தேர்தல் முடிந்து விட்டது. பதவியேற்பும் முடிந்து விட்டது. இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருப்பது தமிழகச் சூழலில் மாற்று அரசியலை முன்னெடுக்கும் முயற்சியினை மேற்கொண்ட மக்கள் நலக் கூட்டணி பற்றிய காய்த்தெடுத்தலும் இடதுசாரிகளின் தோல்வியும்தான். இடதுசாரிகளின் வீழ்ச்சி பற்றி சிலம்பாட்ட தொனியில் பம்பரமாக சுற்றுகிறார்கள் “இணைய அறிவு ஜீவிகள்”. இனவெறியைத் தூண்டும் விதமாக அரசியலைக் கட்டமைத்துக் கொண்ட சீமானின் நாம் தமிழர் கட்சி இருக்க வேண்டும்; சாதியை மையமாக கொண்டு காய் நகர்த்தும் பாட்டாளி மக்கள் கட்சி இருக்க வேண்டும்; மதவாத அரசியலின் மையமான பா.ஜ.க. இருக்க வேண்டும்; அரசியலற்றவர்களின் போக்கிடமான அ.திமு.க. இருக்க வேண்டும்; அரசியல் கோருபவர்களுக்கான சேரிடமாக இருந்து இன்று சுருட்டியதைக் காப்பாற்றி, சுருட்டியவர்களைக் காப்பாற்ற ஆட்சி அதிகாரமே ஒரே வழி என பழியாய் கிடக்கும் தி.மு.க இருக்க வேண்டும்; மக்கள் நலனே முக்கியம் என கோரும் “தேச விரோத” கம்யூனிஸ்டுகள் ஒழிய வேண்டும் என கூவும் இந்த “நடுநிலை” இணைய விருப்பக்குறியிடுவோர், கருத்து பகிர்வோர்களின் நியாய பாவம்தான் எம்மை புல்லரிக்கச் செய்து விடுகிறது.
ஊடகங்களில் தேசிய அளவில் இடதுசாரிகளின் வாக்குச்சரிவு, தமிழக அளவில் மக்கள் நலக்கூட்டணி தனது எழுச்சியை வாக்குகளாக மாற்றத் தவறியது பற்றி வரலாறு மற்றும் அறிவியல் வழி நின்று பேசிய கட்டுரைகள் என்று எதுவுமில்லை (இடதுசாரிகள் எழுதிய கட்டுரைகளை விட்டுவிடுங்கள்); இடதுசாரிகள் மீண்டு வர உரிய வழிமுறைகளை அக்கரையோடு யாரும் சொல்லவில்லை. தி.மு.க. மீண்டு வர அவசர சிகிச்சை தேவை என்று சொல்லிடவும், சாதி ஒழிப்பு குறித்து ஆர்.எஸ்.எஸ். உடன் உரையாடல் நடத்திட முயல வேண்டும் என சொல்லிட சமஸ் இருக்கிறார். இடதுசாரிகளின் தேவை உணர்ந்து அவர்களின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வ வழிகளைச் சொல்ல பொதுவெளியில் எவருமில்லை (விதிவிலக்குகள் மிகச்சிலவே). இடதுசாரிகள் உட்கார்ந்து பேசி சுயவிமர்சனமாக எதையாவது அறிவுக்கும் வரை இந்த “நாட்டின் நலம் நாடுவோர்கள்” தங்களது மூளையின் பேட்டரியை சார்ஜ் போடாமல் சில காலம் கழற்றிவைத்துவிட்டு கோடை விடுமுறையில் குதூகலித்திருப்பார்கள்.
இடதுசாரி சிந்தனை உள்ளவர்களாக அறியப்பட்டவர்கள் அல்லது தாங்கள் உழைக்கும் மக்கள் பக்கம் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் அல்லது இரண்டு திராவிடக்கட்சிகளின் போக்கினால் வெறுப்புற்று மக்கள் நலக்கூட்டணியின் ஆரம்ப கட்ட உறுப்பினர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என சொன்னவர்கள், பெண்ணியம், மார்க்சியம், சூழலியம் போன்றவற்றை பேசுபவர்களாக பொதுவெளியில் காட்டி தங்களுக்கான ஊடக வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகள்- இவர்கள் அனைவருக்கும் தேசிய அளவில் இடதுசாரிகளின் தோல்வி மற்றும் மக்கள் நலக் கூட்டணியின் படுதோல்வி உண்மையில் ஆன்ம சுகத்தினை கொடுத்திருக்கிறது.
இந்தியச்சூழலில் தேர்தல் வழிமுறையை கைக்கொண்ட இடதுசாரிகள் தேக்கத்தினை சந்தித்திருக்கிறார்கள். இது ஒன்றே இந்தியாவைப் பொறுத்து அவர்களின் சித்தாத்த முடிவு தவறு என நிரூபிக்க போதுமானது என்று கூறலாம். நமது பொதுப்புத்தியில் தூய்மைவாதமும் தர்க்கமும் தறிகெட்டு ஓடுவதனால்தான் இடதுசாரிகள் மேற்கொள்கிற எந்த ஒரு முயற்சியும் நக்கலாக பார்க்கப்படுகிறது. நேற்றுவரை அ.தி.மு.க அல்லது தி.மு.க. உடன் இருந்தார்கள் அல்லது இரண்டுடன் மாறி மாறி கூட்டணி வைத்து தமிழகத்தை சீரழித்துவிட்டார்கள்; தேசிய அளவில் மேற்கு வங்கத்தில் மம்தாவை தோற்கடிக்க காங்கிரசுடன் ”கள்ள உறவு” வைத்துக் கொண்டார்கள்; இவர்கள் உண்மையான கம்யூனிஸ்டுகளாக இருந்திருந்தால் தனியாக நின்றிருக்க வேண்டும் அல்லது தேர்தலிலேயே நிற்கூடாது என்றெல்லாம் எழுதித் தள்ளினார்கள். இடதுசாரி அரசியல் பற்றி தெரியாத ஆனால் அடையாள அரசியலின் விளைவாக திராவிட, காங்கிரஸ் மற்றும் இன்ன பிற சாதிய கட்சிகளின் கரைவேட்டியோடு அரசியலுக்குள் புதிதாக புகுந்துள்ள இளைஞர்களின் விமர்சனமும் இதுவாகத்தான் இருந்தது.
இத்தகைய இளைஞர்களின் மனதில் இடதுசாரிகள் பற்றி இந்த சமூகத்தின் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ள கழிவான விஷயங்கள்தான் திரும்பத்திரும்ப சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. மாறி மாறி கூட்டணி வைக்கிறார்கள்; கொள்கையை விற்றுவிட்டார்கள்; மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எல்லாம் அந்நியமாகிவிட்டார்கள்.. இப்படியாக பல பல… மறந்தும் இந்த இளைஞர்கள் மற்றும் இவர்களுக்கு குருவாக இருக்கிற வலதுசாரி சிந்தனையாளர்கள் அவர்களின் மூலதனமாக இருக்கிற தகவல் ஊடகங்கள் யாவும் இவர்கள் கூட்டணி மூலம் வெற்றிபெற்ற இடங்களில் அந்த மக்களுக்கு எவ்வாறு சேவையாற்றினார்கள்; ஏதாவது ஒரு காசு தங்களுக்காக சம்பாதித்துக்கொண்டார்களா, மற்ற கட்சி எம்.எல்.ஏ, எம்.பி. மற்றும் அமைச்சர்களைப் போல இவர்கள் நடந்து கொண்டார்களா, இவர்களில் எத்தனை பேருக்கு சொத்து இருக்கிறது, இவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி. என்ற வகையில் கிடைக்கிற சம்பளங்களை என்ன செய்கிறார்கள், சொந்த குடும்பத்தினை கவனித்துக் கொள்கிறார்களா, மாறி மாறி கூட்டணி வைத்து தங்களுக்குள் ஆதாயம் தேடிக் கொண்டார்களா, மக்கள் விரோத கொள்கை சார்ந்த விஷயங்களில் சமரசம் செய்து கொண்டார்களா- என்பன குறித்து வாய் திறந்திருக்கின்றனவா?
இந்த ஊடகங்கள் மம்தா மிக எளிமையானவர், ரப்பர் செருப்பு போட்டிருக்கிறார், 2000 ரூபாய் செல்போன்தான் வைத்திருக்கிறார் என்று வியப்பாக எழுதுகின்றன. இவைகளுக்கு இ.எம்.எஸ், தசரத்தேவ், ஜோதிபாசு, மாணிக் சர்க்கார், அச்சுத மேனன், அச்சுதானந்தன், பினராயி விஜயன் போன்றோரின் எளிமை இவர்களின் கண்களுக்கு தெரிவதே இல்லையா? அல்லது எளிமை இருக்கின்ற இடத்தில் ஏன் ஊழல் இருக்கின்றது என கேட்பார்களா? மேற்கு வங்காளத்தில் மம்தா தமிழ்நாட்டின் ஜெயலலிதா போல் இருந்தால் நிராகரிக்கப்படுவார். அதற்கான எளிமைச் சூழலை இடதுசாரிகள்தான் கடந்த 30 ஆண்டு கால ஆட்சியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று ஏன் இவர்களது பேனா எழுத மறுக்கின்றது? எளிமை சரியான ஆட்சியை தராது, மக்களுக்கு சோறு போடாது; எளிமை என்பது ஒரு கூறு, அதுவே முழுமையானதல்ல; கொள்கையும் நேர்மையான செயல்பாடும்தான் உண்மையான மக்களாட்சி தொடர்வதை தீர்மானிக்கும்.
கஞ்சிக்கு செத்தவர்களுக்கு காசு ஆசை காட்டி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலிலும் அமர்ந்துவிட்டவர்கள் பற்றி இந்த ஊடகங்கள் வாய் திறக்குமா? இடதுசாரிகளின் வீழ்ச்சி மக்கள் நல கூட்டணியின் படுதோல்வியை ஆராய்ந்து தலையங்கம் எழுதுகிறவர்கள், காசு கொடுத்து ஆட்சி பிடித்தவர்களுக்கு ஆலோசனை எதையாவது வழங்குகிறார்களா? பதவியேற்பு விழாவினை மாய்ந்து மாய்ந்து நேரலையாக காட்டி விளம்பரங்களை அள்ளிக் கொண்டு போவதில் ஊடக தர்மம் அல்லாடிக் கொண்டிருப்பதை நாமெல்லாம் பார்க்கத்தானே செய்தோம். அறச்சீற்றம் யாரிடமும் எழவில்லையே?
அசமத்துவ சமூகத்தில் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு கோணங்கள் உள்ளன. சரியான கோணம் எது என்பதுதான் பிரச்சினை. மக்கள் நலன் சார்ந்ததுதான் நல்லது என்றால் எந்த மக்கள் சார்ந்தது என்ற கேள்வி பின்னொட்டாக எழுகிறது. மக்களின் எத்தனை பிரிவுகள்? எந்தக் காலத்திலும் வர்க்கமாக இணையக்கூடாது என உருவாக்கி வைக்கப்பட்ட சாதிகளோடு மல்லுக்கட்டுவது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. பார்ப்பனியம் உருவாக்கி வைத்த படிநிலை அமைப்பின் கருத்துக்கள் சமூகத்தில் தோன்றிய வெவ்வேறு வகை சமூக அமைப்புகளோடு சவாரி செய்வதுதான் அதன் வெற்றி. அந்த வெற்றி இன்றைய முதலாளித்துவ சமூகத்திலும் தொடர்கிறது. முதலாளித்துவ பார்ப்பன கருத்தியல்களுக்கு அவைகளின் மக்கள் விரோத அரசியலுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் ஆற்றும் பணி ஒரு அணுகுண்டிற்கு ஒப்பானதாக இருக்கின்றது. அக்கருத்துக்களை நேரடியாகவோ, பிரதிகளின் வாயிலாகவோ மற்றும் உடகங்களின் வாயிலாக உட்செரித்துக் கொண்டவர்கள் தாங்கள் உட்செரித்தவைகளை இரண்டு பேருக்கு கடத்த அந்த இரண்டு பேர் அதனை நான்கு பேருக்கு கடத்த ………ஒரு அணுகுண்டின் வேலையைத்தான் இந்த பார்ப்பன முதலாளித்துவக் கருத்துக்கள் ஆற்றுகின்றன, ஆற்றியிருக்கின்றன. ஆக கம்யூனிச சித்தாந்தம் என்பது குறித்த மங்கலான சித்திரம் கூட இங்கே அபாயகரமானதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இந்த பின்னணியில்தான் கம்யூனிஸ்டுகளின் செயல்பாட்டினை பார்க்க வேண்டும்.
கம்யூனிஸ்டுகள் துய்மைவாதம் பேண வேண்டும், சமரசம் செய்துகொள்ளக்கூடாது என பலர் கள எதார்த்தம் தெரியாமல் பேசுவதைக் காண முடிகிறது. இந்த புவியில் பிறந்த எவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மைத்துவம் பேணுபவர்களாகவும், சமரசம் செய்துள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்களா என்றால் இல்லை. தங்களிடம் இல்லாத ஒன்றினை இன்னொருவரிடம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை! இங்கு தூய்மைவாதம் என்பது யாருடனும் கூட்டுச் சேரக்கூடாது என்பது; சமரசம் செய்துகொள்வது என்பது அதே முன்பு கூட்டணி வைத்தவர்களோடு கருத்து வேறுபட்டு பிரிந்தபின் மீண்டும் அவர்களோடு வைத்துக் கொள்வது. யார் நலன் பேரில் இத்தகைய மெனக்கடல்கள் என்பதுதான் அடிப்படை. இந்த மெனக்கடல்கள் தவறு எனும் பட்சத்தில் மாற்று முயற்சிகள் குறித்து ஆராயப்பட வேண்டும், வரலாறு செங்குத்து திசையில் பயணிக்காது; சுழற்சியாகத்தான் பயணிக்கும்.
ஒட்டுமொத்த சமூகமுமே இடதுசாரி எதிர்ப்பு மனநிலையிலேயே வளர்க்கப்பட்டிருப்பதால் அவர்களின் அரசியல் திட்டமிட்டே பின் தள்ளப்படுகின்றது. அவர்களால் வெத்துவேட்டு விளம்பரங்களுக்காக 1000 கோடி அளவிலெல்லாம் செலவிட முடியாது. செலவிடவும் மாட்டார்கள். இடதுசாரிகள் தங்களை வலிமைப்படுத்திட இன்னும் செய்ய வேண்டியவைகள் இருக்கின்றன; தவறிய விஷயங்கள் இருக்கின்ற என்பதை மறுப்பதற்கில்லை என்ற ஒப்புதலோடுதான் மேற்சொல்லப்பட்ட விஷயங்களை அணுக வேண்டும்.
தற்போது இடதுசாரிகள் சந்திக்கிற பொதுவான பிரச்சினைகளாக நான் பார்ப்பது இரண்டுதான்.
- 90 களுக்கு பிறகான உலகில் பிறந்திருக்கும் இளம் தலைமுறையினர் கம்யூனிசக் கருத்துக்கள் உவப்பானதாக இல்ல்லை. இது கம்யூனிசக் கருத்துகளில் உள்ள பிரச்சினை இல்லை. எல்லாவற்றையும் தான் நினைத்தது போலவே உற்பத்தி செய்து தள்ளும் (சிக்கன் 65 போல) முதலாளித்துவ உற்பத்தியின் ஒரு கூறு. எனவே அடுத்த தலைமுறைக்கான இளம் உறுப்பினர்களின் வரவு குறைவாக இருப்பதால் கட்சி கட்டுவதில் சிரமம் இருக்கிறது.
- இடதுசாரிகளுக்கு அவர்களைத் தவிர, பிற சமூக ஜனநாயக சக்திகளைத் தவிர பிராந்திய, தேச, சர்வதேச அளவில் எல்லோரும் எதிரிகள்தான். திராவிடக்கட்சிகளுடனான கூட்டணி வைத்தார்கள் என்பதால் அவர்கள் ஒன்றும் உண்மையான நண்பர்கள் என்றாகிவிடுவதில்லை. இத்தகைய நெறிகட்டிய சூழலில் தூய்மைவாதம், சமரசமின்மை என்றெல்லாம் மற்றவர்கள் பேசுவதும் கூட பாவனைதான் (Imitation). பெருவாரி மக்களின் பங்கேற்பு இல்லாமல் சமூக மாற்றத்திற்காக அவர்கள் எழுப்புகிற குரல்கள் யாருக்கும் கேட்பதில்லை அல்லது கேட்காது.
இடதுசாரிகள் இனிவரும் காலங்களில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள பின்வரும் உத்திகள் ஏதேனும் கைகொடுக்குமா என யோசிக்கலாம்.
- ஒரு அரசாங்கம் இருப்பதை ஒரு சாமானியன் தனது சுய அனுபவத்தில் எப்போதாவது உணர்வது போல , இடதுசாரி கட்சி என ஒன்று இருக்கின்றது என்ற தெரிதல் நிலையைத் தாண்டி தனிப்பட்ட முறையில் அதனால் பயன்பட்டுள்ளோம் (அரசு சலுகைகளைப் பெற்று தருவது, தனிப்பட்ட பிரச்சினைகளில் தலையிட்டு நியாயமான தீர்வுகளைப் பெற்று தருவது.. இதுபோல) என்கிற வகையில் அதன் செயல்திட்டங்களை இனிவரும் காலங்களில் வகுத்துக் கொள்ளலாம். இது போன்ற செயல்பாடுகளுக்கு கட்சி வலுவாக இல்லாத இடங்களில் உள்ள குறைவான தோழர்களே போதுமானவர்களாக இருப்பர்.
- பண்பாடு சார்ந்த விஷயங்களில் கட்சி உறுப்பினர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதை கட்சி திட்டத்தில் கட்டாயமாக்கிடலாம். மேலிருந்து கீழ் உள்ள கட்சியின் உறுப்பினர்கள் கலப்பு மணம், எல்லா சாதியோடும் கலாச்சாரப் பரிவர்த்தனை, சமபந்தி போஜனம் போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதை பரீட்சார்த்தமாக முயற்சிக்கலாம். மேல்மட்ட அளவில் இவைகள் சிறப்பாக நடந்தாலும் சாதியம் வேர்கொண்டிருக்கிற கிராமப்புறங்களில் அவ்வாறு நடைபெறுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
- பொதுஜனங்களுடனான உரையாடலை ஜனரஞ்சகமானதாக மாற்றிடலாம். கட்சியின் இலக்கிய அமைப்புகளில் உள்ளவர்கள் தங்களது உயிர்ப்பான பேச்சினால் பார்வையாளர்களைக் கவர்வது போல கட்சி கூட்டங்களில் பேசும் தலைவர்களும் பேசிட அக்கட்சி பேச்சாளர்களை தயார்படுத்திடலாம், சித்தாந்தத்தை ஏழை மக்களிடம் வறட்சித்தன்மையோடு பேசுவதில் ஒரு பிணைப்பு ஏற்படாது.
- தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை இக்கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் விஜயகாந்தினை ஒருங்கிணைப்பாளராகவும், திருமாவளவனை முதல்வர் வேட்பாளராகவும் முன்னிறுத்திட முயற்சிகள் மேற்கொள்ளலாம். வைகோ விட்டுக் கொடுப்பார். ஆனால் விஜயகாந்த் அவ்வாறு விட்டுக் கொடுப்பாரா என்பது கேள்விக்குறிதான். இதன் பொருட்டு நேரிடும் சருக்கல்களை பேசித்தான் தீர்க்க வேண்டும் அல்லது கூட்டணி சமன் குலைந்தாலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இடதுசாரிகள் தேர்தலில் தோற்றுவிட்டார்கள், அவர்களது வரலாற்றுப் பாத்திரம் முடிந்துவிட்டது என மனப்பால் குடிப்பவர்களுக்கு அது பெரும் கொடுங்கனவாகத்தான் இருக்கும். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோள் என போராடுபவர்களுக்கு சறுக்கல், விலகல் இருக்கலாமே ஒழிய சமூகத்திற்கு தேவைப்படாத சக்தியாக தூக்கியெறியப்படும் நிலை என்றுமே வராது. தங்களை சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக் கொண்டு மேலும் வளர்ந்திட இடதுசாரிகளுக்கு நெருக்கடிகளும் தோல்விகளும் நல்லதுதான்!