.க. தலைவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கும் நடவடிக்கைகள் வேண்டும்.
- பா.ஜ.க.வை எதிர்க்கும் காங்கிரசும், இடதுசாரிகள் முதலானவர்களும் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இது பரிசீலிக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக நீங்கள் மாநில அரசுகளை நடத்தும்போது ஒரு சிலர் சோசலிசப் பிரச்சனையில் ஒத்துப் போகாவிட்டாலும்கூட பல்வேறு பிரச்சனைகளில் ஒத்துப் போகும் சாத்தியக்கூறுகள் உள்ளன. மதசார்பின்மையில் ஈடுபாடு இல்லாவிட்டாலும், சில வகையான மக்கள்நல அரசில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகள் மக்கள் நலப்பணிகளில் ஒத்துப் போகமுடியும். இத்தகைய கூட்டணிக்கான சாத்தியங்கள் கண்டறியப்பட வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் இடதுசாரிகள் வலுவாக இல்லாவிட்டாலும் அங்கு அவர்களது 2-3 சதவீத வாக்குகள் சிறிய வித்தியாசங்களை ஈடுகட்ட உதவும். இது முக்கியமானது. இட்சாரிகளும்கூட இந்தப் பொறுப்பை புரிந்து கொள்ளவேண்டும். இந்த அணிக்கு தீங்கு செய்யும் எதையும் செய்யக்கூடாது. எனது கருத்தின்படி, இந்த அணியில் காங்கிரஸ் பங்குபெறக்கூடாது என்று நாம் பிரச்சனையாக்கக்கூடாது.
- ஆனால் இடதுசாரிகள் அணி பீகாரில் மகாகூட்டணியில் சேராமல் தனித்து வேட்பாளர்களை நிறுத்தினார்களே?
அது ஒரு மாபெரும் தவறு என்று நான் கருதுகிறேன்.
- வரலாற்றை எழுதுவதில் மத்திய அரசு செய்துள்ள மாற்றங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இந்திய வரலாற்று ஆய்வு மையம் பற்றிய உங்கள் பார்வை என்ன?
இந்திய வரலாற்று ஆய்வு கழகத்தைப் பொறுத்தவரையில் பெருமளவுக்கு வந்துள்ள புதியவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் என்ற பொதுமதிப்பீட்டுக்கு உரியவர்களாக இல்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக உள்ளது. வலதுசாரி பிரிவு ஆய்வாளர்கள் என்பதால் அல்ல: அவர்கள் ஆர்.எஸ்.எஸ். -ஆல் முன்மொழியப்பட்டவர்கள் ஏன்பதாலேயே அவர்கள் அங்கு உள்ளார்கள். வரலாற்றில் உள்ள சிக்கலே என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ். தான் முன்நிறுத்த விரும்பும் வரலாற்று மாதிரிகளை பெரும்பாலும் வலதுசாரி பிரிவு வரலாற்று ஆய்வாளர்களே ஒத்துக்கொள்ளவில்லை என்பதுதான்.
ஆர்.சி.மஜும்தார் ‘ஆர்கனைசர்’ இதழில் எழுதி வருபவர். அப்போது ‘ஆர்கனைசர்’ இதழில் தாஜ்மஹால் மான்சிங் என்பவரால் கட்டப்பட்டது என்ற கட்டுரை வெளியிடப்பட்டது. இத்தகைய அறிவற்ற அபத்தங்களை வெளியிடக்கூடாது என ஆர்.சி.மஜும்தார் அவர்களுக்கு எழுதினார். இதற்கு அவர்கள், ‘ நாங்கள் சுதந்திரமானவர்கள். சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கிறோம்’ என்று அவருக்கு திரும்ப எழுதினார்கள். எனவே மஜும்தார் அவர்களுக்கு எழுதினார்:’ எனது சுதந்திரம் இனி எப்போதும் உங்கள் இதழுக்கு எழுதவே கூடாது என்று உரத்துக் கூறுகிறது. ’என்று. அவர்கள் அவரது கடிதத்தைப் பிரசுரித்தார்கள்!
அவர்கள் விற்பனை செய்ய முயற்சிக்கும் வரலாற்று வகைகள் வெறும் கற்பனைக்கதைகள் மட்டுமல்ல: மிகமிக ஆபத்தானவையும்கூட. இந்தமுறை அவர்கள் மேலும் வெகுதூரம் சென்று பள்ளிகளில் உள்ள வரலாற்றுப் பாடங்களை வெறும் கற்பனைத் துணுக்குக் கதைகளாக தரம் குறைத்துவிடுவார்கள்.
- ஒருவர் என்ன சொல்கிறாரோ அல்லது என்ன செய்கிறாரோ என்பதை வைத்து அவரது தேசியவாதத்தை விளங்கிக் கொள்ள முடியுமா? மக்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்தப்பட்டு, அதை மட்டுமே தேசியவாதம் என்று பார்க்க முடியுமா?
இல்லை. சுதந்திரப் போராட்டத்தின்போது தேசியவாதம் ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் உள்ள ஒரு குறிப்பிட்ட உளவியல் பிரச்சனையே அவர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இல்லை என்பதுதான். ஆர்.எஸ்.எஸ். 1925ல் தோற்றுவிக்கப்பட்டது. 22 ஆண்டுகள் அவர்களது தேசியவாதம் என்னவாக இருந்தது? எனவே அவர்களிடம் எந்தவொரு ’தேசிய ஹீரோ’வும் இருந்திருக்க முடியாது. ஆனால் இப்போதோ நீங்கள் மாபெரும் தேசியவாதிகள்!
- எனவே உங்களுக்கு இன்று தேசியவாதம் என்ன அர்த்தத்தைத் தருகிறது?
நாடு இப்போது பாதுகாப்பாக உள்ளது. அது சுதந்திரமாக உள்ளது. தேசத்தைப் பற்றி உறுமுவதிலோ, கூச்சலிடுவதிலோ எந்தப் யனும் இல்லை. மக்களின் நலன்களுக்காக சிலவற்றைச் செய்வதுதான் இன்று தேசியவாதத்தின் பொருள். அது காஷ்மீர் மக்களையும் உள்ளடக்கியது.
- ஆர்.எஸ்.எஸ். -ஐ இஸ்லாமிக் ஸ்டேட்டுடன் ஒப்பிட்டு நீங்கள் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள். அவர்கள் அதைப்போல இல்லை என்று இங்கு சிலர் மறுக்கிறார்களே?
அவர்கள் இணையானவர்கள் அல்லது ஒன்று போன்றவர்கள் என்று நான் கூறவில்லை. அவர்கள் (ஆர்.எஸ்.எஸ். ) ஐ.எஸ்.போல பேசுகிறார்கள் என்றுதான் கூறினேன்.
- எல்லா வகையான மதவெறியர்களும் சமமாக கண்டிக்கப்பட வேண்டியவர்களா?
அங்கு பல்வேறு வடிவங்கள் இருந்தன. மதவெறி சக்திகள் காங்கிரசிலும்கூட இருந்தன. ஆனால் அவர்கள் நாகரிகமடைந்து விட்டார்கள். பல நேரங்களில் சமுதாயங்கள் பெருமளவு பிரதிநிதித்துவம் வேண்டுகின்றன. இது மற்ற சமுதாயங்களை கண்டனம் செய்வதிலிருந்து மாறுபட்டது. ஒரு முஸ்லீம் அல்லது தலித் தலைவர் எங்களுக்கு பெருமளவு பிரதிநிதித்துவம் தேவை என்று கூறலாம். அது வேறு. ஆனால், இரண்டாவதாக உள்ள ஒன்றோ, அரைபாசிசம். நீங்கள் ஒருவரை வீழ்த்திவிட்டால், அவர்களுக்கு அரசியலில் எந்த இடத்தையும் நீங்கள் அனுமதிப்பதில்லை. கோல்வாக்கர் மிக அதிகமாகவே கூறியிருக்கிறார் – ‘எதுவாக இருந்தாலும் முஸ்லீம்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.’ இதைப் போலவே பாகிஸ்தான் வலதுசாரிகளும் இந்துக்களையும், சீக்கியர்களையும் பற்றி மிக அதிகமாகவே கூறியிருக்கிறார்கள். எனவே இது அளவைப் பொருத்தது. ராஜேந்திர பிரசாத் இந்து நடத்தை விதி சட்டத்தை எதிர்த்தார். இதனால் அவரை நீங்கள் மதவெறியர் என்று அழைப்பீர்களா? இத்தகையவர்களோடு ஒத்துப்போவது எப்போதும் சாத்தியமே.
நன்றி: தி இந்து ஆங்கில நாளிதழ் நாள்;29. 7. 2016
நேர்காணல்: விகாஸ் பதக்
தமிழில்: செ.நடேசன்