இந்திய பங்குச்சந்தை வரலாறு காணாத கடும் வீழ்ச்சியை சந்தித்து இருக்கின்றது. ஏறக்குறைய 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேரையே ஆட்டம் காண செய்திருக்கின்றது. மோடி என்ற காவி பொருளாதார மேதையின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பல புதிய பரதேசிகளை உருவாக்கி சாதனை படைத்திருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கூட 1,408.35 புள்ளிகள்தான் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது. இந்த முறை 1,624.51 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிவடைந்து வந்த போதிலும் அதைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் நாடு நாடாக சென்று அந்நிய மூலதனத்தை பிச்சை எடுப்பதிலேயே குறியாக இருந்ததன் விளைவே இந்த வீழ்ச்சி.

 modi 450ஆனால் இது தற்காலிகமானது என்று நம்மை நம்பச் சொல்கின்றார்கள் மோடியும், அருண்ஜேட்லியும். நாமும் நம்புகின்றோம் இந்த வீழ்ச்சி தற்காலிகமானதுதான் இன்னும் இதை விட பெரிய ஆப்பு காத்துக்கொண்டு இருக்கின்றது!

 ஒரு நாட்டின் நாணய மதிப்பு குறைவாக இருக்கும் போது அந்த நாடு ஏற்றுமதியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகமாகி வேலைவாய்ப்பை பெருக்க முடியும்; மேலும் உள்நாட்டு பொருளாதாரம் வலுவடையும். சீனா தன்னுடைய பொருளாதாரம் முழுவதும் ஏற்றுமதி சார்ந்ததாக கட்டமைத்துள்ளது. இன்று உலக நாடுகள் அனைத்தையும் சீனா தன்னுடைய பொருட்களால் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அப்படிப்பட்ட சீனாவுக்கே இப்போது பொருளாதார நெருக்கடி. ஏறக்குறைய 3 லட்சம் கோடி டாலர் சொத்துக்களை சீனாவின் சிறு முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர். இதனால் சீனா ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு தன்னுடைய நாணயமான யுவானின் மதிப்பை திட்டமிட்டே குறைத்துள்ளது.

 சரி அவன் குறைத்தால் இந்தியாவில் ஏன் பங்குச்சந்தை வீழ்ச்சியடைகின்றது என்று நினைக்கின்றீர்களா? ஏனென்றால் சீனா தன்னுடைய ஏற்றுமதியில் பெரும்பகுதியை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றது. எனவே சீனா தன்னுடைய நாணய மதிப்பைக் குறைத்தால் டாலர் மதிப்பு தானாகவே ஏறிவிடும். ஏறிவிட்டுப் போகின்றது என்கின்றீர்களா, அப்படி நாம் நினைக்கலாம். ஆனால் முதல் போட்டவன் நினைக்க முடியாதே! டாலர் மதிப்பு அதிகமானால் இந்தியா திவால் ஆவதை யாரும் தடுக்க முடியாது. ஏனென்றால் இந்தியப் பொருளாதாரம் முழுவதும் இறக்குமதி சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா தன்னுடைய வணிகத்தில் பெரும்பகுதியை டாலரிலேயே செய்கின்றது. இனி இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் நீங்கள் கூடுதலான தொகை (டாலர்) கொடுக்க வேண்டி இருக்கும். உலகச் சந்தையுடன் இணைக்கப்பட்ட அனைத்து நாடுகளும் தற்போது தள்ளாடிக் கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு நாடும் திவாலாகும் நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. இப்போது புரிகின்றதா உலகமயமாக்கல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று.

 அப்போது மேக் இன் இந்தியாவாக இந்தியாவை மாற்ற முடியாதா என்று நீங்கள் கேட்கலாம், மோடியின் பேரனோட பேரன் வந்தாலும் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் இந்தியாவின் வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு கூட்டிக் கொடுப்பதையே தன் கொள்கையாக வைத்திருக்கும் இந்திய ஆளும்வர்க்கங்களால் ஒருபோதும் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கட்டமைக்கமுடியாது. இத்தனைக்கும் சீனா நிதி, எரிசத்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, ரியல் எஸ்டேட், கட்டுமானம், வாகன உற்பத்தி, சுரங்கத்தொழில் போன்ற அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால் இந்தியா இதில் ஒன்றைக்கூட தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கவில்லை. அனைத்தையும் தனியார் மயமாக்கி விட்டு இத்தோடு விடமாட்டேன் இன்னும் கடுமையான பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து அனைவரையும் பிச்சை எடுக்கவைப்பது தான் தன்னுடைய இறுதி நோக்கம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர் இந்திய ஆட்சியாளர்கள்.

 ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் அவர்கள் லண்டன் பிஸினஸ் கல்லுரியில் சிறிது நாட்களுக்கு முன்பு பேசும்போது 1930களில் வந்த சர்வதேச பொருளாதார மந்த நிலை மீண்டும் வரலாம் என்று தெரிவித்து இருந்தார். அந்த நிலையை நோக்கி உலகப் பொருளாதாரம் நகர்வதை அதை கவனித்துக்கொண்டு இருப்பவர்கள் உணரலாம். இதை தவிர்ப்பதற்கான எந்தத் திட்டமும் அரசுகளிடம் தற்போது கைவசம் இல்லை.

 உலகமயமாக்கல் தன்னுடைய நிதி மூலதனத்தை உலகின் கடைசி பகுதிவரை கொண்டுபோய் சேர்த்துவிட்டது. இனி அதன் வளர்ச்சியை மீட்டெடுக்கும் ஒரு அற்புதத்தீவு உலகில் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உலக நிதிமூலதனம் தன்னுடைய அழிவுப்பாதையின் கடைசிப் பயணத்தில் இருக்கின்றது. ஒவ்வொரு முறை இப்படி நெருக்கடி ஏற்படும் போதும் ஆளும் வர்க்கங்கள் மக்களின் வரிப்பணத்தைத் தின்றே தன்னைக் காப்பாற்றி வந்திருக்கின்றது. சீனா தன்னுடைய மக்களின் பென்ஷன் தொகையை பங்குச்சந்தையில் போட்டு பங்குச்சந்தை வீழ்ச்சியை தடுக்க முயல்கின்றது. இந்தியா ஏற்கெனவே வருங்கால வைப்புநிதித் தொகையை பங்குச்சந்தையில் போட்டு சூதாட அனுமதித்துவிட்டது. அமெரிக்க தன்னாட்டு மக்களின் பணத்தைக் கொடுத்து திவாலான வங்கிகளை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது. முதலாளித்துவம் மக்களை காப்பாற்றவில்லை என்பதும், மக்கள் தான் தன்னுடைய சொந்த பணத்தைப் போட்டு இந்தச் சீரழிந்த முதலாளித்துவத்தைக் காப்பாற்றி வருகின்றார்கள் என்பதும் தற்போது நிரூபணம் ஆகி இருக்கின்றது.

 நாம் முதலாளித்துவத்தை விமர்சனம் செய்யும் போதெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு வம்புக்கு வரும் அறிவுஜீவிகள் தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 5 லட்சம் கோடிகளுக்கு மேல் மக்கள் வரிப்பணத்தை மானியமாக தின்று கொழுத்த இந்த பணக்காரப் பன்றிகளால் இந்திய மக்களுக்கு என்ன பயன்? பல பெரும் நிறுவனங்கள் குறிப்பாக வேதாந்தா, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, சிப்லா போன்றவை பெரும் நஷ்டத்தை சந்தித்து இருக்கின்றன. அடுத்து அவை என்ன செய்யப் போகின்றன?. தன்னுடைய லாபத்தை தக்க வைத்துக் கொள்ள அவை ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். லட்சக்கணக்கான மக்கள் வேலை இழப்பை சந்திக்கப் போகின்றார்கள். ஏற்கெனவே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரம் அதல்பாதாளத்தில் விழப் போகின்றது.

 சமூக நலத்திட்டங்களுக்கு கொடுத்துவந்த மானியத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக புலம்பிய முதலாளித்துவவாதிகள் தற்போது ஏற்பட்டிருக்கும் 7 லட்சம் கோடி ரூபாய் இழப்பிற்கு என்ன சொல்லப் போகின்றார்கள்? கந்துவட்டிக்கரனிடம் கடன்பட்ட விவசாயி கடனைக் கட்ட முடியாமல் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்துகொண்டு சாகின்றான். மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டித் தின்ற முதலாளி வெட்க மானமே இல்லாமல் வெள்ளையும் சொள்ளையுமாகத் திரிகின்றான்.

 மீண்டும் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதும் பெருமளவிலான மக்களின் வரிப்பணத்தை அரசு ஏப்பம் விடுவதும் தொடர்கதையாகி உள்ளது. இனி பங்குச்சந்தை சரிவு என்பதும், நாணய மதிப்பு வீழ்ச்சி என்பதும் நீங்கள் தினம் படிக்கும் செய்தியாக மாறப் போகின்றது. முதலாளித்துவம் மக்களைக் கொல்லும் என்பதும் கம்யூனிசமே இறுதியில் வெல்லும் என்பதையுமே இந்த நெருக்கடிகள் காட்டுகின்றன.

- செ.கார்கி

Pin It