ஊழல் வழக்கில் பதவியைப் பறிகொடுத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் எதிர்பார்ப்புக்கு ஆளாக்கியுள்ளது. ஏனென்றால், இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் எப்படியும் இல்லை. இந்த இடைத்தேர்தல் ஆளும் கட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பரிசோதனையாகும். கடந்த காலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று இந்தத்தேர்தல் இருக்காது என்று நம்பலாம். பணத்தைக் கொடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி மக்களின் வாயடைத்து விடலாம் என்று நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

jayalalitha 304ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் ஓட்டளிக்கும் முன், தமிழக அரசு கடந்த காலங்களின் செயல்பாடுகளையும், அதனுடைய நடவடிக்கைகளையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பொருளாதாரத்தை உயர்த்தக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த வில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் 33 சதவீத மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து, தமிழக இளைஞர்களை போதையில் தள்ளாடவைத்ததே மிகப்பெரிய சாதனை. படித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கான, வேலைவாய்ப்பை அரசு ஏற்படுத்தத் தவறிவிட்டது ஒருபுறம், இயற்கை வளங்களான தண்ணீர், மணல், காடு ஆகியவற்றை அதிகாரம் படைத்த தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் போக்கு அதிகரித்துள்ளது.   

மீத்தேன் திட்டம், நியூட்ரினோ திட்டம், கூடங்குளம் போன்ற இயற்கைச் சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர். தமிழக அரசு இப்படி என்றால், மத்திய அரசு இதற்கு மேலாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தமிழக மக்களின் பண்பாட்டு விழாவான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தல், சமஸ்கிருதத்தை தமிழக மக்களிடம் திணித்தல், மீனவர்களின் பிரச்சனையில் இரட்டை வேடம் போடுதல் என்று அது ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவதொரு லாபம் இருந்தால் என்றாலே வாய் திறக்கும் என்ற சூழ்நிலைதான் இருக்கின்றது.

                உதாரணத்திற்கு, கூடங்குளம் அணுஉலை பிரச்சனையில் பாஜக கூட்டணியில் இருந்த ம.தி.மு.க. விற்கு ஒரு கொள்கை; தே.மு.தி.க. விற்கு ஒரு  கொள்கை. அதைப்போல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  எதிர்க்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஆதரிக்கிறது. நாட்டை சுரண்டுவதிலும் அந்நியனுக்கு தாரைவார்ப்பதிலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த வகையிலும் மாற்றுக் கொள்கை கொண்டதல்ல பாஜக. அதைப் போலத்தான்,  தி. மு.க, அ.தி.மு.க. இதுபோன்றே, மற்ற கட்சிகளும் இவர்களின் செயல்களை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றன. 

                இது இப்படியே போனால் இந்தியாவின் குப்பை கொட்டும் இடமாக தமிழகம் மாறும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. கூடங்குளம் அணுஉலைத்திட்டம் அமைய  பல மாநிலங்களில் முயற்சி செய்து தோல்வியுற்ற மத்திய அரசு, தமிழகத்தில் எளிதாக  இத்திட்டத்தை மாநில அரசின் அனுமதியோடு நிறைவேற்ற முடிகிறது.

அதைப்போல, நியூட்ரினோ திட்டம் முதலில் அஸ்ஸாமில் தொடங்க இருந்தது. அங்குள்ள மக்களும் மாநில முதல்வரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கர்நாடகம் மாநிலம் கோலாருக்கு மாற்றப்பட்டது. அங்கு எதிர்ப்பு பலமாக இருந்ததால் இறுதியாக, தமிழகத்தில் நிலைபெற்று வேலை நடந்து வருகிறது.

  அரசியல் கட்சிகளுக்கு மக்களைப்பற்றி கவலை கிடையாது. அது, மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி, இரண்டு பேருமே ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு எந்த விதத்திலும் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றவில்லை என்பது தெள்ளத் தெளிவான ஒன்றாகும். தற்பொழுது, திருச்சியில் போட்டியிடுவதற்கு அதிமுகவுக்கும், பா.ஜ.க.விற்கும் எந்த வகையிலும் அருகதை இல்லை. இதனை கருத்தில் கொண்டு ஸ்ரீரங்கம் மக்கள், மக்கள் நலனிற்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

- பொதிகை வசந்தன்

Pin It