ஒரு நாட்டின் இலக்கியத்திற்கும் அதன் சமுதாயநிலை மற்றும் அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. ஒவ்வொரு இலக்கியமும் அது தோன்றிய காலம் மற்றும் மக்களின் நிலை பண்பாடு போன்றவற்றை வெளிப்படுத்துவதாக உள்ளது. சான்றாக சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாடு, வீரம், கொடை, காதல் போன்றவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது. இலக்கியமானது மனிதன் வாழ்க்கையிலும், மனதிலும், அறிவிலும் பெரும்பாதிப்பினை ஏற்படுத்துகிறது. மகாத்மா காந்தியின் வாழ்வில் அரிச்சந்திரா நாடகம் ஏற்படுத்திய தாக்கத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். எனவே ஓர் இலக்கியத்தை பார்க்கும் அல்லது படிக்கும் ஒருவருக்கு அது ஒரு பொழுதுபோக்காக மட்டும் மல்லாமல் அவர்களின் சிந்தனையை மாற்றி அமைக்கும் சக்தியாகவும் இருக்கிறது.

பலநேரங்களில் இலக்கியத்தை படைக்கும் படைப்பாளிகள் சமுதாயத்திற்கு புறம்பான, சமூகம் ஏற்க மறுக்கும் தங்களது கருத்துக்களை, எண்ணங்களை அவர்கள் படைக்கும் இலக்கியத்தில் சமூகம் ஏற்கும் வண்ணம் கதைக்கலம் அமைத்து கதாபாத்திரங்கள் வழியாக தங்களது எண்ணங்களை புகுத்திவிடுகின்றனர். இது திறன் ஆய்வு அடிப்படையில் நோக்கும் போது படைப்பாளி உளவியலின் புறத்தெறிதல் என உளவியல் கூறுகின்றது.

இக்கால இலக்கியங்கள் பெண்ணை போகப்பொருளாகவும், அடிமைகளாகவும் சித்தரிக்கும் இவ்வேளையில் நம் சங்க இலக்கியங்கள் குறிப்பாக புறநானுற்றில் போர்க்களம் புகுந்து தன் மகனை தேடும் வீரப்பெண்ணாய் சித்தரித்துள்ளது காணப்படுகிறது. ஆனால் அவற்றிற்கு பின் நம் தமிழ் சமுதாயத்தின் மீது தொடுக்கப்பட்ட ஆரிய மற்றும் பல்வேறு கலாச்சார படையெடுப்புகளுக்கு பின் தோன்றிய இலக்கியங்களில் குறிப்பாக சிலப்பதிகாரம், இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் அவர்களின் சுயநலத்திற்காகவும், வருணாசிரம கொள்கையை புகுத்துவதற்காகவும் அறிவுக்கு புறம்பான பாவம், புண்ணியம், ஜோதிடம், சகுனம், சடங்கு, ஆவி, தெய்வம் போன்ற கதாபாத்திரங்களையும், கருத்துக்களையும் தங்களது இலக்கியத்தில் புகுத்தியுள்ளனர்.

காலம் காலமாக இவ்விலக்கியங்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு அறிவு வளரும் முன்னே குழந்தைகளுக்கு கதை, திரைப்படம் போன்றவற்றின் மூலம் பரப்பப்படுகிறது. இக்கருத்துக்கள் குழந்தையாக இருக்கும்பொழுதே நமது நனைவிலியில் பதிவு செய்யப்படுகின்றது. உலக நாடுகள் அனைத்திலும் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டபோதிலும் மூடநம்பிக்கை மறையாமல் இருப்பதற்கு இதுவே காரணமாகும்.

உலகில் தோன்றிய தந்தை பெரியார், டாக்டர்.அம்பேத்கர் போன்ற பகுத்தறிவாளர்களால் மூடநம்பிக்கை ஓரளவு ஒழிக்கப்பட்டு மானுடம் வளர்ச்சிப் பெற்றது. அறிவியல் வளர்ச்சியின் முழுவெற்றியானது அதனை பயன்படுத்தும் முறையை பொறுத்தே அமையும். ஆனால் கொடுமை இலக்கியங்களை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாய் தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் போன்ற பெரிய அளவில் பயன்படுத்தும் ஊடகங்கள் மக்களின் அறிவினை மழுங்கடிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.

இன்றைய சமுதாயத்தில் அறிவியல் வளர்ச்சி ஓரளவு ஏற்பட்டிருப்பினும் மூடபழக்கம் எனும் கொடிய நோயிலிருந்து நாம் விடுதலை அடையவில்லை என்றே கூறலாம். இன்னும் மூடநம்பிக்கை மக்களிடையே ஆட்கொண்டு உள்ளது என்பதற்கு சான்றhக செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகள் சில.

பள்ளிப்பாளையம் அருகே தனது தீங்கு ஏற்படுவது தன் மகன் பிறந்த ஜாதக அமைப்பு ஜோதிட சாஸ்திரங்களை நம்பி தன் மகனை காவிரி ஆற்றில் மூழ்கடித்து கொன்ற தந்தை. இறந்துவிட்ட தன் சகோதரனை ஜபத்தின் மூலம் உயிருடன் மீட்கப்போவதாக கூறி மூன்று மாதங்களாக பிணத்தை வைத்து பிரார்த்தனை செய்த சகோதரன்.

மத்தியப்பிரதேச மாநிலம் பினகண்ட் மாவட்டத்தில் பேய் ஊருக்குள் வந்துவிட்டதாக ஒருவர் கனவு கண்டதால் ஊருக்கு ஒதுக்கப்புறமான ஒரு இடத்தில் பேய்க்கு ஒருவீடு.
கரூரில் தலையில் தேங்காய் உடைத்து நூறு பேர் படுகாயம்.

இதுபோன்ற செய்திகளை படிக்கும்போது மனிதரில் பலரும் இன்னும் மூடநம்பிக்கை என்னும் பிணியில் பிடிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் இலக்கியம் பெரும்பங்கு வகிக்கின்றது.

திரைப்படங்களில் மூடநம்பிக்கை திணிப்புகள்

சந்திரமுகி

இப்படத்தில் சந்திரமுகி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் கதையை ஆழமாக உள்வாங்கிய ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மையாக மாறியதை அறிவியல் ரீதியான உண்மையாகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், சில மூடநம்பிக்கைகளையும் கையாண்டு இருக்கிறார் இயக்குநர். இறந்தவரின் ஆன்மா கெட்டலையும் என்ற பகத்தறிவிற்கு முரணான திணிப்புகளைப் புகுத்தி. சோதிட சாஸ்திரத்தையும் நம்பியாக வழிபாட்டில் ஈடுபடும் ஒரு சோதிடக்காரரின் உதவியும் தனக்குத் தேவை என்று உளவியல் நிபுணரும் கூறியிருப்பது கதாசிரியாரின் கற்பனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அக்கற்பனை வேண்டாத எண்ணங்களை வளர்ப்பதாகவே அமைந்திருக்கிறது. சாமியின் பெயரைச் சொல்லியும். ஆவி, பேய் போன்ற மூடநம்பிக்கைளை வளர்த்து அதனைப் போல தன்னுள் மாற்றங்களை ஏற்படத்தி நம்ப வைக்கின்றனர். தன்னுடைய சுயநலத்திற்காகவும் உடலில் உள்ள கோளாறுகள் காரணமாகவும் பேயாடுவது போன்ற உணர்வு வெளிப்பாடு நிகழ்கிறது. இது அறிவியல் கண்டறிந்த உண்மை. எத்தனை பேருக்குத் தெரியும். இந்த அறிவியல் உண்மை. அறியாமை என்னும் நோயைக் குணப்படுத்தினாலொழிய மூடநம்பிக்கைகளைக் களைவது கடினம்.

பருத்திவீரன்

இப்படத்தில் கதாநாயகி சில மனித மிருகத்தால் வேட்டையாடப்பட்டு இறக்கும் தருவாயில் கதாநாயகனிடம் அவனுடைய பாவத்திற்கான தண்டணையே தனக்கு இக்கொடுமை நேர்ந்ததாகக் கூறுகிறாள். இந்த இடத்தில்தான் கதாசிரியாரின் மூடநம்பிக்கை வெளிப்படுகிறது. பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. பகுத்தறிவு மட்டுமே உண்மை என்பதைக் கூற மறந்துவிட்டார் இயக்குநர். இது போன்ற இலக்கிய ஊடகத்தினால் மனிதன் தான் செய்த தவறினை மறைத்து அதனை விதியின் மேல் சுமத்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. உண்மைக்குப் புறம்பான இது போன்ற இலக்கியத்தில் மாற்றங்களைக் கொணர்ந்து அறிவுக்கான புதுமைகளைக் கொண்டு வர வேண்டும்.

சிவாஜி

சிவாஜி சமீபத்தில் வெளியாகி மிகப்பரப்பரப்பாக திரையரங்குகளில் ஓடவைத்துக்கொண்டிருக்கும் சிவாஜி படத்திலும் மூடநம்பிக்கைகளைக் கையாண்டு இருக்கிறார் சஙகர். இதில் கதாநாயகிக்கு ஜாதகம் அதாவது கிரஹநிலை சரியில்லை என்றும் எனவே அவளை மணந்து கொள்ளும் நாயகனுக்கு அதனால் பதிப்புகளும் தீமைகளும் ஏற்படும் என்றுகூறி உண்மையிலேயே அதன் பாதிப்புகள் ஏற்படுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இயக்குனர் சங்கர் கருப்பு பணத்தை மக்களுக்கு பயனுள்ள வழியில் பயன்படுத்தும் முறையினை தெரிவிப்பதுபோல் படத்தை அமைத்திருந்தாலும் ஆழ்ந்து நோக்கின் தன்னுடைய ஜாதகம் மற்றும் ஜோதிடம் என்னும் மூடநம்பிக்கைகளை புகுத்தும் கதை கலமாகத்தான் இத்திரைப்படத்தை பயன்படுத்தியிருக்கின்றார்.

இலக்கியத்தைக் கையாளும் இயக்குநர்களுக்கு பெண்களுக்கெதிரான இது போன்ற மூடநம்பிக்கைகள் மூடத்தனம் என்பது புரியவில்லையா. ஜாதகத்தை நம்பி செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் ஏராளமானோர் இன்றும் திருமண வயது கடந்தும் திருமணமாகாமல் இருக்கிறார்கள். அப்படியே அவர்கள் திருமணம் செய்தாலும் அதே போல் உள்ள ஜாதகரைத் தேடிப் பிடித்து அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அப்படியிருக்க தோஷங்களும் கிரகங்களும் வெறும் பொய்யே.

பெண்களுக்கு எதிரான மூடநம்பிக்கைகளையும் பழங்கதைகளையும் தோண்டிப் புதைக்க வேண்டும். ஜாதகம் ஏதும் பாராமல் காதல் திருமணம் செய்து கொண்ட அனைவரும் வாழ்க்கையில் தோற்றதுமில்லை. சடங்கும், சம்பிரதாயம் பார்த்து திருமணம் செய்து கொண்ட அனைவரின் வாழ்க்கையும் வெற்றியிருப்பதுமில்லை.

விதியினால்தான் அனைத்து செயல்களும் நடைபெறும் என்று பழமையைச் சொல்லி ஏமாற்றவது விதியுமில்லை ஒன்றுமில்லை. மனிதனின் மதி மட்டுமே உண்மை என்பதை இலக்கியம் சொல்ல வேண்டும் சகுனம். சம்பிரதாயம், ஆவி, சாமி, பாவம், புண்ணியம் போன்ற வேண்டாச் சொல்லைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். வெறும் பொருளினைச் சேர்க்கும் எண்ணத்தை மட்டும் கதாசிரியர்கள் கொள்ளாது மக்களுக்குச் சிந்தனையைத் தூண்டும் தூண்டுகோலாக அவர்களது கதைக்கரு அமைய வேண்டும். காட்சிகளும் கற்பனைகளும் பகுத்தறிவுச் சிந்தனையை ஏற்படுத்துவதாகக் கதை அமைய வேண்டும். சாதி வெறியும் மடமையை ஒழித்து நாட்டுப்பற்றுணர்வை ஊட்டும் விதமாக இலக்கியம் அமைய வேண்டும். இதுபோன்ற பகுத்தறிவுக்கு புறம்பான மூடநம்பிக்கைகளை திரைப்படங்களில் திணிக்கும் இயக்குனர்களுக்கு எதிராக தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

- பாஸ்கரன்

Pin It