பெருமுதலாளிய நிறுவனங்களும் அவர்களைச் சார்ந்து இயங்கும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் நம்மை கூட்டாக ஆண்டு வருகின்ற நிலையில், மக்களைச் சார்ந்து இயங்கும் பெரு ஊடகமாக இணை யப் பெருவெளியே உள்ளது. வலைப்பதிவுகள், முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத் தளங் களே, அவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.

எந்த சார்பும் இல்லாத பல செய்திகளை அறிந்து கொள்ளவும், சமூக வலைத்தளங்களில் உறவாடவும் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் முன் வரும் ஆரோக்கியமானப் போக்கும் இதனால் வளர்ந்து வருகின்றது.

இந்நிலையில், சில இணையதளங்களைப் பார்ப் பதற்கு மட்டும் தனிக் கட்டணம் வசூலிப்பது, சில குறிப்பிட்ட இணையதளங்கள் மட்டும் வேகமாக வரச் செய்வது போன்ற திட்டங்களைக் கொண்ட வழிமுறை களில் ஏர்டெல் போன்ற பெரு நிறுவனங்கள் ஈடுபடும் ஆபத்தானப் போக்கு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

இவை திடீரெனத் தொடங்கியவையும் அல்ல. இலவசமாக சில சேவைகளை வழங்குகின்ற தனியார் நிறுவனங்கள், காலப்போக்கில் அதற்கு கட்டணம் விதிக்கத் தொடங்கும் அல்லவா, அதுபோல இது ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்டுவிட்டன. தற்போது, அச்சேவைகளுக்குக் தனிக் கட்டணம் விதிக்க வேண்டியதுதான் பாக்கி!

கைப்பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை செய்துவந்த ஏர்டெல், ஏர்செல், வோடா போன் போன்ற மலைவிழுங்கி தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தற்போது, முகநூல், வாட்ஸ் அப், ஸ்கைப் வைபர் போன்ற சேவைகளின் காரணமாக, இழப்புகளை சந்திப்பதாக ஒப்பாரி வைக்கின்றன.

ஆனால், உண்மையில், வாட்ஸ் அப், ஸ்கைப் வைபர் போன்ற இணையதள சேவைகளுக்கான டேட்டா கட்டணத்தின் மூலம், இதே நிறுவனங்கள் பெருமளவு இலாபம் ஈட்டி வருகின்றன.

ஆனாலும், குறுஞ்செய்தி மற்றும் அழைப்புச் சேவைகளில் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் காட்டி, இந்திய அரசிடம் இது குறித்து அந் நிறு வனங்கள் அவ்வப்போது முறையிட்டு வந்தன.

2013ஆம் ஆண்டு சூன் மாதத்தி லிருந்து, ஏர்டெல் நிறுவனம் சில கூகிள் சேவைகளை, தமது இணைப்பிலிருந்து பெற்றால் இலவசம் என அறிவித்து செயல் படுத்தியது. இதனைத் தொடர்ந்து, 2014ஆம் ஆண்டு திசம்பர் முதல் வாட்ஸ்அப், ஸ்கைப் போன்ற வற்றை பயன்படுத்துபவர்களுக்குத் தனிக் கட்டணம் விதிக்கத் தொடங் கியது, ஏர்டெல் நிறுவனம். இது கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலை யில், அத்திட்டம் கைவிடப்பட் டது.

2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், முகநூல் (பேஸ்புக்) நிறுவனமும், ஏர்டெல் நிறுவனமும் இதே போன்ற தொருத் திட்டத்தை முன்வைத்து, சில இணையதளங் களைப் பார்ப்பதற்கு மட்டும் இலவசம் என்றும் மேலும் அதி வேக இணைய இணைப்பு வழங்கப் போவதாகவும் அறிவித்தன. எனி னும், இத்திட்டங்கள் எதிர்ப் புகள் காரணமாக கைவிடப் பட்டன.

இந்தத் திட்டங்களை மற்ற நிறு வனங்களும் செயல்படுத்தத் தொடங்கினால், நாம் எந்த இணை யதளத்தைப் பார்க்க வேண்டும்- எந்த வேகத் தில் பார்க்க வேண்டும் என்பதனை எங்கோ அமர்ந்துள்ள சில முதலாளிகளும், அதிகார வர்க்க மும் முடிவு செய்யும் நிலை ஏற்படும்.

வணிக நோக்கில் இது செயல் படுத்தப்பட்டாலும், நாளடைவில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு, அரசின் போக்குகளுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிட் டுக் கண்டிக்கும் இணைய தளங் களை மட்டுப்படுத்துவதாகவும், தனியாரைக் கொண்டு இணையத் தணிக்கை நடத்தும் போக்காகவும் இது காலப்போக்கில் விரிவடையக் கூடும்.

2014ஆம் ஆண்டே இது குறித் துப் பேசிய இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையத் தலைவர் இராகுல் குள்ளார், இந்தியாவில் இணைய சமத்துவத்திற்கான எவ் வித கொள்கைகளும் ஏற்படுத்த வில்லை என்பதால் இது போன்ற தனியார் நிறுவனங்களின் செயல் பாடுகளை கட்டுப்படுத்த முடியாது எனச் சொன்னார்.

அப்பொழுதிலிருந்து, இந்தியாவில் அனைவருக்கும் எவ்விதக் கட்டணப் பாகுபாடோ - எவ்வித வேகப் பாகுபாடோ இன்றி, இணைய இணைப்பு சம வேகத்தில் கிடைக்கச் செய்ய வேண்டுமென்ற ‘இணைய சமத்துவக் கொள்கை’ (Net Neutrality)க்கு, இந்தியாவில் ஆதர வுப் பரப்புரைகள் எழத் தொடங்கின.

இணையம் என்பது, தனியார் நிறுவனங்களின் தனிச்சொத்தல்ல. உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்களுக்குள் உறவாட ஏற்படுத்தப் பட்ட, பொது மின்னணு வலைப் பின்னலாகும். இது, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது. அதை, ஒரு சில தனியார் நிறுவ னங்களின் கைகளில் ஒப்படைப்ப தென்பது ஆபத்தானது; சனநாயக விரோதமானது

இணையச் சமத்துவத்திற்கானக் குரல் என்பது, இந்தியாவில் மட்டும் ஒலிக்கவில்லை. ஏற்கெனவே, உலக நாடுகள் பலவற்றில் அதற்காக தனிச் சட்டங்கள் வகுக்கப்பட்டுள் ளது குறிப்பிடத்தக்கதாகும்.

2010ஆம் ஆண்டு, உலகிலேயே முதல் நாடாக, இலத்தீன் அமெரிக்க நாடான சிலி நாடு, இணைய சமத்துவத்திற்கான நெறிமுறை களை வகுத்தது. இதனைத் தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு மெக்சிகோவிலும், நெதர்லாந்திலும், 2014ஆம் ஆண்டு பிரேசில் மற்றும் ஈக்குவாடார் நாடுகளிலும் இதே போல, சட்ட நெறிமுறைகள் வகுக் கப்பட்டன.

இது போன்ற நாடுகளைத் தொடர்ந்து, முதலாளியம் கோ லோச்சும் வடஅமெரிக்காவில் 2014ஆம் ஆண்டு, இணையச் சமத்துவத்திற்கான குரல்கள் எழும் பின. சில தனியார் தொலைத் தொடர்பு பெரு நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் சில குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டும் வேகமான இணைய இணைப்பும், மற்ற இணையங்களுக்கு குறைவான இணைய இணைப்பும் கொடுப் பதாக அறிவித்த போது, இந்த எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, 2014 நவம்பர் மாதம், அமெரிக்காவின் தொலைத்தொடர்புக்கான கூட்டாட்சி ஆணையம் (Federal Communications Commisson - FCC), இணைய சமத்துவத்தை பாதிக்காத வகையில் நெறிமுறை களை உருவாக்கியது. 2015ஆம் ஆண்டு, இது சட்டமாகவே கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் சில தனியார் நிறுவனங் களின் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறை ஒழுங்கு முறை வாரியமான - ட்ராய் (TRAI) நிறுவனம், தானே முன் வந்து இணையச் சமத்துவத்திற்கு எதிரான வேலைகளைத் தொடங் கியது.

கடந்த மார்ச் 27, 2015 அன்று, இணைய சமத்துவத்திற்கு நேர் எதிரான பரிந்துரைகள் கொண்ட ஓர் அறிக்கையை " "Regulatory Framework For Over-the-Top (OTT)

Services’’’’ என்ற தலைப்பில் ட்ராய் அமைப்பு வெளியிட்டு, மக்களிடம் கருத்துக் கேட்டது. இப்பரிந் துரைகள், தனியார் நிறுவனங்களின் ஏகபோகத்தில் இணையப் பெரு வெளியை விட்டு விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உள்ளடக்கி இருந்தது.

ஏர்டெல் போன்ற பெரு முதலாளிய நிறுவனங்களோடும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோடும் ஒட்டி உறவாடி ஆட்சிக் கட்டிலில் ஏறியவர்தான், இன்றைய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பதும், அவரது ஆட்சியில் இது போன்ற தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவானப் பரிந்துரைகள்தான் முன்வைக்கப் படும் என்பதும், எதிர்பார்க்கப் பட்ட செய்தி தான்!

இணைய சமத்துவத்திற்கு எதிரான ட்ராயின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ட்ராய் நிறுவனத்திற்கு தமது கருத்துகளை முன்வைக்கக் கோரியும், இணையப் பெருவெளியில் பெரும் பரப்புரை கள் நடைபெற்றன. பல தன்னார் வலர்கள் ஒன்றிணைந்து http:// www.savetheinternet.in என்ற இணையதளத்தைத் தொடங்கி, அதிலிருந்து ட்ராய் நிறுவனத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் எதிர்ப்புத் தெரிவிக்க வழிவகை செய்தனர். ஏப்ரல் 16 அன்று, ட்ராய் அமைப்புக்கு எதிர்ப்புக் கடிதம் அனுப்ப வேண்டுமென தமிழக இளைஞர் முன்னணி அறிக்கை வெளியிட்டது. இதுவரை சற் றொப்ப, 8 இலட்சத்திற்கும் அதிக மான எதிர்ப்புக் கடிதங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலி ருந்து அனுப்பி வைக்கப்பட்டுள் ளன.

22.04.2015 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில், இணைய சமத்துவம் குறித்து விவாதங்கள் நடைபெற்ற போது, காங்கிரசு துணைத் தலைவர் இராகுல் காந்தி, மக்களிடமிருந்து நிலங்களைப் பறித்து கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்த மோடி அரசு, தற்போது, இணைய வளங்களை முழுவதுமாக கார்ப்பரேட்டு களிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய இணையதளப் பரிமாற்றகம் ((National Internet Exchange of India), 26.04.2015 அன்று, இணைய சமத் துவத்தைதாம் ஆதரிப்பதா கவும், இந்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை எதிர்ப்பதாகவும் அறிவித்தது.

தற்போது எழுந்துள்ள எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு, ட்ராய் தனது முடிவை தள்ளிப் போடக் கூடும். ஆனால், நிரந்தரமாக இது நீடிக்க வேண்டுமெனில், இந்திய அரசும், அதன் ட்ராய் அமைப்பும், இணையச் சமத்துவத் திற்கு எதிரானப் போக்கைக் முற்றிலுமாகக் கைவிட்டு, இணைய சமத்துவத் திற்கான நெறிமுறைக் கொள்கைகள் உருவாக்கி, அதனை சட்டமாக இயற்ற வேண்டும்.

இணையப் பெருவெளியை, மக்களின் சொத்தாகவே பாதுகாக்க வேண்டும்!

Pin It