இப்படியெல்லாம் செய்வதை விடத் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு, தேர்தல் நடத்த விரும்பவில்லை என்று மத்திய அரசு சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது!
இந்தியப் பிரதமர், தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைக்காக மதுரைக்கு வருகின்றார். தி.மு.கழகத் தலைவர் மகளின் வீட்டில் அதே நாளில் வருமானவரிச் சோதனை நடைபெறுகிறது. கேட்டால், இதற்கும், அதற்கும் தொடர்பில்லை என்பார்கள்.
எதற்கும் எதற்கும்தான் நேரடியாகத் தொடர்பு இருக்கும்? சென்ற ஆண்டு மே மாதம் கொரானாவைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட தாதா சாஹேப் பால்கே விருது, இந்த ஆண்டு, அவசரம் அவசரமாக, ஏப்ரல் மாதமே தமிழ்நாடு தேர்தலுக்குச் சில நாள்கள் முன்பாகக் கொடுக்கப்படுகிறதே, அதற்கும் தேர்தலுக்கும் நேரடியாகவா தொடர்பு இருக்கிறது? ஒரு நாட்டின் பிரதமர், ரஜினிகாந்த்தைத் தலைவா என்று அழைக்கிறாரே, அதற்கும் தேர்தலுக்கும் நேரடியாக என்ன தொடர்பிருக்கிறது?
எல்லாம் தற்செயலாக நடக்கின்றன... அவ்வளவுதான்!
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் அவர்கள். ஆனால் வருமானவரிச் சோதனை அனைத்தும் எதிர்க்கட்சியினர் வீடுகளில் நடக்கிறது! அதுவும், கட்சித் தலைவரின் மகள் வீட்டிலேயே தேர்தலுக்கு நான்கு நாள்களுக்கு முன்னால் இப்படி நடக்கிறது என்றால் என்ன பொருள்?
தேர்தலில் தங்களுக்கு வரப்போகின்ற தோல்வியைச் செரித்துக் கொள்ள முடியாமல், இப்படிப்பட்டச் செயல்களை மறைமுகமாக மத்திய அரசு தூண்டி விடுகிறது என்பதுதானே? நாட்டில் விலைவாசி என்றும் இல்லாத அளவிற்கு கூடியிருக்கிறது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, சுற்றுச் சூழல் மாசு படிகிறது, விவசாயிகள் தெருவில் நிற்கிறார்கள் - இவை எது குறித்தும் பேசாமல், ‘‘மக்களே, எல்லோரும் வருமானவரிச் சோதனை பற்றி பேசுங்கள்’’ என்று திசை திருப்புவதும் நோக்கமாக இருக்கலாம்.
தேர்தல் பரப்புரையில் இருக்கும் தலைவர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி விடலாம் என்றும் அரசு எண்ணக்கூடும். எவ்வாறாயினும், ஒன்றை ஆளும் கட்சியினர் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இதுபோன்ற மலிவான நடவடிக்கைகளால், திமுக வின் வெற்றியைத் தடுத்து விட முடியாது. மாறாக, அதன் வெற்றிக்கு மட்டுமே இவை உதவும். கூடுதலான வாக்குகளைக் கொண்டுவந்து சேர்க்கும்!
வெற்றி நிச்சயம்! வீறு கொண்டெழுந்து மேலும் உழைப்பான், கழகத் தொண்டன்! விளைந்த நெற்கதிர் வீடு வந்து சேரும் ஏப்ரல் 6 ஆம் நாள்!
- சுப.வீரபாண்டியன்