பிரேக் லைன்

''நகரை மையமாகக் கொண்ட நடுத்தரவர்க்கத்தினரின் தேவைகள் மற்றும் நலன்களே ஒட்டுமொத்த சமூக வலியுறுத்தல்களை கட்டுப்படுத்துகின்றன.

கிராமம் என்பது வேளாண்மை மட்டுமல்ல. கிராமங்களை மதிப்புமிக்கதாக மாற்ற வேறு தொழில்களைக் கொண்ட உகந்த பொருளாதார மாதிரிகள் உள்ளன.''

இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தை நேரில் பார்த்திருக்கிறீர்கள். அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருபக்கம் வலுவான பொருளாதார நிலைமையை எட்டியிருந்தாலும், நாட்டின் பெரும்பான்மையான பகுதியை இந்த வெற்றி தொடவேயில்லை. எந்த இடத்தில் தவறு நிகழ்ந்தது?

கொள்கைகள் தவறு என்று கூறுவதற்கில்லை. நடைமுறைப்படுத்துதலில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் நாட்டைவிட்டு அகன்றபோது, நகரத்தை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது முதலாளித்துவம்-&-பட்டாளி வர்க்கம் இடையிலான வேறுபாட்டை உருவாக்கவில்லை.

விடுதலை பெற்ற காலத்திலிருந்து, நாட்டின் பொதுவாழ்க்கைக்கு வந்த தலைவர்கள் உயர்த்திக் கொண்ட சாதியை சேர்ந்தவராக, கல்வி பெற்றவராக, நகரை மையமாகக் கொண்டவராக, தொழில்முறையாளராக, நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்து வருகிறார். நேரு, சர்தார் பட்டேல் தொடங்கி சமீபகாலம் வரை பெரும்பாலான தலைவர்கள் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். இன்று நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு, இந்தத் தலைவர்களது குணமே முக்கிய காரணம்.

தத்துவ நோக்கில் பார்த்தால், வசதிகளைப் பெற்ற வர்க்கம் மனிதத்தன்மை சார்ந்த கருத்துகளைக் கொண்டிருந்தது. அவர்களது கொள்கைகள் தொடர்பான விளக்கங்கள் இதை பிரதிபலித்தன. பெயர்பெற்ற இந்திய அரசியல் சாசனத்தை இந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள்தான் எழுதினர். இதனால் நம் நாட்டின் குறிக்கோள்கள் சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை கொள்கை அளவில் கொண்டிருந்தன.

எழுதப்பட்டு, 10 ஆண்டுகளில் முழுமையான எழுத்தறிவு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. சொல்லப்பட்ட கொள்கை அதுதான். ஆனால் ஆறுபது ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள்தொகையின் பெரும்பாலான பகுதி, எழுத்தறிவை இன்னும் எட்டிப்பிடிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறது. எனவே, தொழில் நடைமுறை என வலியுறுத்தப்படுவதற்கும், நடைமுறைப்படுத்தப்படுவதற்கும் இடையே மாபெரும் இடைவெளி இருக்கிறது.

நாம் கையாண்ட அமைப்பு முறை இப்பொழுதும் தோற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறலாமா?

அப்படிக் கூறுவதற்கில்லை. கல்வி பற்றிய சித்தரிப்பை எடுத்துக் கொள்வோம். எழுத்தறிவின்மையை அகற்ற வேண்டும் என்பது கொள்கை. நகரை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தினருக்கு எழுத்தறிவு கிடைத்து இருக்கிறது என்பது உண்மை. கிராமங்களுக்குச் செல்லும்போதுதான் அது தோற்றுப் போய்விடுகிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பரிமளிக்கக் கூடிய, தேர்ந்த தொழில்முறையாளர்களை நமது பல்கலைக்கழகங்கள் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டு இருக்கின்றன. இப்படி கல்வி பெற்றவர்கள் லண்டனிலோ, நியூயார்க்கிலோ தோற்றுப் போவதில்லை. நமது கிராமங்கள்தான் முழுமையாக தோற்றுப் போகின்றன. நம்மில் எத்தனை பேர் நமது அறிவுத்திறனை கிராமங்களுக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறோம்? இதில்தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இதில்தான் நாம் தோற்றுப்போயும் இருக்கிறோம்.

இந்த தோல்விக்கு அரசியல் தலைமைகளை மட்டும் குற்றஞ்சாட்டக்கூடாது. அதிகார வர்க்கம், நிர்வாக வர்க்கத்திற்கு இதில் முக்கிய பங்கு உண்டு. இந்த இரண்டு பிரிவுகளையும் நகரத்தை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கம் கட்டுப்படுத்தியது. எனவே, நகரை மையமாகக் கொண்ட நடுத்தர வர்க்கத்தின் தேவைகள், நலன்களை அடிப்படையாக் கொண்டே இன்றைய சமூக வலியுறுத்தல்கள் முழுவதும் அமைகின்றன.

தலைவர்கள் இதை நினைப்புடன் செய்கிறார்கள் என்றோ, சதித்திட்டம் திட்டிச் செயல்படுத்துகிறார்கள் என்றோ கூறுவதற்கில்லை. அவர்கள் அப்படி சிந்திக்கும் வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் வர்க்கத்தினருக்கு முன்னுரிமை கொடுப்பது, அவர்களதுதேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து கொடுப்பது இயற்கையாக நிகழ்கிறது.

நாட்டின் பொருளாதார வியூகங்களில் இந்தியாவின் மறுபக்கம் கணக்கிலேயே கொள்ளப்படுவதில்லையே?

அரசியல் ரீதியில் செலுத்தப்படும் கவனம் கிராமங்களுக்கு எதிரானது என்று கூறமுடியாது. அறிவிக்கப்படும் கொள்கைகள் காந்தியின் திருவடியை வணங்கியே தொடங்கப்படும். ஆனால் அது நேரெதிரான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். கிராமங்களின் வளர்ச்சியை அரசு ஆதரிக்கிறது. அதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்குகிறது. ஆனால் இந்த நிதியை இடைத்தரகர்கள் விழுங்கிவிடுகிறார்கள்.

பஞ்சாயத்து (ஊராட்சி) முறை சிறந்த ஒரு நிர்வாக முறைதான். ஆனால் அதன் உண்மை நிலைமை ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. கிராம பஞ்சாயத்துகளை, நகரங்களை மையமாகக் கொண்ட அரசியல் கட்சிகள் கட்டுப்படுத்துகின்றன.

(உண்மையில் பஞ்சாயத்து தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடக் கூடாது. தேர்தல் கட்சி சார்ந்து நடைபெறக் கூடாது. ஆனால் நடைமுறையில் சுதந்திரமாக யாரும் போட்டியிடுவதில்லை. கட்சி சார்ந்தவர்கள், சாதிச் சார்புகள் மற்றும் பணத்தை கட்டுப்படுத்தும் வசதி படைத்தவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்).

இந்த தந்திரங்கள் காரணமாக கிராமப் பகுதி இந்தியாவுக்கு மிகச்சிறிய அளவே அதிகாரமே கிடைக்கிறது. உண்மையான கிராமப்புற வளர்ச்சி பற்றி இதுவரை பேசப்பட்டு வந்ததைவிட, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது. அதன் சக்தியை முழுமையாக உணரும் வகையில் கவனம் செலுத்தப்படவில்லை. பொருளாதாரம், அரசியல், கொள்கைகள் போன்றவை ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தவை. ஆனால் அவை சாதி, வர்க்கத்தில் வேர் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட கொள்கைகளைச் சார்ந்திருக்கும் இந்த நிலைமை, வளர்ச்சியை பெருமளவு பாதிக்கிறது.

எல்லாமே அரசைச் சார்ந்து இல்லை. அதிகார வர்க்கம்தான் அரசை நடத்திச் செல்கிறது. இந்த வகையான வளர்ச்சியை ஏற்படுத்த, அதிகார வர்க்கம் சிறந்த இயந்திரம் என்று கூறமுடியாது. கிராமப் பகுதிகளின் வளர்ச்சி எது என்பது பற்றி தெளிவான கொள்கை நம்மிடம் இருக்க வேண்டும்.

தனியார் நிறுவன கட்டமைப்புகள் இன்னும் பொறுப்பு மிகுந்ததாக இருக்க வேண்டுமா? கவனம் செலுத்தப்படாத இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களில் அவற்றின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சேர்த்தே கேட்கிறோம்.

கிராம மக்கள் வெளிப்படையான சக்தியாக மாறினால், அதற்குப் பிறகு தனியார் நிறுவன கட்டமைப்புகள், அவர்களைக் கொண்டு ஏதாவது செய்ய முன்வரும். புலி மிதவாதியாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல, பங்குதாரர்கள் மற்றும் லாபத்தைவிட வேறு எதையும் தனியார் நிறுவன கட்டமைப்புகள் பெரிதாகக் கருதும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் அதைத்தான் முதலில் தூக்கிப் பிடிப்பார்கள். அதனால்தான் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களது செயல்திட்டத்தில் அடித்தட்டு மக்கள் இடையீடு செய்கிறார்கள் என்பதை உணர்ந்துவிட்டால், தனியார் நிறுவனங்கள் சுயவிருப்பத்துடன் புதிய உற்பத்தி உறவுகளை உருவாக்கும்.

தனியார் நிறுவனங்களின் சமூக கடமை என்பது எங்கும் உச்சரிக்கப்படும் புதிய மந்திரமாக இருக்கிறதே?

சில நிறுவனங்கள் சமூகம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்கின்றன. ஒரு கிராமத்தை தத்து எடுத்துக் கொள்கிறார்கள், நலத் திட்டங்களை உருவாக்குகிறார்கள், கடன் தருகிறார்கள். ஆனால் இதெல்லாம் நற்பெயர் எடுக்கும், நல்ல சித்திரத்தை உருவாக்கும் முயற்சிகள்தான். இது கிராமப்புற இந்தியாவின் மறுமலர்ச்சியை உருவாக்காது.

எந்த தனியார் நிறுவன சக்தியும், கிராம மக்களின் ஒருங்கிணைந்த சக்திக்கு ஈடாக முடியாது. சோகம் தரும் வகையில் வீழ்ந்துவிட்டாலும், கிராமத்தினரின் தன்னிச்சையான எழுச்சி என்ற மாற்றை &-முன்மாதிரியை நந்திகிராமம் தூக்கி நிறுத்துகிறது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அங்கு உருவான அபரிமிதமான எதிர்ப்புதான். நிலஉரிமை இயக்கம் என்பது அரசியல் ரீதியில் து£ண்டிவிடப்பட்டதில்லை. அது அரசியல் சார்பற்ற தளம். அது அப்படித்தான் இருக்கவும் வேண்டும். அரசியல் குழுக்கள் அல்லது அரசியல் கொள்கைகளுடன் அதை இணைக்க முயல்வது அல்லது அவை ஆதிக்கம் செலுத்த முனைவது தவறாகும். அது கிராமப்புறங்களின் எதிர்கால எழுச்சியைத் நசுக்கும்.

எழுத்தறிவின்மை, கிராம அளவில் தகவல் சென்றுசேராமல் உள்ள தேக்கநிலை போன்றவற்றை களைந்து கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு நகரைச் சேர்ந்த சிந்தனாவாதிகள் தேவையா?

பொருளாதார அடிப்படையில் பேசினால் கிராமம் என்பது வெறும் வேளாண்மை மட்டுமல்ல. அது இன்னும் பல நுணுக்கமான விஷயங்கள் இணைந்தது - வேளாண்மை, கிராமத் தொழில்கள், காடுகள், மீன்வளம், கடன் திட்டம், கல்வி, பாரம்பரிய அறிவு போன்றவற்றைக் கொண்டது. இந்த கூட்டு அமைப்புகளை கணக்கில் கொண்டு நம் நாட்டு கல்வித்திட்டம் வடிவமைக்கப்படவில்லை. படித்த ஒரு கிராமக் குழந்தை சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் நகரத்துக்குச் செல்ல வேண்டும். தற்போதுள்ள கல்வித் திட்டத்தைக் கொண்டு அவனோ-அவளோ கிராமத்தை முன்னேற்ற முடியாது.

எழுத்தறிவு, அறிவு, கல்வி மற்றும் தொழில்நுட்பம் போன்றவை கிராமம் என்ற மாற்றை வலுவான ஒன்றாக ஆக்கவேண்டும். இதற்காக எல்லா கிராமங்களையும் நகரமாக்குவதை நோக்கமாகக் கொள்ளக் கூடாது.

கிராமம் என்பது வேளாண்மை மட்டுமல்ல என்பதை உணர வேண்டும். அதைத்தவிர வேறு பல நிலைத்த தொழில் முயற்சிகளைக் கொண்டு, கிராமங்களை மேம்படுத்தும் பொருளாதார மாதிரியை உருவாக்க வேண்டும். இவற்றில் சில இயற்கையாகவே வேளாண்மையை நோக்கி செலுத்தக்கூடும். இந்த மாற்றம் வெளிப்புற காரணிகளைச் சார்ந்து இருக்கக் கூடாது. இந்த உள்கட்டமைப்பு மாற்றம் கிராமப்புற இந்தியாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்.

நிலம், தண்ணீர் போன்ற இயற்கை வளங்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக எழுந்து வரும் எதிர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அடிப்படை வளங்களை தனியார்மயமாக்குவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். வெளியில் இருந்து வந்து வளங்களை கட்டுப்படுத்த நினைப்பவர்களை கிராமத்தினர் எதிர்ப்பார்கள். அதற்கு கிராமமக்கள் அனுமதிக்கப்பட வேண்டும். நமது ஜனநாயக நாட்டில் அது தொடர்பான நடைமுறைகளுக்கு கைகொடுக்கும் அம்சங்கள் இருக்க வேண்டும்.

தங்கள் திட்டங்கள் எதிர்ப்பைச் சந்தித்து நஷ்டத்தை எதிர்கொள்ளும் என்பதை உணர்ந்தால், தனியார் நிறுவனங்கள் திட்டங்களை மாற்றியமைக்கும். கிராமமக்களின் ஒற்றுமை சீர்கெட்டுவிடக் கூடாது. அதற்குப் பிறகு இந்தியா ஒட்டுமொத்தமாக முன்னேறும்.

மூத்த பொருளாதார நிபுணர் என்ற வகையில், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் நெருக்கடிகளைத் தாண்டி தனிநபர் வருமானம் (ஜி.டி.பி.) உயர்வு, பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு போன்றவை உங்களுக்கு திருப்தி தருகிறதா?

இவற்றை சார்ந்து நான் உணர்ச்சிவசப்படுவது இல்லை. குறிப்பிட்ட ஒரு நிலைக்கு அது நல்லது. தனியார் நிறுவனங்கள், பொதுமக்கள் என்று யாராக இருந்தாலும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு தனியார் நிறுவனத்தின் குறிப்பிட்ட திட்டத்தை எதிர்க்கலாம். டாடா போன்ற நிறுவனத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டியதில்லை. அவர்கள் இந்தியாவுக்கு நல்லதையும் செய்துள்ளனர். ஆனால், இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கோ, கிராமப்புற வளர்ச்சிக்கோ அவர்களை சார்ந்து இருக்க வேண்டியதில்லை. நகரை மையமாகக் கொண்ட மூளைகள் நமக்கு நல்லதைச் செய்திருக்கின்றன.

ஆனால் சமத்துவ வளர்ச்சி, அமைதி, ஒத்திசைவு போன்றவற்றை உருவாக்கும் மாறுபட்ட ஓர் இயக்கம் நமக்குத் தேவை. எது வளர்ச்சி பெறவில்லை என்பதில்தான் இப்பொழுது கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, எது வளர்ந்திருக்கிறதோ அதில் கவனம் செலுத்தத் தேவையில்லை. டாடா-க்கள் தங்களை சிறப்பாக கவனித்துக் கொள்வார்கள். கிராமப்புற வளர்ச்சியில்தான் இப்பொழுது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்.

- தமிழில் ஆதி

(அடைப்புக் குறிக்குள் இருக்கும் குறிப்புகள் மொழிபெயர்ப்பாளர் கொடுத்தவை.

கிராமங்கள்&-கிராமத் தொழில்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட காந்திய பொருளாதார சிந்தனை, அவரது வழியில் வந்த குமரப்பா இயற்கையை சிதைக்காத பொருளாதார வளர்ச்சியை முன்மொழிந்தது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பேட்டியை படிக்க வேண்டும். உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலுக்கு நல்லதொரு மாற்று பொருளாதார மாதிரியாக காந்திய சிந்தனைகள் பயன்படுமா என்று ஆராய வேண்டும்.)

அமலன் தத்தா

பொருளாதார பேராசிரியர் அமலன் தத்தா, கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவித்துள்ளார். வடக்கு வங்க பல்கலைக்கழகம், விஸ்வபாரதி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராகவும், காந்தி கல்வி அறக்கட்டளை இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார். உலகம் முழுவதும் காந்தியம், கல்வி, பொருளாதார வளர்ச்சி தொடர்பாக சொற்பொழிவு ஆற்றியுள்ளார். குவெஸ்ட் இதழின் இணைஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அவரது முதல் புத்தகம் ஃபார் டெமாகரசி (ஜனநாயகத்துக்காக) 1953ம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் புத்தகத்தை அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பாராட்டியுள்ளார். தத்தாவின் சமீபத்திய புத்தகம் இன் டிபென்ஸ் ஆப் பிரீடம் -& எக்சைட்டிங் டைம்ஸ் அண்ட் கொயட் மெடிடேஷன்ஸ். விடுதலை, அமைதி, பாதுகாப்பு போன்றவற்றை உயர்த்திப் பிடிக்கும் சமூக உணர்வு கொண்ட பொருளாதாரம் தொடர்பாக தத்தாவின் கருத்துகளை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது. நகரங்களில் உள்ள அறிவு, கிராமப்புற இந்தியாவில் பயன்படுத்தவில்லை என்றால் நாடு முன்னேற முடியாது என்கிறார் தத்தா.

Pin It