ஆரியக் கொள்கையான பார்ப்பனியம் இம் மண்ணின் மக்களைக் கூறு போட்டது. நால்வர்ணம் என்ற பெயரில் மக்களைப் பிளவு படுத்தியது. ஒவ்வொரு வர்ணத்துக்கும் தனித்தனியாக நீதிகள் உருவாக்கப்பட்டது. அந்த நீதியை காப்பாற்றாத வர்ணத்தவனுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டது. பெண்கள் பொருள்களாகப் பார்க்கப்பட்டனர். பெண்ணுரிமை மறுக்கப்பட்டது. ஒவ்வொரு வர்ணமும் பிறப்பின் அடிப்படையிலேயே அடையாளப்படுத்தப்பட்டது. இவைகளே இன்றளவும் பார்ப்பனியத்தின் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு. அப்பார்ப்பனியம் சுமந்துவரும் பாவ மூட்டை.
பார்ப்பனியம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இம்மக்களால் எதிர்க்கப்பட்டு வரும் சித்தாந்தம். சமூக சீர்திருத்தவாதிகளால், சமூக நீதிக்காகப் போராடுகின்றவர்களால், பொதுவுடமைக்காரர்களால், பகுத்தறிவுவாதிகளால் தொடர்ந்து எதிர்ப்புகளைச் சந்தித்துவருவது பார்ப்பனியம். மேலும், பார்ப்பனியம் சமயச்சான்றோர்களான திருமூலர், வள்ளலார், நாராயணகுரு, அய்யாவைகுண்டர் போன்றவர்களாலும் எதிர்க்கப்பட்டு வந்துள்ளது.
'ஆரியர்கள் சிந்து வெளிப்பகுதியில் வசித்துவந்த தாசர்கள் என்னும் திராவிட(தமிழ்) மக்களின் தலைவர்களை தங்களுடைய அரசனான இந்திரனைக் கொண்டு வஞ்சனையால் அழித்து இம் மண்ணில் தங்களுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டவர்கள். சிந்துவெளி மக்களை அடிமைப்படுத்திய செய்திகளையே ரிக் வேதமாகப் பாடியுள்ளார்கள். சிந்துவெளிப் பகுதியில் காணக் கிடைக்கும் சுவடுகள் ரிக் வேதத்தை ஒத்துள்ளது' எனக் குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் குருவிக்கரம்பை சு.வேலு.
ஆரியக் கூட்டத்தால் கட்டமைக்கப்பட்ட, ஆரிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவாக்கப்பட்டதுதான் பார்ப்பனியம். வருணாசிரமச் சட்டங்களைக் கொண்டு இந்தியாவின் ஆதி குடிமக்களாகிய தமிழர்களை தொடர்ந்து நசுக்கியும், ஒடுக்கியும் வந்துள்ளதை நமது இலக்கியங்களும், ஆரிய இலக்கியங்களும் சாட்சிகளாக நின்று நிரூபித்துக்கொண்டு இருக்கின்றது.
பார்பனியம் என்பது கடவுளின் பெயரால் ஆரியர்கள் தங்களது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த உருவாக்கிக்கொண்ட தந்திரம். சமத்துவத்திற்கு எதிரான சூழ்ச்சி. சமூக நீதிக்கான இரண்டகம் என்பதே கடந்த நூற்றாண்டு வரை நாம் கண்ட அனுபவம்.
ஆரியர்கள், திராவிடர்கள்(தமிழர்கள்) என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி இன்று இனக் கலப்பு நடந்துவிட்டது. அதோடு சிந்து வெளித்தமிழர்களால் பேசப்பட்ட மொழி இன்று பல்வேறு விதமாகப் பிரிந்து வடதிராவிட மொழிகளாகவும், தென் திராவிட மொழிகளாகவும் நூற்றுக்கணக்கில் உருவான பின்பு ஒட்டு மொத்த இந்தியாவின் பெரும்பான்மை மக்களையும் தமிழர் இனம் என்று குறிப்பிடும் நிலையும் இல்லை. எனவே, ஆரியன்-தமிழன் இனப்பாகுபாடு இன்று அவசியமற்றது என்னும் கருத்தும் தற்போது மேலோங்கி வருகிறது. பரப்பப்பட்டும் வருகிறது.
இன்றளவில் பார்ப்பனியம் என்றால் என்ன?
அது நடைமுறையில் இருக்கிறதா?
பார்பனியம் இன்றும் எதிர்க்கப்பட வேண்டுமா?
அந்த நச்சுப்பாம்பு செத்துவிட்டதா இல்லையா?
மன்னர்களை கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனியம் இன்று எப்படி உயிருடன் இருக்கிறது?
என்று கேள்வி கேட்டு பதில் பெற வேண்டியது அவசியமாகிறது.
பார்ப்பனியம் இன்று நடைமுறையில் இருக்கிறதா?
இன்று நால்வர்ணத்திற்கு விளக்கம் தரும் நவீன எழுத்தாளர்கள் "நால் வர்ணம் என்பது குணத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் எந்தவித மாறுபாடும் கிடையாது. பிறப்பால் வர்ணம் பிரிக்கப்படவில்லை. மநுதர்மத்தில் நிறையவே இடைச்செருகல் உள்ளது" என்றெல்லாம் எழுதுகிறார்கள். சாது குணம் உடையவர்கள் பிராமணர்கள், வீரம் நிறைந்தவர்கள் சத்திரியர்கள், வியாபாரச் சிந்தனை உள்ளவர்கள் வைசியர்கள், சோம்பேறி குணம் கொண்டவர்கள் சூத்திரர்கள் என்று வியாக்கியானம் சொல்கிறார்கள். யார்வேண்டுமானாலும் எந்த வர்ணத்திற்குள்ளும் இருக்க முடியும் என வாதிடுகிறார்கள். பிரம்ம குமாரிகள் என்ற ஆன்மீக அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்களை சங்கம யுக பிராமணர்கள் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். இப்படிக் கூறுவதுதான் உண்மையா? நடைமுறையில் இதுதான் கடைபிடிக்கப்படுகிறதா?
நடைமுறையில் உள்ள பார்ப்பனியம் குறித்து விவாதிப்பது அவசியமாகும்.
பார்ப்பனியம் என்பது வர்ண அடுக்கு முறையை ஏற்றுக் கொள்வதாகும். மேல் அடுக்கில் உள்ளவர் கீழ் அடுக்கில் உள்ளவர்களோடு நட்பு பாராட்டக் கூடாது என்பதாகும். இன்று சாதி மறுப்பு திருமணங்களுக்கு கொடுக்கும் எதிர்ப்பின் மூலம் இந்த பார்ப்பனியக் கொள்கைப் பாதுகாக்கப்படவில்லையா?
பார்பனியம் என்பது வர்ணத்தின் மேல் அடுக்கில் உள்ள பிராமணர்களை(பிறப்பால்) அழைத்து சுப, அசுப காரியங்களைச் செய்வதை ஏற்றுக் கொள்வதாகும். இது இன்று நடைமுறையில் உள்ளதா? இல்லையா? பலவாறான மூடப்பழக்கங்களைச் சடங்குகளாக்கி மக்களைப் பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் பார்ப்பனியத்தை எங்கும் நீக்கமற பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
பார்ப்பனியம் என்பது கோவில் கருவறைக்குள் பிற வர்ணத்தாரை அனுமதிக்க மறுப்பதும், பிறப்பால் பிராமணர்களை அனுமதிப்பதுமாகும். இதைக்கூட இல்லை என்று மறுத்து விடுவார்களா நம் நவீன கருத்தாளர்கள்? குணத்தால் பிராமனர்களாக உள்ளவர்களைக் கொண்டா கோயில் சடங்குகள் நடத்தப்படுகின்றது? பிறப்பால் பிராமனனாகப் பிறந்தவனைக் கொண்டுதானே பூசைகள் நடக்கிறது. இனக் கலப்புக்குப் பின் இந்த நடைமுறையை தூக்கியெறியவில்லையே ஏன்?
பார்ப்பனியம் என்பது தனது மேலாதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட சமற்கிருதத்தை உயர்த்திப்பிடித்து. மக்களின் மொழியாகிய தமிழை(தமிழால் பிறந்த எல்லா மொழிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்) தாழ்த்துவது. இந்த நடைமுறையும் கோவில்களில் ஒலிக்கப்படும் மந்திரங்கள் மூலம் நிலைநிறுத்தப்பட்டுக் கொண்டுதானே வருகிறது. இன்றளவும் தமிழ் மந்திரங்கள் கோவில்களில் மறுக்கப்பட்டுக்கொண்டுதானே இருக்கிறது?
பார்ப்பனியம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதி மறுப்பதும். கோவில் விழாக்களில் அவர்களின் பங்களிப்பை தடுப்பதும்தான். இந்த கொள்கையாவது இன்று அழிக்கப்பட்டுள்ளதா? பல கிராமக் கோவில்களில் தேர் வடம் பிடிக்க தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதி மறுக்கப்படுகிறார்கள். திருவிழா நடத்த மறுக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைய மறுக்கப்பட்டு ஆட்சியாளர்களால் சீல் வைக்கப்பட்ட ஆலயங்கள் இங்கு அதிகரிக்கிறதே ஏன்?
பார்ப்பனியம் என்பது மக்களின் தொழில்களையும், கலைகளையும் இழிவுபடுத்துவது. இக்கொள்கையால்தான் நம் மக்களின் விவசாயம் நசுக்கப்பட்டது. மருத்துவர், பறையர், வண்ணார், குயவர், தச்சர் போன்ற தொழில்கள் இழிவு படுத்தப்பட்டு அத்தொழில் செய்யும் மக்களுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாமலேயே உள்ளது. இந்த நாட்டில் விவசாயிகளுக்கோ, மண்ணின் தொழில்களைச் செய்து வளரும் மக்களுக்கோ அரசு உரிய அங்கீகாரம் கொடுத்து விருதுகள் வழங்கி கெளரவப்படுத்தியுள்ளதா? ஆரிய விளையாட்டாகிப் போன சதுரங்க, மட்டைப் பந்து விளையாட்டுக்குக் கொடுக்கப்படும் அங்கிகாரம் சடுகுடு விளையாட்டுக்கு உண்டா? பரத நாட்டியத்திற்கு வழங்கும் அங்கீகாரம் ஊர்ப்புறக் கலைகளுக்கு வழங்கப்படுகிறதா? இவைகளையெல்லாம் பார்ப்பனியம் என்று சொல்லாமல் வெறன்னவென்று சொல்வது. மட்டைப் பந்து வீரர் சச்சின் தென்டுல்கருக்கு வழங்கவேண்டும் என்பதற்காகவே பாரத ரத்னா விருதுக்குள் விளையாட்டையும் சேர்த்தார்கள். இதுபோல நாட்டுப்புற மக்கள் மதிக்கப்பட்டதுண்டா?
பார்ப்பனியத்தில் கல்வி என்பதும், தகுதி என்பதும் படிப்பதில்-எழுதுவதில் மட்டுமே. எழுத்துத்தேர்வு எழுதியவர்களாலும் அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களாலும் இந்த நாட்டின் ஒவ்வொரு துறையும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதிக மதிப்பெண் என்ற ஒன்றே தரமாக்கப்பட்டு தகுதியாக்கப்பட்டு அத்தகுதி பெற்றவர்களே விவசாயத்துறை, தொழில் துறை, விளையாட்டுத்துறை, கல்வித்துறை என எல்லாத் துறைகளிலும் நிர்வாகியாக இருந்து நிர்வகித்து வருகிறார்கள்.
மக்களின் தொழில் சார்ந்த கல்வியாக இல்லாமல் படிப்பதும்-எழுதுவதும்தான் கல்வி என்ற நிலை பெருகிவிட்டது. முன்பெல்லாம் விவசாயி தனது அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தை நிலத்திலிருந்து கற்றுக்கொடுப்பார். இவரும் வாத்தியார் என்று அழைக்கப்படுவார். ஒரு இசைவாணர் தனது இசைக் கலையை அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருவார் அவரும் வாத்தியார் என அழைக்கப்படுவார். குஸ்தி போன்ற போர்க் கலைகளை அக்கலைகளின் ஆளுமை நிறைந்தவரே கற்றுத் தருவார் இவைகளெல்லாம் கல்வி என்று போற்றப்பட்டது. ஆனால் இன்று ஏட்டுக்கல்வியும் எழுதும் தேர்வுமே கல்வித் துறையாகிப்போனது. இது பார்ப்பனியம் இல்லையா. நாற்றுப் பாவுவதும், நாற்று நடுவதும், களையெடுப்பதும் தெரியாமல் விவசாயத் துறைக்கு அதிகாரியாக வந்துவிட முடியும். இசைத் துறையில் அனுபவமே இல்லாமல் இசை ஆசிரியராக முடியும். இதையெல்லாம் என்னவென்பது?
பார்ப்பனியம் என்பது சமூக நீதிக்கு எதிரானது. சமூக நீதியை நிலைநாட்ட வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பனர்கள் குரல் கொடுப்பதிலிருந்தே இதை நாம் தெரிந்து கொள்ளலாம். அதோடு இட ஒதுக்கீட்டால்தான் இன்றைக்கு சாதி வளர்ந்துள்ளதாக உயர்சாதி மக்களாலும் கூட பேசப்படுகிறது. பரப்பப் படுகிறது. இட ஒதுக்கீடு வேண்டாம், இவர்களால் உருவாக்கப்பட்ட தகுதிதான் வேண்டும் என்கிறார்கள் பார்ப்பனர்களும் உயர்சாதியினரும். இட ஒதுக்கீடுதான் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் என்கிறார்கள். இட ஒதுக்கீட்டால் நிர்வாகத் திறன் வளர்ந்துள்ளதாக கூறுகிறது புள்ளிவிவரங்கள். ஆனால் தகுதியில்லாத இடஒதுக்கீட்டால் வந்தவர்களால் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது என்று கூப்பாடு போடுகிறது பார்ப்பனியம்.
தாங்கள் உயர்த்திப் பேசும் மொழியால்(சமற்கிருதத்தால்) சாதியை ஒழிக்க முடியவில்லை. பொது இடமான கோவில்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. செய்து வைக்கும் திருமணங்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. திரு மடங்களால் சாதியை ஒழிக்க முடியவில்லை. தங்களின் வாழ்வியலால் சாதியை ஒழிக்க முடியவில்லை. இட ஒதுக்கீட்டை எடுத்துவிடுவதால் மாத்திரம் சாதி ஒழிந்துவிடும் என்பது பச்சைப் பார்ப்பனியம் அல்லவா?
பெண்களை ஒடுக்குவது பார்ப்பனியம். இந்த கொள்கையும் இன்றளவும் கைகொள்ளப்பட்டே வருகிறது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளே இதற்குச் சான்று.
பார்ப்பனர்களால் மட்டுமே வளர்க்கப்பட்ட பார்ப்பனியம் இன்று எல்லா சாதிக்காரர்களாலும் வளர்க்கப்படுகிறது. பார்ப்பனியம் வீரியமாக வளர்ந்து நிற்கிறது. பக்தியாலும், சடங்குகளாலும், புராண இதிகாசங்களாலும் இன்றும் பார்ப்பனியம் வேர்விட்டு விழுது பரப்பு (கொடுங்)கோளோச்சுகிறது.
கோவில் கருவறைகளுக்குள் நுழைவோம். தமிழில் படிப்போம். விவசாயம் போற்றுவோம். சாதி மறுப்பு திருமணங்கள் செய்வோம். சமற்கிருதம் மறுப்போம். மூடப் பழக்கங்கள் எதிர்ப்போம். அதுவரை இடஒதுக்கீட்டைத் தொடருவோம். தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக்காய்க் குரல் கொடுப்போம். பார்ப்பனியம் என்ற நச்சுப் பாம்பு கடித்த விசம் நம்முள் ஏறிடாமல் பாதுகாத்துக் கொள்வோம்.
- நா.வெங்கடேசன், ஆசிரியர், மெய்ச்சுடர் சிற்றிதழ், பேராவூரணி