தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் கழகம் (NPPA - National Pharmaceutical Pricing Authority) மருந்துகளின் விலையை நிர்ணயிக்கும் தனது அதிகாரத்தை 108 மருந்துகளைப் பொருத்த மட்டில் திரும்பப் பெற்றுக் கொள்வதாக 22.9.2014 அன்று இரவு அறிவித்தது. இம்மருந்துகள் உயிர் காக்கும் முக்கியமான மருந்துகளின் பட்டியலில் (List of essential drugs) இல்லாததால் இவ்வாறு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. மறுநாளே (23.9.2014) மருந்து உற்பத்தி செய்யும் தொழில் அதிபர்கள் அதை மகிழ்ச்சியாக வரவேற்றார்கள்.

medicineஆனால் ஒரு வாரத்திற்கு உள்ளேயே இந்த மகிழ்ச்சி மறைந்து, சந்தையில் நிலவும் போட்டியினால் விலையை உயர்த்த முடியவில்லை என்று 28.9.2014 அன்று புலம்பித் தீர்த்து உள்ளனர். முக்கியம் இல்லாத மருந்துகளின் மீதான விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தைத் திரும்பப் பெற்றது போல், முக்கியமான மருந்துகள் எனப் பட்டியலிடப்பட்ட (List of essential drugs) 652 மருந்துகளின் மீதான விலை நிர்ணய அதிகாரத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்று சினம் பொங்க இந்திய முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் ஒரு சேரக் கூறி உள்ளனர்.

உயிர் காக்கும் முக்கிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டால், அவை தேவைப்படும் பண வசதி குறைந்த மக்களின் நிலை பற்றிக் கேட்டதற்கு, இவற்றிற்கு ஈடான பொதுவான மருந்துகள் (generic medicine) குறைவான விலையில் கிடைக்கின்றன என்றும், அதோடு அல்லாமல் மாற்று மருத்துவத்தின் (சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியேபதி இன்னும் இவை போன்றவை) மூலம் சிகிச்சை பெறலாம் எனவும், நிறுவன (Branded) மருந்துகளை உட்கொள்வதா, அல்லது பொதுவான மருந்துகளை (generic medicine) உட்கொள்வதா, அல்லது மாற்று மருத்துவ முறையில் சிகிச்கை பெறுவதா என்று முடிவெடுக்கும் “சுதந்திரம்” மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

அத்துடன் மருந்துகளின் விலைகளில் அரசு அவ்வப்போது தலையிடுவதால், மருந்து உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுகிறது என்றும், இது போல் அரசின் தலையீடு தொடர்ந்து இருக்குமானால், இத்தொழிலில் இருக்கும் மூலதனம் வேறு தொழில்களுக்குப் போய்விடும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க வசதி இல்லாத மக்களுக்கு, உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் போய் விடக் கூடாது என்று அரசு கவலைப் படுவது தவறா என்று கேட்டதற்கு, அதில் தவறு இல்லை என்றும், இத்தொழிலில் போதிய இலாபம் கிடைக்கும் வழி அடைக்கப்பட்டு விடக் கூடாது என்ற கவலையும் அரசுக்கு வேண்டும் என்றும், அவ்வாறு இல்லை எனறால் மூலதனம் வேறு தொழில்களில் பாய்ந்து, மருந்து உற்பத்தித் தொழிலே நசிந்து விடும் என்றும் அவர்கள் கூறினர். அப்பொழுது அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க ஆயத்தமாக இருப்பவர்களுக்கும் (அதாவது பணக்காரர்களுக்கும்) உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் போய்விடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை செய்து உள்ளனர். அரசுக்கு ஏழை மக்கள் மீது உண்மையில் அக்கறை இருக்குமானால், அதிக விலை கொடுத்து அம்மருந்துகளை வாங்கி, அவர்களுக்குக் குறைந்த விலையில் அளிக்கலாம் என்றும், தங்கள் மூலதனத்தின் மீதான இலாப விகிதம் குறையும் படியான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர்கள் கூறினர்.

மருந்து உற்பத்தி செய்யும் முதலாளிகள் அவற்றை நோய்கள் தீர வேண்டும் என்பதற்காகச் செய்கிறார்களா அல்லது அதைப் பற்றிய அக்கறை இல்லாமல் இலாபம் குவிய வேண்டும் என்ப‌தறகாக மட்டுமே செய்கிறார்களா?

மருந்துகளின் விலை நிர்ணய உரிமையைத் தங்களிடமே விட்டுவிடுமாறும், பணக்காரர்கள் மட்டுமே தங்கள் மருந்துகளை வாங்கினால் போதும் என்றும், அதிக விலை கொடுத்து வாங்க முடியாத மக்கள் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். அப்படி இருக்கையில் அதிக விலை கொடுத்து வாங்க முடியாத பெரும்பான்மை மக்கள் தங்களுக்குச் சிறிதும் உதவாத இத்தொழிற்சாலைகள் தங்களுக்கு உரிமையான இயற்கை மூலாதாரங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்கலாமா?

மேலும் இத்தொழில்களில் உழைக்கும் மக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள், இவற்றில் உற்பத்தியாகும் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் தானே? தங்களுக்கு உதவாத பொருட்களை உற்பத்தி செய்வதில் நாம் ஏன் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும்?

இது போன்ற சிந்தனைகள் நமக்கு ஏன் தோன்றுவது இல்லை?

நோய்களைக் குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இல்லாமல், இலாபத்தைக் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே மருந்துகளை உற்பத்தி செய்யும் சந்தை முறையை ஒழித்து விட்டு நோயைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே மருந்துகளை உற்பத்தி செய்யும் சோஷலிச முறையை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் ஏன் நினைப்பது இல்லை?

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.10.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It