கடந்த மாதம் திருப்பூரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய 'நாம் தமிழர்' கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் என்றும், அது தமிழர்களை அன்னியர்கள் ஆண்டார்கள் என்பதற்கான அவமானச் சின்னம் என்றும் பேசியிருக்கின்றார். அத்தோடு நிறுத்தாமல் வீரபாண்டியக் கட்டபொம்மனையும் தரக்குறைவாக விமர்சித்து இருக்கின்றார். இது தொடர்பாக தேனி மாவட்ட நாயக்கர் முன்னணி என்ற சாதிவெறி அமைப்பைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற நபருக்கும், சீமான் அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் வெளியாகி இருக்கின்றது. சீமானின் அரசியல் நாகரிகத்தைப் பற்றியும், அவரின் யோக்கியதையைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்கள் அதைக் கண்டிப்பாக கேட்க வேண்டும்.
சீமானை இப்படி எல்லாம் பேசச் சொல்லி பின்னிருந்து இயக்கும் இயங்கு சக்தி என்ன என்று பார்த்தால், அவரின் கீழ்த்தரமான அரசியல் பிழைப்புவாதமே. அவர் பெரியாரியம் பேசுவார்; திராவிடத்தை எதிர்ப்பார், ஜெயலலிதாவுக்கு ஓட்டு கேட்பார்; ஆனால் கன்னடர்களையும், மலையாளிகளையும், தெலுங்கர்களையும் தமிழ்நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்பார். அப்படியே வைகுண்டராஜனிடம் காலை நக்கி 'ஆசியும்' வாங்கிக் கொள்வார். வாங்கிக் கொண்ட கையோடு தமிழ் முதலாளியம் பேசுவார். யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்டால், அவர்களை 'ங்கோத்தா ங்கொம்மா' என்று வசை பாடுவார். முடிந்தால் ஆள் வைத்தும் அடிப்பார். இதுதான் சீமானுக்குத் தெரிந்த அரசியல்.
இங்கே இருக்கும் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் சீமானை அப்படி என்ன செய்து விட்டார்கள் என்றுதான் நமக்குத் தெரியவில்லை. அவர் நேர்மையான வழியில் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு தெருவிலே விட்டுவிட்டார்களா? இல்லை சீமான் பிடித்து வைத்திருந்த தமிழ்த் தேசியத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்களா? எதற்காக சீமான் முஷ்டியை முறுக்குகின்றார்? இந்த அதிகாரத்தை சீமானுக்கு யார் கொடுத்தது? தொண்டை கிழிய முக்கி முக்கிப் பேசினால் மட்டும் பொய் உண்மையாகி விடுமா?
இங்கே தேர்தல் அரசியல் செய்யும் ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை தேவைப்படுகிறதோ இல்லையோ ஒரு எதிரி நிச்சயம் தேவைப்படுகின்றான். அந்த எதிரியை முன்வைத்தே தங்களை கதாநாயகர்களாக அவர்கள் காட்டிக் கொள்கின்றார்கள். பாஜகவினர் எப்படி பாகிஸ்தானையும், முஸ்லீம்களையும் எதிரியாக கட்டமைத்தார்களோ, 'மகாராஷ்டிரா மராட்டியர்களுக்கே' என்ற முழக்கத்தை முன்வைத்த சிவசேனா எப்படி மராட்டிமொழி பேசாத அனைவரையும் எதிரிகளாக கட்டமைத்தார்களோ, அதே போல அண்ணன் சீமான் அவர்கள் 'தமிழ்நாட்டை தமிழர்களே ஆளவேண்டும்' என்ற முழக்கத்தை முன்வைத்து, அதற்காக கன்னடர்களையும், தெலுங்கர்களையும், மலையாளிகளையும் எதிரிகளாக கட்டமைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்களையும், மலையாளம் பேசும் மக்களையும், கன்னடம் பேசும் மக்களையும் அடிக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஓர் ஓட்டு கிடைக்கும் என்று சீமான் கணக்கு போடுகின்றார்.
தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று சீமான் நினைப்பது ஒன்றும் தவறான கருத்தல்ல. ஆனால் எந்தத் தமிழன் என்று சீமான் தெளிவாகக் கூற வேண்டும். சீமானுக்குப் புரவலர்களாக இருக்கின்றார்களே ஆற்று மணலையும், கிரானைட்டையும், தாதுமணலையும் கொள்ளையடித்த அந்த நல்ல தமிழ் முதலாளிகளா? இல்லை இருக்க இடமில்லாமல், உடுக்க நல்ல ஆடையில்லாமால் தங்கள் கை, கால்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு தினம்தினம் அற்ப கூலிக்கு உழைத்துச் சாகும் அந்த சாமானிய தமிழ் மக்களா? சீமான் அவர்கள் தான் சொல்ல வேண்டும்.
சீமான் 'தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும்' என்று சொல்கின்றார். நடிகர் சங்கத் தேர்தலில் கூட தமிழர்கள் தான் நிற்க வேண்டும்; விஷால் ரெட்டி நிற்கக் கூடாது என்கின்றார். அப்படி என்றால் தமிழ்ப் படங்களில் தமிழர்கள் மட்டுமே நடிக்க வேண்டும்; அந்தத் திரைப்படங்களுக்குப் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று சீமானால் சொல்ல முடியுமா? அதை மீறி எவனாவது பார்ப்பன மாதவனையும், மலையாளி பாவனாவையும் வைத்து படம் எடுத்தால், அவனை ஓட ஓட செருப்பாலே அடித்து தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும் என்று சொல்வதற்கு அண்ணன் சீமான் அவர்கள் தயாரா?
அண்ணன் சீமான் அவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்திற்கு அடிப்படையாக இருக்கும் பிரச்சினை என்பது காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழம் போன்றவையே. ஆனால் சீமான் போன்றவர்கள் கர்நாடகாவிலும், கேரளாவிலும், ஈழத்திலும் இருப்பதே இந்தப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும். எப்படி சீமான் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்கின்றாரோ, அதே போல கர்நாடகா கன்னடர்களுக்கே, கேரளா மலையாளிகளுக்கே, இலங்கை சிங்களவர்களுக்கே என்று சொல்லும் இனவாதிகள் அங்கே இருக்கின்றார்கள். எப்படி தமிழ் முதலாளிகள் சீமானை ஆதரிக்கின்றர்களோ, அதே போல அவர்களையும் அவர்களது முதலாளிகள் ஆதரிக்கின்றார்கள்; கொம்புசீவி விடுகின்றார்கள். மற்றபடி மக்கள் நலன் சார்ந்த எந்த அக்கறையும் அவர்களிடம் கிடையாது. மொழி வெறியையும், இன வெறியையும் சாமானிய மக்களிடம் தூண்டிவிட்டு அவர்களது பிரச்சினைக்கான உண்மையான காரணத்தை அவர்கள் அறியாமல் செய்வதே இது போன்ற இனவாதிகளின் வேலை.
பின்நவீனத்துவவாதிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் கைக்கூலிகள் போன்றவர்களைப் போன்றே இவர்களும் முதலாளியம் பெற்றெடுத்த பிள்ளைகள். இவர்களின் நோக்கமே பாட்டாளி வர்க்க உணர்வை சிதறடிப்பதுதான். அதற்காக என்ன வகையான வழிமுறைகளையும் இவர்கள் கையாளுவர்கள்.
'முப்பாட்டன் முருகன்; எம்பாட்டான் சிவன்' என்று சீமான் சொல்கின்றார். அப்படி என்றால் ஒரு பார்ப்பனனுக்குப் பிறந்தவன் தான் முருகன் என்றாகின்றது. அப்படி என்றால் சீமானின் முப்பாட்டனும், பாட்டனும் பார்ப்பனர்கள். அவர்களை தனக்கான முன்னோடியாகக் கொள்ளும் சீமானும் ஒரு பார்ப்பன அடிமை. அதனால் தான் திராவிடத்தை எதிர்க்கின்றார். திருமுருகாற்றுப்படை என்ற நூலில்தான் முதன்முதலில் முருகனுக்கு அப்பன் சிவன் என்று வருகின்றது. அதற்கு முந்திய எந்த இலக்கியத்திலும் முருகனுக்கு அப்பன் சிவன் என்று கிடையாது என்பது பார்ப்பன அடிமை சீமானுக்குத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே. முருகன் பாலைநிலத்தின் தெய்வம்; கொற்றவையின் மகன் என்று பேராசிரியர் வானமாமலை அவர்கள் தன்னுடைய முருகன் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறுகின்றார். ஆனால் சீமானோ, சிவனை முருகனின் அப்பனாக மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றார். பார்ப்பனனைப் பகைத்துக் கொண்டால் ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது என்பது சீமானுக்குத் தெரியாதா என்ன?
அதனால் தான் திருமலை நாயக்கர் மகாலை மட்டும் இடிக்க வேண்டும் என்று சொல்கின்றார் சீமான். அவருக்குத் தெரியாதா மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவரங்கம் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவில், காஞ்சி ஏகாம்பரீசுவரர் கோவில் போன்றவையும் சீமானின் பரம எதிரி நாயக்கர்களால் கட்டப்பட்டதுதான் என்பது. சீமானுக்கு உண்மையிலேயே சூடு, சுரணை இருந்தால் அதையும் இடிக்கச் சொல்லட்டும். அப்படி இடிக்கச் சொன்னால் அவரின் அரசியல் நேர்மையை நாம் பாராட்டலாம்.
அன்னியர்கள் ஆண்டதற்கு அடையாளமாக தமிழ்நாட்டில் திருமலை நாயக்கர் மகால் மட்டும்தான் இருக்கிறதா? ஆங்கிலேயர்கள் ஆண்டதற்கு அடையாளமாக சென்னையில் மட்டும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம், எழும்பூர் தொடர்வண்டி நிலையம், சென்னை பல்கலைக்கழகம், சென்னை மருத்துவக் கல்லூரி, மாநிலக் கல்லூரி, கன்னிமெரா நூலகம் என நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருக்கின்றன. தமிழகம் முழுவதும் பார்த்தால் குறைந்தது பத்தாயிரம் 'அவமானச் சின்னங்களாவது' தேறும். சீமான் எல்லாவற்றையும் இடிக்க வேண்டும் என்கிறாரா? என்ன மடத்தனம் இது?!
சீமான் சொல்வது போன்று நாயக்க மன்னர்கள் அயோக்கியர்கள் என்றால், கோவிலில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்த ராஜராஜ சோழனை என்னவென்று சொல்வது? ஆனால் சீமானுக்கு ராஜராஜ சோழனை மிகவும் பிடிக்கும். ஏன் என்ற காரணத்தை நடிகை விஜயலட்சுமியிடம் கேட்டால், வண்டி வண்டியாக சொல்வார்.
அரசியலிலும் நேர்மையில்லை; தனிமனித வாழ்க்கையிலும் ஒழுக்கமில்லை இப்படிப்பட்ட சீமான் வீரபாண்டியக் கட்டபொம்மனை அவதூறாகப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கின்றது? கும்பினி ஆட்சிக்கு எதிராக வீரச்சமர் புரிந்த கட்டபொம்மனையும், ஊமைத்துரையையும், விருப்பாச்சி கோபால நாயக்கரையும் விடுதலைப் போராட்ட வீரர்களாக மட்டுமே பார்த்த தமிழ் மக்களிடம் சீமானைப் போன்ற தமிழிழிவுவாதிகள் அவர்களை நாயக்கர்களாக, தெலுங்கர்களாக காட்ட முற்படுகின்றனர். எப்படி சாதிக் கழிசடைகள் தீரன் சின்னமலையை கவுண்டராக காட்ட முற்படுகின்றார்களோ, மருது சகோதரர்களை தேவராக காட்ட முற்படுகின்றார்களோ அதற்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல சீமானின் இந்தச் செயல். ஆனால் தீரன் சின்னமலையும், மருது சகோதரர்களும், ஊமைத்துரையும், வீரபாண்டியக் கட்டபொம்மனும் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள் என்பதையும் அவர்கள் தங்களுக்குள் ஒருநாளும் மொழிபேதமோ, இனபேதமோ பார்த்ததில்லை என்பதும் ஒன்றாகவே கும்பினி ஆட்சியை எதிர்த்தார்கள் என்பதும், அவர்கள் அனைவரும் அதற்காக தங்களின் உயிரையும் கொடுத்தார்கள் என்பதும் வரலாறு. ஆனால் மதவாதிகளும், சாதியவாதிகளும், இனவாதிகளும் தங்களுடைய அற்ப பதவி சுகத்திற்காக வரலாற்றை தங்களுக்கு ஏற்றார்போல புரட்டி எழுதுகின்றார்கள்.
தமிழ்நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் தெலுங்கு பேசும் மக்கள். தமிழ் எப்படி சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவராலும் பேசப்படுகின்றதோ, அதே போல தெலுங்கும் நிறைய சாதி மக்களால் பேசப்படுகின்றது. அதுவும் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கின்றது. பெரும்பான்மையான தெலுங்கு பேசும் மக்களுக்கு தெலுங்கை எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பதுதான் உண்மை. வீட்டில் பேசப்படும் ஒரு மொழியாக மட்டுமே தெலுங்கு தமிழ்நாட்டில் உள்ளது. அதை நாயக்கரும், நாயுடுவும் மட்டுமே பேசுகின்றார்கள் என்பதில்லை; தலித் மக்கள் பேசுகின்றார்கள், செட்டியார்கள் பேசுகின்றார்கள், ஆசாரிகள் பேசுகின்றார்கள், பார்ப்பனர்களிலே ஒரு பிரிவினர் பேசுகின்றார்கள்; இன்னும் நிறைய சாதிமக்கள் பேசுகின்றார்கள். அப்போது அவர்கள் எல்லாம் சீமானின் கணக்குப்படி பார்த்தால் தமிழர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிவிட வேண்டும்!
இதிலே குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் அவர்களில் பல பேர் தங்களின் தாய்மொழி தமிழ் என்றே சான்றிதழ்களில் குறிப்பிடுகின்றார்கள். அவர்களை யாரும் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து குடியேறியே வந்தேறிகளாக தமிழ் மக்கள் ஒருபோதும் பார்த்தது கிடையாது. ஆனால் சீமான் போன்ற இனவெறி தலைக்கேறிய சில பதவி வெறியர்களுக்கு மட்டுமே அவர்கள் தெலுங்கர்களாகத் தெரிகின்றார்கள். உழைக்கும் சாமானிய மக்கள் ஒருவனை எப்போதும் தெலுங்கனாகவோ, கன்னடனாகவோ, இல்லை மலையாளியாகவோ பார்ப்பதில்லை. சீமானைப் போன்ற கொழுத்துப்போன அரசியல் கழிசடைகள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கொள்கையின் இடத்தில் இனவெறியை வைத்து அரசியல் நடத்துகின்றார்கள். இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்றொழித்த ஹிட்லரை தங்களுக்கான சித்தாந்தத் தலைவராக ஏற்பதில் இருந்தே அவர்கள் தங்களை இனவெறியர்கள் என்று வெளிப்படையாக சொல்கின்றார்கள்.
தமிழ்த் தேசியம் பேசும் சீமான் அவர்கள் எப்போதுமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டார் என்பது வரலாறு. தர்மபுரி கலவரம், மரக்காணம் கலவரம் தொடங்கி இப்போது நடைபெற்ற சேச சமுத்திரம் கலவரம்வரை அவர் யார் பக்கம் இருந்தார் என்பது வெளிப்படை. தேவர் ஜெயந்திக்கு ஆண்டு தவறாமல் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யும் சீமான் எப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாப்பிற்காக குரல் கொடுப்பார். சீமானின் உடம்பில் ஓடுவது மேட்டுக்குடி சாதிவெறியும், மொழிவெறியும், பதவிவெறியும் பிடித்த ரத்தமே ஒழிய, அது சாமானிய தமிழ் மக்களின் ரத்தமல்ல! எந்த அரசியல் அறிவும் இல்லாத சாமானிய தமிழ் இளைஞர்களுக்கு இனவெறியும், மொழிவெறியும் ஊட்டி அவர்களை மொழிச் சிறுபான்மையின மக்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் சீமான் அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்தப்பட வேண்டிய பேர்வழி ஆவார்.
- செ.கார்கி