1. இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு அஞ்சலி

மானுடத்தின் முதல் நாகரிகமாய் வரலாற்றுத் தொன்மையுடன் இயற்கைச் சீற்றங்களுக்கும் அயலான் படையயடுப்புகளுக்கும் ஈடுகொடுத்து அழியாத தொல்குடியாய் ஈழத்தில் நிலைபெற்று வாழ்ந்துவரும் தமிழினம் கடந்த அரை நூற்றாண்டு காலமாய் சிங்களப் பேரினவாத அரசியலால் சொல்லாண்ணாத் துயரம் அனுபவித்து வருகிறது. அம்மக்கள் தம் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்று, தங்கள் விடுதலைக்காகக் கருவியேந்திப் போராடிய விடுதலைப் புலிகளுக்கு முழுமையாகத் துணை நின்றது பெருமைக்குரிய வரலாறு. சிங்களப் பேரினவாத அரசு தெற்காசிய வல்லாதிக்கங்களுடன் சேர்ந்து அம்மக்களை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்து, வீடு வாசல், விளைநிலம், உடைமைகள் அனைத்தும் இழந்த நிலையிலும் இறுதி வரை உறுதி காத்து இலட்சத்துக்கு மேல் இன்னுயிர் ஈந்தார்கள். இரக்கமற்ற கொடுங்கோலர்களாலும் அவர்களின் கொலைக் கூட்டாளிகளாலும் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழின மக்களுக்கு இம்மாநாடு ஆற்றொணாத் துயரத்துடன் அஞ்சலி செலுத்துகிறது.

2.     தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்கம்

தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறை இராணுவ அடக்குமுறையாகவும் அரச பயங்கரவாதமாகவும் இனப்படுகொலையாகவும் முற்றிய போது அதன் எதிர்வினையாகத் தமிழர்களின் எதிர்ப்புணர்வுக்கு வடிவம் கொடுக்கப் பிறந்த ஆயுதப் போராட்டத்தைக் கால் நூற்றாண்டு காலத்துக்கு மேல் முறையாக முன்னெடுத்து, தங்கள் போராட்டப் பாதையில் குறுக்கிட்ட வல்லாதிக்க ஆற்றல்களுக்கு முகம் கொடுத்து, ஈழத் தமிழினத்தின் கேடயமாகத் திகழ்ந்து, பெரும் போர் புரிந்து, ஆதிக்கப் படைகளைச் சிதறடித்து, தமிழர்களின் வீரத்தையும் ஈகத்தையும் பறைசாற்றும் வகையில் வீரச் சாவடைந்து மாவீரர்களான முப்பதாயிரம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இம்மாநாடு நன்றியுடனும் பெருமையுடனும் வீரவணக்கம் செலுத்துகிறது.

3.     வன்னி முகாம்களிலிருந்து தமிழர்களை விடுதலை செய்க

இலங்கையில் வன்னிப் பகுதியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் போதுமான அடிப்படை வசதிகளின்றி பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாகக் கடந்த 5 மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் ஈழத் தமிழர்களை உடனடியாக விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் ஐக்கிய நாடுகள் சபையும், அதன் பொதுச் செயலர் பான் கீ மூன் அவர்களும் அவசர உணர்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தென்மேற்குப் பருவமழையால் ஏற்கெனவே கடும் அவதிக்கு உள்ளான அம்மக்களை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்குள் முகாம்களிலிருந்து வெளியேற சிறிலங்க அரசை அனுமதிக்கச் செய்ய வேண்டும். முகாம்களில் உள்ளோரை வெளியேற அனுமதிக்கவில்லையயனில், சிறிலங்க அரசின் மீது பொருளியல் தடை விதிப்பது மட்டுமின்றி, அந்நாட்டிற்குப் பன்னாட்டு நிதியம் அளிக்க முன்வந்துள்ள கடனின் அடுத்தத் தவணையை நிறுத்தச் சொல்லவும் வேண்டும். இதனை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுடன் இணைந்து ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4.     துயர் துடைப்புக்கு ஐ.நா.வே பொறுப்பு

வன்னி வதை முகாம்களிலும் தமிழீழத்தின் ஏனைய பகுதிகளிலும் இனப் படுகொலையின் பாதிப்பிற்குள்ளாகி சொல்லொண்ணாத் துன்பம் அனுபவித்து வரும் தமிழீழ மக்களின் துயரைத் துடைப்பதற்கான முழுப் பொறுப்பையும் சர்வதேசச் சமூகத்தின் சார்பில் ஐ.நா.வே மேற்கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கோருகிறது.

5.     போர்க் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றுக

தமிழீழ மக்களுக்கு எதிராக  சிறிலங்க சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசின் அதிபர் இராஜபக்சேயும், அவர் கூட்டாளிகளும் நிகழ்த்திய தமிழினப் படுகொலை மீது பன்னாட்டு விசாரண ை நடத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக் குற்றம். மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள் ஆகியவற்றிற்காக மகிந்த இராஜபக்சே உள்ளிட்ட சிங்கள ஆட்சியாளர்கள் மீதும், இந்தக் குற்றங்களுக்குத் துணை புரிந்த தெற்காசிய வல்லாதிக்க ஆட்சியாளர்கள் மீதும் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6.     ஐ.நா.வைக் கண்டிக்கிறோம்

ஈழத் தமிழர்களின் சுய நிருணய உரிமைப் போராட்டத்தை ஒடுக்க சிறிலங்க சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசு, தெற்காசிய வல்லாதிக்க அரசுகளின் துணையுடன் இரண்டரை ஆண்டுகள் மேற்கொண்ட இன அழிப்பில் ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தடுக்கத் தவறிய ஐக்கிய நாடுகள் அவையை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இனப் படுகொலைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்திருக்குமானால் பல பத்தாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அதனைச் செய்யத் தவறியது. அப்போது சிறிலங்கா வந்திருந்த ஐ.நா. பொதுச் செயலரின் தலைமை அலுவலர் விஜய் நம்பியார் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தவறி விட்டார் என்று குற்றம் சாற்றுவதோடு, அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்கி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

7.      பொதுசன வாக்கெடுப்பு நடத்துக

ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்காவின் சிங்களப் பௌத்தப் பேரினவாத அரசு அரை நூற்றாண்டிற்கும் மேலாக இன ஒடுக்குமுறையும், இன அழிப்பும் மேற்கொண்டு வரும் பின்னணியில், தமிழீழ மக்களின் இறைமையை மீட்கவும், அவர்களின் சுயநிருணய உரிமையை நிலைநாட்டவும், இது போன்ற சூழல்களில் உலகின் பிற பகுதிகளில் மேற்கொண்ட வழிமுறையைப் பின்பற்றி பொது சன வாக்கெடுப்பு நடத்தித் தமிழீழத் தேசிய இனத்தின் அரசியல் வருங்காலத்தைத் தீர்வுசெய்ய ஐ.நா. முன்வர வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8.     சிறிலங்கா அரசை இனவெறி அரசு என்று அறிவிக்க

இலங்கை காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட காலம் தொட்டு, அடுத்தடுத்து ஆட்சி புரிந்து வந்த சிறிலங்க ஆட்சிகள் தமிழ் மக்களுக்கு எதிராக மொழி, இனம், சமயம் என்று அனைத்து வகையிலும் இனப் பாகுபாட்டைக் கடைப்பிடித்து, அதன் உச்சக் கட்டமாக இனப் படுகொலையை நிகழ்த்தி, இன்றளவும் அம்மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகளைக் கூட மறுத்து வரும் பின்னணியில் சிறிலங்காவை இனவெறி அரசாக ஐ.நா.வும் உலக நாடுகளும் பிரகடனப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9.     ஈழப் போராட்டத்தை உலகளவில் எடுத்துச் செல்வோம்

தமிழீழ மக்கள் தங்களின் வரலாற்று வழி வந்த தாயகத்தில் முழுமையான அரசியல் சனநாயக உரிமைகளைப் பெற்று சுதந்திர மக்களாக முழுப் பாதுகாப்புடன் வாழ்வதற்குத் தனித் தமிழீழம் அமைப்பது ஒன்றே வழி என்று 1976 மே 14இல் தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் இயற்றிய தீர்மானத்துக்குப் பின், இந்த இலக்கை அடைவதற்காக அம்மக்கள் அமைதி வழியிலும், பிறகு வேறு வழியின்றி ஆயுத வழியிலும் கடந்த 35 ஆண்டுகளாகப் போராடியுள்ளார்கள். இந்தப் போராட்டத்தின் நியாயத்தை இந்திய அரசு அறிந்திருப்பினும், அம்மக்களின் சுயநிருணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. சிங்கள பௌத்தப் பேரினவாத அரசு தமிழீழ மக்களை இனப் படுகொலை செய்து வருவதை அறிந்திருந்தும் பொருந்தாக் காரணங்களைக் கூறி தமிழீழ மக்களின் சுயநிருணய உரிமைப் போராட்டத்தை ஒடுக்கத் துணை போகிறது. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை சர்வப்பரித்தியாகத்துடன் முன்னெடுக்கும் விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டப் பொருந்தாக் காரணங்களைக் கூறி வருகிறது. தமிழீழத்தின் போராளி இயக்கங்களுக்கிடையே மோதலை உருவாக்கி சகோதரக் கொலை எனப்படுவது நிகழ்வதற்கும் இந்திய அரசே காரணமாகும். 1987 இந்திய‡இலங்கை ஒப்பந்தத்தை ஈழத் தமிழ் மக்கள் மீது திணிக்க முற்பட்டு இந்தியப் படைகளை ஏவி, அதன் மோசமான எதிர் விளைவுகளுக்கும் இந்திய அரசே காரணமாகும். இதன் தொடர்ச்சியாகவே பொய்க் காரணங்களைக் கூறி விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய அரசு தடை செய்தது. 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11இல் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து உருவான சூழலைப் பயன்படுத்தி மேலை நாடுகள் பலவற்றையும் வலியுறுத்தி புலிகள் இயக்கத்தைத் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கச் செய்து. அனைத்திலும் உச்சமாகப் புலிகள் இயக்கத்தை நசுக்கும் பொருட்டு சிங்கள அரசு தொடுத்த இன அழிப்புப் போருக்கு ஆலோசனையும் ஆயுதமும் பொருளுதவியும் வழங்கியது இந்திய அரசு.

இந்நிலையில் இந்திய அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை அறவே இழந்து விட்டதைக் கருதி, தமிழீழ மக்களின் சுயநிருணய உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உலக நாடுகளிடையே முன்னெடுத்துச் செல்வது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

அதே போது தமிழீழ விடுதலைக் குறிக்கோளை எந்நிலையிலும் விட்டுக் கொடுப்பதில்லை என்றும், அதற்கு மாற்றாக முன்வைக்கப்டும் வேறு எந்தத் தீர்வையும் நிராகரிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

10.    கச்சத் தீவை மீட்போம்

இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடைப்பட்ட கடல் என்பது உண்மையில் தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் இடைப்பட்ட கடலே ஆகும். வரலாற்று வழிவந்த இந்தத் தமிழர் கடலின் இரு கரையிலும் வாழ்ந்த தமிழ் மீனவர்கள் காலம் காலமாய் அனுபவித்து வந்த மீன்பிடி உரிமையை இந்திய அரசும் சிங்கள அரசும் சீர்குலைத்து விட்டன. 1974ஆம் ஆண்டு இந்தியாவும் சிறிலங்காவும் செய்து கொண்ட எல்லை ஒப்பந்தம் கச்சத் தீவை சிங்கள அரசுக்குத் தாரை வார்த்ததன் மூலம் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையைப் பறித்ததோடு, அவர்களது உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கி விட்டது.

கச்சத் தீவு ஒப்பந்தம் என்று அறியப்படுகிற 1974ஆம் ஆண்டின் இந்திய‡சிறிலங்க ஒப்பந்தத்தை அடியோடு நீக்கம் செய்வதன் மூலம் கச்சத் தீவைத் தமிழகத்திற்கு மீட்டுக் கொடுக்குமாறு கோரிக்கை வைத்துப் போராட இம்மாநாடு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.

11.    கடல் எல்லையைத் திறந்து விடுக

கச்சத் தீவு ஒப்பந்தத்தை நீக்கம் செய்வதால் மட்டும் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமையை முழுமையாக மீட்க இயலாது என்பதால், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடைப்பட்ட கடல் எல்லையைத் திறந்து விடுவதன் மூலம், அல்லது இறுக்கமற்ற எல்லை ஆக்குவதன் மூலம் தமிழக, தமிழீழ மீனவர்களின் வாழ்வுரிமையை மீட்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

12.    இந்தித் திணிப்பை முறியடிப்போம்

இந்தி மொழியை இந்தியாவின் பிற தேசிய இனங்கள் மீது தங்குதடையின்றித் திணிக்கும் முயற்சிக்குத் தமிழகமே தடையயன்று தில்லி வல்லாதிக்கம் உணர்ந்துள்ளது. இந்நிலையில் அரசியல் ஆதாயங்களுக்காகக் கொள்கையைக் காற்றில் பறக்கவிடும் சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளைப் பயன்படுத்தித் தமிழ்நாட்டு மக்கள் மீது இந்தியைத் திணிக்கப் பல்வேறு வழியிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியைத் தமிழக மக்கள் விழிப்புடனிருந்து முறியடிக்க இம்மாநாடு தமிழக மக்களை அறைகூவி அழைக்கிறது.

13.    சிறிலங்கா மீது பொருளியல் தடை

தமிழீழ மக்களின் மீது முப்படைகளை ஏவி இனப்படுகொலை செய்து வரும் சிங்கள பௌத்தப் பேரினவாத அரசு மகிந்த இராசபட்சேயின் தலைமையில் தெற்காசிய வல்லாதிக்கங்களின் நேரடி உதவியைக் கொண்டு கொடிய இன அழிப்பை நடத்தி முடித்துள்ளது. இன்றும்கூட மூன்று இலட்சம் மக்களை முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்து வதைபுரிந்து வருகிறது. இந்தக் கொலைகார அரசுக்குப் பல வகையிலும் துணை புரிந்தவை இந்திய, அயல்நாட்டுப் பெருந்தொழிற் குழுமங்கள் என்பதை மறக்கலாகாது. ஐடியா செல்லுலார். ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சிறிலங்காவில் முதலீடு செய்யும் வாய்ப்பிற்கு ஈடாக சிங்கள அரசின் இனப்படுகொலைக்கு உதவி வருகின்றன. இதேபோல் சிறிலங்காவில் எண்ணெய் வள ஆய்வுக்கு ரிலையன்ஸ் குழுமத்தை அழைத்திருப்பதாக சிறிலங்க அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார்.

சிறிலங்காவின் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிப்பது அதன் தேயிலை ஏற்றுமதியே. இந்த ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் கொலைக் கருவிகள் வாங்கித் தமிழினத்தை அழித்து வருகிறது சிங்கள அரசு.

இந்த உண்மைகளைக் கருத்தில் கொண்டு எல்லா வகையிலும் சிறிலங்கா மீது ஒரு பொருளியல் தடையை நாம் விதிப்பதோடு, உலக அளவில் சிறிலங்காவுக்கு எதிராகப் பொருளியல் தடை விதிக்கும்படியும் இயக்கம் நடத்த வேண்டும் என இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.

14.    தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு வேண்டுகோள்

சிறிலங்கா அரசின் முக்கிய வருமான வழிகளில் ஒன்றாக இருப்பது சுற்றுலாத் துறையாகும். மனித உரிமைகளை மதிக்கிற எவரும் இனக் கொலைகாரர்கள் ஆட்சிபுரியும் அந்த நாட்டுக்கு உல்லாசப் பயணம் செல்லக் கூடாது. இவ்வழியில் சிங்கள அரசை நெருக்கவும் இயலும். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாகத் திரைப்படத் துறையினர் எவ்வகையிலும் சிறிலங்காவோடு கூட்டு முயற்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், குறிப்பாக சிறிலங்காவில் படப்பிடிப்பு நடத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

15.    சிறப்பு முகாம்களை இழுத்து மூடுக

தமிழகத்தில் தமிழக அரசு ஈழத் தமிழரில் சிலரையும், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் தமிழகத் தமிழர்கள் சிலரையும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலான சிறை முகாம்களில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டிப்பதோடு இந்தச் சிறப்பு முகாம்களை இழுத்து மூடி முகாம்வாசிகளை விடுதலை செய்யுமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

16.    ஈழத் தமிழ் அகதிகளின் உரிமைகளை மதிக்க

இனக் கொலைக்கு அஞ்சித் தமிழகத்தில் கரையயாதுங்கிய தமிழீழ மக்கள் இலட்சத்துக்கு மேற்பட்டோர் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் மட்டுமல்ல, உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அகதி உரிமைகளும் கூட இவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. இவர்களுக்கு உதவியாக வயிற்றுப்பாட்டுக்கும் போதாத அற்பத் தொகையே அரசு வழங்குகிறது. இந்த அகதி முகாம்களும் அரைச் சிறைகளாகவே உள்ளன. இந்த அவலத்தை மாற்றி தமிழீழ அகதிகளின் தேவைகளை நிறைவு செய்து, அவர்களைச் சுதந்திரமாக வாழ அனுமதித்து, அவர்களின் மனித உரிமைகளை மதித்து நடக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

17.    எழுவரையும் விடுதலை செய்க

முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப் பெற்று பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்குத் தண்டனைச் சிறையாளியாகவும் நளினி, ராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் வாழ்நாள் சிறையாளிகளாகவும் கடந்த 18 ஆண்டு காலமாகச் சிறையில் வாடுகின்றனர். இந்த எழுவரையும் உடனே விடுதலை செய்யுமாறு இந்திய‡தமிழக அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

18.    முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்க

இப்பொழுது வலுவோடுள்ள முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்டுவதற்கு இந்திய அரசு கேரளத்துக்கு அனுமதி வழங்கியதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. இச்செயல் கடந்த 2006 பிப்ரவரி 27 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு நடவடிக்கைக்கு இன்னொரு சான்றும் ஆகும்.

கேரள ‡ இந்திய அரசுகளின் கூட்டுச் சதியை மூடிமறைக்க தமிழக முதலமைச்சர் கருணாநிதி எத்தனையோ தந்திரங்கள் செய்து பார்த்தார். ஆனால் பலிக்கவில்லை. நடுவண் அரசு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றார். பிறகு கொடுத்த ஒப்புதலைத் திரும்பப் பெற்று விட்டது என்றார்.

நடுவண் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், கேரள முதலமைச்சர் மற்றும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் ஈவிக்கரமின்றி கருணாநிதியின் தந்திரங்களை அம்பலப்படுத்திவிட்டனர். ஒப்புதல் கொடுத்திருப்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் உறுதிப்படுத்தினர். வேறு வழியில்லாமல் இப்பொழுது அந்த அனுமதியை நிறுத்தி வைக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளது.

கேரளாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்து தமிழ் மக்கள் போராட வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து அரிசி, பருப்பு, காய்கறி, பால் , இறைச்சி, ஆடு, மாடு, கோழி, மணல் போன்றவை செல்லவில்லை எனில் மலையாளிகள் பட்டினி கிடப்பார்கள். வேலையின்றித் தவிப்பார்கள். குரல்வளையைப் பிடித்தால் மூச்சுத் திணறுவது போல் தமிழகம் பொருளாதாரத் தடை விதித்தால் மலையாளிகளின் அன்றாட வாழ்க்கை திக்குமுக்காடும். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டு, இப்பொழுதுள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்கும் நிலை வரும்.

தமிழ்நாட்டிலிருந்து சாலை வழியாகவும், தொடர்வண்டி வழியாகவும் கேரளாவுக்குச் செல்லும் பொருட்களைத் தடுக்கும் மறியல் போராட்டத்திற்கு அணியமாகுமாறு தமிழக மக்களை இம்மாநாடு உரிமையோடு அழைக்கிறது.

அதே வேளை, தமிழ்நாட்டு அரசிடம் ஒரு கோரிக்கையை இம்மாநாடு முன் வைக்கிறது. 2006 பிப்ரவரி 27 உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, 142 அடி வரை தண்ணீர் தேக்க, முல்லைப் பெரியாறு அணையின் வடிகால் மதகுகளைக் கீழிறக்குமாறும், தீர்ப்பின்படி தண்ணீரைத் தேக்குமாறும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

19.    ஈழத் தமிழர்களுக்காகப் போராடியோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுக

மனித நேய அடிப்படையிலும் இன உணர்ச்சி அடிப்படையிலும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களில் தமிழக மக்களும் இன உணர்வாளர்களும் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். அப்போராட்டங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருளிழப்பு, வேலை இழப்பு, சிறையடைப்பு, வழக்குகள் ஏராளம், ஏராளம்! ஈழத் தமிழர்களுக்காக எண்ணிலடங்கா ஈகங்களைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்துள்ளார்கள்.

இவ்வாறு ஈகங்களைச் செய்த தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தமிழினப் பாதுகாப்பு மாநாடு வியந்து பாராட்டுகிறது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம், பொடா சட்டம், குண்டர் சட்டம் போன்ற மிகக் கொடிய ஆள்தூக்கிச் சட்டங்களில் சிறைபட்டோர் பலர். பிரிவினைத் தடைச் சட்டம் போன்ற சனநாயக மறுப்புச் சட்ட விதிகளின் கீழ்ச் சிறை சென்றோர் ஏராளம்.

கடந்த 2008 தொடங்கி 2009 மே வரை இந்திய அரசின் அனைத்து வகை உதவியோடும், தமிழகஅரசின் உறுதியான துணையோடும் சிங்கள இனவெறி அரசு நடத்திய இறுதிப் போரில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது தமிழகமே கொதித்து போர்க்கோலம் பூண்டது. பற்பல வடிவங்களில் மக்கள் போராடினர்.

ஈகி முத்துக்குமார் தொடங்கி வைத்த தீக்குளியல் பற்றிப் பரவி 16 பேர் தங்களைத் தாங்களே எரித்துக் கொண்டனர்.

இந்திய அரசுக் கொடியையும், இலங்கை அரசுக் கொடியையும் எரித்துச் சிறைப்பட்ட தோழர்களைப் பிணையில் விட ஒரு வாரத்திற்கு இந்திய அரசுக் கொடியைத் தங்கள் வீட்டு முன் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. இந்நிபந்தனையை ஏற்காத இரண்டு தோழர்கள் கடந்த ஏப்ரல் 25 முதல் 6 மாதங்களாக கோவைச் சிறையில் அடைபட்டுள்ளனர்.

ஈழத்தில் தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்ல இந்தியப் படைக் கருவிகளை அனுப்பும் செய்தி அறிந்து, அந்தப் படை ஊர்திகளைக் கோவை நீலாம்பூர் அருகே வீரத்துடன் மறித்துப் போராடிய தோழர்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடிய பிரிவுகளின் கீழ் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இன்னும் இன்னும் பல்வேறு வடிவங்களில் தமிழ் இன உணர்வாளர்கள், மனிதநேயர்கள் மீது கொடிய  பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஈழத்தில் போர் முடிந்து விட்டது என்று இலங்கை அரசு அறிவித்து விட்டது. இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து துயர் துடைப்புப் பணிகள் செய்வதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஈழத் தமிழர் உரிமை காக்க, உயிர் காக்கப் போராடிய தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் மீது வழக்குகள் நடத்துவதும் அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதும் தேவையில்லை, ஞாயமில்லை.

கடந்த 1970களில் இலங்கையில் அரசைக் கவிழக்கப் புரட்சி செய்த ஜே.வி.பி. இளைஞாகள் அனைவரையும் பின்னர் சிங்கள இன உணர்ச்சி அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்தது. வழக்குகளைத் திரும்பப் பெற்றது. 1977இல் மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்த ஜோதிபாசு அதற்கு முன் நக்சல்பாரி அமைப்பினர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்று அவர்கள் அனைவரையும் விடுதலை செய்தார்.

இது போன்ற எடுத்துக்காட்டுகள் உலகெங்கும் இருக்கின்றன. இந்தியாவிலும் இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் இருக்கின்றன.

எனவே, இன உணர்ச்சி அடிப்படையிலும், மனிதநேய நோக்கிலும் ஈழத் தமிழர்கள் உயிர் காக்க, உரிமை காக்கப் போராடியதற்காக, பேசியதற்காக, செயல்பட்டதற்காகப் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும்  திரும்பப் பெறுமாறும் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

 

Pin It