கேரள தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் செப்டம்பர் 5 முதல் 13 வரை நாளொன்றுக்கு 500 ரூபாய் கூலி உயர்வு கேட்டு போராடினார்கள். மீண்டும் செப் 20ல் அடுத்தக்கட்ட போராட்டத்திற்காக திட்டமிட்டார்கள். இச்செய்தியை தமிழ்ச் சூழலுக்கு அளித்தது சிபிஐ(மா.லெ) விடுதலைக் கட்சியின் அரசியல் இதழான தீப்பொறி. அதில் அளிக்கப்பட்டுள்ள செய்திகள் நமக்கு குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்திற்கு பல உண்மைகளை போட்டு உடைக்கின்றன. இதழ் அளிக்கும் தகவல்கள் கீழ்கண்டவாறு:

1. 8 மணி நேர வேலைக்குப் பதிலாக 12 மணிநேர வேலையில் 20 கிலோ தேயிலை பறித்தால் தற்போது வரை கிடைக்கும் கூலி நாளொன்றுக்கு ரூ.231

2. இந்தக் கூலியை உயர்த்தி தரக் கோரும் பெண்தொழிலாளர் போராட்டத்திற்குப் பதில் தந்த கேரள அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குறைந்தப்பட்சக் கூலி அடிப்படை சம்பளத்துடன் மாறுகின்ற பஞ்சப்படியும் இணைந்து ரூபாய் 124 முதல் 145. இதே வேலைக்காக இதே போன்ற தொழிலாளர்களுக்கு அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் ரூபாய் 100 மட்டுமே தரப்படுகிறது. எனவே பெண் தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக் கோரிக்கையை ஏற்பது கடினம் என்று கேரள தொழில் துறை அமைச்சர் சொல்கிறார்.

3. மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களின் போராட்டம் தன்னெழுச்சியானது என்றும், அதன் முக்கியத்துவத்தைக் குறைக்க, நீக்கிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு பத்திரிக்கையாளர் மூணாறு பெண் தொழிலார்களின் போராட்டம் தொழிற்சங்கத்திற்கு எதிரானது என்றுகூட சொல்கிறார்.

4. மூணாறு தோட்ட பெண்தொழிலார்கள் நடத்தியப் போராட்டம் எந்தவிதமான தொழிற்சங்கத் தொடர்பும் இல்லாதது. இதுபோன்ற போராட்டங்கள் அராஜகத்தில்தான் போய் மூடியும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஒருவர் சொல்கிறார்.

5. சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத் தலைவர் ஒருவரோ இப்போராட்டத்தில் தமிழ்த் தீவிரவாதிகளின் பின்புலம் இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். மேற்கண்ட நிலைமைகள் குறித்த எமது பகுப்பாய்வு பின்வருமாறு.. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்

1. கேரளாவில் கடந்த 65 ஆண்டுகளில் சரிபாதி காலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் தலைமயைிலான கூட்டணி அரசே இருந்து வந்துள்ளது. ஆனால் அவர்களும் கூட தொழிலாளர்கள் சட்டங்களை முறைப்படுத்தி நிறைவேற்றவோ, அதனை மீறுகிற தேயிலைத்தோட்ட முதலாளிகளை கட்டுப்படுத்திடவோ இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. 8 மணி நேர வேலை என்பதே அங்கு ஏறக்குறைய இல்லை என்பதே உண்மை. சரி, கூடுதலாக 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிற தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரத்திற்கான கூடுதல் ஊதியம் அளிக்கப்படுவதையும் அக்கட்சி உறுதிபடுத்தவில்லை. காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்தும் தேயிலைத் தோட்ட முதலாளிகளை எதிர்த்தும் அக்கட்சி-அக்கட்சியின் ஆட்சி போராடவில்லை என்பது தெளிவாகிறது. 12 மணி நேரம் வேலை செய்தாலும் 20 கிலோவிற்கு குறைவாக தேயிலைப் பறித்தால் அவர்களின் ஊதியம் மேலும் குறையும் என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.

24 மணி நேரம் கொண்ட ஒரு நாளில் தோட்டத்திலேயே 12 மணி நேரம் பெண் தொழிலாளர்கள் உழைப்பை செலவிட்டால், அவர்கள் ஓய்வு, உறக்கம், குடும்பத்தினருடன் நேரத்தை பகிர்ந்து கொள்வது, சமைப்பது, உண்பது, கழிவறைக்குச் செல்வது என அடிப்படைத் தேவைகளைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமயிலான அரசுகள் எடுத்துக்கொண்ட அக்கறை ஒன்றுமே இல்லை என்பது வெட்டவெளிச்சமாகிறது.

2. 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சியில் இருந்ததாக மார்தட்டி கொள்ளும் மார்க்சிஸ்ட்கள் ஆண்ட மேற்கு வங்கத்திலேயே அடிப்படை சம்பளத்துடன் நாளொன்றுக்கு 100 தான் ஊதியமாக அளிக்கப்பட்டு வந்துள்ளது என்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளம், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மாநிலங்களில்தான் போராடுமா? தமது ஆட்சியில் தொழிலாளர்களுக்காக ஏதும் செய்ய மாட்டார்களா? இக் கேள்விகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். கேரளத்திலும் கூட ரூபாய் 124 முதல் 145 வரை அளிக்கப்படும் ஊதியமும் மிக மிகக் குறைவானதே.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) விடுதலை பரந்துபட்ட இடதுசாரி ஐக்கியம் என்ற இலட்சியத்திற்காக CPI,CPI(M) கட்சிகளோடும் கூட்டுப் போராட்டங்களில் ஈடுபட்டாலும், ஐக்கியத்திற்காக இக்கட்சிகளுடனான முரண்பாட்டை அறிவுறுத்தத் தயங்காத தன்மை மிகுதியும் பாராட்டுக்குரியது.

3. பெண் தொழிலாளர்கள் போராட்டத்தை தொழிற்சங்கத் தலைமை இல்லாதது என்று முதலாளிகளும் அவர்களின் எடுபுடிகளான பத்திரிக்கையாளர்களும் கூப்பாடு போடுவது, ஏதோ தொழிற்சங்கத்தில் இப்பெண் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இல்லாததால்தான் அவர்களுக்கு குறைந்த கூலி கொடுப்பது போல் பாசாங்கு செய்கிறார்கள். தொழிற்சங்கம் வழியாக போராடுகிற தொழிலாளர்களுக்கு அவர்கள் கேட்ட ஊதியத்தையும் இதர உரிமைகளையும் அள்ளி அள்ளி வழங்கியது போல் பிதற்றுகிறார்கள், பித்தலாட்டக்காரர்கள்!

இதில் உள்ள சூட்சமம் என்னவென்றால் மரபார்ந்த AITUC, CITUC போன்ற தொழிற்சங்கங்களில் இப் பெண்தொழிலாளர்கள் இருந்திருப்பார்களேயானால், தொழிற்சங்கத் தலைமைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பெரும்தொகையாக தேர்தல் நிதியளித்து பெண் தொழிலாளர்களின் கோரிக்கையை நீர்த்துப் போக செய்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பிற்கு பேரிடியாக பெண் தொழிலாளர்களின் போராட்டம் அமைந்துவிட்டதே - இப்போரட்டம் எங்கும் பரவினால் தமது கொள்ளை லாபத்திறகு ஆபத்து நேருமே என்ற அச்சத்தில் இப்போராட்டம் தொழிற்சங்கத் தலைமையில்லாதது என்று கொச்சைப்படுத்த முனைகிறார்கள். கோரிக்கையின் நியாயம் குறித்து வாய்திறக்க முடியாத பத்திரிக்கைகளும், முதலாளிகளும் தொழிற்சங்க தலைமையில்லாதது என்று நொண்டிச்சாக்கு சொல்கிறார்கள்.

4. அரசாங்கம் (ராஜங்கம்) என்பது முறைப்படுத்தப்பட்ட ஆளும் வர்க்கத்தின் கருவியாகும் இதற்கு எதிரான கலவரங்களை போராட்டங்களை சிறுமைப்படுத்த ஆளும் வர்க்க சித்தாந்திகளும், பத்திரிக்கைகளும், ஆட்சியாளர்களும் கண்டுபிடித்த சொல்தான் அரஜாகம்,!

ராஜங்கம்-அராஜங்கம்- அராஜகம் அதாவது ராஜங்கத்தினை சீர்குலைக்கும் போரட்டங்கள் என்று பெயர். இச் சொல்லாடலின் உண்மையைத் தெரிந்ததோ தெரியாமலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பெண்தொழிலாளர்கள் போராட்டம் அராஜகத்தில் போய் முடியும் என்று கொச்சைப்படுத்துகிறார். அப் பெண்தொழிலாளர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் பற்றியும், அதன் தேவை குறித்தும் தேயிலைத் தோட்ட முதலாளிகளிடமும் ஆளும் காங்கிரசு முதலமைச்சர் உமண் சாண்டியிடமும் வாதாடுவதை விடுத்து, போராடும் பெண் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது மார்க்சிய சித்தாந்தத்தின் அடிப்படைக்கே விரோதமானது.

தொழிற்சங்கம் அல்லாத பெண்தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காக தாங்களே அமைப்பாகி போராடுகிற வரை CPI,CPI(M) கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வாய்மூடி காத்துக் கிடந்தது ஏன்? AITUC,CITUC சங்கங்களின் தொடர் பாராமுகமும் அல்லது துரோகங்களும்தானே அத்தொழிற்சங்கங்களில் இணையாமல் பெண் தொழிலாளர்களை சுதந்திரமாக போராடத் தூண்டியது என்ற உண்மையை கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் மறுக்கின்றன?

5. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் பெண் தொழிலாளர்கள் பெரியளவில் இப்போராட்டத்தில் முன்னின்று பங்கெடுப்பதை காரணமாகக் காட்டி, அவர்களின் போராட்டத்தை ஒரு பட்டாளி வர்க்க அணுகுமுறையோடு அணுகாமல் போராட்டத்தில் தமிழ்த் தீவிரவாதப் பின்னணி உள்ளது என்று CITUC சங்கம் குற்றம் சாட்டுவது, அது மலையாளி இனவாத முடக்குவாதத்தில் மூழ்கிக் கிடப்பதையே அம்பலப்படுத்துகிறது. சர்வதேச தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற முழக்கம் CPI(M) கட்சிக்கு மூணாறு தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு பொருந்தி வரமால் போனது ஏன்?

இவர்கள் கோரிக்கையின் நியாயத்தையும், கோரிக்கையின் நியாயத்திற்காக போராடும் தொழிலாளர்களுக்கு துணை நிற்காமல் தமிழர்-மலையாளி முரண்பாட்டை கூர்தீட்டி தொழிலாளர் வர்க்கத்தையும் அவர்கள் நலனையும் பிரிக்கிறார்கள். இந்தப் பிளவில் முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்கிறார்கள். இதுதான் கேரள மார்க்சிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்காக, நலனுக்காக, உரிமைக்காகப் போராடும் இலட்சணமா? இதே மார்க்சிஸ்ட்கள்தான் தமிழீழம் கேட்டுப் போரடும் ஈழத் தமிழர்களுக்கு ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர் தீர்வு என்று பாசாங்கு செய்கிறார்கள். தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவிலிருந்து காஷ்மீர், நாகலாந்து, தமிழ்நாடு போன்ற பல தேசிய இனங்கள் தங்களுக்கு தன்னுரிமை அல்லது விடுதலை வேண்டும் என்று போராடுகிறவர்களை பிரிவினைவாதிகள் என்றும் இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைப்பவர்கள் என்று கூச்சலிடுகிறார்கள்.

"ஆடத் தெரியாத நாட்டியக்காரிக்கு அரங்கம் கோணல்" என்பது போல் இவர்கள் (CITUC) ஊதிய உயர்வு கோரும் போராட்டத்தையே தமிழ் தீவிரவாதம் என்று பேசுகிறார்கள் என்றால் தொழிலாளர் வர்க்கத்தை காட்டிக் கொடுக்க இவர்களைவிட தகுதியானவர்கள் வேறு எவராக இருக்க முடியும்?

- அரங்க.குணசேகரன்

Pin It