விருதைத் திருப்பிக் கொடுங்கள் என நாம் சொல்வது மக்களுக்காகப் போராடுங்கள் எனக் கேட்கும் பிச்சையல்ல! விருதே மக்கள் வழங்கிய பிச்சையென்பதுதான் அதன் அர்த்தம்!

தமிழ்நாடு போகிற போக்கைப் பார்த்தால் "அய்யா, சாமி எங்களுக்காகப் போராடுங்க ராசா"-ன்னுப் பிச்சையெடுக்கணும் போலிருக்கிறது! மோடி ஆட்சி ஏற்பட்டதிலிருந்து, அதன் துணையுடன் இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்த்தி வரும் தொடர் பாசிச பச்சை படுகொலைகளுக்கு எதிராகவும், இந்துத்துவ பாசிசம் உச்சத்தில் நின்று கொண்டு ஆட்டம் போடுவதை பொறுக்காமலும் மானமுள்ள எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் விதமாக "சாகித்ய அகாடமி" விருது மற்றும் பதவிகளைத் தூக்கியெறிகிறார்கள். இந்த நேரத்தில் தமிழ்நாட்டுல இந்த விருதை வாங்கின எல்லோரும் ஒண்ணுமே தெரியாத மாதிரி "கிணத்துல போட்டக் கல்லு மாதிரி" கம்மென்று கிடப்பதுதான் நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

சக எழுத்தாளரான பெருமாள் முருகன், சாதி வெறியர்களால் சொந்த ஊரை விட்டு விரட்டியடிக்கப்பட்ட போது கூட, கொட்டாவி விடுவதற்கும், சோறு திங்கவும் மட்டுமே தங்கள் வாயைத் திறந்த, ஜோ.டி.க்ரூஸ் மற்றும் நாஞ்சில் நாடன் வகையறாக்களிடம் இதை நாம் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்கு மதம் மற்றும் சாதி குறித்துதான் கவலை. மற்றபடி சமூகப் பொறுப்பெல்லாம் அவங்களுக்கு வெங்காயம்தான். ஆனால், நம்ம சு.வெங்கடேசன், புவியரசுக்கெல்லாம் என்ன ஆனது? பிரபஞ்சன், பொன்னீலன், மேலாண்மை பொண்ணுசாமி, டி.செல்வராஜ், பூமணி, தேவதாஸ் இவர்களெல்லாம் எங்கே போனார்கள்? இதில் த.மு.எ.ச பொதுச்செயலாளர் சு.வெங்கடேசன் வாய் திறக்காதது கூடுதல் ஆச்சர்யமாக இருக்கிறது.

"விருதைத் திருப்பிக் கொடுத்தால் அதனுடன் கிடைத்தப் பணத்தையும் திருப்பிக் குடுக்க வேண்டுமா என்று தெரியலை. அப்படியே குடுக்க வேண்டுமென்றாலும், அதை அமைப்பு திரட்டி தரும்" என்று த.மு.எ.க.ச தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன் சொல்லியிருக்கார். நாமும் அவருடன் இணைந்து வசூல் செய்து கொடுப்போம். இனிமேலும் இவர்களுக்கு என்ன தயக்கம் என்றுதான் நமக்குப் புரிபடவில்லை.

நாம் மேலேயுள்ள எழுத்தாளர்களிடம் ஒன்று கேட்போம். "உண்மையிலேயே நீங்க சமூகப் பொறுப்போடதான் எழுதி விருது வாங்குனீங்களா? அல்லது 'லாபி' பண்ணி விருது வாங்குனீங்களா? சமூகப் பொறுப்போடு எழுதி வாங்கியிருந்தா மரியாதையா அதைத் திருப்பிக் கொடுங்க."

சாகித்ய அகாடமி மாதிரியான விருதுகள் சமூகப் பொறுப்போடு எழுதுவதாலேயே வழங்கப்படுகிறது. சமூகப் பொறுப்போடு எழுதுவதென்பது மக்களின் வாழ்வைப் பிரதிப்பலிப்பதுதான். உங்கள் கதை, கரு, களம் அனைத்தும் மக்களுடையது. சனங்க மூலமா விருதை வாங்கிக்கிட்டு சனங்களுக்காக ஒண்ணுமே செய்ய மாட்டோம்ன்னா என்னைய்யா நியாயம்? இன்னும் சொல்லப் போனால் இவர்களைப் போலவே கல்புர்க்கியும் சாகித்ய அகாடமி விருதை வாங்கியவர்தான்.

சாரா ஜோசப், கே.சச்சிதானந்தன், பி.கே.பரக்கதாவு, ரவிக்குமார், நயன்தாரா சேகல், அசோக் வாஜ்பாய், சசி பாண்டே, ரகுமான் அப்பாசு, அரவிந்த் மாளகட்டி என சமூகப் பொறுப்புள்ளவர்கள் தொடர்ந்து தங்களது விருதுகளையும், பதவிகளையும் தூக்கியெறிகிறார்கள். இவர்கள் தூக்கியெறிவது எப்படிப்பட்டப் பொறுப்பு? சாகித்ய அகாடமியின் தலைவர் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி சொல்வதிலிருந்து அதைப் புரிந்துக்கொள்ளலாம்.

"இப்போது நான் அவசரக்கூட்டத்தை கூட்டினால் ரூ.15 லட்சம் திடீர் செலவு ஏற்படும்"

ஒருமுறை கூடுவதற்கு 15 லட்சம் செலவு. ஏன்? இவர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில்தான் தங்குவார்கள். இதற்குமேல் உணவு, பயண வசதிகளை நாம் கற்பனை செய்ய முடியும்தானே! அதேமாதிரி இந்த விருதை வாங்கியவர்களின் நூல்களெல்லாம் 24 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. எவ்வளவு வருமானம் வருமுன்னு வாயைப் பிளக்க வைக்கிறதா? இதுபோக இவிய்ங்களுக்கு ஆண்டுக்கு ஒன்றிரண்டு ஃபேமிலி டூர், பேச்சிலர் டூரெல்லாம் இருக்கு. இதனையும் தூக்கியெறிகிறார்கள் மானமுள்ளவர்கள். இலக்கியத்தின் இண்டு இடுக்கெல்லாம் புகுந்து சென்று அதன் அத்தனை அழகையும் ஒன்று விடாமல் படைப்பதாக மார் தட்டிக் கொள்ளும் நம்மவர்களோ....? கட்டுரைகளிலும், மேடைப்பேச்சிலும் மட்டுமே இந்துத்துவாவுக்கு எதிராக 'பொங்கிக்' கொண்டிருக்கிறார்கள்; செயலில் ஒரு இழவையும் காணோம்.

கல்புர்க்கி கொல்லப்பட்டிருக்கிறார். அவருக்கு முன் தபோல்கர், பன்சாரே என இருவர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எழுத்தாளர் பகவான் ஆர்.எஸ்.எஸ் கையால் தான் கொல்லப்படுவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் உத்திரப் பிரதேசம் தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்த "மாபெரும் குற்றத்திற்காக" ஒரு இஸ்லாமிய முதியவர் சங் பரிவார கும்பல்களால் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார். (தற்போது இரண்டு முறை செய்யப்பட்ட ஆய்வில் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணமாகி இருக்கிறது)

இது முசாபர் நகர் கலவரம் தொடங்கி லவ் ஜிகாத், கருத்துரிமை பறிப்பு என போய்க் கொண்டிருக்கும் மோடி அரசின் அஜெண்டாவின் ஒரு பகுதிதான் என தினத்தந்தி படிப்பவர்களுக்குக்கூட புரியும். அப்படி இருக்கும்போது, பூக்கோ, காப்கா, மார்க்வெஸ் என உலக இலக்கியங்களையெல்லாம் படித்துக் கரைத்து குடித்த இந்த இலக்கிய ஜாம்பவான்களுக்குத் தெரியாதா என்ன? நிச்சயம் தெரியும். பின் ஏன் இந்த கள்ள மெளனம்?

"கடந்த காலத்திலும் அகாடமி இத்தகைய விவகாரங்களில் கருத்து கூறியதாகத் தெரியவில்லை. அவசரநிலை கால கட்டம், 1984 கலவரங்கள், 2002 குஜராத் கலவரங்கள் ஆகிய காலகட்டத்தில் கூட அகாடமி மவுனமே காத்தது. அது ஒரு போதும் பேசியதில்லை, நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன். அதனால் நான் ஏதாவது கூறினால் செயற்குழு என்னை கேள்வி கேட்கும்."

சாதி, மதவெறிகளுக்கு எதிராக பகுத்தறிவு பேசும் எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவது குறித்து அகாடமி தலைவர் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில்தான் மேலே இருக்கிறது. இப்படி எல்லா கொடுமைகளுக்கும் எந்தவித எதிர்வினையும் அளிக்காத எழுத்தாளர்களைத்தான் அகாடமி விரும்புகிறதா? அல்லது அகாடமிக்குள் நுழைந்தவுடன் எழுத்தாளர்களில் பலர் அப்படி ஆகிவிடுகிறார்களா என்றுதான் நமக்குத் தெரியவில்லை.

வரலாற்றில் பாசிசச் சூழல்கள் தனது கோர முகத்தை காட்டும் பொழுதெல்லாம் அதை தீரமுடன் எதிர்த்து நின்றவர்களில் முக்கியமானவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள். அப்படிப்பட்ட மரபிற்குரியவர்கள், இன்று அதேபோல ஒரு மோசமான சூழ்நிலை தங்கள் கண்முன்னே உருவாகி வரும் போது, அதைக் கண்டுகொள்ளாமல் மெளனம் காப்பது என்பது அச்சூழல்களுக்கு தங்கள் ஆதரவை மறைமுகமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றே அர்த்தமாகும்.

நாம் திரும்பவும் சொல்வது என்னவென்றால் விருதைத் திருப்பிக் கொடுங்களென நாம் சொல்வது மக்களுக்காகப் போராடுங்கள் எனக் கேட்கும் பிச்சையல்ல! விருதே மக்கள் வழங்கிய பிச்சையென்பதுதான்.

- பாவெல் சக்தி

Pin It