திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குப் பின்புறம் உள்ள சின்ன சூரியூர், பெரிய சூரியூர் கிராமங்களுக்கு இடையே சூரியூர் ஊராட்சி, பெரிய சூரியூர் கிராமத்தில் சர்வே எண் 469/1A2 மற்றும் 469/1B2 நிலங்களில் பெப்சி (PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தினமும் 90 லட்சம் லிட்டர் தண்ணீர் விவசாய நிலத்தில் ராட்சச போர் போட்டு நீர் எடுக்கும் திட்டத்துடன், முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜின் குடும்பத்தினருக்குச் சொந்தமான எல்.ஏ.பாட்டிலர்ஸ் எனும் பெப்சி நிறுவனம்யின் இந்த நிறுவனம், 2010-ல் இந்த நிறுவனம்யை இங்கு ஆரம்பித்தது. அப்போது மக்களிடம் கருத்துகேட்கும் கூட்டமோ, அறிவிப்போ எதுவும் நடத்தாமல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு நிலத்தடியில் இருந்து தினமும் 90 லட்சம் லிட்டர் நீர் எடுக்க அனுமதி பெறப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் போராடி வருகின்றனர்.

sooriyur village people

2000 சதுர அடிக்கு மேல் கட்டப்படும் வணிக கட்டிடங்களுக்குத் தேவையான கட்டிட வரைபட அனுமதி மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) பெற வேண்டும். ஆனால் எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம் சுமார் 1,00,000 சதுர அடி வரை தொழிற்சாலையை நிறுவியுள்ளது. ஆனால் ஏதும் நகர் ஊரமைப்பு துறையிடம் (DTCP) இன்றுவரை எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை. எல்.ஏ பாட்டிலர்ஸ் நிறுவனம் முழுக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது.

மேலும், இந்நிறுவனம் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 160ன் படி ஒரு தொழிற்சாலை தொடங்குவதற்கு, ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அனுமதி மற்றும் இயந்திரங்கள், தளவாடங்கள் நிறுவுவதற்கு அனுமதி ஏதும் பெறப்படவில்லை. அதனை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மான எண். 194 நாள்: 06.05.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கண்ட நிறுவனத்தை தடை செய்யச் சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் தமிழக அரசால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்திடமிருந்து பெப்சி (PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தின் உரிமம் புதுபிப்பதற்கான காலக்கெடு 31.03.2014 அன்றுடன் முடிந்துவிட்டது. இத்துறையிடமிருந்து இன்றுவரை உரிமம் புதுப்பித்து நீட்டிப்பு வழங்கப்படவில்லை.

இப்பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழில். பெப்சி நிறுவனம் வந்த பிறகு, எல்லாம் வீணாப்போய் விட்டது. நிறுவனம் ஆரம்பிச்ச வேகத்தில் பெரிய சூரியூர் எல்லைக்கு உட்பட்ட நிறுவன வளாகத்தில் ஆறு போர்வெல்களையும், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் அஞ்சு போர்வெல்களையும் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது. அத்தனையும் ராட்சத போர்கள்.. இதனால் சுற்றுவட்டாரத்தில் இருக்கிற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் படுபாதாளத்துக்குப் போய் விவசாயம் அழிந்தது வருகிறது.

இந்த நிறுவனத்தால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பும், மக்களின் வாழ்வாதாரமான நிலத்தடி நீர் சுரண்டப்படுவதும் அதனால் விவசாயம் அழிந்தும் வருகிறது.

இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்கும் கிணற்று பாசனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது.

சூரியூர் எல்லைக்குள் இருக்கும் நிறுவனம் வளாகத்திற்குள் 6 போர்வெல், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்கள் என ராட்சத போர்களை அமைத்து 24 மணிநேரமும் கணக்கின்றி நீரை உறிஞ்சி எடுக்கின்றனர் அந்த நிறுவனத்தினர். இதனால் இப்பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றாக பாழாகி விட்டது. சகல சவுகர்யங்களுடன் பெப்சி நிறுவனம் இயங்கிக் கொண்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்து வாழ்ந்து வரும் விவசாயிகளும் மற்ற மக்களும் தினந்தோறும் தண்ணீருக்காக தவியாய்த் தவிக்கும் கொடுமை சொல்லி மாளாது.

பல்வேறு துறைகளின் அனுமதி பெறாமல் இயங்கிவரும் பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தை நிரந்தரமாக மூடி, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க கோரி மக்கள் பல்வேறு போராடங்களை மக்கள் தண்ணீர் அமைப்புடன் இணைந்து தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பல்வேறு முறை மனு கொடுத்தும், உண்ணாவிரதம் , பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தின் முன்பு மறியல் செய்தும் போராடினர்.

மக்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக வேறு வழியின்றி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டுப் பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர், தீயணைப்பு கோட்ட அலுவலர், உள்ளாட்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து நிறுவனத்தை ஆய்வுசெய்ய உத்தரவிட்டார்.

மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட இக்குழு, 24 ஏக்கரிலான இந்த இடத்தில் பெப்சி நிறுவனம் அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து அறிக்கை வழங்கியது. ஆனாலும் அதிகாரிகள் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல கட்ட போராட்டங்களுக்குப்பின் நிறுவனத்தில் ஆய்வு நடத்திய திருவெறும்பூர் பி.டி.ஓ ரெங்கநாதன், அனுமதியின்றி நடத்துவதாகக் கூறி நிறுவன நிர்வாகிகள் மீது 3.9.2014 அன்று நாவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இன்று வரை ஒரு நடவடிக்கையும் இல்லை.

09-11-2014 அன்று திருச்சி சூரியூர் சமுதாயக்கூடத்தில் கூடிய பொதுமக்கள், தண்ணீர் இயக்கம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சமூக ஆர்வலர்களுடன் கலந்துபேசி, பெப்சி நிறுவனதிற்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவதென இப்பகுதி மக்கள் ஆலோசனை நடத்தினர். இப்போராட்ட ஆலோசனைக் கூட்டதில் நானும் கலந்து கொண்டு எனது பல்வேறு போராட்ட அனுபவங்களை கூறி, இப்பகுதி மக்களின் நிலைமையை ஒட்டி போராட்ட வடிவங்களின் நிலையை முடிவு செய்யுங்கள் எனக் கூறினேன்.

போராட்டக் கூட்டத்தில் மக்கள், பெப்சி நிறுவனத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளை சேதமாக்கி தடை செய்வது, பெப்சி நிறுவனம் முன்பு தூக்கு போடும் போராட்டம், பெப்சி நிறுவனத்தை இழுத்து மூடும்வரை தொடர் போராட்டங்கள் நடத்துவது, அரசு கைது செய்து சிறையில் வைத்தால் அதையும் உறுதியாக எதிர் கொள்வது, சமூக வலைதளங்கள் மூலம் பெப்சியின் நிறுவனம் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வது என முடிவெடுத்தனர்.

நான் மக்களின் போராட்ட ஊர்வலத்தை தொடங்கி வைத்து மக்களுடன் சிறிதுநேரம் இருந்து விட்டு அடுத்தடுத்த பணிகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு இருந்ததால் உடன் இருக்க முடியாமல் புறப்பட்டேன்.

போராட்ட திட்டப்படி போராட்டத்தில் களம் இறங்கிய 100க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், வட்டாட்சியர் உட்பட பலரின் பல்வேறு வெற்று வாக்குறுதிக்கு மயங்காமல் உறுதியுடன் இருக்க, காவல்துறையால் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்பு இரவு முழுவதும் வைக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.

அரசின் பாராமுகத்தை உலகிற்கு உணர்த்தும் விதத்தில்

"காலண்டரை பார்த்து குடியரசு தினம் கொண்டாடாதே;
"நமக்கான உரிமை இருக்கிறதா என்று நினைத்து
பார்த்து அதைக் கொண்டாடு" என்ற முழக்கத்துடன்

குடியரசு தினமான 26-01-2015 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அரசு கொடுத்த தங்களது குடும்ப அட்டையை திரும்ப அரசிடமே ஒப்படைத்து, அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பைக் காட்டுவது என முடிவு செய்தனர்.

நகர ஊரமைப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மாசுக்கட்டுபாட்டு வாரியம் என அரசின் மூன்று துறைகளிடம் அனுமதி பெறாமல் இயங்கி வரும் பெப்சி(PEPSI) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையான L.A. Bottlers Pvt. Ltd. நிறுவனத்தை நிரந்தரமாக மூட வலியிறுத்தி அரசு கொடுத்த தங்களது குடும்ப அட்டையை திரும்ப அரசிடமே ஒப்படைப்பது என முடிவு செய்தனர்.

அதன் அடிப்படையில் 26-01-2015 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் அரசு கொடுத்த தங்களது குடும்ப அட்டையை திரும்ப ஒப்படைக்கச் சென்ற 50 பேரை வழியிலேயே கைது செய்து கே.கே. நகரில் உள்ள மாநகர காவல்துறை சமுதாயக் கூடத்தில் வைத்து, இரவு விடுதலை செய்தது காவல்துறை.

27-01-2015 செவ்வாய் முதல் திருச்சி- சூரியூரில் தொடர் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் சூரியூர் மக்கள்.

தமிழகத்தில் கனிமவள கொள்ளை போலவே, நீர்வளக் கொள்ளையும் எவ்வித கட்டுப்பாடின்றி நடந்து வருகிறது. தமிழகத்தின் நீரெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான ஆலைகளுக்கு எவ்வித வரையறை இன்றி தாரை வார்க்கப்பட்டு வருகிறது. பல லட்சம் ஆண்டுகளாய் நமது முன்னோர்கள் கட்டிக் காத்த நமது நீர்வளத்தை சில பத்து ஆண்டுகளில் வளர்ச்சி என ஒரு கூட்டம் அழித்து வருகிறது.

பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பான ஆலைகளுக்கு என

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமண்டூரில் உள்ள பெப்சி ஆலை,

திருபெரும்புதூரில் உள்ள கொக்கோ-கோலா ஆலை,

நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள கொக்கோ-கோலா ஆலை,

கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் பெப்சி ஆலை,

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் கொக்கோ-கோலா ஆலை என வரிசையாக அணிவகுத்து நின்று நமது நீர்வளத்தை அளிப்பது மட்டும் இன்றி சுற்றியுள்ள விவசாய நிலத்தை அழித்தும், மக்களுக்கு பல்வேறு நோய்களை அள்ளிக் கொடுத்தும் வருகிறது.

இன்னொரு புறம் தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை விஷமாக்கி விடும் தொழிற்சாலைக் கழிவுகள், அதனால் குடிப்பதற்கு பயன் இல்லாமல் போய்விட்ட ஆழ்குழாய்க் கிணறுகள், ஆறுகள், ஏரிகள், கண்மாய்கள், நீர்நிலைகள். அதனால் நாடெங்கும் பாட்டில் தண்ணீர் விற்பனை. சுதந்திரம், குடியரசு என்று சொல்லி 68 ஆண்டுகளாய் நமது நாட்டை ஆண்டு (பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விற்று), நல்ல நீரை வழங்க வேண்டிய அரசுகளே, சென்னை புழல் அருகே உள்ள போக்குவரத்து தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நீரை எடுத்து அம்மா குடிநீர்த் திட்டம் என்ற பெயரிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலூர் அருகே தடுப்பணை கட்டி எடுக்கப்பட்டு வரும் இந்திய அரசின் தென்னக ரயில்வேயின் ரயில் குடிநீர் என்ற பெயரிலும் குடிநீரை வணிகமாகி விற்கும் கொடுமை நடந்து வருகிறது.

குடிநீரை வணிகமாகி விற்கும் கொடுமை பல்வேறு தனியார் நிறுவனங்களால் வரைமுறையற்று நடந்து வருகிறது. மேலும் மறைநீர் என்ற பெயரில் நமக்கு நேரடியாகத் தெரியாமல் நமது நீர்வளம் உலகம் முழுக்க பல்வேறு ஆதிக்க நாடுகளால் சுரண்டப்பட்டு வருகிறது.

அரசு மீத்தேன் திட்டம் முதல் கொக்கோ-கோலா, பெப்சி, அணு உலை திட்டம், தேவாரம், நியூட்ரினோ, கெயில் நிறுவனம், திருவண்ணாமலை கவுந்தி வேடியப்பன் மலையை ஜிண்டால் நிறுவனத்திற்கு கொடுப்பது, தமிழகத்தின் நீர்வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அவர்களுக்கு எடுபிடியாக இருந்து சேவை செய்பவர்களுக்கும் கொடுப்பது, தமிழகத்தின் கனிமவளங்களை பன்னாட்டு நிறுவனங்களின் ஏவலாட்களுக்கு கொடுப்பது என ஒவ்வொன்றிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பதும், போராடும் மக்கள் மீது தொடர்ந்து பொய்வழக்கு போட்டு அச்சுறுத்துவது, சிறையில் அடைப்பது என்பது இந்த அரசு தமிழக மக்களுக்கு என இல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாகவே உள்ளது என்பது மீண்டும், மீண்டும், அம்பலமாகி வருகிறது.

நாடு மீண்டும் தொடர்ந்து வெள்ளையனை எதிர்த்து (பன்னாட்டு நிறுவனங்களையும் அவர்களது எடுபிடிகளையும்) ஒரு மாபெரும் போராட்டம் செய்ய வேண்டிய அவசிய நிலையில் உள்ளது.

தமிழக அரசு...

* சூரியூரில் சட்ட விரோதமாக இயங்கி வரும் அமெரிக்காவின் பெப்சி நிறுவனத்தை உடனே மூடு !

அனைத்து அரசியல் கட்சிகளும்...

* தேர்தலுக்கு திருவரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கு ஓடோடி வரும் அனைத்து அரசியல் கட்சிகளும், கடந்த 3 ஆண்டுகளாக சூரியூரில் சட்ட விரோதமாக இயங்கி வரும் அமெரிக்காவின் பெப்சி ஆலையை மூட குரல் கொடுக்க வேண்டும்!

* போராடும் திருச்சி -சூரியூர் மக்களுக்கு துணை நிற்க வேண்டும்!

தமிழக மக்கள்...

* தமிழக அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை ஜனநாயக உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் எதிர்போம்!

* அமெரிக்காவின் பெப்சி ஆலையை விரட்டியடிப்போம்!!!

* போராடும் திருச்சி -சூரியூர் மக்களுக்கு துணை நிற்போம்!

* தாய்மண்ணை பாதுகாப்போம்!!!

Pin It